Monday, September 28, 2009

right and left

இடதுசாரிகளும், வலதுசாரிகளும்

இடதுசாரிகள், வலதுசாரிகள் என்ற சொற்கள் ஒரு பொது பிம்பத்தை
கட்டமைக்கும் அளவிற்க்கு மிகவும் பரவலாக உபயோகிக்கபடுகின்றன.
இடதுசாரி என்றால் அவர் ஒரு ஏழை பங்காளன், ஏற்ற தாழ்வுகளை
அகற்றப் பாடுபடுபவர், ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர், மதவாதத்தை
எதிர்ப்பவர் ; வலதுசாரி என்றால் அவர் பணக்கார்களின் ஆதாரவாளர்,
ஏழைகளின் எதிரி, தொழிலாளர்களை "சுரண்டுபவர்", ஏகாதிபத்திய
ஆதரவாளர், ஃபாசிசவாதி, மதவாதி, கொடூர நெஞ்சம் படைத்தவர்,
இப்படி சில முன்முடிவுகளை இந்த "லேபில்கள்" மூலம், ஒருவரை
பற்றி முத்திரை குத்த பயன்படுத்தப்படுகிறது.

இவை எல்லாம் வெறும் முத்திரைகள். அர்த்தமற்றவை. ஆழமற்ற
லேபில்கள். வாதங்களை எளிமைபடுத்த உபயோகப்படும் சொல்லாடல்கள்.
அவ்வளவுதான்.

வலதுசாரி என்றால் அவன் ஒரு ஃபாசிஸ்ட் அல்ல. இடதுசாரி என்றால்
அவன் ஒரு ஃபாசிச எதிர்ப்பளரும் அல்ல. ஃபாசிசத்தை முன் மொழிந்த
சர்வாதிகாரியான முசோலனியும் வலதுசாரிதான். லிபரல் ஜனனாயகத்தை,
மக்களாட்சியை முன்மொழிந்த எர்கார்ட் (ஜெர்மன் அதிபர்) போன்றவர்களும்
அதே வலதுசாரி என்ற லேபில் / முத்திரையின் கீழ் சேர்க்கப்படுகிறார்கள்.

சே குவாராவும் இடதுசாரிதான், நேருவும் இடதுசாரிதான். முன்னவர்
பாரளுமன்ற ஜனனாயகத்தில் நம்பிக்கை இல்லாத போராளி, பின்னவர்
ஜனனாயகவாதி. எனவே, இந்த வலது / இடது லேபில்கள், முன்முடிவுகளை
அளித்து, ஒருவரை பற்றிய சரியான எடைபோடுதலை செய்யவிடாமல்
குழப்பும்.

வலதுசாரிகள் என்றால் அவர்கள் மத அடிப்படைவாதிகள் அல்ல. எந்த
வகை அடிப்படைவாதமும் ஃபாசிமே ஆகும். எனவே சரியான
சொல்லாடல்கள் : ஃபாசிசவாதி / ஜனனாயகவாதி. அடிப்படை மனித
உரிமைகளை மதிப்பவர் ஜனனாயகவாதி. மறுப்பவர் ஃபாசிசவாதி.

அடிப்படை ஜனனாயக உரிமைகளில் சொத்துரிமையும் அடக்கம். அதை
ஜனனாயக வழியில் முன்மொழிதலே வலதுசாரி சிந்தனைகள் எனலாம்.
(அப்படித்தான் எம்மை கருதுகிறேன்). ஆனால் ஃபாசிச முறையில் எதை
முன்மொழிந்தாலும் அது ஏற்க்கமுடியாது. ஃபாசிஸ்டுகள் இடது / வலது
இரு தளங்களிலும் உள்ளனர். எனவே மேலும் குழப்பம்.

உதாரணமாக இடி அமின், சதாம் ஹுசைன் போன்றவர்கள் ஃபாசிஸ்டுகள்
என்பதை சுலபமாக உணரலாம். ஆனால் மாவோ, ஜோஸஃப் ஸ்டாலின்
போன்றவர்களை ஒரு ஃபாஸிஸ்ட் என்று உணர்வது கடினம். அவர்கள்
சித்தாந்தரீதியாக "இடதுசாரிகள்" ; பொது உடைமைவாதிகள், பாட்டாளி
வர்கத்தின் ரட்சகர்கள் என்று இன்றும் சில தீவிர மார்க்சியவாதிகளால்
கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் செய்த
செயல்கள் பற்றிய முழுவிபரமும் தெரியாமல், அல்லது தெரிந்தும்,
அதை "வரலாற்று கட்டாயங்கள்" என்று நியாயபடுத்திக்கொண்டு
கண்மூடித்தனமாக ஆதரிப்பார்கள்.

வலதுசாரிகள் என்றால் ஏழைகளின் எதிரிகள் என்று ஒரு பிம்பம்.
ஆனால் அது முற்றிலும் தவறான கட்டமைப்பு. சுதந்திர சந்தை
பொருளாதார கொள்கைகள் மூலம், வளர்ந்த நாடுகள் அனைத்தும்
(முக்கியமாக இரண்டாம் உலகபோரில் அழிந்த ஜெர்மனி, ஜப்பான்,
தென் கொரியா, மலேயா போன்ற நாடுகள்) ஏழ்மையை பெருவாரியாக
குறைத்த வரலாறு பெரிதாக அறியப்படவில்லை. ஆனால் அந்நாடுகள்
பின்பற்றும் கொள்கைகள் "வலதுசாரி" கொள்கைகள். நேர் எதிராக
"இடதுசாரி" கொள்கைகளை (பல பாணிகளில்) பின் பற்றிய சுதந்திர
இந்தியா போன்ற நாடுகளும், சோவியத் ரஸ்ஸிய, வட கொரியா
போன்றவை வறுமையை பரவலாக்கி, ஊழல் மிகுந்து, ஏறக்குறைய
ஃபாசித்தை உருவாக்கி சீரழந்தன. இதிலிருந்தே வலதுசாரிகள் என்றால்
ஏழைகளின் எதிர்கள், ஏழைகளை ஏழைகளாகவே இருக்க செய்யும்
பிற்போக்காளர்கள் என்ற பிம்பம் உடைகிறது.

30 வருடங்களுக்கு முன்பு வரை இந்திய அரசியலில் சரளமாக
சில‌ சொற்கள் பிரயோகிக்கப்பட்டன : 'சோசியலிஸ்டுகள், ஏழை
பங்காளர்கள், முற்போக்காளர் / பிற்போக்காளர்', இன்னபிற. முக்கியமாக
இந்த முற்போக்காளர் / பிற்போக்காளர் என்ற முத்திரைகள் விளைவித்த
நாசம் மிக அதிகம். வலதுசாரிகள் எல்லாம் பிற்போக்காளர்கள்,
இடதுசாரிகள் எல்லாம் முற்போக்காளர்களாம். அதனால வலதுசாரி
என்று முத்திரை குத்தப்பட்ட அனைவரும் ஓரங்கட்டப்பட்டனர்.
அம்முத்திரையை கண்டு அனைவரும் பயந்தனர். முற்போக்காளர்
என்ற முத்திரையை விரும்பினர். இது அறிவுஜீவிகள் மத்தியில்
மட்டுமல்ல, பல அரசியல் கட்சிகள் வட்டத்திலும் நிலவியது.
முக்கியமாக அன்றைய ஆளும் கட்சியாக, பலமாக, பல காலம்
ஆண்ட காங்கிரஸ் தலைவர்களிடம் மிகுதியாக இருந்தது. இந்திரா
காந்தியின் சர்வாதிகார போக்கை எதிர்க்க துணிந்தவர்களுக்கு
இந்த வலதுசாரி பட்டம் கிடைக்கும் என்பதாலேயே பலரும்
"இடதுசாரி முற்போக்குவாதி" என்ற முத்திரை பெற துடித்து,
இந்திரா காந்தியின் ஃபாசிதற்க்கு துணை போயினர்.
நல்லவேளையாக இது போன்ற லேபில்கள் இன்று அரசியல்
சூழலில் இல்லாமல் ஆனாது. ஊழல் மட்டும்தான் இன்று பரவலாக உள்ளது

Athiyaman Karur R

No comments: