Wednesday, September 23, 2009

antony van leevenhook (1632-1723)

ஆன்டனி வான் லீயூவென்ஹூக் (1632-1723)

நோய் நுண்மங்களை (Microbes) கண்டுபிடித்த ஆன்டனி வான் லீயூவென்ஹூக் நெதர்லாந்திலுள்ள டெல்ஃப்ட் என்ற நகரில் 1632 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தமது வயதுப் பருவத்தின் பெரும் பகுதியை உள்ளூர் நகராட்சியில் ஒரு சிறிய பதவியில் கழித்தார்.

லீயுவென்ஹூக் நுண்ணோக்காடியை (Microscope) பயன்படுத்துவதைத் தமது பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். அப்போது தான் இவர் தமது புகழ் பெற்ற கண்டுபிடிப்பைச் செய்தார். அந்தக் காலத்தில் நுண்ணோக்காடிகளைக் கடையில் வாங்க முடியாதிருந்தது. இவர் தாமே நுண்ணோக்காடிகளைச் செய்து கொண்டார். இவர் தொழில் முறையில் நுண்ணோக்காடித் தயாரிப்பாளராக இருக்கவில்லை. இத்துறையில் முறையான பயிற்சியும் இவர் பெற்றிருக்கவில்லை. எனினும் இத்துறையில் இவர் பெற்றிருந்த திறமை வியக்கத்தக்கதாக இருந்தது. இவர் காலத்திலிருந்து தொழில்துறை நுண்ணோக்காடித் தயாரப்பாளர்கள் எவரையும் விட இவர் மிகப் பெருமளவு தேர்ச்சியுடையவராக விளங்கினார்.

இவர் பிறப்பதற்கு ஒரு தலைமுறைக்கு முன்னரே கூட்டு நுண்ணோக்காடி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்ற போதிலும், அதை இவர் பயன்படுத்தவில்லை. மாறாக, மிகக் குறைந்த குவிமையத் தூரம் (Focal Length) உடைய சிறிய கண்ணாடி வில்லைகளை (Lenses) மிகக் கவனமாகவும், துல்லியமாகவும் அராவித் தீட்டி, முன்பிருந்த கூட்டு நுண்ணோக்காடிகளில் எதனையும்விட மிக அதிக அளவு உருப்பெருக்கத்திறன் (Resolving Power) உடையதாகச் செய்தார். இவர் தயாரித்த நுண்ணோக்காடிகளில் ஒன்று இன்னும் உள்ளது. இது 270 மடங்கு உருப்பெருக்குத் திறன் கொண்டது. இதைவிடவும் மிகுந்த ஆற்றல் வாய்ந்த நுண்ணோக்காடிகளையும் இவர் தயாரித்ததாகத் தெரிகிறது.

லீயுவென்ஹூக் மிகுந்த பொறுமைசாலியாக விளங்கினார். ஆழ்ந்து கவனிக்கும் கூர்நோக்காளராகவும் திகழ்ந்தார். அவருக்குக் கூர்மையான பார்வைத் திறன் அமைந்திருந்தது. அனைத்திற்கும் மேலாக எல்லையற்ற ஆர்வங்கொண்டவராகவும் இருந்தார். அவர் தமது நுட்பமான நுண்ணோக்காடிகளின் உதவியால் ஏராளமான பொருள்களை நுணுகி ஆராய்ந்தார். மனிதனின் தலைமுடி முதல் நாயின் விந்து வரையிலும், மழைநீர் முதல் நுண் பூச்சிகள் வரையிலும், தசை இழைகள் முதல் தோல் திசுக்கள் வரையிலும் பலப்பல பொருள்களை அவர் ஆராய்ந்தார். அவற்றைப் பற்றிக் கவனமாகக் குறிப்புகள் எடுத்துக் கொண்டார். தாம் கூர்ந்து நோக்கிய பொருள்களின் துல்லியமான படங்களையும் வரைந்து கொண்டார்.

இவருடைய காலத்தில் தலையாய அறிவியல் கழகமாக விளங்கிய இங்கிலாந்து ராயல் கழகத்துடன் 1673 ஆம் ஆண்டு முதற்கொண்டு லீயுவென்ஹூக் கடிதத் தொடர்பு கொண்டார். இவர் உயர்கல்வி கற்றதில்லை. (இவர் தொடக்கப் பள்ளியில் மட்டுமே பயின்றார். டச்சு மொழி தவிர இவருக்கு வேறு மொழிகள் எதுவும் தெரியாது). அப்படியிருந்தும் இவர் 1680 ஆம் ஆண்டில் இங்கிலாந்து ராயல் கழகத்தின் ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். பாரிசிலிருந்து அறிவியல் கழகத்தின் கடிதத் தொடர்பு உறுப்பினராகவும் (Corresponding Member) ஆனார்.


லீயுவென்ஹூக் இருமுறை திருமணம் புரிந்து கொண்டார். இவருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர். ஆனால் பேரப்பிள்ளைகள் யாரும் இல்லை. இவர் சிறந்த உடல் நலத்துடன் வாழ்ந்தார். இவர் தமது முதுமைக் காலத்தில் கூட தொடர்ந்து கடுமையாக உழைத்தார். பல அரசியல் தலைவர்களும், அறிஞர்களும், சான்றோர்களும் இவரைப் பார்க்க வந்தனர். ரஷ’யாவில் ஜார் மன்னர் மகா பீட்டர், இங்கிலாந்து அரசி ஆகியோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர் 1723 ஆம் ஆண்டில் தமது 90 ஆவது வயதில் டெல்ஃப்ட் நகரில் காலமானார்.

லீயுவென்ஹூக் பல முக்கியமான கண்டுபிடிப்புகளை செய்தார். விந்துணுவை (Spermatozoa) முதன் முதலில் (1677) விவரித்துக் கூறியவர் இவர்தான். இரத்தச் சிவப்பணுக்கள் (Red blood Corpuscles) பற்றி முதலில் விவரித்துக் கூறியவர்களில் இவரும் ஒருவர். இழிவான சிறிய உயிரினங்களின் "தன்னியல் உயிர்த் தோற்றம்" (Spontaneous Generation) கோட்பாட்டினை இவர் எதிர்த்தார். எடுத்துக்காட்டாக, சிறகுப் பூச்சிகளின் வழக்கமான பாணியிலேயே உண்ணிகள் இனப்பெருக்கமுறுவதாக இவர் மெய்ப்பித்தார்.

இவருடைய தலைசிறந்த கண்டுபிடிப்பு 1674 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அப்போது தான் இவர் நோய் நுண்மங்கள் குறித்து முதன்முதலாக தாம் கண்டறிந்த உண்மைகளை வெளியிட்டார். இது, மனித வரலாற்றில் உயிர்நாடியான ஒரு கண்டுபிடிப்பாக அமைந்தது. ஒரு சிறிய நீர்த்துளியில் லீயுவென்ஹூக் ஒரு புதிய உலகத்தையே முழுமையாகக் கண்டார். அந்த உலகம் அதுகாறும் யாரும் எண்ணிப்பார்த்திராத ஒரு புதிய உலகமாக இருந்தது. அந்தப் புதிய உலகில் ஏராளமான உயிர்கள் மலிந்திருக்கக் கண்டார். இந்தப் புதிய உலகம், மனித இனத்திற்கு மிகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. ஆனால், அந்த முக்கியத்துவத்தை லீயுவென்ஹூக் தாம் கண்டு பிடித்த காலத்தில் அறிந்திருக்கவில்லை. எனினும், இவர் கண்டுபிடித்த அந்த "சிற்றுயிரினங்கள் தாம்" மனிதர்களின் வாழ்வையும் சாவையும் நிருணயித்தன. நீர்த்துளியில் இவர் இந்த நுண்ணுயிரினங்களைக் கண்டறிந்த பிறகு வேறு பல இடங்களிலும் அவற்றைக் கண்டார். கிணறுகளில், குட்டைகளிலும், மழை நீரிலும், மனிதர்களின் வாயிலும், குளங்களிலும் கூட இவை இருக்கக் கண்டார். இவற்றை ஆராய்ந்து பல்வேறு நுண்ணுயிர்களையும் (Bacteria) ஓரணு உயிர்களையும் (Protozoa) அவர் விவரித்தார். அவற்றின் வடிவளவுகளையும் கணக்கிட்டார்.

லீயுவென்ஹூக்கின் இந்தச் சிறந்த கண்டுபிடிப்பு 200 ஆண்டுகளுக்குப் பின் பாஸ்டர் தோன்றும் வரையில் பயன்படுத்தப்படாமலேயே இருந்தது. உண்மையைக் கூறின், 19 ஆம் நூற்றாண்டில், சீர்திருத்திய நுண்ணோக்காடிகள் கண்டுபிடிக்கப்படும் வரையிலும் நுண்ணுயிரியல் (Microbiology) முழுவதுமே பெரும்பாலும் செயலற்றிருந்தது. இதனால், லீயுவென்ஹூக் தோன்றாமலிருந்த அவரது கண்டுபிடிப்புகளும் 19 ஆம் நூற்றாண்டு வரையிலும் கண்டுபிடிக்கப்படாதிருந்திருந்தால், அறிவியல் முன்னேற்றத்தில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டிருக்காது என்று வாதிடக் கூடும். எனினும் நோய் நுண்மங்களை லீயுவென்ஹூக் கண்டுபிடித்தார் என்பதையும் அந்த நுண்மங்கள் இருப்பதை இவர் மூலமாகவே அறிவியல் உலகம் அறிந்து கொண்டது என்பதையும் மறுப்பதற்கில்லை.

லீயுவென்ஹூக் தற்செயலான குருட்டு வாய்ப்பின் காரணமாக முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்பில் தடுக்கி விழுந்தார் எனச் சிலர் கூறுவர். இது சிறிதும் உண்மையன்று. வரலாறு கண்டிராத தரம் வாய்ந்த நுண்ணோக்காடிகளை மிகக் கவனமாகத் தயாரித்து, பொறுமையோடும், துல்லியமாகவும், லீயுவென்ஹூக் நடத்திய தீவிர ஆராய்ச்சிகளின் விளைவாகவே நுண்ணுயிரிகளை (Microorganisms) அவர் கண்டுபிடிக்க முடிந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. சுருங்கக்கூறின், அவரது கண்டுபிடிப்பு வெறும் குருட்டு வாய்ப்பின் காரணமாகத் தற்செயலாகக் கண்டு பிடிக்கப்பட்டதன்று, திறமையும் கடும் உழைப்பும் ஒருங்கிணைந்ததன் விளைவாகக் கிடைத்த பலன் அதுவாகும்.

ஒரு தனிமனிதரின் உழைப்பு மூலமாகக் கண்டு பிடிக்கப்பட்ட முக்கிய கண்டுபிடிப்புகளின் ஒன்று நோய் நுண்மங்களின் கண்டுபிடிப்பு எனலாம். இதற்காக லீயுவென்ஹூக் தன்னந்தனியாகப் பாடுபட்டார். ஓரணு உயிரையும், நுண்ணுயிர்களையும் கண்டுபிடித்தது யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. உயிரியலின் மற்ற முன்னேற்றங்களைப் போலன்றி, முந்திய அறிவியல் அறிவிலிருந்து இந்தக் கண்டுபிடிப்பு இயற்கையாகத் தோன்றிவிடவில்லை. அந்தக் காரணத்தையும், இறுதியில் இவரது கண்டுபிடிப்பின் பயன்பாடுகளுக்கு ஏற்பட்ட பெரும் முக்கியத்துவத்தையும் கவனத்தில் கொண்டுதான், இந்தப் பட்டியலில் இவருக்கு உயர்ந்த இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.



நன்றி : http://ping.fm/OVFUv

No comments: