Monday, September 28, 2009

alexander flemming

அலெக்சாண்டர் ஃபிளமிங் (1881-1955)

சில நோய் நுண்மங்களின் வளர்ச்சியைத் தடை செய்யப் பயன்படும் "பென்சிலின்" என்ற மருந்தைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் ஃபிளமிங் ஆவார். இவர் ஸ்காட்லாந்திலுள்ள லாக்ஃபீல்டு என்னும் ஊரில் 1881 ஆம் ஆண்டு பிறந்தார். லண்டனிலுள்ள புனித மேரி மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவப் பள்ளியில் பட்டம் பெற்ற பின்பு, இவர் தொற்று நோய்த் தடைக்காப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பின்னர், முதல் உலகப் போரில், காயத்தினால் உண்டாகும் தொற்று நோய்கள் பற்றி பல, நோய் நுண்மங்களுக்கு (Microbes) தீங்கு செய்வதைவிட மிகுதியாக உடலின் உயிரணுக்களுக்கு (Body Cells) தீங்கு விளைவிக்கின்றன என்பதை இவர் கண்டறிந்தார். நோய் நுண்மங்களுக்குத் தீங்கு செய்கிற, ஆனால் மனித உயிரணுக்களுக்குத் தீங்கு செய்யாத பொருள் ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியத்தை இவர் உணர்ந்தார்.

முதல் உலகப் போர் முடிவுற்ற பின்பு ஃபிளமிங் மீண்டும் புனித மேரி மருத்துவமனையின் பணிக்குத் திரும்பினார். அங்கு இவர் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது 1922 ஆம் ஆண்டில் "லைசோசைம்" (Lysozyme) என்னும் பொருளை இவர் கண்டுபிடித்தார். இந்தப் பொருளை மனித உடல் உற்பத்தி செய்கிறது. அது சளியும், (Mucus) கண் ரும் அடங்கிய ஒரு பொருளாகும். இப்பொருள், மனித உயிரணுக்களுக்குத் தீங்கு செய்வதில்லை. இது சில நோய் நுண்மங்களை அழிக்கிறது. ஆனால், முக்கியமாக மனிதனக்குத் தீங்கு செய்யக்கூடிய நோய் நுண்மங்களை இது ஒன்றும் செய்வதில்லை. எனவே இந்தக் கண்டுபிடிப்பு தனிச் சிறப்புடையதாக இருந்த போதிலும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவில்லை.

ஃபிளமிங் தமது மிகப் பெரிய கண்டுபிடிப்பை 1928 ஆம் ஆண்டில் செய்தார். இவருடைய ஆய்வுக் கூடத்தில் வளர்க்கப்பட்ட நோய் நுண்ணுயிர்கள் (Staphylococcus Bacteria) மீது காற்றுப்பட்டு, ஒருவகைப் பூஞ்சக் காளானால் மாசுபட்டன. பூஞ்சக் காளானைச் சுற்றியிருந்த வளர்ச்சிப் பகுதியில் நோய் நுண்ணுயிர்கள் கரைந்து போயிருப்பதை ஃபிளமிங் கண்டார். நோய் நுண்ணுயிர்களுக்கு நஞ்சாக இருக்கக்கூடிய ஏதோ ஒரு பொருளை பூஞ்சக் காளான் உற்பத்திச் செய்கிறது என்பதை ஃபிளமிங் மிகவும் சரியாக ஊகித்தார். அதே பொருள், தீங்கு செய்யக் கூடியவேறு பலவகை நோய் நுண்ணுயிர்களின் வளர்ச்சியைத் தடை செய்வதையும் இவர் விரைவிலேயே மெய்பித்துக் காட்டினார். அந்தப் பொருளுக்குப் பூஞ்சக் காளானின் (Pencillium notatum) பெயரைக் கொண்டே "பென்சிலின்" (Penicillin) எனப் பெயரிட்டார். இந்தப் பொருள், மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ நஞ்சாக இருக்கவில்லை என்பதையும் இவர் கண்டறிந்தார்.

ஃபிளமிங்கின் ஆராய்ச்சி முடிவுகள் 1929 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. ஆனால், முதலில் இவை மிகுதியாகக் கவனத்தைக் கவரவில்லை. பென்சிலினை முக்கிய மருந்துப் பொருளாகப் பயன்படுத்தலாம் என ஃபிளமிங் கருதினார். ஆனால், பென்சிலினைத் தூய்மைப் படுத்தும் ஒரு முறையை உருவாக்க அவரால் கூட இயலவில்லை. அதனால், 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த அற்புத மருந்துப் பொருள் பயன்படுத்தப்படாமலே இருந்தது.

இறுதியில் 1930 களில் ஹோவர்டு வால்ட்டர் ஃபுளோரி, எர்னஸ்ட் போரிஸ் செயின் என்ற இரு பிரிட்டிஷ் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஃபிளமிங் எழுதிய கட்டுரையைப் படித்தார்கள். ஃபிளமிங் செய்த அதே ஆராய்ச்சியை அவர்களும் செய்து பார்த்தார்கள். அவருடைய முடிவுகளைச் சரி பார்த்தார்கள். பின்னர், அவர்கள் பென்சிலினைத் தூய்மைப்படுத்தினார்கள். அவ்வாறு தூய்மைப்படுத்தப்பட்ட பொருளை ஆய்வுக்கூட விலங்குகளிடம் சோதனை செய்தார்கள். 1841 ஆம் ஆண்டில், பென்சிலினை நோயுற்ற மனிதர்களிடம் பரிசோதனை செய்தார்கள். புதிய மருந்துப் பொருள் வியக்கத்தக்க வகையில் நோய்த் தடுப்பாற்றல் வாய்ந்ததாக இருப்பதை அவர்கள் தெளிவாகக் காட்டினார்கள்.

பிரிட்டிஷ் அரசும், அமெரிக்க அரசும் அளித்த ஊக்கம் காரணமாக, மருந்து நிறுவனங்கள் இத்துறையில் இறங்கி, பேரளவில் பென்சிலினை உற்பத்தி செய்யும் முறைகளை விரைவிலேயே கண்டுபிடித்தன. முதலில் போரில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காகவே பென்சிலின் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், 1944 ஆம் ஆண்டுவாக்கில், பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் குடிமக்களின் நோய்களை குணப்படுத்துவதற்கும் பென்சிலின் கிடைகக்லாயிற்று. இரண்டாம் உலகப் போர் 1945 ஆம் ஆண்டில் முடிவடைந்த பிறகு, பெனிசிலினைப் பயன் படுத்துவது உலகெங்கும் பரவியது.

பெனிசிலின் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, மற்ற வகை நோய் நுண்மத் தடை மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் தீவிரமாயின. அந்த ஆராய்ச்சிகளின் பலனாக வேறுபல "அதிசய மருந்துப் பொருட்களும்" கண்டுபிடிக்கப் பட்டன. எனினும், பெனிசிலின், மிகப் பெருமளவில் பயன் படுத்தப்படும் நோய் நுண்மத் தடை மருந்தாக இன்றும் இருந்து வருகிறது.

மிகப் பலவகை தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களுக்கு (Microorganisms) எதிராகப் பென்சிலின் செயல் விளைவுடையதாக இருப்பதே, இது தொடர்ந்து தலையாய நோய் நுண்மத்தடை மருந்தாகப் பயன்பட்டு வருவதற்குக் காரணமாகும்.

மேக நோய் (Syphilis), மேக வெட்டை நோய் (Gonorrhea), செம்புள்ளி நச்சுக்காய்ச்சல் (Scarlet Fever), தொண்டை அழற்சி நோய் (Diphtheria), சில வகை மூட்டு வீக்கம் (Arthritis), மார்புச் சளி நோய் (Bronchitis), தண்டு மூளைக் கவிகைச் சவ்வு அழற்சி (Mennigitis), இரத்தம் நஞ்சாதல், கொப்புளங்கள்,எலும்பு நோய்கள், சீதசன்னி (Pneumonia), தசையழுகல் நோய் (Gangrene) ஆகிய நோய்களுக்கும் வேறு பல நோய்களுக்கும் சிகிச்சையளிப்பதற்குப் பென்சிலின் மருந்து பயன்படுகிறது.

பென்சிலினைப் பயன்படுத்துவதால் பெருமளவு பாதுகாப்பு ஏற்படுவது மற்றொரு முக்கியமான நன்மையாகும். சில தொற்று நோய்களுக்கு எதிராகப் பெனிசிலின் மருந்தின் 50,000 அலகுகள் செயல் விளைவுடையதாக இருக்கின்றன. எனினும், ஓர் நாளில் 10 கோடி அலகு பெனிசிலின் கூட எவ்விதத் தீய விளைவுகளுமின்றி ஊசி மருந்தாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மிகக் குறைந்த விழுக்காட்டு மக்களுக்குப் பென்சிலின் ஒவ்வாதிருந்த (Allergic) போதிலும் பெரும்பாலான மக்களுக்கு நோய்த் தடுப்பாற்றலும், பாதுகாப்பும் வாய்ந்த உன்னத மருந்தாகப் பென்சிலின் விளங்குகிறது.

பெனிசிலின் இதுகாறும் கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது. எதிர்காலத்தில் அது இன்னும் பல கோடி மக்களைக் காப்பாற்றும் என்பது உறுதி. எனவே ஃபிளமிங்கின் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை யாரும் மறுக்க முடியாது. ஆயினும், ஃபிளோரி, செயின் ஆகிய இருவரின் பணிக்கு எத்துணை மதிப்பு அளிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் இந்தப் பட்டியலில் ஃபிளமிங்குக்கு அளிக்கப்படும் இடம் அமையும். இன்றியமையாத கண்டுபிடிப்பினைச் செய்தவர் ஃபிளமிங் தான் என்பதால், அவருக்கே இந்தப் பெருமையின் பெரும் பகுதி சேர வேண்டும் என நான் கருதுகிறேன். அவர் மட்டும் இல்லாதிருந்தால் பென்சிலினைக் கண்டு பிடிக்க இன்னும் பல ஆண்டுகள் பிடித்திருக்கும். அவர் தமது முடிவுகளை வெளியிட்ட பிறகுதான் பென்சிலின் உற்பத்தி செய்வதற்கும், தூய்மைப்படுத்துவதற்கும் சீர்திருந்திய முறைகளைக் கண்டுபிடிக்க முடிந்தது.

ஃபிளமிங் மகிழ்ச்சிகரமாக இல்லற வாழ்க்கை நடத்தினார். அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. இவரது கண்டுபிடிப்புக்காக இவருக்கும், ஃபுளோரி, செயின் ஆகியோருக்கும் சேர்த்து 1945 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப் பட்டது. ஃபிளமிங் 1955 ஆம் ஆண்டில் காலமானார்.



நன்றி : http://ping.fm/O1hKX

No comments: