Tuesday, June 19, 2012

மூட்டு வலிகளா? பயிற்சிகள் உதவும்

'அம்மா நீங்கள் தினமும் கொஞ்சம் நடக்க வேண்டும், மூட்டுகளுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும்' என்றேன்.

'இந்தக் காலோடை எப்படி நடக்கிறது?'

அவளது கேள்வி நியாயம் போலத் தோன்றினாலும் சரியானது அல்ல.

அந்த அம்மா நடந்து வந்த முறையை அவதானித்திருந்தேன். நடக்க முடியாமல் அரங்கி அரங்கி நடந்து வந்திருந்தாள். முழங்கால் வலி, வீக்கம், கொழுத்த உடம்பு வாகை இவை யாவையும் நான் அறிந்ததே. அப்படி இருந்தபோதும் சற்று நடக்க வேண்டும் எனச் சொன்னேன்.

ஏனெனில் பயிற்சி என்பது மூட்டு நோய்கள் உள்ளவர்களுக்கும் மிக மிக அவசியமானதாகும். அது மூட்டுகளைப் பலமுடையதாக ஆக்கும், அவற்றின் மடங்கி நிமிரும் ஆற்றலையும் நெகிழ்வுத் தன்மையையும் அதிகரிக்கும்.

ஆனால் மூட்டுகள் சிவந்து, வீங்கி வலி தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நடக்க வேண்டும் என்ற எண்ணமே உங்கள் வலியை மேலும் அதிகரிப்பது போலத் தோன்றுகிறது அல்லவா? அந்த எண்ணத்தைத் தவிர்க்க முடியாது. ஆனால் இவற்றோடு நீங்கள் பந்தயத்தில் ஓடப் போவதோ, விளையாட்டு வீரர்கள் போல பயிற்சி செய்யப் போவதோ இல்லையே. சிறிய சிறிய பயிற்சிகளே போதுமானது.

அவை வலியைத் தணிக்கவும், மூட்டுகளை இலகுவாக இயக்குவதற்கும் நிச்சயம் உதவும். மூட்டு வலிகள் ஒருவரைப் பாதித்து நடக்கவோ, இயங்கவோ முடியாது தடுத்து, படுக்கையில் கிடத்த முனையும் போது, பயிற்சிகள் மட்டுமே ஒருவரை இயங்க வைக்கும்.

உடற் பயிற்சிகள் ஏன் அவசியம்

பயிற்சிகள் ஒருவரது மூட்டுகளைப் பாதிக்காத அதே நேரம், பொதுவான உடல் நலத்தை மேம்படுத்துவதுடன் செயலாற்றல் திறனையும் அதிகரிக்கும். மூட்டு நோய்களுக்கான மருத்துவத்தைத் தொடர்வதுடன் பயிற்சிகளைச் செய்வதன மூலம் நீங்கள் கீழ்காணும் நன்மைகளையும் பெறுவீர்கள்.

1. மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளைப் பலப்படுத்தும்.
2. எலும்புகளின் உறுதி கெடாமல் பாதுகாக்கும்.
3. நாளாந்த வேலைகளுக்கான பலத்தையும் சக்தியையும் கொடுக்கும்
4. இரவில் உடல் உழைவற்ற நிம்மிதியான தூக்கம் கிடைக்க உதவும்.
5. உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.
6. உங்கள் உடல் நலம் பற்றிய நம்பிக்கையூட்டும் உணர்வை வளர்க்க உதவும்.

பயிற்சி செய்வது மூட்டு வலியை அதிகரித்து, மூட்டுகளை மேலும் இறுக்கமடையச் செய்து இயங்கவிடாமல் தடுக்கும் எனப் பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பயிற்சிகள் செய்யாது மூட்டுகளை ஆட அசையாது வைத்திருப்பதுதான் உண்மையில் மூட்டுகளின் வலியை அதிகரித்து இறுக்கமடைய வைக்கின்றன.

இதற்குக் காரணம் என்னவென்றால் மூட்டுகளும் எலும்புகளும் திடமாக இருப்பதற்கு சுற்றியுள்ள தசைகள் பலமாக இருப்பது அவசியம். அவை திடமாக இருந்து போதிய ஆதரவையும் பக்கபலத்தையும் கொடுக்கவில்லை எனில் மூட்டுகள் சிதைவடைவதற்கும் எலும்புகள் உடைவதற்குமான சாத்தியம் அதிகமாகும்.

மருத்துவ ஆலோசனையுடன் ஆரம்பியுங்கள்

உங்களது மூட்டு வருத்தம் எத்தகையது, அதற்கான சிகிச்சை என்ன, அதற்கு எத்தகைய பயிற்சிகள் சிறந்தவை என்பதை உங்கள் மருத்துரின் ஆலோசனையுடனே ஆரம்பிக்க வேண்டும். அல்லது அதற்கென பயிற்சி பெற்ற பயிற்சியாளர் (Physiotherapist) ஆலோசனையுடன் தொடங்கலாம். உங்களது மூட்டுவலி எத்தகையது, அது எந்தெந்த மூட்டுகளைப் பாதித்துள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு அதிக பலனைக் கொடுக்கும் அதே நேரம் வலியை அதிகரிக்காத பயிற்ச்சி எது என்பதைத் தீர்மானிப்பார்.

பயிற்சி வகைகள்

மூட்டுகளின் செயற்பாட்டு எல்லைகளை அதிகரிப்பதற்கான பயிற்சி

ஓவ்வொரு மூட்டிற்கும் அதன் செயற்பாட்டிற்கான பரப்பு (Range) இருக்கிறது. மூட்டு நோய்கள் ஏற்படும்போது அது பொதுவாக குறைந்துவிடும். உதாரணத்திற்கு வழமையாக உங்கள் கைகளை நேராக தலைக்கு மேல் உயர்த்த முடியும். ஆனால் இறுகிய தோள் மூட்டு (Frozen Shoulder) போன்ற நோய்களின் போது அவ்வாறு முழுமையாக உயர்த்த முடியாதிருக்கும்.

இந் நிலையில் உங்கள் உள்ளங்கைகளை சுவரில் வைத்து அழுத்தியவாறு, படிப்படியாக உயர்த்திக் கொண்டு செல்லுங்கள். இதனை தினமும் பயிற்சியாகச் செய்து வரலாம். இதே போல உங்கள் கைகளை முன்பக்கம், பக்கவாடு, பிற்பக்கம் என திருப்பி உயர்த்தலாம்.

மணிக்கட்டு வலிக்கு படத்தில் காட்டியபடி செய்யலாம்.

இதே போல நோயுள்ள எல்லா மூட்டுகளினதும் செயற்பாட்டு எல்லையை அதிகரிக்க பயிற்சிகள் செய்வது அவசியம்.

தசைகளைப் பலப்படுத்துவதற்கான பயிற்சிகள்

இந்தப் பயிற்சிகள் நோயுற்ற மூட்டைச் சுற்றியுள்ள தசைகளைப் பலப்படுத்தி அதன் மூலம் அவற்றிக்கு பாதுகாப்பளிக்கும். ஒவ்வொரு மூட்டைச் சுற்றியுள்ள தசைகளுக்கும் இவ்வாறு செய்யலாம். உதாரணமாக உங்கள் முழங்காலுக்கு பலம் கொடுக்க வேண்டுமாயின் அதன் கீழ் ஒரு டவலை சுருட்டி வைத்து அதனை முழங்காலால் அழுத்துங்கள். 5 செகண்ட் ரிலக்ஸ் பண்ணிவிட்டு மீண்டும் செய்யுங்கள் இவ்வாறு தினமும் 50 தடவைகள் ஒவ்வொரு முழங்காலுக்கும் செய்யவேண்டும். வலி கடுமையாக இருந்தால் ஒரு நாள் ஓய்வு கொடுத்துச் செய்யுங்கள்.

மற்றொரு பயிற்சி. கதிரை அல்லது கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு உங்களது குதிக்கால் நிலத்தில் படுமாறு வைத்துக் கொண்டு, இடது காலை நீட்டுங்கள். நிமிர்ந்து உட்காரந்திருந்த நீங்கள் இப்பொழுது சற்று முற்புறமாகக் குனியுங்கள். ஆதன்போது உங்கள் காலின் பின்பறம் இறுகுவதை உணரலாம். 20-30 செகண்டுகள் அவ்வாறு இறுகப் பிடித்தபின் சற்று ஆறிய, வலது காலுக்கும் அவ்வாறு செய்யுங்கள்.

பொதுவான உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகள்

மேலே கூறியவை குறிப்பிட்ட மூட்டுகளுக்கான பயிற்சிகள். ஆயினும் உங்கள் முழு உடலும் ஆரோக்கியமாக இருப்பதும் மிக முக்கியமாகும். இதற்கு தினசரி பயிற்சிகள் செய்ய வேண்டும். இத்தகைய பயிற்சிகள் உங்கள் இருதயத்தை திடமாக்கும், சுவாசத்தை இலகுவாக்கும், எடையைப் பேண உதவும். உடலுக்கு மேலதிக சக்தியைக் கொடுக்கும்.

விரைவு நடை, நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவை அத்தகையவையாகும். 20முதல் 30 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

வாரத்தில் 3-4 நாட்களுக்காவது செய்வது அவசியமாகும். ஒரே தடவையில் செய்ய முடியவில்லை எனில், 2 அல்லது 3 தடவைகளாகப் பிரித்துச் செய்யுங்கள்.


மூட்டு வலிக்கு உதவக்கூடிய ஏனைய முயற்சிகள்

மூட்டு வலிகள் இருந்தால் அவற்றின் வலியைத் தணிக்கவும், செயற்பாட்டு எல்லைகளை அதிகரிக்கவும் செய்ய வேண்டிய பயிற்சிகள் பற்றி சென்ற கட்டுரையில் பார்த்தோம். நீங்கள் செய்ய வேண்டிய ஏனைய முயற்சிகள் இதோ.
ஏனைய முயற்சிகள்

இவற்றைத் தவிர உங்கள் உடலுக்கு அசைவியகத்தை கொடுக்கக் கூடிய எந்த வேலையையும் செய்யத் தயங்காதீர்கள். அது சிறிய பணியாக இருந்தால் கூட நிச்சயம் உதவும். யோகா போன்ற பயிற்சிகள் கூட நல்லதுதான். சந்தேகம் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் ஆரம்பியுங்கள்.

ஏனைய உதவிக் குறிப்புகள்

பயிற்சிகளை ஆரம்பிக்கும் போது படிப்படியாக ஆரம்பியுங்கள். அதிலும் முக்கியமாக சிலகாலம் பயிற்சிகள் இல்லாதிருந்துவிட்டு ஆரம்பிக்கும் போது திடீரென முழு வீச்சில் செய்யக் கூடாது. திடீரென கடுமையாகச் செய்தால் வலி குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கக் கூடும். எனவே Slow and Steady யாகச் செய்யுங்கள்.

பயிற்சிக்கு முன்னர் நீங்கள் பயிற்சி கொடுக்க இருக்கும் மூட்டுகளுக்கு சற்று வெப்பம் கொடுப்பது நல்லது. சுடுநீரில் நனைத்த துணியால் ஒத்தணம் கொடுங்கள், அல்லது Hot water bag னால் சூடு காட்டுங்கள்


அல்லது Infra Red Light பிடியுங்கள். அவ்வாறு 15-20 நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும். சூடு மூட்டுகளையும் தசைகளையும் சற்றுத் தளரச் செய்து நீங்கள் பயிற்சியை ஆரம்பிக்க முன்னரே வலியைச் சற்றுத் தணிக்கும்.

வெப்பமான நீரில் குளிப்பதும் உதவக் கூடும். மிதமான வெப்பமாக இருக்க வேண்டுமே ஒழிய கடும் சூடாக இருக்கக் கூடாது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தினமும் பயிற்சிகளை ஆரம்பிக்கும்போது உங்கள் மூட்டுகளை மெதுவாக அசைத்து, அவற்றிற்கான எளிய சுலபமான இதமான பயிற்சிகளை முதலில் செய்யுங்கள்.

இவ்வாறு 10 நிமிடங்கள் செய்த பின் தசைகளைப் பலப்படுத்துவதற்கான பயிற்சிகளைச் செய்யுங்கள்.

அதன்பின்தான் வேகநடை, நீச்சல் போன்ற கடுமையான பயிற்சிகளுக்குப் போக வேண்டும்.

பயிற்சிகளைச் செய்யும்போது வலி எடுத்தால் சற்று ஓய்வு கொடுங்கள்.

சுருக்கென தாக்கும் கடும் வலி எடுத்தால் பயிற்சியை நிறுத்தி அடுத்த நாளுக்கு ஒத்தி வையுங்கள். பயிற்சியின் போது மூட்டுக்கள் சிவந்து வீங்கினாலும் அவ்வாறே நிறுத்துங்கள்.

பயிற்சியின் போது வீங்கி வலித்த மூட்டுகளுக்கு பயிற்சி முடிந்தபின் ஐஸ் வைப்பது உதவும். 10-15 நிமிடங்களுக்கு வையுங்கள்.

பயிற்சிகளின் போது உங்கள் உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். உங்கள் மூட்டுகளால் தாங்க முடியாத கடும் பயிற்சிகளை அதற்குக் கொடுக்காதீர்கள். ஆரம்பத்தில் சொன்னதுபோல படிப்படியாக பயிற்சியை அதிகரியுங்கள், அதன் வேகத்தையும், செய்யும் நேரத்தையும்.

சற்றுக் காலம் நீங்கள் இயங்காதிருந்தால், அல்லது பயிற்சிகளை நிறுத்தியிருந்தால், மீண்டும் ஆரம்பிக்கும் போது மூட்டுகளில் சற்று வலி எடுக்கலாம்.

ஆயினும் அவ்வலி ஒரு மணிநேரத்திற்கு மேலாகவும் நீடித்தால் பயிற்சி சற்று அதிகமாகிவிட்டதாகக் கொள்ளலாம். எதற்கும் உங்கள் மருத்துவருடன் அவ்வலி இயல்பானதுதானா அல்லது நோயின் காரணமாகவா எனக் கலந்தாலோசிக்கலாம்.

எதற்கும் பயிற்சிகளை முற்றாக நிறுத்திவிடாதீர்கள். தொடர்ந்து செய்யுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
குடும்ப வைத்தியர்



Engr.Sulthan

No comments: