அண்மையில் என் முகநூல் பக்கத்தில் நண்பர் கோரிக்கை ஒன்று வந்தது. எங்கோ கேள்வி பட்ட பெயர் போல் இருந்ததால் உள்ளே சென்று பார்த்தேன். ஒரு சிறிய அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்.
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள என் சித்தி பையனின் முகநூல் பக்கம் அது. சிறிய வயதிலேயே கணினி பயன்பாட்டை தெரிந்து வைத்துள்ளான் என்ற சந்தோஷம் ஆயினும், அவன் தேர்வு செய்துள்ள முகநூலில் உள்ள தீமைகளை நினைத்து வருத்தமும் கூட.
பதினாறே வயதான அந்த சின்னப் பையனின் முகநூல் பக்கத்தில் சென்று பார்த்தால், நூற்றுக்கணக்கான நண்பர்கள். அதில் பலர் பெண்களே!. நாங்கள் 10-ம் வகுப்பு படிக்கும் பொழுது ஆண் நபர்களே அதிகம் (இன்று வரையிலும் நமக்கு அப்படித்தான் ). இந்த சின்ன வயதில் இத்தகைய என்னத்தை அவன் மனதில் விதைத்ததற்கு இன்றைய கால அநாகரீக ஆபாச ஊடகங்களுக்கும் சினிமாக்களுக்கும் முக்கியப் பங்குண்டு.
பெற்றோர்கள் இந்த விசயத்தில் மிகுந்த கவனம் கொள்ளவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். இவன் பரவாயில்லை ஆண்பிள்ளை. ஆனால் டிவியும் சீரியலுமாக இருந்த இளம் பெண்கள் இன்று மொபைல் கையுடனும் கணினி மடியுடனும் இருப்பது கூடுதல் கவலை.
இணையதளத்தின் மூலம் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயம் ஏராளம் இருப்பின், இதுபோன்ற சமூக இணைப்பு சேவைத் (SNS- Social Networking Service) தளங்களால் மாணவர்களும் இளம் வயது பெண்களும் வழிகெட்டு சீரழிவது சுலபமே. இவர்களின் எதிர்காலக் கனவுகள் இந்த கணினியின் கதிர்வீச்சில் அழிந்து போக அதிக வாய்ப்பும் உண்டு.
இது போன்ற சமூக இணைப்பு சேவை அளிக்கும் ஊடகங்கள், விழிப்புணர்வு ஏற்படுத்த சிறந்த ஒன்றாக இருந்தாலும், அதன் நன்மையையும் தீமையையும் எடை போட்டால் தீமையின் பக்க தராசு தான் சற்று தரை தட்டுகின்றது . கல்வி கற்கும் இளைஞர்கள் அவர்களது 'கிளாஸ்புக்கில்' நேரத்தை செலவிடுவதை விட 'பேஸ்புக்கில்' தான் அதிகம் கழிக்கின்றனர்.
இவை எதிர்கால கிளைகளின் இலைகளை கருக வைக்கும் அதே சமயம் நூற்றுக்கணக்கான அசிங்கங்களும் ஆபாசங்களும் இவற்றில் அரங்கேறுவது வாடிக்கை ஆகிவிட்டது. சமீபத்தில் படித்த செய்தி “பேஸ்புக்கில் காதல் வயப்பட்டு கர்ப்பை பறிகொடுத்த இரண்டு பெண்கள்” பற்றியது. இது இவர்களுக்குத் தேவையா? பக்கத்து வீட்டுக்காரனையே நம்ப முடியாத இக்காலத்தில் இது போன்ற இணையவழி காதலை நினைத்து பார்த்தாலே முகம் சுளிக்க வைக்கின்றது.
“முகநூல் நட்பது நட்பன்று – கொஞ்சம்
அகநூல் கற்பதும் நன்று”
என்று சொல்லும் அளவுக்கு இந்த ‘முகநூல்’ இளைஞர்களிடையே மிகவும் வேரூன்றி விட்டது.
தான் நேரில் பார்க்க சுமாராக இருந்தால், அவர்களின் முகநூல் புகைப்படமோ சினிமாக்காரர்களின் அல்லது விளம்பர மாடல்களின் படங்களைக் கொண்டதாக மாறிவிடும். இப்பொழுது முகநூல் யாருடைய முகத்தை காட்டுகிறது என்பதே தெரியவில்லை. இது ஒருவரை பற்றிய மாயையை ஏற்படுத்துமே தவிர உண்மையான முகத்தை (குணத்தை ) காட்டாது. சிலர் இதில் விதிவிலக்கு.
கடந்த காலத்தில் நட்பை வளர்த்தது போல் இன்றைய கால நட்பு இல்லை. குட்டிச்சுவர் ஏறி உட்கார்ந்து, பேசி, கிண்டலடித்து, சண்டை இழுத்து பின்பு சமாதானம் ஆகும் சுகம் இந்த முகநூலில் உண்டோ?. சுகமான தென்றல் காற்று, மரத்தடி ஊஞ்சல், சீட்டுக்கட்டு, கில்லி, பம்பரம், கோலிக்குண்டு, கண்ணாமூச்சி இவற்றை நழுவவிட்டு கணினியின் மடியில் கற்பனை சருகுகள் ஆகிவிட்டனர். பாவம் இந்த காலத்து இளஞர்கள் கண்ணியும் கணினியுமாக காலத்தை கழிக்க கடைசியில் மிஞ்சுவது கற்பனையின் சாம்பல் மட்டும் தான்.
இவ்வாறு ஒரு புறம் இருக்க செல்போன்களில் தவழும் முகநூல் மென்பொருள் வசதி, இப்பொழுது தனது சேவையை படுக்கை முதல் பாத்ரூம் வரை நீளச் செய்துள்ளது. வாழ்த்துக்கள்!.
முகநூலில் ஒரு நல்ல கருத்தை பதிவு செய்தால் அதை ‘லைக்” செய்ய ஒருவரும் இல்லை. அதே நேரம் ஒரு பெண் “நான் தூங்கப் போறேன்” என்று பதிவு செய்த பத்து நிமிடத்தில் 63 பதில்கள் மற்றும் எண்ணற்ற “லைக்குகள்”. அதில் 98% ஆண்களே. இவள் தூங்க இத்தனை அக்கப்போர்களா?.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை “செல்போன்களும் மாணவர்களும்” என்ற தலைப்பில் ஏராளமான விமர்சனங்கள். அதில் கூட ஒரு பெண் ஒரு ஆண் என்ற அளவுகோல் இருந்தது. இன்று இந்த முகநூலில், அறிவை கழற்றி வைத்து விட்டு நாகரீகம், பண்பாடு, கலாசாரம் மறந்து, ஆட்டு மந்தையாக மாறிவிட்டனர். ஒரு பெண்ணின் முகநூல் பக்கத்தில் எண்ணற்ற ஆண்கள். தொழில்நுட்ப வளர்ச்சி இவர்களின் மதிநுட்ப வளர்ச்சிக்கு பங்கம் விளைவித்து விட்டதோ?.
என்னுடன் படித்த நண்பர்கள் பலரின் இன்றைய முகவரியை முகநூல் காட்டியது. ஆனால், அவர்களிடம் அன்று இருந்த நட்பையும் அன்பையும் இன்று அதே தரத்துடன் காட்டத் தவறிவிட்டது.
எனது பிறந்த நாள் என்று என் முகநூல் காட்ட, வந்து குவிந்தது பல நூறு வாழ்த்துக்கள். ஆயிரம் பேர் சொல்லும் அந்த வாழ்த்துக்களில் ஏனோ எனக்கு மகிழ்ச்சி இல்லை. காரணம், முகநூல் நண்பர்களின் பட்டியலில் இருக்கும் பலர் எனக்கு முகம் தெரியா நண்பர்கள் தாம். அவர்களை நேரில் பார்த்தால் கூட எனக்கு அடையாளம் தெரியாது!. இது போன்ற அதிருப்திகள் பல உண்டு முகநூலில். ஆயினும் என் உண்மையான நட்புகள் இந்த முகநூலையும் கடந்து வந்து வாழ்த்து சொல்லும் என்பது உறுதி !.
ஜாதி மத பேதமில்லாமல் நட்பையும் கற்பையும் கடைவிரிக்கும் பெருமை முகநூலூக்கே உரியது. முகநூல் ஆற்றும் இந்த சீரிய சமூகப் பணிகளுக்கெல்லாம் நம் நேரமும், கனவுகளும், பொருளாதாரமும் உரமாக அதன் விளைச்சலோ சமூக சீரழிவையும் ஒழுக்கக்கேட்டையும் தவிர வேறென்ன?
முகநூலில் நட்பையும் காதலையும் வளர்ப்பது முடி இல்லா தலைக்கு சீப்பு போடுவதை போலத் தான் என்பதை இந்த சமூகம் என்று உணருமோ?. காலம் பதில் சொல்லும் முன் விழித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைகளை கண்காணியுங்கள். அறிந்தே அவர்களை வழிகேட்டில் விட்டு விடாதீர்கள். அவர்களின் சீர்கேட்டிற்கு நீங்களும் காரணம் ஆகிவிடாதீர்கள்.
தகுந்த முன் எச்சரிக்கைகளுடனும், நேரக் கட்டுப்பாட்டுடனும் முகநூலை பயன்படுத்துவது சிறந்தது. அறியாமையில் நம் முகத்தை முகநூலில் புதைத்தால் மக்கப்போவது நம் வாழ்க்கை தான் என்பதை நினைவில் கொள்வோம்.
- ராஸிக்
Read more about முகநூலில் மூழ்கினால்.... [4925] | வாசகர் கட்டுரைகள் | கட்டுரைகள் at www.inneram.com
--
ALAVUDEEN
No comments:
Post a Comment