Saturday, June 23, 2012

[இரண்டாண்டுகட்கு முன் இஸ்லாத்தைத் தழுவிய பெரியார்தாசன் என அறியப்பட்ட பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் சமீபத்திய நூலொன்றுக்கு எழுதப்பட்ட முன்னுரை இது. முன்னதாக நான் பெரியாரும் இஸ்லாமும் குறித்து எழுதிய கட்டுரைகள் எனது "பெரியார் தலித்கள் முஸ்லிம்கள் " நூலில் உள்ளன. முன்னதாக ச் சில கட்டுரைகள் இதே தலைப்பில் உள்ளதை நினைவூட்டவே இதற்கு 3 என எண்ணிடப்பட்டுள்ளது.]



பேராசிரியர் பெரியார்தாசன் என அறியப்பட்ட முனைவர் அப்துல்லாஹ் அவர்கள் பல்துறை வித்தகர். நாடறிந்த பேச்சாளர், பெரியாரியல், பவுத்தவியல், உளவியல் முதலான துறைகளில் தடம்பதித்தவர், அண்ணல் அம்பேத்கரின் ‘புத்தமும் தம்மமும்’ நூலை அழகு தமிழில் பெயர்த்தவர், திரைப்படங்களிலும் முகம் காட்டியவர் என அவருக்குப் பல பரிமாணங்கள் உண்டு. சிரிக்கச் சிரிக்கப் பேசி அச் சிரிப்புகளினூடே சீரிய கருத்துக்களைச் சொல்வதில் வல்லவர் அவர். தான் இஸ்லாமைத் தழுவியதையொட்டித் தனது பழைய பெரியார் இயக்க நண்பர்கள் கடும் பகையுடன் தம்மை நோக்கி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து அவர் ஆற்றிய உரையொன்று இப்போது எழுத்து வடிவில் உங்கள் கைக்கு வந்துள்ளது.



“பெரியார்தாஸன் இஸ்லாத்துக்கு வந்துட்டேன்னு அப்படியே வேகாத கல்லெடுத்து நோகாது இடிச்சுக்கிறாங்க. பாக்க மாட்டேங்கிறாங்க. வணக்கம்னு சொன்னா திருப்பி வணக்கம் கூட சொல்ல மாட்டேங்கிறாங்க. பழைய தோழர்களெல்லாம் என்னை ஏதோ தீண்டாதவன் மாதிரி ஒதுக்கி வச்சுட்டாங்க”



என வேதனையோடு சொல்லும் பெரியார்தாசான் எனப்பட்ட பேராசிரியர் அப்துல்லாஹ், “ஆனால் உங்க பெரியார்தான்யா சொல்லியிருக்கார் உண்மையான மார்க்கம் இஸ்லாம்தான்னு” என ஆவேசமாகச் சொல்கிறார். பெரியார் இஸ்லாம் குறித்துப் பேசிய பல கருத்துக்களையும் செயல்பாடுகளையும் மேற்கோள் காட்டி 1920கள் தொடங்கித் தொடர்ச்சியாகத் தன் இறுதிக் காலம் வரை இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்றே நன்மருந்து என அவர் சொல்லி வந்ததாகக் கூறும் அப்துல்லாஹ் அவர்கள் முத்தாய்ப்பாக, ”அழைப்புப் பணியாளர்களிலேயே சிறந்த இஸ்லாமிய அழைப்புப் பணியாளராகப்” பெரியாரை அடையாளம் காண்கிறார்.



சூத்திரர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் இருந்த இழிநிலை குறித்துப் பெரியார் இறுதிவரை கவலைப்பட்டுக் கொண்டிருநதது, அந்த இழி நிலையைப் போக்கும் ஒரே வழியாக அவர் இஸ்லாத்தையே அடையாளம் கண்டது, வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் என அவர் எல்லோரையும் நோக்கிச் சவாலாகக் கேட்டது என எல்லாவற்றையும் சுட்டிக்காட்டும் அப்துல்லாஹ், பெரியாரின் பகுத்தறிவுவாதத்திற்கும் இஸ்லாம் குறித்த அவரது இந்த நிலைப்பாட்டிற்கும் முரணேதுமில்லை என்கிறார். நபிகளை மகான் என்றோ, அமானுஷ்ய சக்தி கொண்டவரென்றோ பெரியார் கருதவில்லை, மனிதத் தன்மை மிக்க மிகச் சிறந்த மனிதராக மட்டுமே கருதினார் என்பதையும் சொல்கிறார்.



நாத்திகரான பெரியார் இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையை எப்படி ஏற்றுக்கொண்டார் என்கிற கேள்வியை எழுப்பி, “ஆயிரக்கணக்கான கடவுள்களைக் கட்டி அழுகிறவர்களைவிட, இணை வைப்பவர்களைவிட நபி அவர்கள் மேலானவர்” எனப் பெரியார் கூறியதைச் சொல்லி அந்தக் கேள்விக்கும் பதிலளிக்கிறார். மோட்சத்திற்காகவோ, கடவுளின் சன்மானத்தைப் பெறுவதற்காகவோ பெரியார் இஸ்லாத்தைப் பரிந்துரைக்கவில்லை. மதங்கள் என்ன சொல்கின்றன என்பதைக்காட்டிலும் அவை என்னவாக இருக்கின்றன என்பதே பெரியாரின் கவனத்திற்குரியதாக இருந்தது. அவரது எழுத்துக்களைக் கூர்ந்து கவனித்தால் மதவிஷயங்களில் ‘பிரத்தியட்சம்’ என்கிற வார்த்தையை அவர் அதிகம் பயன்படுத்துவது தெரியும். இஸ்லாத்தில் சமத்துவம் இருக்கிறது, அங்கே சாதி பேதம் இல்லை. தீண்டாமை இல்லை. ஆக உனக்கு இந்தப் பிறவியிலேயே விடுதலை கிடைக்கிறது என்று சொல்லித்தான் அவர் ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கி இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்தார்.



இந்த ஏற்றத் தாழ்வுகள் இல்லாமைதான் முஸ்லிம்கள் மத்தியிலுள்ள அபாரமான ஒற்றுமைக்குக் காரணமாக உள்ளது. மக்களை இணைக்கும் மார்க்கமாக இஸ்லாம் இருக்கிறது. ஒரு முஸ்லிமை யாராவது தாக்கினால் இன்னொரு முஸ்லிம் அவருக்கு ஆதாரவாக வருவார். ஆனால் ஒரு இந்துவை இன்னொருவர் அடித்தால் அடிப்பவன் என்ன சாதி, அடிபடுபவன் என்ன சாதி என்கிற கேள்விகள்தான் முன்னுக்கு வரும். இந்துக்களிடம் இல்லாத இப்பண்பு இஸ்லாமியர்களிடம் இருப்பதால்தான் அவர்கள் முரட்டுத்தனமானவர்கள். தீவிர மதப் பற்று உடையவர்கள் எனச் சொல்வதற்குக் காரணமாகிறது எனப் பெரியார் விளக்குவார். இதை எல்லாம் எடுத்துச் சொல்லும் அப்துல்லாஹ், கிறிஸ்தவத்திற்கு மாறுவதன் மூலம் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை எனப் பெரியார் கூறியதையும் அம்பேத்ருக்கும்கூட அவர் இஸ்லாத்தையேப் பரிந்துரைத்ததையும் சுட்டிக்காட்டுகிறார். பெரியாருக்கு எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லை எனச் சொல்வது தவறு. அவருக்கு இஸ்லாத்தில் நம்பிக்கை இருந்தது என அடித்துச் சொல்கிறார். இஸ்லாத்தில் கலந்து போயுள்ள தர்ஹா வணக்கம் முதலான மூட நம்பிக்கைகளை மட்டுமே பெரியார் எதிர்த்தார் எனச் சொல்லும் அப்துல்லாஹ் இதிலென்ன தவறு எனக் கேட்கிறார். ஆக மொத்தத்தில் தான் பெரியார்தாசன் என்பதிலிருந்து “மிகப் பெரியோனின் தாசனாக” மாறியதில் எந்த முரண்பாடுமில்லை எனத் தன் வாதங்களை அவருக்கே உரிய எளிய மொழியில் சுவைபட முன்வைக்கிறார்.



பெரியார் இஸ்லாம் குறித்துப் பேசியுள்ளவை பற்றி நானும் விரிவாக எழுதியுள்ளேன் (“பெரியார், தலித்கள், முஸ்லிம்கள்’, கருப்புப் பிரதிகள், சென்னை). ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். பெரியார் நபிகள் நாயகத்தின் மீது மிகுந்த மரியாதையையும், இஸ்லாத்தின் மீது மிக்க நம்பிக்கையையும் கொண்டிருந்தது, பெரியார் வார்த்தைகளிலேயே சொல்வதானால் “கல்லுப் போன்ற ஒரு உண்மை”. தமிழகமெங்கும் நடைபெற்ற ஏராளமான நபிகளின் பிறந்த நாள் விழாக்களிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அவர் பேசிய பேச்சுக்களை எல்லாம் சமீபத்தில் தொகுத்துப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ”உலகில் தோன்றிய பெரியார்களிலேயே மிக ஒப்பற்ற சிறந்தவர்”, என்றும் “இஸ்லாம் மதம் அநேகமாக உலக மக்கள் அனைவருக்குமே பொருத்தமானது” (சத்திய மங்கலம், ஆக, 08, 1930) என்றும் அவர் திரும்பத் திரும்பக் கூறியுள்ளது உண்மை. “தமிழர்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமானது” எனவும் (குடியரசு, தலையங்கம், ஃபிப், 24, 1935) இன்னும் பலவாறும் அவர் இவ்வாறு பேசியுள்ளவற்றைச் சுருக்கம் கருதித் தவிர்ப்போம்.



எனினும் பெரியார் இப்படிப் பேசியதோடு நிற்கவில்லை. மனதில் பட்டவற்றைடறூடனடிப் பலாபலன்களைக் கருதி மறைத்துக் கொள்வதில் என்றைக்குமே அக்கறை காட்டியிராத பெரியார், இத்தகைய விழாக்களிலும் பிற வாய்ப்புகளினூடாகவும் முஸ்லிம்களுடன் அவர் உரையாட நேர்ந்தபோதெல்லம் தொடர்ந்து அவர் சில விமர்சனங்களையும் முன்வைத்துக் கொண்டே இருந்தார். அவற்றில் சில முஸ்லிம்களுக்கு உவப்பானதாக இல்லாத போதிலும் அவர் அவற்றைச் சொல்லிக் கொண்டுதான் இருந்தார். இஸ்லாத்தில் கலந்து போயுள்ள சில சடங்குகள், மூட நம்பிக்கைகள், தர்ஹா வணக்கம் முதலானவற்றைப் பெரியார் வன்மையாகக் கண்டித்துள்ளதைப் பெரியார்தாசன் இன்நூலில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். இதை முஸ்லிம் மத நெறிகளை இறுக்கமாகப் பின்பற்றும் யாரும் மறுக்க மாட்டார்கள். உலமாக்கள், ஆலிம்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளவே செய்வர்.



ஆனால் பெரியாரின் விமர்சனங்கள் இத்தோடு நிற்கவில்லை. குறிப்பாக் மேலும் இரு கருத்துக்களை முஸ்லிம்களின் சிந்தனைக்கு அவர் முன்வைத்துக் கொண்டே இருந்தார். உலகிலுள்ள மதங்களிலேயே முற்போக்கான மதம் என அவர் இஸ்லாத்தைச் சுட்டிக்காட்டும் போதெல்லாம் அதற்கு அவர் சொல்லும் விளக்கம், “ஏனெனில் அது சமீபத்தில் ஏற்பட்ட மதமானதினால் மிகவும் திருந்திய மதமென்றே சொல்லுதல் வேண்டும்” என்பதுதான் (முன் குறிப்பிட்ட சத்தியமங்களம் சொற்பொழிவு). பிறிதோரிடத்தில், “இவ்வித உயரிய கொள்கைகள் அவருக்கு (நபிகளிக்கு) மாத்திரம் எப்படித் தோன்றியது என்போமானால் அவர் மற்ற மதங்களின் குணதோஷங்களை எல்லாம் நன்கு அறிந்து கடைசியில் பிந்திய காலத்தில் ஏற்படுத்தின மதமாதலால் அது கூடுமானவரை திருத்தத்துடன் செய்ய முடிந்தது” (குடி அரசு ஆக, 25, 1929).



‘இஸ்லாம்’ என்பது ஏக இறைவன் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட நெறி, முஹம்மது நபிகள் இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட தூதர் மட்டுமே என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை.. எனவே இஸ்லாம் என்பது நபிகளால் உருவக்கப்பட்ட சமீபத்திய மதம் எனப் பெரியார் வரலாற்றடிப்படையில் கூறுவதை இஸ்லாமியர்கள் ஏற்கமாட்டார்கள் என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் பெரியார் இஸ்லாம் மீது முன்வைக்கும் மெல்லிய விமர்சனமும் இதிலிருந்துதான் தொடங்குகிறது.

பெரியார் சொல்வது இதுதான். “கால தேச வர்த்தமானங்களைக்” கணக்கில் எடுத்துக் கொண்டு மாறியுள்ள வரலாற்றுச் சூழலுகேற்ப பழைய மதங்களின் நல்லது கெட்டதுகளைப் பரிசீலித்து இன்றைக்கு 1400 ஆண்டுகட்கு முன்னதாக ஒப்பீட்டளவில் மிகவும் முற்போக்கான மதமாக இஸ்லாம் உருவாகியது. ஆனால் அதற்குப் பின் இன்று சுமார் 1400 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த இடைப்பட்ட நூற்றாண்டுகளில் உலக மக்கள் அனைவரையும் அது தன் வயப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ஏன்?



“இயற்கைக்கும் பகுத்தறிவுக்கும் பொருந்தாத ஒரு அபிப்ராயத்தைப் புகுத்தி அதைக் கட்டுப்படுத்திவிட்டதால் போதிய வளர்ச்சியில்லாமல் போய்விட்டது. அதாவது 1500 வருஷங்களுக்கு முன் சொன்னது எதுவோ அதுதான் இன்னமும், லஷத்து அய்ம்பதினாயிரம் வருஷம் பொறுத்தும் இருக்க வேண்டியதாகுமே ஒழிய அதில் ஒரு சிறு மாறுதல் கூட செய்ய முடியாது என்பதோடு செய்ய இடம் கொடுக்கப்படக்கூடாது என்றும் சொல்லி வருகின்ற முரட்டுப் பிடிவாதமே மக்களை அதன் பெருமையை உணர முடியாமல் செய்துவிட்டது.”

என்று சொன்னதோடு பெரியார் நிற்கவில்லை. தொட்ர்ந்து,

“கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்றபடி ஒத்துப் போவதற்கு இஸ்லாம் மார்க்கத்தில் இடமில்லை என்றால் அப்படிச் சொல்கின்றவர்கள் எவ்வளவு பக்திவான்கள் ஆனாலும் முகமது நபிக்கு நீதி செய்தவர்களோ அவருக்குப் பெருமை அளித்தவர்களோ ஆகமாட்டார்கள் என்றே சொல்லுவோம்”



எனவும் கருத்துரைத்தார் (முன் குறிப்பிட்ட 1935 தலையங்கம்). பிறிதொரு கூட்டத்தில்,



“மனிதன் காலதேசவர்த்தமானத்திற்குக் கட்டுப்பட்டவனாவான். மனிதனது மார்க்கமோ கொள்கையோகூட அதில் பட்டதேயாகும். ஏனென்றால் மார்க்கம் என்பது மனிதன் வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதை கொண்டு சொல்கிறேன்.. வழி என்பது அடிக்கடி மாறக் கூடியதேயாகும். கால்நடை வழி, ஆடு,கழுதை,குதிரை, மூலம் செல்லும் வழி, கட்டை வண்டி வழி, மோட்டார் வழி, ரயில் வழி, ஓடம் கப்பல் வழி, கடைசியாக ஆகாய விமான வழி ஆகிய ஒவ்வொரு காலத்திற்குத் தகுந்தது போல் வழி திருத்தப்பட வேண்டும். அது போலவே மனித வாழ்க்கை வழியும் காலத்தின் கோலமாய், தேசத்தின் தன்மையாய், சந்தர்ப்பத்தின் அவசியமாய் மாறியே ஆக வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். மாறுதலுக்கு இடம் கொடுக்கும் என்கின்ற மார்க்கமே சரியான மார்க்கம்.” (சாத்தான்குளம், ஜூலை 28, 1931).



சுருக்கம் கருதி அவர் வேறு இடங்களில் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளதை இங்கே தவிர்ப்போம்.

கால, இட மாற்றங்களுக்கு ஏற்ப மாறாதுள்ள ஆனால் மாற்றம் பெற வேண்டிய ஒரு வழமையாகப் பெரியார் முஸ்லிம் பெண்களுக்கு அணிவிக்கப்படும் ‘கோஷா’, அதாவது பர்�

No comments: