Wednesday, January 11, 2012

இந்தியா விற்பனைக்கு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சந்தைகளில் ஒன்று... மதுக்கூர் சந்தை. ஒரு குடும்பத்துக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் கிடைக்கும். சாமான்கள் மிகத் தரமாகவும் விலை வெகு மலிவாகவும் இருக்கும். மதுக்கூர் சந்தையின் முக்கியமான அம்சம், கருவாடும் நல்லெண்ணெயும். ``அட... அந்த நல்லெண்ணெயும் கருவாடும் கூடிக் குழம்புக்குக் கொடுக்கும் ருசியே தனி`` என்பார்கள். தமிழ்நாட்டில் கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், கொல்லிமலை, பொள்ளாச்சி, வால்பாறை, தேனி, பாவூர்சத்திரம் என்று ஒவ்வொரு பகுதிக்கும் இப்படி ஒவ்வொரு சந்தையின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தச் சந்தை மரபு இன்று, நேற்றல்ல; பல நூற்றாண்டுகளாகத் தொடர்வது.

பண்டைய தமிழக அரசர்கள் பத்துப் பதினைந்து கிராமங்களுக்கு மையமாக ஓர் ஊரைத் தேர்ந்தெடுத்து பெரிய கோயில்களைக் கட்டினார்கள். எங்கெல்லாம் இப்படிப் பெரிய கோயில்களைக் கட்டினார்களோ, அங்கெல்லாம் அருகிலேயே சந்தைகளை அமைத்தார் கள். திருவிழாக்கள், அதையட்டிப் போடப்படும் திருவிழாக் கடைகள்... எல்லாமே சந்தை என்கிற அமைப்பை மக்களின் வாழ்வோடு பிணைக்கும் அம்சங்கள். தமிழகம் மட்டும் அல்ல; இந்தியா முழுக்க இந்த மரபு இருக்கிறது. இந்த மரபின் நீட்சியே இன்றைய கோயம்பேடு சந்தை முதல் தெருவோர மளிகைக் கடைகள் வரை.

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்றால், இந்திய விவசாயத்தின் முதுகெலும்பு சில்லறை வர்த்தகம் என்று அழைக்கப்படும் இந்தச் சந்தை முறை. இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்து அதிகமானோருக்கு - 5 கோடி பேருக்கு-வேலை அளிக்கும் துறை இது. இந்தியாவின் 6.58 லட்சம் கிராமங்களை 47 ஆயிரம் சந்தைகள் இணைக்கின்றன. நம்முடைய தானிய உற்பத்தியில் 35 சதவிகிதம் நேரடியாகவும் 41 சதவிகிதம் மறைமுகமாகவும், இந்தச் சந்தை அமைப்பின் மூலமாகவே விநியோகிக்கப்படுகிறது.

இந்திய விவசாயத் துறைக்கும் இந்திய சில்லறை வர்த்தகத் துறைக்கும் இதுவரை துரும்பைக்கூட கிள்ளிப்போடாத மன்மோகன் சிங் அரசு, கடந்த வாரம் இரு துறைகளையும் மொத்தமாக விலை பேசும் முடிவை எடுத்துள்ளது. ஏற்கெனவே, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பல பொருள் சில்லறை வர்த்தகத்தில் 51 சதவிகிதம் அந்நிய முதலீட்டுக்கும் ஒரு பொருள் சில்லறை வர்த்தகத்தில் 100 சதவிகிதம் அந்நிய முதலீட்டுக்கும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. சுருக்கமாக, இந்திய வேளாண் துறையையும் சில்லறை வர்த்தகத்தையும் வளைத்துப் போட்டுக்கொள்ள வெளிநாட்டுப் பெருநிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. மக்களிடம் இருந்து பெரிய எதிர்ப்பு ஏற்படாத நிலையில், எதிர்க் கட்சிகள், மாநில அரசுகளின் எதிர்ப்பு காலப்போக்கில் கடலில் கரைத்த பெருங்காயமாகிவிடும் என்பதால், இந்த அனுமதி கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டது.

``இந்திய விவசாயிகள் இடைத்தரகர்கள் குறுக்கீடு இன்றி விளைபொருட்களுக்கு நல்ல விலை பெற அரசின் இந்த முடிவு வழிவகுக்கும்`` என்று தெரிவித்திருக்கிறார் மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா.

அமைச்சர் இடைத்தரகர்கள் என்று குறிப்பிடுவது சந்தையிலும் சாலையிலும் சாக்கு விரித்து தானியங்களை விற்கும் வியாபாரிகளையும் சிறு, குறு மளிகைக் கடைக்காரர்களையும்தான். விவசாயிகளிடத்தில் இருந்து மக்களிடத்தில் பொருட்களைக் கொண்டுசெல்லும் சிறு வியாபாரிகளை இடைத்தரகர்கள் என்று குறிப்பிடுவது முதலாளித்துவச் சொல்லாடல். அமைச்சர் அதைத்தான் பின்பற்றி இருக்கிறார். சரி, இந்த இடைத்தரகர்கள் இல்லை என்றால், எப்படி விவசாயிகளிடத்தில் இருந்து விளைபொருட்கள் மக்களை வந்தடையும்? அந்தச் `சேவை’க்குத்தான் பன்னாட்டுப் பெருவணிக அங்காடிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது அரசு.

இந்திய அரசு இந்த முடிவை எடுத்த அடுத்த நொடி, இதை வரவேற்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் `வால்மார்ட் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் தலைவரும் முதன்மைச் செயல் அதிகாரியுமான டோ மேக்மில்லன். `` `வால்மார்ட்’ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவுக்குச் சேவையாற்ற இந்த முடிவு வழிவகுக்கும்`` என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்த நிறுவனங்கள் என்ன `சேவை’ செய்யும்? விவசாயிகளுடன் நேரடி ஒப்பந்தம் இடும். அவர்களுக்கு இடுபொருட்கள் தரும். கடன் அளிக்கும். விளைபொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்து, சந்தை விலையைக் காட்டிலும் குறைவான விலையில் தங்கள் அங்காடிகளில் விற்கும். இது ஆரம்பம்.

முடிவு எப்படி இருக்கும்? விவசாயிகள் கடன் வாங்குவார்கள். விளைச்சல் பொய்க்கும்போது வாங்கிய கடனுக்கு நிலத்தைப் பெறுநிறுவனங்களிடமே ஒப்படைப்பார்கள். இதற்கிடையில், பெருநிறுவனங்களின் விலையுடன் போட்டியிட முடியாமல் சிறு வியாபாரிகள் தொழிலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். ஒருகட்டத்தில் பெருநிறுவனங்கள் நிர்ணயிப்பதே விலை என்று ஆகும். விவசாயிகளும் வெளியே விற்க முடியாது. மக்களும் வெளியே வாங்க முடியாது. நல்ல தரமான பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும். இப்போது குப்பை டீ கிடைப்பதுபோல, குப்பை உணவு மட்டுமே நமக்குக் கிடைக்கும். சில்லறை வர்த்தகம் பெருநிறுவனங்களின் ஏகாதிபத்தியத்தின் கீழ் வரும். இப்போது பெட்ரோலிய நிறுவனங்களால் பெட்ரோல் விலை தீர்மானிக்கப்படுவதுபோல, இனி எல்லாப் பொருட்களின் விலைகளும் இந்தப் பெருநிறுவனங்களால் தீர்மானிக்கப்படும். இந்தியச் சந்தைகள் மைதானங்களாகும். இந்திய விவசாயிகளும் வியாபாரிகளும் கூலித் தொழிலாளர் வர்க்கமாக மாறிப்போவார்கள்.

`கிழக்கிந்திய கம்பெனி’யின் வரலாறு ஞாபகத்துக்கு வருகிறதா?
சமஸ்
ஓவியம் : ஹாசிப்கான் - நன்றி ஆனந்த விகடன்
__._,_.___

No comments: