Sunday, January 15, 2012

இந்தியாவில் சராசரியாக நாளொன்றுக்கு 40-50 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். விவசாயத்தை விட்டுவிட்டு நகர்ப்புறத்துக்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், உணவு உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விவசாயத்தைச் சார்ந்திருக்கும் நாடுகள், விவசாய வளர்ச்சிக்குத் திட்டமிட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்கி நாட்டை வளமிக்கதாகச் செய்ய வேண்டும்.

முந்தைய திமுக அரசில் இலவச கலர் டிவிக்காக செலவிடப்பட்ட 600 கோடி ரூபாயில் மூன்று லட்சம் கறவை மாடுகளை வாங்கிக் கொடுத்திருக்கலாம் என்கிறது ஒரு செய்தி.

உணவுப் பஞ்சம் என்கிற பூதம் கொல்லைப்புறத்தில் உட்கார்ந்து மிரட்டி வருகிறது. என்றைக்கு வீட்டுக்குள் வரும் என்று தெரியவில்லை.

இச் சூழலில் மற்ற துறைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட வேளாண் துறைக்கு வழங்க நமது மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

அரசு ஊழியர்களுக்கும் தனியார் ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு, பஞ்சப்படி, ஊக்க போனஸ் உண்டு. ஆனால், உழவன் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள்களுக்குக் கட்டுப்படியாகும் கொள்முதல் விலைகூட இல்லை. காலங்கள் பல கடந்தாலும், நிலைமை இன்னும் மாறவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 1930-35-ம் ஆண்டுகளில் ரூ.15 ஆக இருந்தது.

இன்று தங்கத்தின் விலை ரூ.21,000-ஐ கடந்துள்ளது. இந்த விகிதத்தில் பார்த்தால் 1935-ல் குவிண்டாலுக்கு ரூ.5 ஆக இருந்த நெல், இன்று என்ன விலையாக இருக்க வேண்டும்.

நெல்லும் தங்கமும் மூன்றுக்கு ஒன்று எனும் விகிதத்தில், இன்று நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.7,000 ஆக விற்க வேண்டுமே.... நினைக்கவே நெஞ்சு அடைக்கிறது...!

மக்கள்தொகைப் பெருக்கத்தால், தங்கத்துக்கு மட்டுமல்ல நெல்லுக்கும்தான் தேவை அதிகரித்துள்ளது. தினமும் 24 மணி நேரமும் பிரதான தொலைக்காட்சி அலைவரிசைகளில் தங்கத்தின் விலை வரி வரியாக ஓடுகிறது. ஆனால், நெல், கோதுமை விலை குறித்து ஓடுவதில்லையே. எல்லாமே வியாபாரமயம்தானே..!

தங்கம், வெள்ளிக்குக் கொடுக்கும் மரியாதையை வேளாண் பொருளுக்குக் கொடுக்க மறுக்கிறோமே, ஏன்?

விவசாயிகளை இந்தியத் தாய் மண்ணின் முதுகெலும்பு என்கிறார்கள். ஆனால், முதுகெலும்பு முறிந்த நிலையில் விவசாயிகள் உள்ளனர் என்பதே நிதர்சன உண்மை. இதை எந்த அரசியல்வாதியோ அல்லது அரசோ கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

அரசியல்வாதிகளின் விவசாய ஆதரவுப் பேச்சு எல்லாம் ஏமாற்று வேலைதான் என்று விவசாயி கூறுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

விவசாயியின் வாழ்வாதாரத்தைப் பறித்து பன்னாட்டு நிறுவனங்கள் பாட்டிலில் அடைத்து விற்கும் ஒரு லிட்டர் தண்ணீரை (சுத்தமான) ரூ.15-க்கு மேல் விலை கொடுத்து வாங்கும் மக்கள், அரை லிட்டர் பாலை ரூ.15-க்கு வாங்க மறுப்பது ஏனோ?

"ஜெய் ஜவான்... ஜெய் கிஸôன்...' என்று அரசு கோஷம் போட்டதும் இந்த நாட்டில்தான். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் மட்டும் விவசாயிகள் 2 லட்சத்தும் அதிகமானோர் தற்கொலை செய்துகொண்டுள்ளதும் இந்த நாட்டில்தான்.

இவர்களில் யாரும் பெற்றோரை இழந்த துக்கத்தினாலோ, காதல் தோல்வியாலோ, குடும்ப நெருக்கடியாலோ, வயிற்று வலியாலோ உயிரைத் துறக்கவில்லை.

கடன் தொல்லையால், வட்டி கொடுக்க முடியாமல், பயிர்கள் ஏற்படுத்திய நஷ்டத்தால் தற்கொலை செய்துகொண்டவர்கள்தான் இவர்கள். போர்களின்போது இறப்பவர்களைவிட இந்த எண்ணிக்கை அதிகம் என்பது தாய்நாட்டுக்குப் பெருமை இல்லை என்பதை அரசு உணரவில்லையே!

நிறைய நிலம் வைத்திருந்து நிறையக் கடன் வாங்கி, நஷ்டம் அடைந்து அதிகக் கடன் நிலுவை வைத்திருப்பவர்கள் பெரு விவசாயிகள். குறைவாக நிலம் வைத்திருந்து குறைவாகக் கடன் வாங்கி குறைந்த நஷ்டம் அடைந்து குறைவாகக் கடன் நிலுவை வைத்திருப்பவர்கள் சிறு விவசாயிகள்.

பெரு விவசாயிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அவர்களைத் தேடி வந்து அளிக்கப்படும். சிறு விவசாயிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் வங்கிகளில் பட்டியலாகவே ஒட்டப்படும்.

நன்றி: எம்.சடகோபன்
தமிழ் தாயகத்திற்காக
ஜகன்னாதன் கிருஷ்ணா

No comments: