Friday, September 7, 2012

முஸ்லிம் இளைஞர்களின் கைது: நரோடா பாட்டியா வழக்கு தீர்ப்பை திசைதிருப்பும் முயற்சி! – சி.எல்.எம்.சி கண்டனம்!

3 Sep 2012
ஹைதராபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது நிகழ்ந்த நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை வழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியே அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாத தொடர்புபடுத்தி கைது செய்த நடவடிக்கை என்று சிவில் லிபர்டீஸ் மைனாரிட்டி கமிஷன் ஆஃப் இந்தியா(சி.எல்.எம்.சி) குற்றம் சாட்டியுள்ளது. பிரதமர்அவசரமாக இவ்விவகாரத்தில் தலையிடவும் அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சி.எல்.எம்.சி அமைப்பின் பொதுச்செயலாளர் லத்தீஃப் முஹம்மது கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து முஸ்லிம் இளைஞர்களை தீங்கிழைக்கும் நோக்கத்துடனும், நேர்மையின்றியும் போலீஸ் கைது செய்துள்ளது. இச்செயலை சிவில் லிபர்டீஸ் மைனாரிட்டி கமிஷன் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. இந்த கைது, ஹிந்துத்துவா அமைப்புகளுடன் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போலீஸ் துறையில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான அதிகாரிகளுக்கு இருக்கும் தொடர்பை அம்பலப்படுத்துகிறது. இந்த கைது நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமே, குஜராத் இனப் படுகொலையில் பங்கேற்ற குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பையும், தற்பொழுது அஸ்ஸாமில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தையும் திசை திருப்பும் முயற்சி என்று சி.எல்.எம்.சி நம்புகிறது.
சிவில் லிபர்டீஸின் அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, முஸ்லிம் இளைஞர்கள் சட்டத்திற்கு புறம்பாக பிடித்துச் செல்லப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்டுள்ளார்கள். இவையெல்லாம் முடிந்த பிறகு அவர்களின் கைது அறிவிப்பு வெளியானது. இந்த கூட்டு நடவடிக்கை ஒரே நேரத்தில் பெங்களூர், ஹைதராபாத், நந்தத் மற்றும் தென்னிந்தியாவின் இதர பகுதிகளில் நடந்தேறியுள்ளது.

இந்த கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட போலீசார் தாம் முன்பு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தார்கள். கைது மற்றும் விசாரணையின் போது போலீஸ் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நிபந்தனைகள் குறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை முற்றிலும் மீறியுள்ளனர்.

சிறந்த கல்வி பின்னணி கொண்ட முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஹிந்துத்துவா செயல் திட்டத்தின் சதி வேலையாகும். கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பத்திரிகைத்துறை, விஞ்ஞானம், மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப துறைகளை சார்ந்தவர்களும் பயில்வோரும் ஆவர். இந்த கைது நடவடிக்கை மூலம் விஞ்ஞான நிறுவனங்கள், பத்திரிகைத் துறைகளில் முஸ்லிம் இளைஞர்களின் எதிர்காலம் இருள் அடைந்ததாக மாறியுள்ளது.

போலீஸ் கூறுவதில் பொய்களின் ஒட்டுமொத்த தொகுப்பை தவிர வேறு எதுவும் இல்லை. பெங்களுர் போலீஸ் தலைமை அதிகாரி கூறுகையில், முஸ்லிம் இளைஞர்கள் தங்களது கையில் பிஸ்டலை கையில் பிடித்துக்கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கைது செய்ததாக கூறுகிறார். இதில் பெரிய கேள்வி என்னவெனில், தூங்கும் பொழுது பிஸ்டலை கையில் பிடித்தவாறு தூங்குபவர்கள் எவ்வாறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்?மேலும் போலீஸ் கூறுகையில், கம்ப்யூட்டர், லேப்டாப், செல்ஃபோன் மற்றும் ஹார்ட் டிஸ்குகளை முஸ்லிம் இளைஞர்களிடமிருந்து கைப்பற்றியதாக கூறுகிறது. இதுவெல்லாம் ஒரு சாதாரண விஷயம் என்பது பாமரனுக்கும் புரியும். ஏனெனில் இவையெல்லாம் அன்றாட வாழ்க்கைக்கு தற்பொழுது அத்தியாவசியமானவையாகும். அவை ஆபத்தான் ஆயுதங்கள் அல்ல.

பிரதமர் இவ்விவகாரத்தில் அவசரமாக தலையிட்டு, உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் முஸ்லிம் இளைஞர்களை அநியாயமாக கைது செய்வதை நிறுத்துமாறு உத்தரவிடவேண்டும்.

அரசியல் கட்சிதலைவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் இந்த கைதுகளுக்கு கண்டனம் தெரிவிக்க முன்வரவேண்டும்.

கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் எதிர்காலத்தில் சட்டத்தால் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்படுவார்கள். அப்பொழுது மாநில அரசுகள் மீண்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு மன்னிப்பு மற்றும் இழப்பீடு வழங்கும் சூழல் உருவாகும்.

சி.எல்.எம்.சி பிரதமருக்கு இதுத் தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளது. இவ்வாறு லத்தீஃப் முஹம்மது கான் அறிக்கையில் கூறியுள்ளார்.

Source: http://ping.fm/cZhzd

__._,_.___

No comments: