Thursday, September 13, 2012

வடகிழக்கே வலை விரிக்கும் சங் பரிவாரம்!
7 Sep 2012

சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிராக கலவரங்கள் நடத்தப்படுவதும், முஸ்லீம்களின் உயிர்களும் உடைமைகளும் பறிக்கப்படுவது என்பது புதிதல்ல. ஒவ்வொரு வகுப்பு கலவரங்களின் முடிவிலும் முஸ்லீம் சமூகம் அகதிகள் முகாம்களை நோக்கியும் சேரிகளை நோக்கியும் விரட்டபடுவது இயல்பாகிவிட்டது. இத்தகைய அனைத்து கலவரங்களுக்கு பின்னணியை ஆராய்வோமானால் ஆணிவேராய் ஆர். எஸ். எஸ். ஸும் அதன் விருட்சங்களாய் சங்க பரிவாரமும் தென்படும்.

சமீபத்திய அஸ்ஸாம் கலவரத்தை எடுத்துக் கொண்டால் பல ஆண்டுகளாகவே மண்ணின் மைந்தர்களான முஸ்லீம்களை வங்காளதேச குடியேறிகள் என்று முத்திரை குத்தி நாட்டை விட்டு விரட்டும் விசம பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்துள்ளனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு மே மாதம் கிழக்கு அஸ்ஸாம் பிரதேசமான திப்ருகரிலிருந்து ஆயிரக்கணக்கான அஸ்ஸாம் முஸ்லீம்கள் வெளியேறினர். இதன் பின்னணியில் பி.ஜே.பி யின் இளைஞர் அமைப்பான சிரிங் சப்போரி யுவ மஞ்சா செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பங்காளதேச வந்தேறிகளான அஸ்ஸாம் முஸ்லீம்களுக்கு வீடு, வேலை, உணவு, என எதையும் கொடுக்க கூடாது என்று எஸ்.எம்.எஸ் மூலமாகவும் ஈமெயில் மூலமாகவும் துண்டு பிரசுரம் மூலமாகவும் வதந்தியை கிளப்பினர். அஸ்ஸாம் எல்லை வழியாக ஊடுருவியதாக கூறி ஒரு முஸ்லீமை டினுஷ்கா மாவட்டத்தில் தீவைத்து கொளுத்தினர். மற்றும் வடக்கு லக்ஷ்மிபூர் மாவட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கடைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன.

இது குறித்து கருத்து கூறிய அஸ்ஸாம் முதலமைச்சர் தருண் கோகி “வதந்தி மற்றும் கலவரங்களுக்கு காரணம் சங் பரிவாரமும் பிஜேபி” யும் தான் என்றார். மேலும் அஸ்ஸாம் மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மறைந்த பிரமோத் மகாஜன் தான் தனது இளைஞர் அமைப்பின் மூலம் இதுபோன்ற செய்கைகளை செய்வதை நிறுத்தாவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஏழு ஆண்டுகளுக்கு பின் தற்போது மிகப்பெரிய கலவரம் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக பயன்படுத்தியது போடோ பழங்குடியினர். கலவரம் நடந்தவுடன் அத்வானி போடாக்களுக்கு ஆதரவாக பங்காளதேச ஊடுருவல் காரர்களால்தான் கலவரத்திற்கு காரணம் என்று கருத்து கூறியது இவர்களின் கள்ள கூட்டை வெளிப்படுத்தியது. வட கிழக்கு மாநிலங்களில் சங்க பரிவாரங்களின் வளர்ச்சி என்பது வீரியம் இல்லாமலே இருந்து வருகிறது. வட கிழக்கில் தாங்கள் வலிமையாக காலூன்ற இக்கலவரத்தை பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர் என்பது பின்னால் நிகழ்ந்த சம்பவங்கள் தெளிவாக்குகின்றன.

கலவரம் அடங்கிய ரணம் கூட ஆறாத நிலையில் வடகிழக்கு மாநிலதவருக்கெதிராக வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டன. வடகிழக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக தென் மாநில நகரங்களிலிருந்து வெளியேறினர். வதந்தி ஏற்படுத்திய வலையில் சிக்கி மக்களும் மீடியாக்களும் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீகளையும் அவர்களுக்கு செய்ய வேண்டிய நிவாரணங்களையும் மறந்தனர். நிவாரண உதவி செய்ய முன்வந்த முஸ்லீம் அமைப்புகளையும் வதந்தி தீயில் தள்ளி தடை போட முயற்சித்தனர். மக்களை பிரித்து ஆட்சியை பிடிக்கும் கனவோடு திரியும் பிஜேபிகோ இது தான் நல்ல தருணம் என்று குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க துவங்கினர். வதந்தியால் தென் மாநிலங்களை விட்டு சென்ற வடமாநிலத்தவரை நோக்கி படையெடுத்தனர்.

ஆகஸ்டு 19 ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் தலைநகர் இம்பாலுக்கு நல்லெண்ண பயணம் (?) சென்ற கர்நாடக துணை முதலமைச்சர் ஆர். அசோகா அங்குள்ள பெற்றோர்களை சந்தித்து மாணவர்களையும் தொழிலாளர்களையும் திரும்ப வருமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆகஸ்டு 27 ஆம் தேதி மேகாலயா மாநிலத்திற்கு சென்ற பி.ஜே.பி. மக்களவை உறுப்பினர் சுதர்சன் பகத் தலைமையிலான குழு அங்குள்ள மாணவர் மற்றும் சமூக அமைப்புகளை சந்தித்தனர். வடகிழக்கு மாநிலங்களில் பங்காளதேஷ ஊடுருவலை தடுக்க பி.ஜே.பி குரல் கொடுக்கும் என்று சுதர்சன் பகத் தெரிவித்தார். இதே கருத்தை தான் குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த நேசனலிஸ்ட் பீப்பிள் பார்ட்டி தலைவர் பி.எ. சங்க்மாவும் தெரிவித்திருந்தார்.

பங்காளதேசதிலிருந்து நடைபெறும் ஊடுருவல் கவலை அளிப்பதாக கூறிய சங்க்மாவைத்தான் பி.ஜே.பி. குடியரசு தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக நிறுத்தி ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு மாநிலத்தவருக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்திய பி.ஜே.பி. பீகார் தலைநகர் பட்னாவிலும் மிகபெரிய போராட்டத்தை நடத்தியது. பீகாரிகளுக்கு மும்பைக்குள் நுழைய அனுமதி சீட்டு வழங்கும் முறையை அமுல்படுத்த வேண்டும் என்று பீகாரிகளுக்கு எதிராக விஷம் கக்கிவரும் சிவசேனாவை கூட்டணிக்குள் வைத்து கொண்டே போராடியது வேடிக்கையானது. இன்னும் பெங்களுர் ரயில் நிலையத்தில் நகரை விட்டு செல்லும் மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பொட்டலங்கலோடு முஸ்லீம்களுக்கு எதிரான விஷத்தையும் கலந்து வழங்கி வழியனுப்பி வைத்தனர் ஆர்.எஸ்.எஸ். உறுபினர்கள். விளைவு ரயிலில் பயணித்த பல முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டு வெளியே வீசப்பட்டனர். மீண்டும் அஸ்ஸாமில் கலவரம் தொடங்கி அங்கொன்றும் இங்கொன்றுமாக முஸ்லீம்கள் தாக்கப்பட்டனர்.

இது சிறுபான்மையோருக்கெதிராக சிறுபான்மையினரை கொண்டு சங் பரிவாரம் நடத்திய கலவரம் என்று அஸ்ஸாம் கலவரம் குறித்து குறிப்பிடுகிறார் பிரபல பத்திரிகையாளர் திரு.அம்ரேஷ் மிஸ்ரா. மேலும் அவர் கூறுகையில்; 1960 மற்றும் 1970 களில் நடந்த கலவரங்களில் இரண்டு பிரிவினரும் மோதிக் கொண்டனர். பின்னர் 1980 களில் பாசிஸ்டுகளுடன் காவல்துறையும் இணைந்து கொண்டது. 1990 மற்றும் 2000 களில் குண்டு வெடிப்புகள் பெயரால் கலவரங்கள் நடத்தப்பட்டது. பின்னர் 2008 இல் குண்டுவெடிப்புகளின் பின் புலமாக வலதுசாரி காவி தீவிரவாதம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னால் தற்போது புதிய தந்திரத்தை கையாள துவங்கி உள்ளனர். அது தான் மத சிறுபான்மையோருக்கெதிராக இன சிறுபான்மையினரை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடுவது.

அஸ்ஸாம் கலவரத்தில் இது தெள்ளத் தெளிவு.

No comments: