Friday, September 7, 2012

தந்தையை இழந்து தவிக்கும் ஆஸ்துமா நோயாளியை தீவிரவாதியாக சித்தரிக்கும் போலீஸ்!

3 Sep 2012
ஹைதராபாத்: “எனது மகன் கடுமையான ஆஸ்துமா நோயினால் அவதியுறுகிறான். அவன் எவ்வாறு ஆட்களை கொலைச் செய்வான்?” – சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் கைதான 21 வயது உபைதுற்றஹ்மானின் பெரியம்மா கேட்கிறார். உபைதுற்றஹ்மானின் வீட்டிற்கு சென்ற 15க்கும் மேற்பட்ட செய்தியாளர்களுக்கு பதிலளித்தவர் உபைதுற்றஹ்மானின் பெரியம்மா தாஹிரா ஹாத்தூன் ஆவார்.

ஹர்கத்துல் ஜிஹாதுல் இஸ்லாமி என்ற அமைப்புடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டி கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி உபைத் கைது செய்யப்பட்டு பெங்களூர் கொண்டு செல்லப்பட்டார். ஏற்கனவே பெங்களூரில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுடன் உபைதிற்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் கூறுகிறது.

“அவன் ஒரு போதும் பெங்களூருக்கு சென்றதில்லை. அங்குள்ள அடையாளம் தெரியாத நபருடன் உபைதிற்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் கூறுவது கற்பனையாகும். 17-வது வயதில் தந்தையை இழந்த உபைத், கடுமையான ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர். இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை ஆஸ்துமாவிற்கான மருந்தை உட்கொள்ள வேண்டும். இல்லையெனில் அவனால் பிடித்து நிற்க முடியாது. இவ்வளவு கடுமையான நோயால் அவதியுறும் பையன் எப்படி பலமான ஆட்களை கொலைச் செய்வான்?” - என்று தாஹிரா ஹாத்தூன் கேள்வி எழுப்புகிறார்.

ஹைதராபாத்தில் உள்ளூர் பா.ஜ.க தலைவர்களை கொலைச் செய்ய உபைத் திட்டமிட்டார் என்றால், அவரை இங்குள்ள போலீசார் கைது செய்வதற்கு பதிலாக, பெங்களூரில் இருந்து போலீசார் வந்து கைது செய்தது குறித்து உபைதின் குடும்பம் ஆச்சரியப்படுகின்றனர். எவ்வித வாரண்டும் இல்லாமல், தங்களுக்கு தகவல் கூட அளிக்காமல், வீதியில் நின்றவனை போலீஸ் அழைத்துச் சென்றுள்ளது என்று உபைதின் தாயார் ஸைதா கவ்ஸர் சுல்தானா கூறுகிறார்.

மறுநாள் பெங்களூர் கொண்டு செல்லும் வரை எங்களுக்கு தகவல் எதுவும் அளிக்கவில்லை. கம்ப்யூட்டர் சயின்ஸ் கடைசி ஆண்டு பட்டப்படிப்பை பயிலும் உபைத், ஸைதா கவ்ஸர் சுல்தானாவின் நான்கு பிள்ளைகளில் மூத்தவர் ஆவார்.

தெலுங்கு ஊடகங்கள் உபைதை ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என வர்ணிக்கும் பொழுது, ஆங்கில ஊடகங்களோ ஹூஜி போராளி என கூறுகின்றன. ஒவ்வொருவரும் தங்களின் கற்பனையில் உதித்தவற்றை சித்தரிக்கின்றார்கள் என்று உபைதின் உறவினர்கள் கூறுகின்றனர்.

Source: http://ping.fm/vhsoR

No comments: