குஜராத்: மோடியின் கொலைக்களம்!
Source: புதிய ஜனநாயகம்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பய் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான், அவரது நண்பர் ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று குஜராத் போலீசாலும், மைய உளவுத்துறையாலும் குற்றம் சாட்டப்படும் அம்ஜத் அலி, ஜிஷன் ஜோஹர் அப்துல் கனி ஆகிய நால்வரும் கடந்த ஜூன் 15, 2004 அன்று குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் நகரின் புறநகர்ப் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். "இந்நால்வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பினைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் பயங்கரவாத நோக்கத்தோடு குஜராத்துக்கு வந்துகொண்டிருந்த பொழுது அகமதாபாத் நகரக் குற்றப்பிரிவு போலீசாரால் வழிமறிக்கப்பட்டனர். அப்பொழுது நடந்த மோதலில் தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக' குஜராத் மாநில அரசு அறிவித்தது. அச்சம்பவம் நடந்து ஏழாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அது ஒரு போலி மோதல் கொலைதான் என்பதனை குஜராத் உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருக்கிறது.
இம் "மோதல்' கொலை சம்பவம் நடந்தவுடனேயே, அதன் உண்மைத் தன்மை குறித்து மனிதஉரிமை அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பினர். "தனது மகள் தீவிரவாதி கிடையாது ஏழ்மையில் வாடிய போதிலும் படித்து ஆசிரியராக வேண்டும் எனக் கனவு கண்ட பெண் குடும்பத்தின் வறுமை காரணமாகக் கல்லூரியில் படித்துக் கொண்டே வேலைக்கும் போய்க் கொண்டிருந்த அப்பாவிப் பெண்'என அன்றே கதறினார் இஷ்ரத் ஜஹானின் தாய் ஷமிமா.
செப். 2009 இல் இவ்வழக்கை விசாரித்த அகமதாபாத் பெருநகரக் குற்றவியல் நீதிமன்றம், இறந்து போன அந்நால்வரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் அறிக்கை ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு, "இதுவொரு போலிமோதல் கொலை; அந்நால்வரும் மோதல் நடந்ததாகச் சொல்லப்படும் நாளுக்கு முதல்நாளே மிகவும் அருகாமையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்' என்று தீர்ப்பளித்தது. மோடி அரசோ அந்நீதிமன்றம் தனது வரம்பை மீறி நடந்துகொண்டுள்ளதாகக் கூறி, அந்நீதிமன்ற முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.
இதனிடையே இஷ்ரத் ஜஹானின் தாய் ஷமிமாவும், இஷ்ரத் ஜஹானோடு சேர்த்துக் கொல்லப்பட்ட ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளையின் தந்தை கோபிநாத்பிள்ளையும் இப்படுகொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று இது உண்மையான மோதல் கொலைதானா என்று ஆராய்வதற்காக, தனது கண்காணிப்பின் கீழ் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது, குஜராத் உயர் நீதிமன்றம்.
இச்சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்படுவதை ரத்து செய்யக் கோரி மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது; அதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. குஜராத் உயர் நீதிமன்றம் நியமித்த புலனாய்வுக் குழு இம் "மோதல்' கொலை தொடர்பாக 240 சாட்சிகளை விசாரித்தது. அந்நால்வரும் "மோதலில்' கொல்லப்பட்ட விதம் குறித்து குஜராத் போலீசு கூறியிருந்தவற்றை மூன்றுமுறை அப்படியே நிகழ்த்திப் பார்த்து, இது போலி மோதல் கொலைதான் என ஒருமனதாக முடிவுக்கு வந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் இப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய 21 போலீசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யவும், இப்படுகொலையின் மற்ற பின்னணிகள் குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது, குஜராத் உயர் நீதிமன்றம்.
இஷ்ரத் ஜஹான் படுகொலை பற்றிய சிறப்புப் புலனாய்வுக் குழுவின் இந்த அறிக்கை, மோடி அரசை மட்டுமல்ல, மத்திய அரசையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஏனென்றால், "அந்நால்வரும் லஷ்கர் இதொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்; குஜராத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த வருகிறார்கள்' என மோடி அரசுக்கு உளவுத் தகவல் கொடுத்தது ஐ.பி என்ற மைய அரசின் உளவுத்துறைதான். தற்போது இது போலி மோதல் கொலை என்று நிறுவப்பட்டுவிட்ட போதிலும், "நடந்ததது போலி மோதல் கொலையாக இருக்கலாம். ஆனால், கொல்லப்பட்டவர்கள் நால்வரும் தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற மத்திய உளவுத்துறையின் தகவலை உயர் நீதிமன்றம் மறுத்துவிடவில்லை' என்று கூறி மோடி அரசுக்கு முட்டுக் கொடுக்கிறார், மைய அரசின் முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை. அது மட்டுமின்றி, "இஷ்ரத் ஜஹான் பல விடுதிகளில் வௌ;வேறு ஆண்களோடு சேர்ந்து தங்கியிருந்ததாக'க் கூறி அப்பெண், "நடத்தை கெட்டவள்' என்று சித்தரிப்பதன் மூலம் உளவுத்துறையை நியாயப்படுத்த நரித்தனமாக முயன்றுள்ளார்.
இஷ்ரத் ஜஹானின் குடும்பம் இப்பொழுது தானே மாவட்டத்திலுள்ள மும்ப்ரா பகுதியில் குடியிருந்து வருகிறது. இஷ்ரத்தின் சகோதரன் அன்வரைத் தவிர, அவரின் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பள்ளிப்படிப்பைக்கூட முடிக்க முடியாமல் இடையில் நின்றுவிட்டார்கள். அதற்கு அக்குடும்பத்தின் வறுமை மட்டும் காரணமில்லை. குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு முன்பாகவே, இஷ்ரத் முசுலீம் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டு விட்டதால், அக்குடும்பம் சமூகத்துக்கு அஞ்சி ஒதுங்கி வாழும் நிலை ஏற்பட்டுவிட்டது. இஷ்ரத் சுட்டுக் கொல்லப்பட்ட பின் அவரது குடும்பம் கடந்த ஏழாண்டுகளில் ஐந்து முறை வீடு மாற வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறது. "இத்தீர்ப்பு வரும் வரை நாங்கள் நரக வேதனையை அனுபவித்தோம்' என்கிறார், இஷ்ரத்தின் தாயார் ஷமிமா. வறுமையோடு அக்குடும்பம் போராடுவதைப் பார்த்தாலே, இஷ்ரத்தின் மீது அவதூறு செய்வதற்கு யாருக்கும் நா எழாது.
…
குஜராத்தில் நடக்கும் மோடியின் ஆட்சியை அலசிப் பாரத்தால்தான் இஷ்ரத் ஜஹான் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பின்னணியையும், அதன் பரிமாணத்தையும் புரிந்துகொள்ள முடியும். குஜராத் இனப்படுகொலை நடந்துமுடிந்த அடுத்த ஆண்டு, மார்ச் 26, 2003 அன்று மோடிக்கு நெருக்கமானவராக இருந்தவரும், அவரது அரசில் வருவாய்த்துறை இணை அமைச்சராக இருந்தவருமான ஹரேன் பாண்டியா மர்மமான முறையில் நடுவீதியில் காருக்குள்ளே இறந்துகிடந்தார். ஹரேன் பாண்டியா முசுலீம் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பீதி கிளப்பிய மோடி அரசு, இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து நடுநிலை நாடகம் ஆடியது. இப்படுகொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 12 முசுலீம்களையும் கீழமை நீதிமன்றம் பொடா சட்டப்படி தண்டித்தது. எனினும், குஜராத் உயர் நீதிமன்றம், அந்த 12 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை எனக் கூறித் தண்டனையை ரத்து செய்து விட்டது.
ஹரேன் பாண்டியாவைக் கொன்றது யார் என்ற மர்மம் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றாலும், மோடி கும்பலுக்கு நெருக்கமானவனும் இராசஸ்தானிலுள்ள கிரிமினல் கும்பலைச் சேர்ந்தவனுமான சோரா புதீனுக்கும் பாண்டியாவின் கொலைக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. 2005 ஆம் ஆண்டில் இந்த சோராபுதீன் குஜராத்திற்குக் கடத்தி வரப்பட்டு, அம்மாநில போலீசாரால் போலி மோதலில் கொல்லப்பட்டான். சோராபுதீனோடு சேர்த்துக் கடத்தப்பட்ட அவரது மனைவி கவுசர் பீ விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டார். ஹரேன் பாண்டியா கொலையில் தொடர்புடையவனும்; சோராபுதீன், அவரது மனைவி கவுசர் பீ கொலைகளின் சாட்சியாகக் கருதப்படுபவனும் சோரா புதீனின் கூட்டாளியுமான துளசிராம் பிரஜாபதி 2006 ஆம் ஆண்டு குஜராத் மாநில எல்லையருகே போலி மோதலில் கொல்லப்பட்டான். சோராபுதீன் மற்றும் பிரஜாபதி கொலைகளைப் பற்றி அறிந்திருந்த மற்றொரு சாட்சி அஜம் கானைச் சுட்டுக் கொல்ல நடந்த முயற்சியில் அவன் நல்வாய்ப்பாகத் தப்பிவிட்டான். அதன் பின் அஜம் கான் உயிர் பயம் காரணமாக சோராபுதீன் கொலைவழக்கில் பிறழ்சாட்சியாக மாறினான். இந்தப் பின்னணியில்தான் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரின் படுகொலையையும், அவர்கள் தீவிரவாதிகளாகச் சித்திரிக்கப்படுவதையும் வைத்துப் பார்க்க வேண்டும்.
இஷ்ரத் ஜஹான் படுகொலையைப் போலவே, சோராபுதீன் கொலையும் போலி மோதல்தான் என்பது நிரூபணமாகி, அதில் தொடர்புடைய டி.ஐ.ஜி. டி.ஜி. வன்சாரா, உதவி ஆணையர் நரேந்திர அமின் உள்ளிட்ட போலீசு அதிகாரிகள் விசாரணைக் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த போலீசு அதிகாரிகள் கும்பல்தான் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரையும் போலி மோதலில் கொன்றொழித்தது. சோராபுதீன் கொலையில் தொடர்புடைய, மோடி அரசில் அமைச்சராக இருந்த அமித் ஷா பிணையில் வெளியே வந்துவிட்டாலும், அவர் குஜராத்திற்குள் நுழையக் கூடாது என உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
ஹரேன் பாண்டியாவின் கொலையில் அரசியல் பின்னணி உள்ளது என்று அவரது தந்தையே குற்றம் சாட்டி வந்தார். ஹரேன் பாண்டியா, குஜராத் இனப்படுகொலை தொடர்பாக மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பு நடத்திய விசாரணையில், அப்படுகொலையில் மோடிக்கு உள்ள பங்கு குறித்து சாட்சியம் அளித்ததுதான் பாண்டியாவின் கொலைக்கான அரசியல் பின்னணி. இது போலவே, குஜராத் இனப்படுகொலை வழக்குகளுள் ஒன்றான நரோடா பாட்டியா வழக்கின் முக்கிய சாட்சியான நதீம் அகமது சையதும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குஜராத் இனப்படுகொலையில் மோடி மற்றும் அவரது அரசின் பங்கு குறித்து அம்பலப்படுத்த முன்வந்துள்ள போலீசு அதிகாரிகளான சஞ்சீவ் பட், ராகுல் சர்மா உள்ளிட்ட பலரை, சாமானியர்களைப் போலப் போட்டுத் தள்ள முடியாததால், அந்த அதிகாரிகளைத் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்வது, பொய் வழக்குப் போடுவது என மிரட்டி வருகிறது, மோடி கும்பல்.
குஜராத்தை ஆண்டு வரும் மோடியின் தலைமையிலான கிரிமினல் கும்பல் எத்தனை கொடூரமானது என்பதை இந்த விவரங்களிலிருந்து யாரும் புரிந்து கொள்ளலாம்; அக்கிரிமினல் கும்பலின் தலைவனான நரேந்திர மோடியை அப்பழுக்கில்லாத உத்தமனாகவும், பிரதமர் பதவிக்குத் தகுதியுள்ளவனாகவும் முன்னிறுத்துகின்ற பத்திரிகைகள், தரகு முதலாளித்துவக் கும்பலின் யோக்கியதையையும் புரிந்து கொள்ளலாம்.
இஷ்ரத் ஜஹான் என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டுவிட்டாள். அவள் தீவிரவாதியா, இல்லையா என்று விசாரணை நடக்கிறது. மோடி என்ற இந்து மதவெறிக் கொலைகாரனைத் தண்டிப்பதற்குத் தேவைக்கும் அதிகமான ஆதாரங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. தண்டனைதான் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது.
. குப்பன்
No comments:
Post a Comment