தக்காளியில் ,ஊறுகாய் மற்றும் தக்காளி ஜாம் தயாரிப்பது எப்படி
தர்மபுரி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகப் பிரிவும் இணைந்து, தக்காளியில் மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பத்தைச் சொல்லிக் கொடுப்பதற்காக கடந்த மாதம் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தன. வேளாண் அறிவியல் மைய இணைப் பேராசிரியர் ஜான்சிராணி, தக்காளியைக் கொண்டு ஜாம், ஊறுகாய், கெச்சப், ஸ்குவாஷ், சாஸ், ஜூஸ், வடகம், தக்காளி பவுடர்... மதிப்புக் கூட்டல் பொருட்களைத் தயாரிக்கும் விதங்களை செய்முறை விளக்கத்துடன் சொல்லிக் கொடுத்தார்.
இனி பயிற்சியில் இருந்து...
''தக்காளிக்கு வருஷம் முழுசும் கட்டுப்படியான விலை கிடைக்கறதில்லை. கணக்குப் பாத்தா, பல நேரங்களில் நஷ்டம்தான் அதிகமா இருக்கும். விவசாயிகளைப் பொறுத்தவரைக்கும் விளைஞ்சதை அப்படியே சந்தையில வித்துடணும்னுதான் நினைக்கறாங்க. அதுக்கு மேல யோசிக்கறதேயில்லை. இந்த மனநிலைதான் நஷ்டத்துக்குக் காரணம். விலை குறையறப்ப சாலையில கொட்டி வீணாக்குறதுக்குப் பதிலா... கொஞ்சம் மெனக்கெட்டு அதை ஊறுகாயாகவோ, ஜாமாகவோ... மாத்தினா நஷ்டம் வர்றதுக்கு வாய்ப்பே இல்லை.
கிலோவுக்கு 30 ரூபாய்!
உதாரணமா, ஒரு கிலோ தக்காளியில சில பொருட்களை சேர்த்து ஊறுகாய் தயாரிச்சா, 750 கிராம் ஊறுகாய் கிடைக்கும். இன்னிக்குச் சந்தையில 250 கிராம் தக்காளி ஊறுகாய் 22 ரூபாயிலிருந்து 30 ரூபா வரைக்கும் விக்குது. குறைஞ்சபட்சம் 20 ரூபாய்னு வெச்சுகிட்டாலும், 750 கிராம் ஊறுகாய்க்கு 60 ரூபாய் கிடைக்கும். இதுக்கான தயாரிப்புச் செலவுக்காக 30 ரூபாயைக் கழிச்சிட்டாலும், மீதி 30 ரூபாய் இருக்கும். பெரிய நிறுவனங்களோட தொடர்பு வெச்சுக்கிட்டா, தொடர்ந்து விற்பனை வாய்ப்பு கிடைக்கும்'' என்று நிறுத்திய ஜான்சிராணி,
''இப்ப சொல்லுங்க, கிலோ 3 ரூபாய்க்கு தக்காளி விக்குதேனு கீழ கொட்டாம... கொஞ்சம் யோசிச்சா ஒரு கிலோ தக்காளிக்கு 30 ரூபா கிடைக்குமில்ல!'' எனக் கேட்க... வியப்பில் விழிகள் விரித்தனர் எதிரே அமர்ந்திருந்த விவசாயிகள்.
தொடர்ந்து, தக்காளி மட்டுமல்லாமல்... மிளகாய், கொய்யா போன்றவற்றிலும் மதிப்புக்கூட்டுவது பற்றி பயிற்சி அளிக்கப்பட, ஆர்வத்தோடு அவற்றில் பங்கெடுத்தனர் விவசாயிகள். அவர்கள் குறிப்பெடுத்துக் கொண்ட விஷயங்களில் இருந்து தக்காளி ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிப்பு முறைகள் இங்கே இடம்பிடிக்கின்றன.
--------
1) தக்காளி ஊறுகாய்!
தேவையான பொருட்கள்:
நன்றாகப் பழுத்தத் தக்காளி - ஒரு கிலோ, மிளகாய்த்தூள் - 2, டேபிள் ஸ்பூன், வெந்தயம் - 1 ஸ்பூன், ரீஃபைண்ட் ஆயில் - 250 மில்லி, பூண்டு - 20 பல், பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன், கடுகு - 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு
தக்காளியை நன்றாக சுத்தம் செய்து மிக்ஸியில் நன்கு கூழாகும் வரை அரைக்க வேண்டும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வாணலியில் இட்டு அடுப்பில் வைத்துச் சூடாக்க வேண்டும். நன்கு கொதிக்கும் நிலையில் நீர்வற்றி கெட்டியாக மாறும். அப்போது சூடு படுத்திய எண்ணெயை தக்காளியுடன் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அடுப்பு மிதமாக எரியும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தக்காளிக் கலவை கொதி வந்த பிறகு, கலவையில் உள்ள எண்ணெய் முழுவதும் பிரிந்து வரும் வரை வேகவிட்டு, பின்பு இறக்க வேண்டும்.
பிறகு, வறுத்துத் தூளாக்கிய வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து பூண்டை சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கி தக்காளிக் கலவையில் சேர்த்து, நன்றாக ஆறவிட்டு, ஈரம் இல்லாத பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்க வேண்டும். இது, சாதாரண நிலையிலேயே ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதனப் பெட்டிகளில் பாதுகாத்தால் நீண்டநாட்களுக்கு வைத்திருக்கலாம். இதை, அனைத்து உணவுகளுக்கும் தொட்டுச் சாப்பிட பயன்படுத்தலாம்.
------------
2) தக்காளி ஜாம்!
தேவையான பொருட்கள்:
தக்காளி பழக்கூழ் - ஒரு கிலோ. சர்க்கரை - 750 கிராம். சிட்ரிக் அமிலம் அல்லது எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி.
தக்காளியைச் சுத்தம் செய்து தோல், விதைகளை நீக்கி சதைப்பகுதிகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். அவற்றை மிக்ஸி மூலம் கூழாகும் வரை அரைத்து வடிகட்ட வேண்டும் (இதுதான் தக்காளி பழக்கூழ்). கொஞ்சம் போல தண்ணீர் எடுத்து, அதில் சிட்ரிக் அமிலத்தைக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளிக் கூழை பாத்திரத்தில் இட்டு, சிறிது நேரம் வேகவிட்டு ஒரு கொதி வந்தவுடன் சர்க்கரையைச் சேர்த்து, அடுத்து சிட்ரிக் அமிலம் கலந்த தண்ணீரை ஊற்ற வேண்டும்.
நன்றாகக் கொதித்துக் கொண்டிருக்கும் கலவையை ஒரு ஸ்பூனில் சிறிதளவு எடுத்து ஒரு தட்டில் ஊற்றிப் பார்த்தால்... கெட்டியாக விழ வேண்டும். அதுவரை கலவை வேக வேண்டும். இந்தப் பதம் வந்தபின் பாத்திரத்தை இறக்கி வைத்து கொஞ்சம் மட்டும் ஆறவிட்டு, வாய் அகன்ற கண்ணாடி பாட்டில்களில் சூடாகவே நிரப்பி வைக்க வேண்டும். இந்த நிலையிலேயே முழுவதும் ஆறவிட்டு, அதன்பிறகு பாட்டில்களை மூடி வைக்க வேண்டும். சூடானக் கலவையை பாட்டில்களில் நிரப்பும்போது பாட்டில்களை தரை மீது வைப்பதைத் தவிர்த்து, மரப்பலகை மீது வைத்துக் கொண்டால், சூட்டின் மூலம் பாட்டில்கள் உடைந்து போகாமல் தடுக்க முடியும்.
விற்பனைக்கு அணுகலாம்!
மதிப்புக்கூட்டல் தொழிலுக்கான கடனுதவிகள் பற்றி விளக்கமாக விவசாயிகளுக்கு எடுத்துச் சொன்ன மாவட்ட வேளாண் வணிகம் மற்றும் விற்பனைப் பிரிவின் வேளாண் அலுவலர் தாம்சன், ''தக்காளி மட்டுமன்றி... மா, பப்பாளி, கொய்யா, பச்சைமிளகாய் என அனைத்துப் பயிர்களுமே ஆண்டு முழுக்க மாறி மாறி இந்த மாவட்டத்தில் விளைவிக்கப்படுகின்றன. அந்தந்தப் பருவத்துக்கு ஏற்றபடி அவற்றையெல்லாம் மதிப்புக்கூட்டி, நல்ல லாபம் பார்க்கலாம்.
நாம் மதிப்புக்கூட்டும் பொருட்களை விற்பனை செய்வதற்காக கவலைப்படத் தேவையில்லை. பெரிய வணிக நிறுவனங்கள், தாங்கள் விரும்பும் தரத்துடன் தயாரித்துக் கொடுக்கப்படும் ஜாம், சாஸ் உள்ளிட்ட பொருட்களுக்கு நல்ல விலை கொடுக்கத் தயாராக இருக்கின்றன. அந்த நிறுவனங்களில் விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேளாண் வணிகம் மற்றும் விற்பனைப் பிரிவை விவசாயிகள் தயக்கமின்றி அணுகலாம்'' என்று அழைப்பு வைத்தார்.
தொடர்புக்கு: வேளாண் அறிவியல் நிலையம், பாப்பாரப்பட்டி, தொலைபேசி: 04342-245860 . வேளாண் வணிகம் மற்றும் விற்பனைப் பிரிவு அலுவலர் அலைபேசி: 94435 -63977 .
இணைய தளத்திலிருந்து
Engr.Sulthan
__._,_.___
No comments:
Post a Comment