எங்கள் ஊரைச்(குலசேகரப்பட்டிணம்) சுற்றிலும் பனங்காடுகள் தான் அதிகம். இதை விளையென்று கூறுவோம். நான் சிறுவனாக இருக்கும் போது பதநீர் சாப்பிட வேண்டுமென்றால் நண்பர்களுடன் நேராக விளைக்கு சென்று விடுவோம். எங்கள் உறவினர் ஒருவருக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனங்காடுகள் சொந்தமாக இருந்தது. அதில் அவர் கேரளாவிலிருந்து பனையேறும் தொழிலாளர்களை கூட்டி வந்து பதநீர் இறக்கி கருப்பட்டி செய்து வந்தார்.
அங்கு போனதும் எங்களின் தேவையைப் புரிந்து கொண்ட பனையேறும் தொழிலாளி ஒருவர் பனை ஓலையை மடித்து "பட்டை " (பதநீர் குடிக்க ஓலையால் செய்யப்பட ஓலை டப்பா )செய்து நம்மிடம் தந்து, அதில் பதநீரை ஊற்ற ஊற்ற நாம் மூச்சு முட்ட குடிக்க வேண்டியது தான். போதும் என்று சொல்லும் அளவுக்கு ஊற்றிக் கொண்டே இருப்பார்கள். அதில் கிடக்கும் தேனீக்களை வாயால் ஊதி ஒதுக்கி விட்டு, பதநீர் சாப்பிடுவதே ஒரு வகை கலை யென்று சொல்லலாம். இதற்கு எவ்வளவு காசு என்றா கேட்கிறீர்கள்? சும்மா...சும்மா தான். அது ஒரு காலம். இன்று அப்போது கிடைத்த கலப்பிடமில்லாத பதநீர் கிடைக்குமா என சொல்ல முடியாது. ரோட்டோரங்களில் பதநீர் என்று சீனி கலந்த பானத்தைத் தருகிறார்கள். காலை வேளை சாப்பிடும் போது பதநியில் நொங்கை சிறு சிறு துண்டுகளாக்கி போட்டு குடிப்பதும், மாலை பதநி யென்றால் அதில் நன்கு பழுத்த மாம்பழத்தை சேர்த்து சாப்பிடுவதும் வழக்கமான ஒன்று எங்கள் ஊரில்.
நேற்று என் நண்பர் ஒருவர், குளு குளு ஜூஸ் என்றெல்லாம் பதிவு போடுகிறீர்களே நம்மூர் இயற்கை பானம் பதநீர் பற்றி ஒரு பதிவு போடலாமே என்றார். நண்பரே இதோ பதிவு போட்டாயிற்று. மகிழ்ச்சி தானே!
Engr.Sulthan
பதநீர் எப்படி உருவாகுகிறது என்ற "ரகசியம்' ?
"பனமரத்துக்கு கீழநின்னு பாலக் குடிச்சாலும் கள்ளுன்னுதான் நெனைப்பாக' என்ற சொல், இன்றளவும் உண்மை தான். இதனாலேயே கள் இறக்க தடை இருந்தபோதிலும், அதில் சுண்ணாம்பு சேர்த்து, பதநீராக தந்து கொண்டிருக்கின்றனர். உடலுக்கு குளிர்ச்சியும், வலிமையும், ஊட்டச்சத்தும் நிறைந்த பதநீரின் தயாரிப்பு சுவாரஸ்யமானது. மதுரை மேலூர் அருகே ஓவாமலையில், ஓங்கி வளர்ந்த பனைமரங்களில் இருந்து ஆண்டுமுழுவதும், பதநீர் இறக்குகின்றனர்.
அந்த காலத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதநீர் எப்படி உருவாகுகிறது என்ற "ரகசியம்' தெரியும். ஆனால் இக்கால தலைமுறையினருக்கு தெரியவாய்ப்பில்லை. அதை விளக்குகிறார், 20 ஆண்டுகளாக ஊர் ஊராக சைக்கிளில் பதநீர் விற்கும் மேலூர் ராஜ்.
""பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக.
பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி. சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இதை லிட்டர் 10 ரூபாய்க்கு வாங்கி, 20 ரூபாய் வரை விற்கிறேன். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்'', என்றார்.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.
கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.
இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.
இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.
மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.
என்னதான் கூல்டிரிங்ஸ் இருந்தாலும், இயற்கையாக குளிர்ச்சியும், வலிமையும் தரும் எங்களுக்கு என்றுமே அழிவில்லை என்று ரோட்டில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும்பனை மரங்கள்.
அழிந்துவரும் பனை மரங்களை காக்க அரசு பதநீரை பதப்படுத்தி தயாரிக்குமா "பதநி கோலா "
அழிந்துவரும் பனைமரங்களை காக்க அரசு பதநீரை பதப்படுத்தி
No comments:
Post a Comment