அதிமுகவின் பெரும் வெற்றியை விட, திமுகவின் மிகப் பெரிய தோல்விக்கு என்ன காரணம் என்பது அனைவருக்கும் ஆச்சரியமாகவே உள்ளது.
திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். காரணம், திமுக தரப்பு கடைசி நேரத்தில் செய்த கடுமையான பிரசாரம். ஆனால் மக்கள் தீர்க்கமான ஒரு முடிவைத் தெரிவித்து விட்டனர்.
திமுகவின் தோல்விக்கு ஒரு காரணமல்ல, பல காரணங்களைக் கூறலாம்:
1. மின்வெட்டு
தமிழக மக்கள் திமுகவுக்கு எதிராக ஆவேசமாக திரும்ப முக்கியக் காரணம் மின்வெட்டுப் பிரச்சினைதான். வரலாறு காணாத மின்வெட்டை ஒட்டுமொத்த தமிழகம் - தலைநகர் சென்னையை மட்டும் தேர்தல் முடியும் வரை விட்டு வைத்திருந்தனர் - கண்டது திமுக ஆட்சியில்தான்.
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலும் மின்வெட்டு கடுமையாகவே இருந்தது. தினசரி பல மணி நேரத்திற்கு மின்சாரம் இல்லாமல் போனதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தொழில் உற்பத்தி முடங்கிப் போனது. குறிப்பாக சிறு தொழில் செய்வோர் கடும் பாதிப்பை சந்தித்தனர். கொங்கு மண்டலத்திலோ தொழில் வளர்ச்சியும், உற்பத்தியும் சுத்தமாக நசிந்து போனது. பெரும் நஷ்டத்தை அவர்கள் சந்தித்தனர்.
கச்சாப் பொருட்களின் விலையேற்றம் ஒருபக்கம், மின்வெட்டு மறுபக்கம் என பெரும் அவதிக்குள்ளாகி விட்டனர் அவர்கள்.
அதேபோல சாதாரண மின் நுகர்வோர்களும் மின்வெட்டால் கடும் பாதிப்பை சந்தித்தனர். தொடர் மின்வெட்டால், மக்கள் பட்ட அவதி சொல்லொணாதது.
அதை விட மக்களை அதிகம் கோபத்துக்குள்ளாக்கிய விஷயம், சென்னைக்கு மட்டும் தடையில்லாமல் மின்சாரத்தை வழங்கிய அரசின் செயல்தான்.
2. விலைவாசி உயர்வு
இதேபோல மக்களை மிகவும் கவலைக்குள்ளாக்கிய, கோபத்திற்குள்ளாக்கிய விஷயம் விலைவாசி உயர்வுப் பிரச்சினை. குறிப்பாக வெங்காய விலை உயர்வும், காய்கறிகளின் விலையும், தக்காளி விலை உயர்வும் மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கி விட்டது.
விலைவாசி உயர்வைத் தடுக்காமல், அந்த மாநிலத்தில் இல்லையா, இந்த மாநிலத்தில் இல்லையா என்று முதல்வர் கருணாநிதி பட்டியலைக் காட்டி விலைவாசி உயர்வு நியாயமானதுதான என்பது போலப் பேசியதும் மக்களை கோபத்திக்குள்ளாக்கி விட்டது.
3. குடும்பத்தினரின் ஆதிக்கம்
முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் இதுவரை இல்லாத அளவு, வரலாறு காணாத வகையில், இந்த ஆட்சியின்போது மிகப் பெரிய அளவில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்தியதை யாரும் மறுக்க முடியாது.
முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஒரு பக்கம் ஆதிக்கம் செலுத்த, மு.க.அழகரி மறுபக்கம் ஆதிக்கம் செலுத்த, கனிமொழியின் ஆதிக்கம் ஒரு பக்கம் என குடும்ப அங்கத்தினரின் ஆதிக்கம் வரலாறு காணாத அளவுக்கு கொடி கட்டிப் பறந்தது.
மதுரையில் ஒரு தூசி நகர்ந்தாலும் கூட அது அழகிரிக்குத் தெரிந்தாக வேண்டும் என்ற அளவுக்கு அங்கு அவரது ஆதிக்கமும், அதிகாரமும் கொடி கட்டிப் பறந்தது.
இப்படி கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கத்தால் மக்கள் பட்ட அவதிகளும் நிறைய - நேரடியாகவும், மறைமுகமாகவும்.
4. திரைத்துறையில் கருணாநிதி குடும்ப ஆதிக்கம்
அதேபோல திரைப்படத் துறையிலும் கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் இதுவரை இல்லாத அளவு மிக மிக அதிகமாகவே இருந்தது.
கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோரின் சன் பிக்சர்ஸ் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவை விழுங்கி விட்டது என்றே கூறலாம். பெரிய பெரிய நடிகர்களை எல்லாம் வற்புறுத்தியும், மிரட்டியும் இவர்கள் தங்களது படங்களில் நடிக்க வைத்தார்கள் என்று குற்றச்சாட்டு உள்ளது. இதை வெளியில் கூற முடியாமல் அந்த நடிகர்களெல்லாம் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல.
அதேபோல அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், தமிழரசுவின் தயாரிப்பு நிறுவனம், அவரது மகன் அருள் நிதி நடிகராக்கப்பட்டது, கருணாநிதியின் இன்னொரு பேரன் குணாநிதி திரைத்துறையில் தயாரிப்பில் இறங்கியது என எங்கு பார்த்தாலும் கருணாநிதி குடும்பத்தாரின் முகங்களாகவே தெரிந்தது. இவர்களைத் தாண்டி யாரும் படம் எடுக்க முடியாது, நடிக்க முடியாது என்ற நிலையும் ஏற்பட்டது.
கருணாநிதி குடும்பத்தாரின் ஆதிக்கத்தை மனதில் வைத்தே நடிகர் அஜீத், முதல்வர் கருணாநிதி முன்னிலையிலேயே தங்களை மிரட்டுவதாக குமுறியது நினைவிருக்கலாம்.
அதேபோல கருணாநிதிக்காக தொடர்ந்து விழாக்களை எடுக்க திரைத்துறையினர் நிர்ப்பந்திக்கப்பட்டனர். மேலும் இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரிய நடிகர்களை வலுக்கட்டாயமாக கலந்து கொள்ள நிர்ப்பந்தித்தனர்.
ரஜினிக்கு அடுத்து பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டுள்ள நடிகர் விஜய்க்கு, திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட நெருக்கடியும் அனைவரும் அறிந்ததே. அவரது படங்களுக்கு முட்டுக்கட்டை போட முயற்சித்தது, மிரட்டியது, வழக்குகளைக் காட்டி பணிய வைக்க முயன்றது என நிறைய விஷயங்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் நடந்தது.
இப்படி கருணாநிதி குடும்பத்தாரின் ஆதிக்கத்தால் திரைத்துறையினரும் புழுக்கத்துடன்தான் இருந்தனர். இவற்றை எதிர்க்கட்சிகள் மக்களிடம் எடுத்துக் கூறி செய்த பிரசாரம் நல்ல பலனைக் கொடுத்துள்ளது என்பது முடிவுகளில் தெரிகிறது.
5. ஈழத் தமிழர் பிரச்சினை
ஈழத் தமிழர் பிரச்சினையும் திமுகவின் அஸ்தமனத்திற்கு ஒரு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.
ஈழத்தில் கொத்துக் கொத்தாக தமிழ் உயிர்களை சிங்களக் காடையர்கள் கொத்திக் குதறிப் போட்டபோதெல்லாம் அவர்களுக்காக திமுக குரல் கொடுக்கவில்லை என்பது, கண்மூடித்தனமாக காங்கிரஸை ஆதரித்தது, எதிர்த்துக் குரல் கொடுக்க தயங்கியது என திமுக மீது சரமாரியான புகார்கள் உள்ளன.
உலகத் தமிழர்கள் எல்லாம், கலைஞர் இப்படி அமைதி காத்து விட்டாரே, அவர் நினைத்திருந்தால் ஒட்டுமொத்த உயிர்ப்பலியையும் தடுத்திருக்கலாமே, தமிழர்களின் தலைவர் என்று அவரை அன்போடு அழைத்ததெல்லாம் வீணாகி விட்டதே என்று வெம்பிப் புலம்பி வேதனையில் மூழ்கும் அளவுக்கு அமைதி காத்தார் கருணாநிதி.
ஈழத்தில் கடைசிக் கட்டத்தில் நடந்த மிகப் பெரிய உயிர்ப் பலியின்போதும் கூட திமுக சற்றும் கலங்காமல், காங்கிரஸுக்கு சாதமாகவும், சோனியாவின் மனம் நோகக் கூடாது என்ற நோக்கிலும், பேசி வந்ததும், உண்ணாவிரதம் என்ற பெயரில் அவர் நடத்திய மிகக் குறுகிய போராட்டமும் ஈழத் தமிழர்களை மட்டுமல்லாமல், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் அவப்பெயரையே ஏற்படுத்தியது.
சோனியா காந்தி மனம் நோகக் கூடாது, காங்கிரஸைப் பகைத்துக் கொள்ளக் கூடாது, கனிமொழிக்கும் தனது குடும்பத்துக்கும் ஆபத்து வந்து விடக் கூடாது என்ற நோக்கில் மட்டுமே கருணாநிதி செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு சரிதான் என்று தமிழக மக்கள் தங்களது தீர்ப்பின் மூலம் காட்டி விட்டனர்.
6. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்
திமுக அரசின் மீதான பல முக்கியக் குற்றச்சாட்டுக்களில் ஒன்று ஸ்பெக்ட்ரம் ஊழல். அதாவது திமுகவின் ஊழலாக மட்டும் இதை மக்கள் பார்க்கவில்லை. மாறாக கருணாநிதி குடும்பத்தினர் மொத்தமாக அரங்கேற்றிய மிகப் பெரிய ஊழலாக இது மக்கள் மனதில் பதிந்து போய் விட்டது.
இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரூ.1,76,000 கோடி அளவிலான இந்த ஊழல் மக்கள் மனதில் குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள், படித்தவர்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.
இந்த ஊழலில் ராசாவை மட்டும் சிறைக்கு அனுப்பி விட்டு தனது மனைவி தயாளு அம்மாள், கனிமொழியைக் காக்க கருணாநிதி போராடியதும் திமுகவினருக்கே அதிர்ச்சியாக அமைந்தது என்பதே உண்மை.
குற்றச்சாட்டுக்களில் கரைந்து போன நலத் திட்டங்கள்:
முதல்வர் கருணாநிதியின் பிடியில் இந்த ஆட்சியின்போது திமுகவும் இல்லை, அவரது குடும்பத்தினரும் இல்லை என்பதே பொதுவான திமுகவினரின் வருத்தமாக உள்ளது. ஆளாளுக்கு நாட்டாமை செய்ததும், ஆடியதுமே இன்று ஆட்சியைப் பறி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மிகப் பெரிய தோல்வியையும் சந்திக்க நேரிட்டு விட்டதாக உண்மையான திமுகவினர் வருத்தத்துடன் கூறுகின்றனர்.
இதுவரை எந்த தமிழக அரசும் செய்யாத பல அற்புதமான திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசுதான் என்று கூறும் அவர்கள், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் பயனடைந்த ஏழைகள் எத்தனையோ பேர் உள்ளனர். 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை பாராட்டாத வாய்களே இல்லை, இலவச டிவி திட்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ஒன்று, அதேபோல கான்க்ரீட் வீடு கட்டி்த தரும் திட்டம் மிக அற்புதமான திட்டம். இப்படி பல நலத் திட்டங்களை திமுக அரசு அறிமுகப்படுத்தி, அதை வெற்றிகரமாகவும் செயல்படுத்திக் காட்டியது.
ஆனால் இந்த நலத் திட்டங்களையெல்லாம் மறைக்கும் அளவுக்கு ஊழல் புகார்களும், குடும்பத்தினரின் ஆதிக்கமும் அதிகரித்துப் போனதால் திமுகவின் ஆட்சிக்கு முடிவு ஏற்பட்டு விட்டதாக திமுகவினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment