Sunday, May 15, 2011

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கானும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பும், அல்-காய்தா, தாலிபான் உருவாக்கமும்: ஒரு சுருக்கமான வரலாறு!

சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளாயிருந்த மத்திய ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் நிலங்களின் அடியில் அள்ள அள்ளக் குறையாத இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. உஸ்பெகிஸ்தானில் கொட்டிக் கிடக்கும் தங்கம், தஜிகிஸ்தானில் புதைந்து கிடக்கும் ஏராளமான வெள்ளி, கஜாக்கிஸ்தானின் யுரேனிய இருப்பு ஆகிவற்றைக் கடந்து, இந்நாடுகளின் நிலத்தினடியில் ஏராளமான இயற்கை எரிவாயு ரிசர்வும் உள்ளது. கஜாக்ஸ்தான், துர்க்மெனிஸ்தான், அசர்பெய்ஜான் ஆகிய நாடுகளில் மட்டும் சுமார் 6.6 டிரில்லியன் கன மீட்டர் எரிவாயு நிலத்தினடியில் இருக்கிறது.

கிழக்கிலும் தெற்கிலும் பாகிஸ்தான், மேற்கே ஈரான், வடமேற்கே துர்க்மெனிஸ்தான், வடக்கே உஸ்பெக்கிஸ்தான் மற்றும் தாஜிகிஸ்தான், வட கிழக்கே சீனாவின் ஜின்சியாங் மாநிலம் ஆகியவற்றைத் தன் எல்லைகளாகக் கொண்டிருக்கும் ஆப்கான் போர்தந்திர ரீதியில் ஒரு புவியியல் கேந்திரமான இடத்தில் அமைந்துள்ளது. மத்திய ஆசியாவின் எரிவாயுவை ஐரோப்பியச் சந்தைக்குக் கடத்திச் செல்ல வேண்டுமானால் ஒன்று ஈரான் வழியே கொண்டு சென்றாக வேண்டும் அல்லது ஜார்ஜியா வழியே கொண்டு சென்றாக வேண்டும்.



ஈரான் அமெரிக்காவுக்குப் படியாத நாடு என்பதைக் கடந்து, ஈரான் வழியே துருக்கியை குழாய் மூலம் இணைப்பது என்பது துருக்கிக்கும் ஈரானுக்கும் பொருளாதாரத்தின் அடிப்படையில் வலுவானதொரு நட்புறவு தோன்றி விட அடிப்படையாய் அமைந்து விடும். ஈரானைத் தனிமைப்படுத்துவதைத் தனது அடிப்படையான மத்தியகிழக்குக் கொள்கையாகக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்த கதையாகி விடும்.

ஜார்ஜியா வழியே குழாய் அமைக்கலாம் என்றால் அங்கே ஆயுந்தாங்கிய மாஃபியா கும்பலின் தொல்லை. அதுவுமின்றி ஜார்ஜியாவின் தெற்கு எல்லைப் பிராந்தியமான ஒஸ்ஸேடியாவை ரசியா சொந்தம் கொண்டாடுகிறது. இவ்விரு நாடுகளுக்குள்ளும் இருக்கும் எல்லைத் தகறாரின் காரணமாக ரசியா அவ்வப்போது ஜார்ஜியாவின் மேல் ராணுவத் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. ஜார்ஜியாவை நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் இணைப்பதையும் ரசியா எதிர்த்து வருகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் ரசியாவுக்கும் ஜார்ஜியாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினையாகத் தோற்றமளித்தாலும், ஜார்ஜியாவின் ஊடாக மேற்கு நாடுகள் எண்ணைக் குழாய் அமைத்து விடக் கூடாது என்பதில் ரசியா குறிப்பாக இருப்பது புரியும்.



இவ்விரு பாதைகளும் அடைபட்டதும் அமெரிக்காவின் முன் இருக்கும் எஞ்சிய வாய்ப்பு ஆப்கான் – பாகிஸ்தான் – அரபிக்கடல் என்கிற குழாய்ப் பாதை தான். மேலும் இது மேலே சொல்லப்பட்ட இரண்டு பாதைகளையும் விட குறைந்த செலவு பிடிக்கக் கூடியது. அரபிக்கடலில் இருந்து ஐரோப்பியச் சந்தைக்கும் இந்தியச் சந்தைக்கும் கப்பல் மூலம் எண்ணையை ஏற்றுமதி செய்வது சுலபம். இறுதியாக அமெரிக்காவின் போட்டியாளர்களாக உருவெடுத்து வரும் ரசியா, சீனா இரண்டு நாடுகளையும் கண்காணிப்பதற்கும், பயமுறுத்துவதற்கும், தேவையான இராணுவத் தளங்களை ஆப்கானில் வைத்திருப்பதும் முக்கியமானது.

ஆப்கானின் புவியியல் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்திருந்ததால் தான் பனிப்போர் காலத்திலேயே சமூக ஏகாதிபத்தியமாய் சீரழிந்திருந்த சோவியத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஆப்கானைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இந்தப் போட்டியில் எழுபதுகளின் இறுதியில் ரசியாவின் கை ஓங்கியிருந்தது. அப்போது அங்கிருந்து ரசியாவை விரட்ட அமெரிக்கா பெற்றெடுத்த சொந்தப் பிள்ளைகள் தான் தாலிபானும் அல்-காய்தாவும்.

நாத்திகர்களான கம்யூனிஸ்ட்டுகளை இசுலாமிய மண்ணான ஆப்கானில் இருந்து விரட்டுவதற்காகப் பல்வேறு இசுலாமிய நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பாகிஸ்தானில் குவித்தது அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. அங்குள்ள மதரஸாக்களில் வைத்து அவர்களுக்கு சித்தாந்தப் பயிற்சியும் ஆயுதப் பயிற்சியும் அளித்தது பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. இதற்கு தேவையான நிதி உதவியை அமெரிக்க அடிமைகளான சவுதி ஷேக்குகள் அளித்தனர். இப்படியாகத் தான் அரபு நாடுகளில் கட்டுமானத் தொழிலின் மூலம் பெரும் செல்வம் ஈட்டி சவூதி அரச குடும்பத்துக்கு நிகரான பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமா பின்லேடன் ஆப்கான் வந்திறங்கினார்.

பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமாவே சுகவாழ்க்கையை விடுத்து நாத்திகர்களை எதிர்த்து ஜிஹாத்தில் குதித்துள்ளார் என்கிற பிரச்சாரம் ஏழை முசுலீம்களிடம் சிறப்பாக எடுபடும் என்பது அமெரிக்காவின் கணக்கு. அமெரிக்காவின் அந்தக் கணக்கு தப்பவில்லை; ஆனால், அவர்கள் கணக்குப் பண்ணிப் பார்க்க வேண்டும் எண்ணியிராத எதிர்பாராத ஒரு இலக்கிலிருந்து தான் அடுத்த தாக்குதல் இறங்கியது. கம்யூனிச ‘அபாயத்தைக்’ களையும் நோக்கத்திற்காகப் அமெரிக்கா பெற்றுப் போட்ட தாலிபானும், அல்-காய்தாவும் தமது பிறவி நோக்கத்தை செவ்வனே நிறைவேற்றினர். எண்பதுகளின் இறுதியில் சோவியத் படைகள் ஆப்கானில் இருந்து பின்வாங்கின.



அல்-காய்தாவுக்கும் ஆப்கான் போரில் பங்கேற்க முஜாஹிதீன்களைத் திரட்டவும் இசுலாமிய நாடுகளின் இளைஞர்களிடையே ஒரு பிரச்சார முழக்கமாக அமெரிக்கா முன்வைத்திருந்த சித்தாந்தமான இசுலாமிய சர்வதேசியம் பூமராங் போல் திருப்பித் தாக்கும் சந்தர்பமும் உடனடியாக வந்து சேர்ந்தது அமெரிக்காவே எதிர்பார்த்திராத ஒரு சுவாரசியமான திருப்பம். ஆப்கான் போர் முடிந்து சவூதி திரும்பிய பின்லேடனை ஈராக்கின் குவைத் ஆக்கிரமிப்பு எதிர்கொள்கிறது.

இவ்விவகாரத்தில் அமெரிக்கத் தலையீட்டை பின்லேடன் எதிர்க்கிறார். ஈராக்கை தனது அல் காய்தாவையும் முஜாஹித்தீன்களையும் வைத்தே எதிர்கொள்ளலாம் என்கிற பின்லேடனின் விருப்பம் நிராகரிக்கப்படுகிறது. மேலும் சவூதி அரசின் அமெரிக்க விசுவாசமும் சவூதியில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகளும், வரலாற்று ரீதியிலான யூத இசுலாமிய முரண்பாடுகளின் பின்னணியில் பின்லேடனுக்கு இருந்த இசுரேல் எதிர்ப்பும், அதற்கு எண்ணை வார்க்கும் இசுரேலின் பிராந்திய ரவுடித்தனமும், அந்த ரவுடித்தனத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் தாதாத்தனமும் பின்லேடனுக்குள் ஆழமான அமெரிக்க எதிர்ப்புணர்வை உண்டாக்குகிறது. இது பின்லேடனுக்குள் மட்டுமல்ல மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க அடிமை ஆட்சியாளர்களைத் தவிர்த்த இசுலாமிய மக்கள் அனைவருக்குள்ளும் உருவாகிறது.

என்னதான் அமெரிக்கத் தயாரிப்பாக இருந்தாலும் – அமெரிக்கப் பாடதிட்டமான இசுலாமிய சர்வதேசியத்தைப் பயின்றிருந்தாலும் பின்லேடன் அதை உணர்வுப்பூர்வமாக பற்றி நின்றிருக்கிறார். இங்கே பின்லேடனிடம் வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வும் பொதுவில் உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்டுகள் மற்றும் ஜனநாயக சக்திகளிடம் வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வும் அடிப்படையிலேயே வேறு வேறானது.



பின்லேடனிடமோ தாலிபானிடமோ வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வு என்பது மக்கள் விடுதலை உரிமை என்கிற அடித்தளத்தின் மீது கட்டப்பட்டதல்ல – அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடத்தில் இசுலாமை மாற்றீடு செய்ய வேண்டும் – இழந்த தமது மேண்மையை மீட்க வேண்டும் என்கிற நோக்கத்தின் மீது கட்டப்பட்டது. அரபுலகில் மக்களது ஜனநாயகம் தழைக்க வேண்டுமென்பது அல் காய்தாவின் கோரிக்கையல்ல. அங்கிருக்கும் ஆட்சியாளர்களைத் துறத்திவிட்டு தூய இசுலாமிய சர்வாதிகாரத்தை நிறுவுவதுதான் அவர்களது நோக்கம்.

அதன் பின் 1996-ல் ஆப்கான் திரும்பும் ஒசாமா, தாலிபான்களின் பராமரிப்பில் தனது அமெரிக்க எதிர்ப்புப் போருக்கு ஆயத்தமாகிறார். தாலிபானின் பச்சையான மனித உரிமை மீறல்கள் மற்றும் காட்டுமிராண்டித் தனமான சட்டங்களின் காரணமாக அமெரிக்காவால் ஆப்கான் அரசை வெளிப்படையாக அங்கீகரிக்க முடியா விட்டாலும் அமெரிக்க அடிவருடிகளான பாகிஸ்தானும் சவூதியும் ஆப்கானை அங்கீகரித்திருந்தன. இவர்கள் மூலம் அமெரிக்கா ஆப்கானுடன் தொடர்புகளைப் பேணிக் கொண்டிருந்தது. எண்ணை ஒப்பந்தங்களுக்காக தாலிபான்களின் பிரதிநிதிகள் அமெரிக்காவுக்கும் சென்றுள்ளனர்.

வெளிப்படையான அமெரிக்க எதிர்ப்பு மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பின்லேடனின் போரை ஆரம்பத்தில் தாலிபான்கள் தங்கள் சொந்தப் பிரச்சினையாகக் கருதவில்லை. முல்லா ஓமர் 98-ன் மத்தி வரையில் பின்லேடனின் இந்த முடிவை எதிர்த்துள்ளதாக அவரை மூன்று முறை பேட்டி கண்ட பாக்கிஸ்தான் பத்திரிகையாளர் ரஹிமுல்லாஹ் யூஸுஃப்ஸாய் தெரிவிக்கிறார். ஆனால் இந்த முரண்பாடு ஓரளவுக்கு மேல் நீடிக்க முடியவில்லை.



தூய இசுலாமிய அடிப்படைவாதத்தின் மேல் கட்டப்பட்ட தாலிபான்களும் அவர்களின் முஜாஹித்தீன்களும் ஓரளவுக்கு மேல் அமெரிக்காவோடு உறவாடுவது அவர்களின் அடிப்படையையே அசைத்து விடக்கூடிய அபாயம் கொண்ட விளையாட்டு. தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் ஆப்கானில் இருந்தவாறே பின்லேடன் அமெரிக்கத் தூதரகங்களின் மேல் தொடுத்த தாக்குதல்களை தாலிபான்கள் தடுக்கவில்லை. பின்லேடனின் சர்வதேசிய இசுலாமிய முன்னணியின் செயல்பாட்டையும் முடக்கவில்லை.



இது ஆப்கானை எளிதில் மேய்ந்து விட்டுப் போய்விடலாம் – அதைத் தொடர்ந்து மத்திய ஆசிய எண்ணை வயல்களை சுலபத்தில் வளைத்துப் போட்டு விடலாம் – என்றெல்லாம் நாக்கில் எச்சில் ஊற கணக்குப் போட்டுக் காத்திருந்த அமெரிக்காவுக்கு ஆத்திரத்தைக் கிளப்புகிறது. தொண்ணூறுகளின் இறுதியிலிருந்தே ஆப்கானைத் தாக்கிக் கைப்பற்ற அமெரிக்கா தருணம் பார்த்துக் காத்துக் கிடந்த நிலையில் தான் இரட்டை கோபுரத் தகர்ப்பு நடக்கிறது.

உலக வரலாற்றில் மிகவும் ஆச்சரியப்படவைக்கும் இந்தத் தாக்குதலை அல் காய்தா நிறைவேற்றியதாக சொல்லப்படுகிறது. அதே நேரம் இந்த தாக்குதல் நடப்பதை அமெரிக்க அறிந்து தனது அரசியல் நோக்கத்திற்காக வேண்டுமென்றே நடக்க அனுமதித்தது என்றெல்லாம் கூட சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ இந்த தாக்குதலை வைத்து அமெரிக்கா அறுவடை செய்த அரசியல் நடவடிக்கைகள்தான் நம்மைப் பொறுத்த வரை முக்கியமானது.



ஆப்கானின் மேலான அமெரிக்க நிலைப்பாடு பற்றியெறியத் தயாரான நிலையில் இருந்த காய்ந்து போன வைக்கோல் போர் என்றால், இரட்டை கோபுரத் தகர்ப்பு என்பது அதன் மீது விழுந்த சிறு பொறி. அதன் பின் அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிரான தனது போரைத் துவக்குகிறது. அதுவரை தானே தனது நலனுக்காக ஊட்டி வளர்த்த இசுலாமிய சர்வதேசியத்தையும் முஜாஹிதீன்களையும் இப்போது புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது நலனுக்காகவே வில்லனாகச் சித்தரிக்கத் துவங்கியது அமெரிக்கா. இப்படித்தான் விடுதலைப் போராளிகள், பயங்கரவாதிகளாக மறு நாமகர்ணம் சூட்டப்பட்டார்கள்.

தீவிரவாத ஒழிப்பு என்கிற பெயரில் முதலில் ஆப்கான் மேலும் அதைத் தொடர்ந்து ஈராக் மேலும் குண்டுகளைப் பொழிந்ததும், அவற்றைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததையும், அப்போரில் அநியாயமாய்க் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான அப்பாவிகள் பற்றியும் நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்க மாட்டீர்கள் – ஆனால், இதில் நீங்கள் கேள்விப்படாத இன்னொரு அம்சமும் இருக்கிறது. ஆப்கான் போருக்காக மட்டும் ஒவ்வொரு வ

No comments: