அழகு தரும் ஆபரேஷன்கள்
உலகம் நாகரீகத்தின் உச்சாணிக் கொம்பில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் ஆபரேஷன் என்றாலே அலர்ஜி போல எண்ணி பதறித் துடிப்பார்கள். இன்றோ வியாதிக்காக அல்லாமல் அழகை மேம்படுத்திக் கொள்வதற்கே ஆபரேஷன் செய்து கொள்கிறார்கள்.
உலகில் அதி நவீனமானதும், அதிகம் பேர் செய்து கொள்வதுமான 10 ஆபரேஷன்களை அறிந்து கொள்ளலாம்.
1. லிப்போசக்சன்:- அதிகப்படியான கொழுப்புகளை நீக்கும் ஆபரேஷன் `லிப்போசக்சன்' எனப்படுகிறது. உடற்பயிற்சி மற்றும் மருந்து மாத்திரைகளால் சரிப்படுத்த முடியாத அளவுக்கு கொழுப்பு படிந்தவர்களுக்கான ஆபரேஷன் இது. உடல் பருத்து, கழுத்து மற்றும் கன்னம் உப்பிப்போய் உருண்டை வடிவமாய் காணப்படுபவர்கள் `லிப்போசக்சன் ஆபரேஷன்' செய்து கொள்கிறார்கள்.
2. பிரெஸ்ட் இம்பிளான்ட்ஸ்:- பெண்களுக்கான பிரத்யேக ஆபரேஷன் இது. மார்பகத்தின் அளவை பெரிதாக்கிக் கொள்வதற்கு செய்யப்படுகிறது. நிறைய பெண்கள் பெரிய அளவிலான மார்பகங்களை விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்கு இந்த ஆபரேஷன் உதவுகிறது. ஆபரேஷனின்போது, சாலின் எனப்படும் உப்புக்கலவை ஜெல் அல்லது சிலிகான் ஜெல் கலவையை மார்பகத்தில் வைத்து தைத்துவிடுகிறார்கள். இது பெண்களுக்கு தூக்கலான மார்பக தோற்றத்தை தருகிறது. உலகம் முழுவதும் இந்த ஆபரேஷன் செய்து கொள்ளும் பெண்கள் வேகமாக அதிகரித்து வருகிறார்கள்.
3. காஸ்மெடிக் ஐ சர்ஜரி:-கண்கள்தான் முகத்தில் ஈர்ப்பான பகுதி. கண்களைச் சுற்றி தோல் சுருக்கங்கள் இருந்தால் அழகு குறைந்து வயதான தோற்றம் வந்து விடும். வயதானவர் போன்ற தோற்றத்தை தரும் இந்த பாதிப்பை சரி செய்வதற்கு ஆபரேஷனை செய்து விடுகிறார்கள். இதுபோன்ற பாதிப்புகள் ஒருசிலருக்குத்தான் இருக்கும் என்றாலும், அவர்களின் கவலையைப் போக்கி அழகாக்கிவிடுகிறது இந்த ஆபரேஷன்.
4. டம்மி டக்ஸ்:- பிரசவ காலத்திற்கு பிறகு பல பெண்கள் உருமாறிப் போவார்கள். திடீர் உடல் எடை இழப்பை மாற்றி அழகுபடுத்துவதற்கான ஆபரேஷன்தான் டம்மி டக்ஸ். வசதியான பெண்கள் இந்த ஆபரேஷனை செய்து கொள்கிறார்கள்.
5. பிரெஸ்ட் ரெடிக்சன்:- பெண்கள் மார்பக அழகை பெரிதும் விரும்புகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். தேவைக்கு அதிகமாக ஆகாரம் சாப்பிடும் பழக்கம் இக்காலத்தில் மிகுந்துள்ளது. இதனால் சில பெண்கள் பெரிய மார்பகங்களைப் பெற்று விடுவதுண்டு. சிலருக்கு மார்பகம் வயதுக்கு மீறிய வளர்ச்சியைக் கொண்டிருக்கும். இப்படி அளவில் பெரிய மார்பை, சிறிதாக்கி அழகானதாக மாற்றிக் கொள்வதற்கு செய்யப்படும் ஆபரேஷன் `பிரெஸ்ட் ரெடிக்சன்' எனப்படுகிறது.
6. ரினோபிளாஸ்டி:- மூக்கை அழகுபடுத்திக் கொள்ளும் ஆபரேஷன் ரினோபிளாஸ்டி. முகத்திற்கு பொருத்தமான மூக்கு அமைவது தான்அழகு. சிலருக்கு மூக்கு தட்டையாகவும், புடைப்பாகவும் காணப்படும். அவர்கள் ரினோபிளாஸ்டி ஆபரேஷன் செய்தால் அழகான மூக்கைப் பெறலாம். ஆண்- பெண் இருபாலரும் பரவலாக இந்த ஆபரேஷன்களை செய்து கொள்கிறார்கள்.
7. பேஸ் லிப்ட்:- முக அழகை அதிகரித்துக் கொள்ளச் செய்யும் ஆபரேஷன் பேஸ் லிப்ட். முகத்தில் தோல் சுருக்கம், பரு, மேடு பள்ளங்கள் போன்றிருக்கும் குறைகளை இந்த ஆபரேஷன் மூலம் சரி செய்கிறார்கள்.
8. பிரெஸ்ட் லிப்ட்:- மார்பழகிற்காக அதிகமாக செய்யப்படும் சிகிச்சை முறைகளில் இதுவும் ஒன்று. சிறந்த 10 அறுவை சிகிச்சைகளில் 3 ஆபரேஷன்கள் மார்பகத்திற்கு மட்டுமே இருப்பதைக் கொண்டே பெண்களின் மார்பழகு ஆர்வத்தை புரிந்து கொள்ளலாம். இது பெண்கள் மார்பகத்தின் தொய்விற்கேற்ப அவற்றை எடுப்பாக நிமிரச்செய்ய செய்து கொள்ளும் ஆபரேஷனாகும். சாதாரணமாக தினமும் `பேடு' உபயோகித்து தாங்களே மார்பகத்தை தூக்கி நிறுத்தி அலங்கரித்துக் கொள்ள விரும்பாத பெண்கள், அறுவைச் சிகிச்சை முறையில் `ஜெல்' செலுத்தி மார்பை அழகுபடுத்திக் கொள்கிறார்கள்.
9. போர்ஹெட் லிப்ட்:- சிலருக்கு பிறப்பிலேயோ அல்லது விபத்தில் சிக்கியோ நெற்றி இயல்பு நிலை மாறி விகாரமாக தோற்றமளிக்கலாம். வெட்டுக் காயத்தால்கூட நெற்றி அழகு குறையலாம். இதை சரிசெய்ய இந்த ஆபரேஷன் உதவுகிறது.
10. ஆண்களுக்கான பிரெஸ்ட் ரெடிக்சன்:- ஆண்களுக்கான மார்பக ஆபரேஷன் இது. சில ஆண்களுக்கு கொழுப்பு படிவதன் காரணமாக அல்லது ஹார்மோன்களின் தாறுமாறான வளர்ச்சி காரணமாக மார்பகம் ஒரு புறமோ அல்லது இருபுறமுமோ பெண் மார்பகம்போல வளர்ந்துவிடுவதுண்டு. இப்படிப்பட்டவர்கள் இந்த ஆபரேஷன் செய்து சரிப்படுத்திக் கொள்ளலாம்.
நன்றி: உங்களுக்காக
Mohammad Sultan
No comments:
Post a Comment