தமிழனுக்கு இந்தி தேவையில்லையா? - கருணாநிதியின் துரோகம்!
ஆண்டாண்டு காலமாக திராவிட முன்னேற்ற கழகம் இந்தியை எதிர்த்து தமிழர்களின் அடிப்படை உரிமையை வேட்டையாடுவது பலரும் அறிந்த செய்தி. இந்தி எதிர்ப்புக்குக் கருணாநிதி விளக்கம் கூறும்போது, "நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை; இந்தி ஆதிக்கத்தையே எதிர்க்கிறோம்" என்கிறார். இது, "நெருப்பு சுடும்; அதனால் தமிழகம் முழுவதும் தீப்பெட்டியைத் தடை செய்யவேண்டும்" என்பது போல் இருக்கிறது.
கருணாநிதி இந்தியை ஏன் எதிர்க்கிறார், பிறகு ஏன் குழப்புகிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் கபில்சிபல் "அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழி பாடமாக்க வேண்டும்" என்று யோசனை தெரிவித்தார். உடனே தமிழக கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழகத்தில் இந்தியை அனுமதிக்க முடியாது" என்று பதில் அறிக்கை விட்டார். இந்த அறிக்கையின் உள் நோக்கம் கருணாநிதியை மகிழ்விக்கவேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன இருக்கமுடியும்?.
தமிழர்கள் ஒரு தேசிய மொழியைக் கற்பதில் தவறு என்ன? ஒரு படித்த கல்வி அமைச்சரே தனது தலைவர் திருப்திக்காக இந்தியை எதிர்ப்பது வேலியே பயிரை மேய்வது போல இருக்கிறது. ஒரு அமைச்சர் ஒரு அறிக்கை விடுவதற்கு முன்பு அதன் சாதக பாதகங்களை யோசிக்கவேண்டும். இன்று பிற மாநிலங்களில் இந்திமொழி உள்ளது; அவர்கள் எதில் குறைந்துவிட்டார்கள்? இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்கு நாம் சென்று அங்குள்ள ரிக்ஸா ஓட்டியிடம் ஆங்கிலம் பேசினால் அவனுக்கு என்ன புரியும்? நமக்கு தமிழையும், ஆங்கிலத்தையும் விட்டால் வேறு என்ன தெரியும்?.
நமது பக்கத்து மாநிலமான கேரளாவைச் சேர்ந்தவர்கள், செல்வம் கொழிக்கும் வளைகுடா பகுதிகளில் உயர்மட்ட வேலைகளிலிருந்து கீழ்மட்டம் வரை கோலோச்சும்போது, தமிழர்கள் பெரும்பான்மையோரும் அப்பாவிகளாக, கீழ்மட்டத்திலேயே தலையெடுக்க முடியாமல் நசிந்து போவதற்குக்மொழி மேலாண்மையும் ஒரு காரணம் என்பது வளைகுடாக்களில் பயணிக்கும் தமிழக அரசியல்வாதிகளில் எவருக்குமே இதுவரை புரியவில்லையா?
வெளிநாடுகளில் மட்டுமின்றி தமிழகத்திலும்கூட சில வேளைகளில் இப்பரிதாப தமிழன் மொழி புரியாமல் தன்னைத் தானே கேவலப்படுத்திக் கொள்கிறான். சான்றுக்குச் சில:
ஒரு வருட காலத்துக்கு முன்பு டிவி யில் ஒரு தமிழ் திரைபட நகைச்சுவை காட்சியைப் பார்த்து அதிர்ந்து போனேன். அந்தக் காட்சியில் ஒரு இந்தி வாசகம் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அந்த வாசகத்தைத் தமிழில் மொழி பெயர்த்தால் மிக பயங்கரமான அச்சில் பதிக்கமுடியாத ஆபாச வார்த்தையாக இருந்தது. அப்போ இந்தத் தவறு எப்படி நடந்தது? தமிழ் சினிமாக்களின் தணிக்கை அதிகாரிகளுக்குக் கூட இந்தி தெரியவில்லை என்பதுதானே? அவர்களுக்கு இந்தி தெரிந்து இருந்தால் அந்த வாசகம் என்ன, காட்சியையே நீக்கி இருப்பார்கள்.
இந்தக் கொடுமை பாடல்களையும் விட்டுவைக்கவில்லை. சமீபத்திய தமிழ் பாடல் ஒன்றில் "படுவா" என்ற இந்தி சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது இதற்கு ஆங்கிலத்தில் PIMP (பிம்ப்) என்றும் தமிழில் "கூட்டிக் கொடுப்பவன்" என்றும் சொல்லலாம்! எவ்வளவு அசிங்கம். திரைப்படத்தின் மொழி தமிழ், பயன்படுத்தப்பட்ட சொற்கள், இந்தி மொழியிலுள்ள தரம்கெட்ட ஆபாச சொற்கள். ரசிப்பதும் சிரிப்பதும் தமிழர்கள்! ஆனால் அர்த்தம் மட்டும் தெரியாது! இத்தகைய படங்களின் பெயர்கள் தமிழில் இருந்தால் அரசு மானியம் வேறு! என்ன பரிதாபம்!!
மக்கள் விழிப்புணர்வு பெறவில்லை, அரசும் திருந்தவில்லை! நான் மட்டும் என்னசெய்வேன்?. மகா கவி அல்லாமா இக்பால் அவர்களின் அற்புத வரிகளில் ஒன்று உள்ளது, "நீங்கள் எந்த ஒன்றுக்கும் ஆசை படுவதற்கு முன்னால் அதற்கு உங்களை நீங்களே தயார்படுத்திகொள்ளுங்கள்". எவ்வளவு அருமையான சிந்தனை!
அரசியல்வாதிகள் பதவிக்கு ஆசைபடுகிறார்களே தவிர அதற்கு அவர்கள் தகுதியானவர்களாக இல்லை என்பதே உண்மை! உதாரணம் மத்திய அமைச்சர் அழகிரி! ஆங்கிலமும் தெரியாது, இந்தியும் தெரியாது! நாடாளுமன்றத்தில் பேசவும் பயப்படுகிறார். டெல்லி செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுக்கவும் பயப்படுகிறார். பதவியும் அதிகாரமும் இருந்து என்ன செய்ய? இதற்கு ஒரே தீர்வு, இந்தி மொழியைப் பள்ளியில் கட்டாயப் பாடமாக கொண்டு வரவேண்டும் என்பதுதான். அது அரசியல் கட்சிகளால்தான் முடியும்.
அரசியல் கட்சிகள் மக்களின் நலனுக்காகவே தவிர, மக்களின் சுயமரியாதையையும், அடிப்படை உரிமையையும் பிடுங்குவதாக இருக்கக்கூடாது என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும். இந்தத் தலைமுறை தொடங்கி, இந்தி கற்க ஆரம்பித்தால் எதிர்காலத்தில் தமிழர்கள் தமிழகம் தாண்டி பிழைப்பார்கள்! நமது வாழ்வாதாரமும் சிறக்கும் என்பதில் ஐயம் இல்லை என்பது என்னுடைய தொலை நோக்கு சிந்தனை. சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களா!
- கலீல், வீரசோழன்.
--
No comments:
Post a Comment