போக்குவரத்தில் போவதற்கோ உயிர்கள்?.By சக்திவேல் மயில்சாமி
First Published : 19 October 2012 01:21 AM IST
.
வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயத்தில் தேசிய அளவில் முதலிடம் பிடித்திருக்கிறது தமிழகம். வருத்தப்பட வேண்டியது தமிழகம் மட்டுமல்ல; அதே விஷயத்தில் உலகளவில் முதலிடம் பிடித்திருக்கும் இந்தியாவும்தான்.
உலகளவில் விபத்துகளால் அதிகம் பேர் இறப்பது இந்தியாவில்தான். இரண்டாம் இடம் சீனாவுக்கு. அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, ரஷியா, தென் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளன. இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்துக்கும் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார்.
தேசிய குற்றச்சம்பவங்கள் ஆவணப் பதிவக (என்சிஆர்பி) புள்ளிவிவரத்தின்படி, 2011 ஆம் ஆண்டில் இந்தியாவில் சாலை விபத்துகளில் மட்டும் உயிரிழந்தவர்கள் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 72 பேர். இதில் ரயில் சார்ந்த விபத்துகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 834 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர்.
இந்தியாவில் தினமும் 375 மனித உயிர்களைச் சாலை விபத்தில் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். கனரக வாகன விபத்தில் தினமும் 73 பேரும், இருசக்கர வாகன விபத்தில் 84 பேரும் உயிரிழக்கின்றனர். இவ்வாறு உயிரிழப்பவர்களில் 5 - 29 வயதுக்கு உள்பட்டவர்களே அதிகம்.
இந்தப் புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தின் நிலையும் கவலைக்குரியதாகவே இருக்கிறது.
2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் சாலை விபத்துகளில் 15 ஆயிரத்து 422 பேர் இறந்துள்ளனர். சராசரியாக அரை மணி நேரத்துக்கு ஒரு உயிரிழப்பு ஏற்படுகிறது.
சாலை விபத்துகளில் அதிக உயிர்களைப் பலிகொடுத்து இரண்டாம் இடத்தில் ஆந்திரப் பிரதேசமும் (15,158), மூன்றாம் இடத்தில் உத்தரப் பிரதேச (14,996) மாநிலமும் உள்ளன.
உயிரிழந்தவர்களில் அதிகபட்சமாக 22.4 சதவீதம் பேர் இரு சக்கர வாகன விபத்துகளில் இறந்திருக்கின்றனர்.
உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துகள் பெரும்பாலும் 7 காரணங்களால் நிகழ்கின்றன. அவை, 1. தாறுமாறாக வாகனம் ஓட்டுதல், 2. வேக உச்சவரம்பை மீறுதல், 3. போக்குவரத்து சிக்னல்களை மீறுதல், 4. சீட் பெல்ட் அணியாதது, 5. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, 6. அபாயம் ஏற்படும் வகையில் முந்திச் செல்வது, 7. செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவது.
இவ்வகை உயிரிழப்புகளுக்குக் காரணம் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை; போக்குவரத்து விதிமுறைகள் மீறப்படுகின்றன என எளிதாகக் குற்றம் சாட்டிவிட முடியும்.
இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இந்த நிலைகளுக்கு யார் காரணம்? அரசின் நிர்வாகக் குறைபாடுதானே?
தமிழகத்தில் சட்டங்களின் மீது மக்களுக்குப் பயமில்லை. மனித உழைப்பைக் குறைப்பதற்காகவே தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அங்கும்கூட இரண்டு போக்குவரத்துக் காவலர்கள் நிற்க வேண்டியிருக்கிறது.
அதிகாரப்பூர்வ தகவலின்படி 2004ஆம் ஆண்டு சுனாமியால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் 12 ஆயிரத்து 405 பேர். அதன் மோசமான வடு இன்னும் மறையவில்லை. சுனாமி ஏற்படுவதை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால், சாலை விபத்து அப்படியல்லவே?
ஆண்டுதோறும் ஒரு சுனாமி - சாலை விபத்து என்ற பெயரில் - தமிழகத்தில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு யார் பொறுப்பு?
போக்குவரத்து விதிமுறைகளை மதிக்கத் தேவையில்லை என்ற அலட்சிய மனோபாவத்தை மக்களிடம் வளர்த்துவிட்ட போக்குவரத்துப் போலீஸார்தான் இவற்றுக்குப் பொறுப்பேற்க வேண்டும். சாலை விபத்தில் இறப்பவர்களே இல்லாமல் செய்து விடமுடியாது. ஆனால், 5 இலக்க சாவு எண்ணிக்கையை 4 இலக்கமாகவோ, 3 இலக்கமாகவோ குறைக்க முடியும்.
போக்குவரத்துப் போலீஸ் துறையில் சம்பளத்துக்காக மட்டுமே பணிபுரிபவர்களால் இதற்குத் தீர்வு காண முடியாது. திட்டமிடும் திறனும், அதைச் செயல்படுத்தும் முனைப்பும் கொண்டவர்கள் அத்துறையின் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்பட வேண்டும்.
பள்ளிப்பாடங்களில் போக்குவரத்து விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். ஓட்டுனர் உரிமம் பெறும் விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
ஆட்டோ தொழிலாளர்கள், வாடகை வாகனங்களை இயக்குபவர்கள் சங்கம், லாரி ஓட்டுநர் சங்கம், அரசு போக்குவரத்துத் தொழிலாளர் சங்க உறுப்பினர்களை அழைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சாலைகளில் சிறு விதிமீறலும் தண்டனைக்குரியதாக மாற்றப்பட வேண்டும். உயிரைவிட வேறெதுவும் மதிப்பு மிகுந்ததல்ல. சாலை விபத்துகளால் மரணம் சம்பவிப்பதைத் தடுக்க முயலாத அரசுதான் இந்த போக்குவரத்துக் "கொலை'களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். ஆம், இயற்கையாக ஏற்படாத எந்த மரணமும் "கொலை'தான்.
.
No comments:
Post a Comment