கலக்கல் லாபம் தரும் இரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு
ஜெ.மாதவி : வாகனங்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களின் சீட் கவர் தயாரித்து நேரடியாகவோ கடைகளுக்கோ விற்றால் லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை டவுன்ஹாலை சேர்ந்த அப்துல் ரசாக். அவர் கூறியதாவது : வாகனங்களின் சீட் கவர் தயாரிக்கும் கடையில் 15 ஆண்டாக வேலை பார்த்தேன். சம்பளம் குடும்ப தேவைக்கு போதவில்லை. கடந்த 5 ஆண்டுக்கு முன்பு சொந்தமாக சீட் கவர் தயாரிக்கும் கடை துவங்கினேன். இத்தொழிலில் பலர் இருந்தாலும் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருவதால், வாகனங்களில் சீட் கவர் மாற்றும் தேவை நிரந்தரமாக உள்ளது. இதனால் தொடங்கியது முதலே தொழில் சீராக நடந்து கொண்டிருக்கிறது. இருசக்கர வாகனங்கள் பிராண்ட்களுக்கேற்ப சீட்கள் ஒன்றுக்கொன்று சிறிய அளவில் மாற்றம் இருக்கும். பல்வேறு இரு சக்கர வாகன சீட்களின் மாதிரிகளை நாம் வைத்திருந்தால் உடனடியாக தயாரித்துவிடலாம்.
சீட் கவரில் வாடிக்கையாளர்கள் டிசைன்கள், எழுத்துகளை வடிவமைக்க விரும்புகின்றனர். டிசைன் வேலைப்பாட்டுக்கேற்ப கூலி கிடைக்கும். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் சீட் கவரில் டிசைன்களை விரும்புகிறார்கள். பெண்கள் டிசைன் இல்லாத சீட் கவர்களை விரும்புகின்றனர். சீட் கவர் தயாரிக்க பெரிய அளவில் பயிற்சிகள் தேவை இல்லை. ஓரளவு தையல் தெரிந்தவர்களாக இருந்தால் போதும். இருசக்கர வாகன சீட் கவர் தயாரிப்பில் போதிய அனுபவம் இருந்தால் 4 சக்கர வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களுக்கு சீட் கவர் செய்து கொடுக்கலாம். நல்ல வருவாய் கிடைக்கும்.
இத்தொழிலை பெண்கள் வீட்டிலேயே செய்ய முடியும். மொத்த சீட் விற்பனை கடைகளில் ஆர்டர் எடுத்து செய்யலாம் அல்லது வெட்டி கொடுக்கும் பாகங்களை கொண்டு தைத்து கொடுக்கலாம். மழை, வெயிலில் நிறுத்தப்படுவதால், சீட் கவர்கள் அடிக்கடி கிழிந்து விடுகிறது. ஒரு சீட் கவர் 9 மாதம் வரை உழைக்கும். இதனால் நிரந்தர வேலை வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அப்துல் ரசாக் கூறினார்.
தயாரிக்கும் முறை
இரு சக்கர வாகனத்துக்குரிய சீட்டின் மாதிரி வடிவத்தை வைத்து, சீட்டின் மேல், இடது மற்றும் வலது புற பாகங்களை ரோசிலின் சீட்டில் வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை பார்டர் டேப் அல்லது பீடிங் வயரால் இணைத்து தைக்க வேண் டும். அதை ஸ்பாஞ்ச் மீது வைத்து இடது, வலது புறங்கள் வழியாக கீழ் புறம் வரை கவரை இறுக்க மாக கொண்டு வர வேண் டும். இப்போது ரோசிலின் சீட்டை ஸ்பாஞ்ச் மீது கன் சூட்டரால் அமுக்கினால் சீட் கவர் தயார்.
டிசைன் சீட் கவர் தயாரிக்க, டிசைன் இடம்பெறும் பகுதிகளுக்கு புள்ளி ரெக்சின் சீட் அல்லது சிம்பொனி சீட்டை தேவையான வண்ணங்களில், டை மூலம் வெட்டி கொள்ள வேண்டும். அதற்கு வடிவமைப்பு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். வெட்டிய டிசைன்களை ஏற்கனவே தயாரித்த சீட்டில் இணைத்து தைக்க வேண்டும். (சீட் கவர் பொருத்துவதற்கு முன்பு, இரு சக்கர வாகனத்தில் இருந்து பழைய சீட்டை டூல் கிட் மூலம் கழற்ற வேண்டும். அதில் ஸ்பாஞ்சின் மீதுள்ள கவரை அகற்ற வேண்டும்.)
முதலீடு: டிசைன் வடிவமைப்பு இயந்திரம் ரூ.1.25 லட்சம், மின் தையல் இயந்திரம் ரூ.13 ஆயிரம், கம்ப்ரசருடன் இணைந்த கன் சூட்டர் ரூ.16 ஆயிரம், டூல் கிட் ரூ.2 ஆயிரம், பல்வேறு டிசைன் டை ரூ.15 ஆயிரம், சீட் கவர் மாதிரிகள் ரூ.4 ஆயிரம், கத்திரி 2 ரூ.1000, 10க்கு 16 அடி அளவுள்ள அறை அட்வான்ஸ் ரூ.15 ஆயிரம், ஒரு டேபிள் ரூ.4 ஆயிரம், ரேக் ரூ.4 ஆயிரம் என ரூ.2 லட்சம் தேவை.
உற்பத்தி பொருட்கள்: ரோசிலின் சீட், புள்ளி ரெக்சின் சீட், சிம்பொனி சீட், ஸ்பாஞ்ச், பீடிங் வயர், கருப்பு நிற நூல், பின்.
கிடைக்கும் இடங்கள்: டிசைன் வடிவமைப்பு இயந்திரம், கன்சூட்டர் ஆகியவை சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கிறது. மற்ற முதலீட்டு பொருள்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளில் கிடைக்கும். உற்பத்தி பொருட்கள் பிரத்யேக ரெக்சின் கடைகளில் கிடைக்கிறது.
உற்பத்தி செலவு (மாதத்துக்கு): ஒரு நாளில் 8 மணி நேரத்தில் 5 சீட் கவர்கள் வீதம் மாதம் 25 நாளில் 125 சீட் கவர் தயாரிக்கலாம். இதற்கு உற்பத்தி செலவு ரூ.14 ஆயிரம், கடை வாடகை ரூ.2 ஆயிரம், மின் கட்டணம் ரூ.400, உழைப்பு கூலி ரூ.6 ஆயிரம், இதர செலவுகள் ரூ.2 ஆயிரம் என ரூ.22,400 செலவாகும். ஒரு சீட் சராசரி உற்பத்தி செலவு ரூ.180 ஆகிறது.
லாபம் (மாதத்துக்கு): ஒரு சாதாரண சீட் கவர் ரூ.250, டிசைன் சீட் கவர் ரூ.350க்கு விற்கப்படுகிறது. 75 சாதாரண சீட் கவர் விற்பதன் மூலம் ரூ.18,750, 50 டிசைன் கவர் விற்பதன் மூலம் ரூ.17,500 என மொத்த வருவாய் ரூ.36,250. இதில் செலவு போக லாபம் ரூ.13,850.
சந்தை வாய்ப்பு
இரு சக்கர வாகன விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில வாகன விற்பனை நிலையங்களில் மட்டுமே சீட் தயாரித்து விற்கின்றனர். அதிலும் பிளெய்னாக உள்ள சீட்கள் மட்டும் கிடைக்கிறது. தாங்கள் விரும்பும் நிறம் மற்றும் டிசைன் உள்ள சீட் கவரை பெற வெளியில் உள்ள கடைகளையே நாடுவதால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கிறார்கள். சீட் கவர்கள் சேதமடைந்தால் அவற்றை மாற்றவும் பழைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இரு சக்கர வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் சீட் கவர் மொத்த விற்பனை நிலையங்களுக்கும் ரெடிமேடு சீட் கவர்களை சப்ளை செய்யலாம். நல்ல கிராக்கி உள்ளது
Engr.Sulthan
No comments:
Post a Comment