Tuesday, April 7, 2009

[நிழல்களும் நிஜங்களும்] த.த.ஜ.வின் தேர்தல் நிலைப்பாடு; ஒரு நடுநிலை பார்வை!

[நிழல்களும் நிஜங்களும்] த.த.ஜ.வின் தேர்தல் நிலைப்பாடு; ஒரு நடுநிலை பார்வை!
பலத்த எதிர்பார்ப்புக்கிடையில் நடைபெற்ற த.த.ஜ.வின் மாநில பொதுக்குழு தேர்தல் சம்மந்தமான முடிவை அறிவித்துள்ளது. அதில் வழக்கம்போல சமுதாய நலனை பின்னுக்கு தள்ளி, அரசியல் பிரச்சினைக்கு முக்கியத்துவம் தந்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

#தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 15 தொகுதிகளிலும் காங்கிரசிற்கு ஆதரவு அளிப்பதில்லை என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.

மத்தியில் ஐந்தாண்டுகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், கடந்த தேர்தலில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு பற்றி அளித்தத் வாக்குறுதியை நிறைவேற்றாததால் காங்கிரசுக்கு ஆதரவில்லை என்ற த.த.ஜ.வின் இந்த முடிவு வரவேற்கத்தக்கதே!
புதுவையில் மட்டும் புதுவை மாநில அரசு இடஒதுக்கீட்டிற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாலும் ஆணையம் அமைத்ததாலும் விரைவில் இடஒதுக்கீட்டை அளிப்பதாக முதல்வர் நேரடியாக புதுவை நிர்வாகிகளிடம் வந்து வாக்குறுதி அளித்ததாலும் புதுவையில் மட்டும் காங்கிரசிற்கு ஆதரவு அளிப்பதாக இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
மத்தியில் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தர முன்வராத நிலையில், அதே காங்கிரஸ் புதுவையில் மட்டும் இட ஒதுக்கீடு தந்துவிடும் என்று நம்புவது எப்படி? புதுவையில் ஆட்சியமைத்து மூன்றாண்டுகலாகியும் இட ஒதுக்கீடு தராத காங்கிரஸ், இனிமேல் தரும் என்று நம்புவது சரியெனில், இதே அடிப்படையில் தமிழக காங்கிரசும் இனிமேல் மத்தியில் ஆட்சியமைத்தால் தரும் என்று நம்பவேண்டியதுதானே! அது என்ன! ஒரே கட்சி விசயத்தில் தமிழகத்திற்கு ஒரு நிலை! புதுவைக்கு ஒருநிலை?
திமுக போட்டியிடாத தொகுதிகளில் காங்கிரஸ்-அதிமுக அல்லது காங்கிரஸ்-பாமக அல்லது காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் அல்லது காங்கிரஸ்-மதிமுக, அல்லது விடுதலைசிறுத்தைகள்-பாமக போட்டியிடும் போது இரண்டு வேட்பாளர்களும் சம நிலையில் இருந்தால் யாரையும் ஆதரிக்காமல் இருக்க வேண்டும். இருவரில் ஒருவரை விட மற்றவர் முஸ்லிம்களுக்குப் பயன்படுவார் என்று மாவட்ட நிர்வாகம் தக்ககாரணங்களுடன் தெரிவித்தால் மாநில நிர்வாகம் பரிசீலித்து அதனை ஏற்றுக் கொள்ளும்.
இந்த அடிப்படையில், இருவரில் ஒருவர் மற்றவரை விடமுஸ்லிம்களுக்கு பயன்படுவார்' என்று மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து கூறும் வேட்பாளர் காங்கிரசாக இருந்தால் என்ன நிலை? அல்லது அண்ணாதி.மு.க போன்ற த.த.ஜ. ஆதரிக்காத வேட்பாளர், முஸ்லிம்களுக்கு பயன்படுபவராக இருந்தால் என்ன நிலை? இது என்ன குழப்பமான நிலைப்பாடு? தி.மு.க போட்டியிடாத தொகுதியில் யாரையும் ஆதரிப்பதில்லை என்று ஒரேயடியாக அறிவிப்பதில் என்ன தயக்கம்?
பா.ம.கட்சி தொடர்ந்து முஸ்லிம் விரோதியாகச் செயல்படுவதாலும் இலங்கைப் பிரச்சனையை மையமாக வைத்து முஸ்லிம்களுக்கு தீவிரவாதிப் பட்டம் சுமத்தியதாலும் கடந்த தேர்தலிலும் இந்த தேர்தலிலும் முஸ்லிம்களுக்கு ஒரு இடம் கூட தராத காரணத்தினாலும் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விஷயத்தில் புதுவையில் உள் வேளை செய்த காரணத்தினாலும் பா.ம.கவை ஆதரிப்பதில்லை என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
மத்தியில் ஆட்சியில் பங்கெடுத்த நிலையிலும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு விசயத்தில் பா.ம.க. எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதால் பா.ம.க.வுக்கு ஆதரவில்லை என்று கூறியிருந்தால் அது பொருத்தமான காரணமாக இருந்திருக்கும். அதைவிடுத்து முஸ்லிம்களை தீவிரவாதி என்றார்கள், முஸ்லிம்களுக்கு ஒரு சீட்கூட ஒதுக்கவில்லை என்பன போன்ற காரணங்கள் ஏற்புடையதல்ல. ஏனெனில், முஸ்லிம்களுக்கு'தீவிரவாதிகள்' என்ற பட்டத்தை முதன்முதலில் சூட்டி அழகு பார்த்தவர் த.த.ஜ. ஆதரிக்கும் கருணாநிதிதான் என்பது உலகறிந்த உண்மை. மேலும் சிற்சில விஷயங்கள் நீங்கலாக, பா.ம.க. முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே இருந்து வந்தது. மேலும் தி.மு.க. ஒரு சீட் கூட முஸ்லிம்களுக்கு ஒதுக்காததை கண்டு கொள்ளாதது ஏன்?
விடுதலைச் சிறுத்தை அமைப்பினர் முஸ்லிம் செல்வந்தர்களையும் வணிகர்களையும் நில உரிமையாளர்களையும் மிரட்டி அராஜகம் செய்து வருவதாலும் அவர்களை திருமாவளவன் அடக்கி வைக்காத காரணத்தாலும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் விடுதலை சிறுத்தைகள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். எனவே விடுதலைச் சிறுத்தைகளை ஆதரிப்பதில்லை என்றும் இப்பொதுக்குழுவில் தீர்மானிக்கப்படுகிறது
விடுதலை சிறுத்தைகள் மேற்கண்ட அராஜகம் புரிந்தது உண்மையானால் அதை தடுக்க த.த.ஜ. இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன், முஸ்லிம்களுக்கு எதிராக வருண்காந்தி பேசிய போது த.த.ஜ. வுக்கும் முன்பாக, வருணை கைது செய்யவேண்டும் என்று கூறியவர். த.த.ஜ., த.மு.மு.க போன்ற அமைப்புகள் பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டத்தை தமிழகத்தில் நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், அயோத்தி போய் போராட்டம் நடத்தப்போவதாக துணிச்சலோடு அறிவித்து சங்க்பரிவாரங்களுக்கு 'கிலி' ஏற்ப்படுத்த்தியவர். ஒரு பேரணியின்போது முஸ்லிம்களோடு வன்முறையில் சிறுத்தைகள் ஈடுபட்டார்கள் என்ற ஒன்றை மட்டும் வைத்து சிறுத்தைகள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்ற முடிவும் அதையொட்டிய நிலைப்பாடும் சரியன்று.
விஜயகாந்தைப் பொறுத்த வரை அவர் ஆளும் கட்சியாகவோ எதிர்க் கட்சியாகவோ இருக்கவில்லை. அவரை எடைபோட அவர் நடித்த சினிமாக்கள் தான் உள்ளன. அவரது சினிமாக்களில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கின்ற போக்கு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதால் அவரையும் அவரது கட்சியையும் ஆதரிப்பதில்லை என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.
விஜயகாந்த் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டினார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அப்படிப்பட்ட விஜயகாந்த் கூட இந்த முஸ்லீம் சமுதாயத்திற்கு இரு சீட் தந்துள்ளார்.ஆனால் த.த.ஜ. ஆதரிக்கும் தி.மு.க. ஒரு சீட் கூட முஸ்லிம்களுக்கு ஒதுக்கவில்லையே! குறைந்த பட்சம் விஜயகாந்த் நிறுத்தியிருக்கும் இரு முஸ்லிம்களையாவது ஆதரிக்கலாமே! ஆனால் த.த.ஜ.வின் முடிவினால், ராமநாதபுரம் தொகுதி தே.மு.தி.க. முஸ்லீம் வேட்பாளரை புறக்கணித்து, முஸ்லிமல்லாத ஒரு நடிகரை ஆதரிப்பதுதான் தவ்ஹீதின் பரிணாம வளர்ச்சியா?
பயங்கரவாதி மோடியை அழைத்து விருந்தளித்து முஸ்லிம்களின் ஆதரவு தேவையில்லை என்று சொல்லாமல் சொன்ன ஜெயலலிதாவையும் அவரது கூட்டணியையும் ஆதரிப்பதில்லை.
இந்த முடிவு சரியானதே! ஆனால் காங்கிரஸ் போட்டியிடும், அல்லது சிறுத்தைகள் போட்டியிடும்தொகுதியில் அண்ணாதி.மு.க.வை ஆதரிக்காமல் இருந்தால்தான் சிறந்தது. மாறாக முஸ்லிம்களுக்கு பயன்படுவார் என்று ஒரேஒரு அண்ணாதி.மு.க வேட்பாளரை ஆதரித்தாலும் இந்த முடிவுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.
இடஒதுக்கீட்டை தற்சமயம் நடைமுறைப்படுத்தியதால் திமுகவிற்கு தார்மீக ஆதரவளிப்பது என்று தீர்மானிக்கிறோம்.
தி.மு.க இட ஒதுக்கீடு வழங்கியதற்காக நன்றி தெரிவிக்கும் தபாலிலேயே அன்றே ஆதரவு என்ற வாக்குறுதி கொடுத்ததால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என்ற நிலையிருந்தாலும் கூட, இட ஒதுக்கீடு ஏட்டளவில்தான் இருக்கிறது அதற்கான பயன் முஸ்லிம்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்று இந்த பொதுக்குழுவரை ஒருபக்கம் கூறிக்கொண்டு மறுபுறம் தி.மு.க.வுக்கு ஆதரவு என்பது வியப்பாக உள்ளது. 'நீங்கள் பேப்பரில்தான் இடஒதுக்கீடு அறிவிப்பு செய்தீர்கள். அதுபோல நாங்களும் எங்கள் ஆதரவை பேப்பரில்தான் தந்துள்ளோம் எனவே நீங்கள் மாறினால் நாங்களும் எங்கள் முடிவை மாற்றுவோம்' என்று அன்று முழங்கிய த.த.ஜ. இன்று ஏட்டளவு இட ஒதுக்கீட்டை காராணம் காட்டி ஆதரவு என்பது வியப்பாக உள்ளது. மேலும் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மத்திய அளவில் இடஒதுக்கீடு பற்றி வாய் திறக்காத,தேர்தல் அறிக்கையிலும் இதுபற்றி குறிப்பிடாத, முஸ்லிம்களுக்கு ஒரு சீட்கூட ஒதுக்காத தி.மு.க. வை ஆதரிப்பது ஏன்? மேலும் ஒருபுறம் தி.மு.க.வை ஆதரித்துக்கொண்டு மறுபுறம் காங்கிரசை எதிர்ப்பதில் அர்த்தமில்லை.ஏனெனில், தி.மு.க. வின் வெற்றி காங்கிரஸின் வெற்றியாகும்.
முஸ்லிம்லீக் போட்டியிடும் வேலூர் தொகுதி நிலைப்பாடு என்ன என்று எந்த அறிவிப்பும் இல்லை.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக அற்புதமான முடிவு ஒன்றை பாருங்கள்;
மனித நேய மக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக அவர்களின் சமுதாய துரோகங்களை அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
ம.ம.க.பற்றிய த.த.ஜ.வின் இந்த முடிவு பற்றி நாம் கருத்து சொல்வதைவிட சமுதாயத்தின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்.
இறுதியாக, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மட்டும் இடஒதுக்கீடு என்று அறிவித்து, அதையும் முழுமையாக வழங்காமல்[த.த.ஜ.வின் கூற்றுப்படி] தேர்தல் அறிக்கையில் மத்திய அளவில் இட ஒதுக்கீடு பற்றி கூறாமல், ஒரு முஸ்லிமுக்கு கூட சீட் தராமல் துரோகம் செய்த கருணாநிதியை புறக்கணித்து, முஸ்லிம்கள் எந்த கட்சியில் போட்டியிட்டாலும் அவர்களை ஆதரிப்பது, முஸ்லிம்கள் போட்டியிடாத தொகுதியில் நடுநிலை வகிப்பது என்ற முடிவை த.த.ஜ. எடுத்திருந்தால் அது சமுதாய நலன் சார்ந்த முடிவாக இருந்திருக்கும். ஆனால் இந்த முடிவு.........?????????????
படம் மட்டும்; த.த.ஜ.நெட்


--
6/04/2009 01:38:00 AM அன்று நிழல்களும் நிஜங்களும் இல் முகவை எஸ்.அப்பாஸ் ஆல் இடுகையிடப்பட்டது
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum


No comments: