Saturday, April 25, 2009

bagdad then and now

"எனக்குத் தெரிந்த ஒரு ஈராக்கிய வாலிபர் பொலிஸ் படையில் புதிதாகச் சேர்ந்தபொழுது ஏதோ ஒரு அமெரிக்கத் தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்று பயிற்சியளித்தது. பெரும்பாலான பயிற்சி நேரங்களை அந்த வாலிபர் ஜீப் வண்டி 


 ஓட்டுவதிலும் ஆயுதங்களைக் கையாள்வதிலும் செலவிட்டார். பயிற்சி முடிந்த பின்பு ஒரு நாள் வேலைக்கு நியமித்துள்ளதாக அழைப்பு வந்தது. அவரிடம் ஒரு ஜீப்வண்டியைக் கொடுத்து பாக்தாத்தின் சன நெருக்கடி மிக்க சந்தைப் பகுதி ஒன்றில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுமாறும் அங்கிருந்து அவருக்குத் தரப்பட்ட கைத்தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்படியும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற வாலிபர் ஜீப்பில் இருந்தபடியே கைத்தொலைபேசியை இயக்கிய பொழுது சிக்னல் கிடைக்கவில்லை. பின்னர் இறங்கி சிறிது தூரம் சென்று சிக்னல் கிடைத்துத் தொடர்பு கொண்டபோது... ஜீப் வெடித்துச் சிதறியது"


-சிரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் தகவல்
(ஐனெநிநனெநவெ 26.04.06)

 

"பாக்தாத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் 14 வாலிபர்களின் இறந்த உடல்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டன. அந்த 14 பேருக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது. அனைவரும் 'ஒமார்' என்ற பிரத்தியேகமாக சுன்னி முஸ்லிம்களுக்கேயுரிய பெயரைக் கொண்டவர்கள். அச்சமடைந்த உறவினர்கள் பிணங்களைப் பொறுப்பெடுக்க வரவில்லை. அவை தெரு நாய்களுக்கு உணவாகின."
- (புரயசனயைn 04.08.06)

 

"யூலை, ஓகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற வகுப்புவாதக் கலவரங்களில் மட்டும் 7000 சுன்னி அல்லது ஷியா முஸ்லிம்கள் இறந்துள்ளனர். இரு தரப்பிலும் 3 இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள். நாளொன்றிற்கு 3000 பேராவது அகதிகளாகப் பிற நாடுகளுக்கு ஓடியுள்ளனர்"


- ஐ. நா. சபையின் விசேட அறிக்கை

 

இவ்வளவு நடந்தும் புஷ் நிர்வாகம் ஈராக்கில் உள்நாட்டுப் போர் அல்லது வகுப்புவாதக் கலவரம் நடப்பதாக ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஷியா முஸ்லிம்களைப் பெரும்தொகையாகக் கொல்லும் குண்டு வெடிப்புகள் எல்லாம் சில வெறிபிடித்த பயங்கரவாதிகளின் செயல் (சுன்னி முஸ்லிம் மக்களை) படுகொலை செய்யும் அரசு சார்ந்தகொலைகாரக் கும்பல் யாவும் இனம் தெரியாதவர்கள்.

 

இவ்வாறுதான் சர்வதேச செய்தி ஊடகங்கள் எமக்குத் தெரிவித்து வந்தன. உலக மக்களும் அப்படியே நம்ப வைக்கப்பட்டனர். அதேநேரம், ஈராக் பொது மக்கள், 'அமெரிக்க ஆட்சியைவிட சதாமின் ஆட்சி மேல்'என்று கூறுமளவிற்கு அங்கே நிலைமை மோசமடைந்துள்ளது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து சுன்னி-ஷியா என்ற இரு முஸ்லிம் பிரிவுகள் மார்க்க அடிப்படையில் பிரிந்திருந்தபோதும் இரு சமூக மக்களும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டதில்லை. சுன்னி இஸ்லாம் பிரிவைச் சேர்ந்த சதாம் {ஹசைனின் ஆட்சியில் ஷியா முஸ்லிம்கள் அடக்கப்பட்டதாக மேற்கத்தைய ஊடகங்கள் ஒரு பக்கச் சார்பான செய்திகளைக் கூறி வந்தன. உண்மையில் சதாம் தனக்கு எதிரான அரசியல் சக்திகளாக இனம் கண்ட ஷியா மதத் தலைவர்களையே கைது செய்து சிறையிலடைத்தார்.

 

சாதர் குழு அல்லது மஹதி குழு போன்ற ஆயுதமேந்திய ஈரான் ஆயத்துல்லாக்கள் வழியில் நடக்கும் மத அடிப்படைவாத இயக்கங்கள். முழு ஷியாக்களினதும் ஆதரவைப்பெற்றிருக்கவில்லை. இவர்களின் சதாம் அரசுக்கெதிரான சில தாக்குதல்கள் பலமுறை தோல்வியடைந்த போதிலும் சந்தேகத்தின் பேரில் பல ஷியா மக்கள் கைது செய்யப்பட்டனர், அல்லது கொல்லப்பட்டனர். ஈராக்கில் ஷியாக்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாக நடத்தப்படுவதான ஆதங்கம் அந்த மக்களுக்கு இருந்தபோதும், அதற்காக ஒரு போதும் அவர்கள் ஆதிக்கப்பிரிவான சுன்னி முஸ்லிம்களை வெறுக்கவில்லை. ஈரான் - ஈராக் யுத்தத்தின்போதுகூட ஷியா மக்கள் சதாம் அரசுக்கு விசுவாசமாகவே நடந்து கொண்டார்கள். ஈரானியர்களும் ஷியாக்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் தமது தாய்நாட்டைக்காட்டிக் கொடுக்கவில்லை.

 

1990ம் ஆண்டு இடம்பெற்ற குவைத் மீதான ஆக்கிரமிப்பும் அதைத் தொடர்ந்த வளைகுடாப் போரும் ஈராக்கின் எதிர்காலத்தைத் தீர்மானித்தது. போரால் தோற்ற ஈராக்மீது ஐ. நா. சபை நாடுகள் (அமெரிக்க அழுத்தத்தால்) பொருளாதாரத் தடை விதித்தன. வடக்கு ஈராக்கில் குர்திய பிரதேசத்தின்மீதும், தெற்கு ஈராக்கில் ஷியா பிரதேசத்தின்மீதும் அமெரிக்க, பிரிட்டிஷ் விமானங்கள் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டதால் சதாமின் அரசு மத்திய ஈராக்கினுள் முடக்கி வைக்கப்பட்டது. சில ஆண்டுகளின்பின் பொருளாதாரத் தடை காரணமாக ஈராக் மக்கள் பட்டினி கிடந்து சாவதாக சர்வதேசக் கண்டனங்கள் எழுந்ததால் ஐ. நா. சபை 'எண்ணைக்குப் பதிலாக உணவு' என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின்படி ஈராக் அரசு சர்வதேசச் சந்தையில் தான் விற்கும் எண்ணையின் பெறுமதிக்குச் சமமான உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், அதைக்கூட ஈராக் அரசு தான் விரும்பியபடி செய்ய முடியாது. எந்தெந்த உணவுப் பொருட்களை, எங்கே வாங்க வேண்டும் அதை ஈராக்கிற்கு எப்படிக் கொண்டு போவது, யாருக்குப் பங்கிட்டுக் கொடுப்பது போன்றவற்றை ஐ.நா சபையே தீர்மானித்தது. அதிலும் பல ஐ. நா. அதிகாரிகள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் (தலைவர் கோபி அனானின் மகன் உட்பட) முறைகேடுகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சுருட்டியவை வேறு கதை.

 

இந்த எண்ணை - உணவுப்பொருள் பண்டமாற்று நியாயமாக நடத்தப்படவும் இல்லை; அதன் பலனெல்லாம் மக்களுக்குப் போய்ச் சேரவும் இல்லை. குறிப்பாக,ஈராக்கின் மொத்த சனத்தொகையில் 13வீதமேயுள்ள குர்திய மக்களுக்கு மொத்த வர்த்தகத்தின் 43வீத வருமானம் போய்ச் சேர்ந்தது. குர்தியப் பிரதேசத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இரு ஆயுதமேந்திய இயக்கங்கள் சட்டவிரோதமாக எண்ணை கடத்தி விற்றுக் கிடைத்த வருமானம் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை. ஐ. நா. தயவில் சுயதாதீனமாக இயங்கக்கூடிய நிலையில் (இன்றுவரை எவராலும் அங்கீகரிக்கப்படாத) 'குர்திஸ்தான்' என்ற தனிநாடே உருவாகிவிட்டது. எண்ணை கடத்தலால் அங்கே பெற்ற வருமானம் யப்பானில் இருந்து இறக்குமதி செய்த எலக்ட்ரோனிக் பொருட்கள் சொகுசு வாகனங்கள் என்று செலவு செய்யப்பட்டு பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் ஈராக்கின் பிறபகுதிகளில் வாழ்ந்த அரபு மக்கள் சாப்பாடு தேடி அலைந்து கொண்டிருந்தனர்.

 

தெற்கு ஈராக் ஷியா மக்கள் வான்வெளிக் கண்காணிப்புக்குள் அடங்கியதால் ஓரளவுக்குப் பாதுகாக்கப்பட்டபோதும் அவர்களும் பட்டினிச்சாவில் இருந்து தப்பவில்லை. புஷ் நிர்வாகம் ஈராக் மீதான படையெடுப்பை ஆரம்பித்தபோது சி. ஐ. ஏ. யும் அமெரிக்க இராணுவமும் குர்திய ஆயுதக் குழுக்களின் உதவியோடு முன்னேறின. அரபு மக்களையும் குர்திய மக்களையும் மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் நிரந்தரமாகப் பிரித்துவிட்டன. அரபுக்கள் குர்தியரை ஏகாதிபத்தியத்தின் அடியாட்களாகப் பார்த்தனர். குர்திய ஆயுதக் குழுக்களுக்கு இஸ்ரேல் இராணுவப் பயிற்சி அளித்ததாக வந்த தகவல்கள் தற்போது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளன. இன்றுள்ள ஈராக்கின் புதிய இராணுவத்திலும் பொலிஸிலும் கணிசமான அளவு குர்தியர்கள் பணி புரிகின்றனர்.

 

அமெரிக்க இராணுவம் ஈராக் முழுவதையும் பிடித்த பின்பு செய்த முதல் வேலை சதாம் ஆட்சியின் கீழ் பணி புரிந்த அனைத்து இராணுவ வீரர்களையும் வீட்டிற்கு அனுப்பியதுதான். அந்தப் பழைய இராணுவத்தில் பெருமளவு சதாம் விசுவாசிகளும் பாத் ஆதரவாளர்களும் சுன்னி முஸ்லிம்களும் அங்கம் வகித்தமை உண்மைதான். இருப்பினும் இராணுவத் தொழிலைத் தவிர வேறெதுவும் தெரியாத வீரர்கள் தொழிலிழந்தவர்களாய்த் தமது குடும்பத்தைக் காப்பாற்றும் வழி தெரியாது திண்டாடினர். இந்த அவலங்களை எள்ளளவும் கவனத்திற்கெடுக்காத அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் சதாம் புதிதாக உருவாக்கிய ஈராக்இராணுவத்தில் ஷியா முஸ்லிம்களைப் பெருமளவில் சேர்த்தனர். நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பித்து வேலையற்றோர் எண்ணிக்கை 80வீதமாக இருந்த காலத்தில் இராணுவ-பொலிஸ் வேலைகளுக்காக ஷியா இளைஞர்கள் முண்டியடித்ததில் வியப்பில்லை.

 

ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட 'பாத்' கட்சியினரும் வேலையிழந்த இராணுவ வீரர்களும் ஒன்று சேர்ந்து கிளர்ச்சிக் குழுக்களை அமைத்தனர். இந்தக் குழுக்கள் தேசியவாத அடிப்படையைக் கொண்டிருந்த போதிலும் அவற்றின் உறுப்பினர்கள் சுன்னி முஸ்லிம்பிரிவில் இருந்தே வந்தனர். புதிதாக உருவாக்கப்படும் இராணுவமும் பொலிசும், நாளை தம்மை அடக்க ஏவிவிடப்படும் அரச இயந்திரங்களாக மாறும் என்ற நியாயமான அச்சம் காரணமாக பாதுகாப்புப் படைகளில் வேலை தேடிச் சென்ற பல நூற்றுக்கணக்கான இளைஞர்களை கிளர்ச்சிக்காரர்கள் குண்டு வைத்துக் கொன்றனர். துரதிர்ஷ்டவசமாக இவ்வாறு கொல்லப்பட்ட இளைஞர்கள் அனைவரும் ஷியா முஸ்லிம்கள் என்பதால், வகுப்புவாதப் பிரிவினை அப்பொழுதே வேர் விடத் தொடங்கியது. பல தசாப்தங்களாக இரண்டாம்தரப் பிரஜைகளாக அரசு அதிகாரமற்றிருந்த ஷியாக்களைப் பொறுத்தவரை தற்போது கிடைத்துள்ளது ஒரு பொன்னான வாய்ப்பு. புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் இராணுவம் பொலிஸ் ஆகிய அதிகார அமைப்புகளில் தமது பிரதிநிதித்துவத்தை ஸ்திரப் படுத்துவதன்மூலம் ஷியா முஸ்லிம்கள் ஈராக்கின் ஆளும் பரம்பரையாக விரும்பின. பொம்மைகளைக் கொலு வைப்பதைப்போல ஈராக்கியரைத் தன்னிஷ்டப்படி ஆட்டிப் படைத்த அமெரிக்காவும் ஷியா முஸ்லிம்களின் கைகளில் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தது.

 

இதனால் ஷியா மத அடிப்படைவாத சக்திகள் புத்துயிர் பெற்றன. "ஈராக்கில் இஸ்லாமிய புரட்சிக்கான தலைமைக்குழு என்ற கட்சி அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரின் பொறுப்பில் உள்துறை அமைச்சு உள்ளதும் பாதுகாப்புப் படைகள் அந்த அமைச்சின் கீழ் வருவதும் இங்கே சுட்டிக் காட்டப்படவேண்டும். மேற் குறிப்பிட்ட மதஅடிப்படைவாதக் கட்சியின் தொண்டர்கள் பொலிஸ்காரர்களாகவும் இராணுவவீரர்களாகவும் நியமிக்கப்பட்டார்கள். 'மஹதி இராணுவம்'என்ற இன்னொரு ஷியா ஆயுதக்குழு ஈராக் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் வரையில் தமக்கென கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை அமைத்து தனிக்காட்டு ராஜாக்களாக ஆதிக்கம் செலுத்தி வந்தன. அந்தப் பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் மஹதி இராணுவத்தின் ஆயுதங்களைக் களையவும் அமெரிக்க இராணுவம் பல தடவை முயற்சி செய்தபோதும் தோல்வியுற்று, இறுதியில் சமரசமாகப் போனது. மஹதி இராணுவ வீரர்கள் பலரை தேசிய இராணுவத்திலும் பொலிஸ் படையிலும் இணைத்ததன் மூலம் அந்தச் சமரசம் எட்டப்பட்டது.

 

மேலே குறிப்பிட்ட அரசியல் மாற்றங்கள் யாவும், ஒரு பக்கத்தில் அமெரிக்கா ஈராக்கில் புதிய ஆளும் வர்க்கத்தை நிலைநாட்ட உதவியபோதும், மறுபக்கத்தில் சுன்னி- ஷியா முஸ்லிம் பிரிவுகளுக்கிடையில் வெறுப்பையும் அவநம்பிக்கையையும் உருவாக்கி அவர்களை எதிரிகளாக்கிவிட்டது. இந்தப் பிரச்சினையை நிரந்தரமாக்கும் கைங்கரியத்தை ஆற்ற எங்கிருந்தோ வந்தார்கள் சர்காவி தலைமையிலான அல்கைதா குழுவினர். ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை தமது சண்டைப் பயிற்சிக்குப் புதிய களம் கிடைத்ததாகக் கருதிய அல்கைதாவினர் சுன்னி முஸ்லிம்களைத் தம் பக்கம் கவர்ந்தனர். அல்கைதா சவுதி அரேபியாவின் வஹபி என்ற இஸ்லாமியக் கடும் போக்காளரின் கொள்கைகளை தன்னகத்தே கொண்டிருப்பதால் ஷியா முஸ்லிம்கள் ஆதரவளிக்கவில்லை. வஹபிஸ்ட்டுக்களைப் பொறுத்தவரை, சியாக்கள் முஸ்லிம்கள் அல்லர். ஆகவே, 'ஷியா என்ற போலி முஸ்லிம்கள்' மீது வெறுப்புக் கொண்ட ஈராக்கிய அல்கைதா (அல்லது மக்கள் பார்வையில் வஹபிஸ்டுக்கள்) ஷியா முஸ்லிம்களின் புனிதத் தலங்களைத் தாக்குவதன்மூலம் தமது மதவாத அதிகாரத்தை சுன்னி முஸ்லிம்கள் மத்தியில்நிலைநிறுத்த விரும்பியது. ஷியா ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில் அப்பாவி ஷியா முஸ்லிம்களை கொன்று குவித்தது. அவர்களது தொலைநோக்கற்ற குறுகிய மதவாதம் தற்காலிகமாகச் சில சுன்னி முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுத் தந்தது. இருப்பினும் ஒரு கட்டத்தில் இப்படியான செயல்கள் தமக்குத் தீமையே அன்றி நன்மையைத் தரா எனப் புரிந்து கொண்ட ஈராக்கிய சுன்னி முஸ்லிம் மக்கள் அல்கைதாவை ஒதுக்க ஆரம்பித்தனர். ஆனால் அப்போது காலம் கடந்துவிட்டது.

 

ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியில் இஸ்லாமியவாதிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் நாடளாவிய அமைப்பாக ஒழுங்குபடுத்தக்கூடிய பலமான தலைவர் இல்லாமல் இருந்த கிளர்ச்சிக் குழுக்கள் ஸர்காவியின் வரவுக்குப் பின் உற்சாகமடைந்தன. இருப்பினும் ஸர்காவியின் குறுகிய மதவாத அரசியல் அழிவுப்பாதையில் கொண்டு செல்லும் பிழையான சித்தாந்தம் என்பதைப் புரிந்து கொண்ட போராளிகளும் ஆதரவாளர்களும் மெல்ல விலகிக் கொண்டனர். ஒரு சில இடங்களில் நிலப்பிரபுக்களால் ஆதரிக்கப்பட்ட, ஈராக் அரசாங்கத்தினால் நிதி வழங்கப்பட்ட பிரதேசவாதக் குழுக்கள் அல்கைதாவை எதிர்த்துப் போராடி விரட்டி அடித்தனர்.


அல்கைதா ஆதரவாளர்கள் தற்போது ஈராக் எல்லையோரம் இருந்த அன்பர் மாகாணத்தை மட்டும் தமது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தனர். அமெரிக்க இராணுவம் இருந்த மாகாணத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

 

இன்றுள்ள ஈராக் அரசியல் நிலவரத்தைச் சுருக்கமாகப் பார்ப்போம். வடக்கே குர்திஸ்தான் பிரதேசத்தில் முன்பு ஒரு காலத்தில் ஒன்றோடொன்று எதிர்த்து சகோதர சண்டையிட்டுக் கொண்டிருந்த பர்சானி மற்றும் தலபானி தலைமையிலான இரு குர்திய இயக்கங்கள் தற்போது தமக்குள் உடன்பாடு கண்டு சமாதானமாகி உள்ளன. குர்திஸ்தான் (பிராந்திய) பாராளுமன்றத்தில் இரு கட்சிகளும் அங்கம் வகித்தன. இருப்பினும் அவ்விரு கட்சிகளினதும் ஆயுதமேந்திய உறுப்பினர்கள் தத்தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். தெற்கே ஷியா முஸ்லிம் அரேபியர்கள் வாழும் பிரதேசத்தில் ளுஊஐசுஐ, மஹதி இராணுவம் ஆகிய இயக்கங்களும் தமக்கென சில கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஆயுதமேந்திய உறுப்பினர்களையும் நிறுத்தி வைத்துள்ளனர். ஆங்காங்கே காவலரண்கள் அமைத்து பொதுமக்களைச் சோதனையிடுகின்றனர். சில நேரம் ஒரே வீதியில் பொலிஸ் சோதனைச் சாவடியும், சில கிலோமீற்றர்கள் தள்ளி ஆயுதக்குழுக்களின் சோதனைச் சாவடியும் காணப்படுவதால் மக்கள் யாருக்குத் தப்புவது என்று தெரியாமல் திண்டாடுகின்றனர். முழுக்க முழுக்க ஷியா முஸ்லிம்களையே உறுப்பினர்களாகக் கொண்ட அதேநேரம், அப்பாவி ஷியா பொதுமக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் இந்த ஆயுதமேந்திய இயக்கங்கள் கடுமையான இஸ்லாமிய மதச் சட்டங்களை அமுல்படுத்தி வருகின்றனர். இத்தகைய மத அடிப்படைவாத அரசியல் சக்திகளின் ஆதரவு தமக்கு அவசியம் என்ப தால் அமெரிக்க - பிரிட்டிஷ் படைகள் இவற்றைக் கண்டு கொள்ளாமல் மறு பக்கம் பார்த்துக்கொண்டு போகின்றன.

 

தலைநகர் பாக்தாத்தைக் கொண்டிருக்கும் மத்திய ஈராக்கைச் சேர்ந்த சுன்னி முஸ்லிம் அராபியர்கள் வாழும் எழுச்சி மிக்க பூமி. அங்கே யாரும் தமது கட்டுப் பாட்டில் இருப்பதாக அறிவிக்க முடியாது. ஃபலூஜா போன்ற வீரகாவியம் படைத்த மண்ணுக்குச் சொந்தமானவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து நிற்கின்றனர். அதிர்ஷ்டவசமாக, களத்தில் நிற்கும் பாத் தலைமையிலான தேசியவாதக் குழுக்களுக்கும் பிற இஸ்லாமியவாதக் குழுக்களுக்கும் இடையில் கொள்கை வேறுபாடு இருந்தபோதிலும் சகோதரச் சண்டை இதுவரை இல்லை. அமெரிக்கா இதுவரை வெளியே சொல்லாவிட்டாலும் பாக்தாத் நகரம் மட்டும் தான் ஈராக் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அமைச்சு அலுவலகங்கள், பிற அதிகாரமையங்கள் வெளிநாட்டுத் தூதுவராலயங்கள், ராஜதந்திரிகளின் வாசஸ்தலங்கள் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் கட்டளைத் தலைமையகம், ஊடகவியலாளர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்கள், இவற்றுடன் மேற்படி நிறுவனங்களில் தொழில் புரியும் பணியாளர்களின் குடும்பங்கள் எல்லாமே உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அடங்குகின்றன. இந்த உயர்பாதுகாப்பு வலயம் நாலாபுறமும் கோட்டை மதில்களால் சூழப்பட்ட தனியான பிரதேசம். அதாவது பாக்தாத் நகரத்தினுள் இன்னொரு நகரம்.


நிச்சயமாக இந்த உயர்பாதுகாப்பு வலயத்தினுள் வசிப்பவர்களுக்கு வெளியில் என்ன நடக்கிறதென்று தெரியாது. சர்வதேச ஊடகவியலாளர் உட்பட, இந்த வலயத்தில் மட்டுமே கிடைக்கும் ஆடம்பரங்களான 24 மணிநேர மின்சாரம், எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் இறக்குமதிப் பொருட்கள் என்பன வெளியில் வாழும் சாதாரண ஈராக்கிய மக்களுக்கு அரிதாகவே கிடைக்கின்றன.

 

இந்த ஏற்றத்தாழ்வான பொருளாதார நிலையால் மக்கள் தீவிரவாத இயக்கங்களை நோக்கி இலகுவில் கவர்ந்திழுக்கப்படுகின்றனர். பாதுகாப்பின்மை, பொருளாதார நெருக்கடி என்பன புதிய தீவிரவாதிகளை உருவாக்கும் காரணிகளாக இருக்கின்றன. இதுவரை கூறப்பட்ட தகவல்களின்படி ஈராக்கில் அராஜகம் கோலோச்சுவது தெளிவாகும். அங்கே ஜனநாயக முறைப்படி தெரிவான அரசாங்கம் பேரளவில் தான் ஆட்சியில் உள்ளது. இந்த இலட்சணத்தில்தான் ஈராக் பிரச்சினைக்குத் தீர்வென்ன என்று கேட்டு அமெரிக்க ஜனாதிபதி ஒரு ஆய்வுக்குழுவை அமைத்தார். இதுபோன்ற எத்தனையோ ஆய்வுக்குழுக்கள் கடந்த காலத்தில் செய்த எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாது மமதையால் தன்னிஷ்டப்படி நடந்து கொண்ட உலகின் அதிசக்தி வாய்ந்த நாட்டின் ஜனாதிபதி புஷ்ஷிற்கு காலம் கடந்த பின்பு ஞானம் பிறந்தது. "சதாமைத் தூக்கிலிட்டோம்; ஜனநாயகத்தை மீட்டோம்" என்பது போன்ற வாய்ச் சவடால்கள் யாருக்கும் உதவவில்லை. சாதாரண ஈராக்கிய மக்களோ "எமக்கு பாதுகாப்பே முதல் முக்கியம். உயிர்போன பின்பு ஜனநாயகம் என்ன தேவைக்கு? " என்று கேட்கிறார்கள்.

 

தற்போது படிப்படியாக தனது இராணுவத்தை விலத்திக்கொள்ள அமெரிக்க அரசு முன்வந்தபோதும் ஈராக்கின் எதிர்காலம் குறித்து பல கேள்விகள் எழுகின்றன. அமெரிக்க இராணுவம் நாட்டை விட்டுப்போன உடனேயே ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுக்கள் பாக்தாத்தில் இருக்கும் அதிகாரமற்ற பொம்மை அரசைக் கவிழ்த்துவிட்டு தமக்குள் சண்டையிட்டு ஆட்சியதிகாரத்திற்காக போட்டி போடுவார்கள். நிச்சயமாக பலமானதே வெல்லப்போகிறது. அதைவிட ஈராக் மூன்று துண்டாக உடையும் அபாயமும் உள்ளது. அப்படி உருவாகும் புதிய தேசங்கள் பிராந்திய வல்லரசுகளின் தயவிலேயே தங்கி இருக்க வேண்டி இருக்கும். குர்திஸ்தான் என்ற புதிய நாடு உருவாவதைத் துருக்கி ஏற்றுக்கொள்ளாது. துருக்கியிலும் தனிநாடு கோரும் குர்தியருக்கு இது உந்து சக்தியாக இருக்கும் என்பது மட்டுமல்ல, ஈராக்கின் சிறிய சிறுபான்மையினரான துருக்கி மொழி பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது என்ற பெயரில் அடிக்கடி தலையிடவேண்டி இருக்கும்

 

தெற்கு ஈராக்கில் ஏற்படப் போகும் ஷியா இஸ்லாமியக் குடியரசுக்கு ஈரான் பக்கபலமாக இருக்கும். ஷியா முஸ்லிம்களின் அரசியல் அதிகாரத்தை அரபுலகில் விரிவு படுத்த தனக்குக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தும். அதற்குப் பதிலடியாக சவுதிஅரேபியாவும் ஜோர்டானும் மத்திய ஈராக்கில் சுன்னி முஸ்லிம் அதிகாரத்தை நிலைநாட்டப் பாடுபடும். சவுதி அரேபியாவில் கணிசமான அளவு ஷியா முஸ்லிம்கள் வாழ்வதும் அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் எழுச்சிக்குத் தயாராவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் முதன்முறையாக வளைகுடாக் கடலின் சிறிய தீவான பாஹ்ரெயினில் ஷியாக்களின் கட்சி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளமை ஆட்சியாளரை மகிழ்ச்சிப்படுத்தவில்லை.

 

அமெரிக்காவைப் பொறுத்தவரை அன்று தாம் செய்த பிரச்சாரத்தைத் தாமே நம்பியதன் பலனைத் தற்போது அனுபவிக்கின்றனர். சதாமின் சர்வாதிகாரத்தில் இருந்து தம்மை விடுதலை செய்ததன் நன்றியாக ஈராக்கிய மக்கள் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை பொய்த்து விட்டது. அதனால் பின்னரும் தீவிரவாதக் குழுக்களுடன் பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டது. முதலில் அமெரிக்கா குர்திய ஆயுதபாணிக் குழுக்களுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அரேபியர்களை (சுன்னி - ஷியா முஸ்லிம்கள்) எதிர்த்துப் போரிட்டது. இரண்டாவதாக, ஷியா ஆயுதபாணிக் குழுக்களுடன் சேர்ந்துகொண்டு சுன்னி முஸ்லிம்களை எதிர்த்துப் போரிட்டது. கடைசியாக, சுன்னி முஸ்லிம் ஆதிக்கத்தில் இருக்கும் சில முன்னாள் பாத் கட்சித் தலைவர்களுடன் சில உடன்பாடுகளுக்கு வர உள்ளது. அரசியல் அதிகாரத்தை நிலை நாட்ட யாருடனும் கூட்டுச் சேரலாம். யாரோடும் எதிர்த்துப் போரிடலாம்.

 

ஈராக்கில் எதிர்காலத்தில் எந்த அரசியல் சக்தி ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச பொருளாதார சமூகத்தில் சேராமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அப்போது அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேணுதல் தவிர்க்க முடியாதது. பொருளாதார வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கின் சதாமின் காலம் ஒரு பொற்காலம். தேசிய மயமாக்கப்பட்ட எண்ணை உற்பத்தியால் கிடைத்த வருமானம் அபிவிருத்திக்குச் செலவிடப் பயன்பட்டதால் தனிநபர் வருமானமும் அதிகரித்திருந்தது. அப்போது ஈராக் டினாரின் பெறுமதி அமெரிக்க டொலருக்குச் சமமாக இருந்தது. ஈராக்கின் சபிக்கப்பட்ட நாளைய தலைமுறை இவற்றையெல்லாம் பழங்கதைகளாக மறந்து போகலாம்.


பிற்குறிப்பு: இந்தக் கட்டுரை 2006 ம் ஆண்டு வெளிவந்த "உயிர்நிழல்" (ஒக்டோபர்-டிசம்பர் 2006) பிரசுரமாகியது. இத்தனை வருடங்களுக்குப் பின்னரும், ஈராக்கின் நிலை அதிகளவு மாறவில்லை என்பதை வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்

--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum


No comments: