புற்றுநோய்க்கு புதிய சிகிச்சைகள்
புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள் என்னென்ன என்பதை எல்லாம் கடந்த மின்னஞ்சல் மூலம் பார்த்தோம். இந்த வாரம் அதற்கான மூன்றுவித சிகிச்சை முறைகளைப் பார்ப்போம்.
ஒன்று: ஆபரேஷன்
இரண்டு: கீமோதெரபி (மெடிக்கல் ட்ரீட்மென்ட்). கீமோ என்றால் மருந்து, ரசாயனம் போன்ற அர்த்தங்கள் உண்டு. தெரபி என்றால் சிகிச்சை. மருந்து கொடுத்து சிகிச்சை அளிப்பதால் இந்தப் பெயர்.
மூன்று: ரேடியேஷன் எனப்படும் எக்ஸ்ரே வகை சிகிச்சை.
இந்த மூன்று வகை சிகிச்சைகளுமே இப்போது நவீனமயமாகி இருக்கின்றன. ரிஸ்க்கு களை குறைக்கும் விதத்தில் ஆபரேஷன்கள் சிம்பிளாக செய்யப்படுகின்றன.
புற்றுநோய் செல்கள் பொதுவாக வேகமாக பெருகி, உடலில் பரவும்தன்மை கொண்டவை. அவைகளின் வளர்ச்சியை தடுத்து, அழிக்கும் செயலை கீமோதெரபியும், ரேடியேஷனும் செய்கிறது. பாதிக்கப்பட்டவரின் உடலில் எங்கெல்லாம் புற்றுநோய் செல் இருக்கிறதோ அங்கெல்லாம் கீமோ மருந்துகள் சென்று, அவைகளை அழிக்கும். கீமோ தெரபியில் பெரும்பாலும் ஊசி மருந்து செலுத்தப்படுகிறது. இந்த சிகிச்சையை 6 முதல் 9 மாதம் வரை தொடருவார்கள். 3 முதல் 4 வாரத்திற்கு ஒரு ஊசி மருந்து செலுத்தப்படும்.
பின்விளைவுகள் என்பது பொதுவாக எல்லா மருந்துகளிலும் உண்டு. இதிலும் ஓரளவு இருக்கிறது. நமது உடலில் ஜீரண குழாய், முடி போன்ற சில குறிப்பிட்ட இடங்களில் திசுக்கள் நன்றாக, வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும். வளரும் புற்றுநோய் செல்களை அழிக்க உடலில் செலுத்தப்படும் கீமோதெரபி ஊசி மருந்து, இந்த ஜீரண குழாய், முடி போன்ற இடங்களில் வளரும் திசுக்களையும் தாக்கி, ஓரளவு பாதிக்கச் செய்யும். இப்படி கீமோ தெரபி சிகிச்சை பெறுபவர்களின் ஜீரண குழாய் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு வாந்தி ஏற்படும். முடியும் உதிரும்.
ஆண்களுக்கு விரைப்பை திசுக்களும், பெண்களுக்கு சினைப்பை திசுக்களும் வேகமாக வளரும். விரைப்பையில் உயிரணு உற்பத்தியும், சினைப்பையில் சினை முட்டை உற்பத்தியும் நடந்துகொண்டே இருக்கும். புற்று நோயாளிகளுக்கு செலுத்தப்படும் கீமோ தெரபி மருந்துகள், ஆண் என்றால் விரைப்பை திசுக்களையும், பெண் என்றால் சினைப்பை திசுக் களையும் பாதிக்கும். இதனால் ஆண்களுக்கு உயிரணு உற்பத்தி பாதிக்கப்படும். பெண் களுக்கு சினைமுட்டை உற்பத்தி பாதிக்கப்படும். ஆனால் இந்த பாதிப்புகள் அனைத்துமே தற்காலிகமானதுதான். அந்த சிகிச்சை முடிந்த பின்பு பாதிப்புகள் நீங்கி, இயல்பு நிலைக்கு வந்துவிடலாம்.
கீமோதெரபி மருந்துகளால் சில நேரம் ஈரல், கிட்னி, இதயம் போன்றவை நெருக்கடிக்கு உள்ளாகும். அதனால் இந்த சிகிச்சையை தொடங்குவதற்கு முன்னால் அந்த நோயாளிக்கு கிட்னி, ஈரல், இதய பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என்று டாக்டர்கள் பரிசோதித்துக் கொள்வார்கள்.
கீமோதெரபியில் உருவாக்கப்பட்டிருக்கும் நவீன மருத்துவம், `டார்கெட்டட் தெரபி'. கீமோதெரபி மருந்து உடலில் எல்லா இடங்களுக்கும் சென்று, பரவியிருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்போது, சில நேரங்களில் நல்ல செல்களும் பாதிக்கப்படுவதால், புற்றுநோய் செல்களை மட்டும் தாக்கி அழிக்கும் விதத்தில் டார்கெட்டட் தெரபி மருத்துவம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுவும் ஊசி மருந்தாகத்தான் செலுத்தப்படுகிறது. ஒருவருக்கு 6 முறை ஊசி மருந்துகள் செலுத்தப்பட வேண்டியிருக்கும். இந்த ஊசி மருந்தின் விலை அதிகம்.
ரேடியேஷன் சிகிச்சை, எக்ஸ்ரே மருத்துவ வகையை சார்ந்தது. எந்த பகுதியில் புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அந்த பகுதியில் மட்டும் ரேடியேஷன் கொடுத்து, புற்றுநோய் செல்கள் அழிக்கப்படும். இதிலும் ஓரளவு பக்க விளைவுகள் உண்டு.
ஒருவருக்கு கிட்னியில் புற்று ஏற்பட்டிருந்தால், அந்த இடத்தில் ரேடியேஷன் செலுத்தும் போது அதன் மேல் பகுதியில் உள்ள சருமம், தசை, நரம்புகளைக் கடந்துதான் அந்த கதிர், புற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதியை சென்றடையும். இதனால் கிட்னிக்கு அருகில் இருக்கும் பகுதி ஓரளவு பாதிக்கப்படும். இந்த பாதிப்பை குறைக்க, மேற்பகுதியில் ஒரே இடத்திலிருந்து கதிர்களை பாய்ச்சாமல், இலக்கை குறியாக வைத்துக்கொண்டு சுற்றுப்பகுதிகளில் இருந்தும் ரேடியேஷன் கொடுப்பார்கள்.
ரேடியம் மெட்டலிலும் ரேடியேஷன் இருக்கிறது. பெண்களுக்கு கருப்பை வாயில் புற்றுநோய் பாதிப்பு இருந்தால், அப்பகுதியில் ரேடியம் மெட்டல் நீடிலை வைப்பார்கள். டியூப்பின் உள்ளே ரேடியம் நீடிலை வைத்து பாதிக்கப்பட்ட பகுதியில் செருகி வைப்பார்கள். இது சுற்றுப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆண்களுக்கு ஆண் உறுப்பில் புற்று ஏற்பட்டாலும் இதே முறையில் ரேடியம் மெட்டல் நீடிலை பயன்படுத்தி, நோயைக் கட்டுப்படுத்துவார்கள்.
ரேடியேஷன் சிகிச்சையில் புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த பகுதிக்கு ரேடியேஷன் கொடுக்கவேண்டும் என்பதை கம்ப்யூட்டரே கண்டறிந்து, அதுவே ரேடியேஷன் கொடுக்கும். இதற்கு `கம்ப்யூட்டர் கைட்டட் ரேடியோ தெரபி' என்று பெயர்.
இந்த நவீன சிகிச்சைகள் எல்லாம் அரசு ஆஸ்பத்திரிகளிலும் உண்டா?
பெரிய அரசு ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலான நவீன சிகிச்சைகள் இருக்கின்றன. மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் சேரும்போது புற்றுநோய் சிகிச்சைக்கான காப்பீடும் இருக்கிறதா? என்று பார்த்து, அதற்குரிய திட்டங்களில் சேரவேண்டும்.
மூன்று விதமான சிகிச்சைகளை குறிப்பிட்டீர்கள். இந்த சிகிச்சையால் நோயை குணப்படுத்திவிட்ட பின்பு, மீண்டும் முன்புபோல் இயல்பான வாழ்க்கை வாழ முடியுமா?
முடியும். ஆனால் சில நேரங்களில் நோய் பாதிப்பு, ஈடுசெய்ய முடியாத பாதிப்பாக இருக்கவும் கூடும். காலில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு, ஒரு காலை நீக்கிய பின்பு அவருக்கு நோய் குணமாகிவிடும். ஆனால் ஒரு காலை இழந்தது இழப்புதானே!. ஆனால் மார்பு, கன்னம், தாடை போன்றவைகளில் புற்று ஏற்பட்டு அந்தப் பகுதிகளில் ஓரளவு நீக்கம் செய்யப்பட்டாலும், பின்பு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அந்த பகுதிகளை சீரமைத்துக் கொள்ளலாம். இந்த நோயைப் பொறுத்தவரையில் ஆரம்பத்திலே கண்டறிந்துவிட்டால், சிகிச்சை மூலம் குணப்படுத்தி, இயல்பான வாழ்க்கையை எளிதாக தொடர முடியும்.
இந்த நோய் தொடர்பாக பெண்களிடம் போதுமான விழிப்புணர்வு இருக்கிறதா?
பெண்கள் இன்னும் கூடுதல் விழிப்புணர்வு பெறவேண்டும். மார்பக புற்றுநோய் ஏற்பட்டால் வெட்கத்தோடு அதை மறைத்துவிடுகிறார்கள். முற்றிய பின்பே சிகிச்சைக்கு வருகிறார்கள். அதுபோல் கருப்பை வாய் புற்றுநோயிலும், நோய் அறிகுறிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறார்கள். பெண்கள் வெட்கம், தயக்கத்தை விட்டுவிட்டு இன்னும் அதிக விழிப்புணர்வோடு இந்த நோயை அணுகி குணப்படுத்த வேண்டும்.
வயதுக்கும் - புற்று நோய் குணமாகும் தன்மைக்கும் தொடர்பு இருக்கிறதா?
40 வயதில் ஒருவருக்கு புற்று நோய் வந்தால் அதன் பரவும் தன்மையும், தாக்கமும் அதிகமாக இருக்கும். அதனால் அவர் பாதிப்பை அதிகமாக உணருவார். அதே நோய் 70 வயதானவருக்கு வந்தால், அதன் பரவும் தன்மையும் தாக்கமும் குறைவாகவே இருக்கும். வயதான பின்பு புற்றுநோய் வந்தால் கொடுக்கும் மருந்துகளின் அளவும், ரேடியேஷனின் அளவும் குறைவாகும். ஆனால் தைராய்டு புற்றுநோய் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இந்த புற்று இளம் வயதில் ஏற்பட்டால் குணமாகிவிடும். வயதானவர்களுக்கு வந்தால், அவர்களுக்கு பாதிப்பின் தாக்கம் அதிகமாகத் தெரியும்.
`கருத்தடை மாத்திரைகளை அதிக காலம் பயன்படுத்தும் பெண்களுக்கும், கருப்பையை நீக்கம் செய்த பின்பு `ஹார்மோன் ரீ பிளேஸ்மெண்ட் தெரபி' பெறும் பெண்களுக்கும் புற்றுநோய் ஏற்படுமோ?' என்ற சந்தேகம் பெரும் பாலானவர்களுக்கு இருக்கிறது. இதில் ஓளரவு உண்மை இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அரசு காப்பீட்டுத்திட்டத்தில் புற்றுநோய் சிகிச்சையையும் சேர்த்தால் அனேக மக்கள் பெரும் பலன் அடைவார்கள்.
விளக்கம்: பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி, DSc., F.R.C.S.
தலைவர்: தமிழ்நாடு மருத்துவர் சங்கம், சென்னை.
Mohammad Sultan
No comments:
Post a Comment