Saturday, June 11, 2011

தலையங்கம்:பேச்சைக் குறை...!

First Published : 10 Jun 2011 03:23:53 AM IST in dinamani



மே மாத இறுதியில் உலக சுகாதார அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டது. செல்போன் அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளைப் புற்றுநோய் வரும் என்பதுதான் அந்தத் தகவல். புற்றுநோய் அபாயப் பொருள் பட்டியலில் 2பி ( 2ஜி அல்ல. அது அரசியல் புற்றுநோய்) என்ற இடத்தில் இப்போது செல்போன் இடம்பெறத் தொடங்கியுள்ளது.
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய (கார்சினோஜெனிக்) 2பி பட்டியலில் வாகனப்புகை, குளோரோபாம், காரீயம், பூச்சிக்கொல்லி மருந்து, சில ஊறுகாய் வகைகளும்கூட இடம்பெற்றுள்ளன. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தப் பட்டியலில் இப்போது செல்போன் சேர்வதால் என்ன நேர்ந்துவிடப்போகிறது என்று நினைக்கத் தோன்றும். ஆனால், விஷயம் அப்படியாகக் கவலைப்படாமல் விட்டுத்தள்ளக்கூடியதாக இல்லை. ஏனென்றால், மற்ற விஷயங்களை ஒருவர் தவிர்த்துவிட முடியும். ஆனால், செல்போன் ஒரு மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.
14 நாடுகளில் 31 அறிவியல் அறிஞர்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு- செல்போனில் வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையின் நரம்புச் செல்களைச் சுற்றியுள்ள கிளையல் செல் எனப்படும் செல்களைத் தாக்கி, புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது. அதாவது தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு, ஒரு நாளைக்குச் சராசரியாக அரைமணி நேரம் செல்போனில் பேசுபவர்களில் 40 விழுக்காட்டினருக்கு மூளைப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்கிறது உலக சுகாதார அமைப்பு. இந்தியாவில் நாம் தினமும் எவ்வளவு நேரம் செல்போனில் பேசுகிறோம் என்பதைக் கணக்கெடுத்து, அவரவர்களே தங்கள் மூளையைச் சோதித்துக் கொள்ளலாம்.
இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகமிக அதிகமாக உயர்ந்துவிட்டது. உயர்ந்துகொண்டும் வருகிறது. 2004 மார்ச் மாதம் 35.62 மில்லியனாக இருந்த செல்போன் இணைப்புகள், 2010 அக்டோபர் மாதம் 706.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது 1884 விழுக்காடு அதிகம்! ஆனால், லேண்ட்லைன் எனப்படும் கம்பிவழித் தொலைபேசிகள் குறைந்து வருகின்றன. 2004-ம் ஆண்டு 40.9 மில்லியனாக இருந்தது, 2010 அக்டோபரில் 35.4 மில்லியனாகக் குறைந்துவிட்டது. அதாவது 13.4 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது.
இதுபோதாதென்று, ஒவ்வொரு போனிலும் இரண்டு சிம்கார்டுகள் வைத்துக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்து வருகிறார்கள். அதாவது ஒவ்வொரு நபரும் இரண்டு, மூன்று சிம் கார்டு வாங்கிப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வணிகம் இது. இதனால் அவர்களுக்கு லாபம். எல்லா சிம் கார்டையும் பயன்படுத்திப் பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். மூளைப் புற்றுநோய் வந்தால், அந்த நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் போய் பணத்தைக் கொட்டி சிகிச்சை பெறலாம்!
உலக சுகாதார நிறுவனத்தின் இந்தத் தகவலை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள். எக்ஸ்-ரே, புறஊதாக் கதிர்கள் உடலில் உள்ள செல்களைத் தாக்கி, பாதிக்கச் செய்யும் தன்மையுள்ளவை (அயோனைசிங் ரேடியேஷன்) என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவ்வாறு நம் உடலின் செல்களைப் பாதிக்காத கதிர்வீச்சுகள் (நான்-அயோனைசிங் ரேடியேஷன்) என்றுதான் ரேடியோ அலைகள் அறியப்பட்டுள்ளன. அந்த வகையைச் சேர்ந்த மின்காந்த அலைகளால் இயங்கும் செல்போன், எவ்வாறு மூளையின் செல்களைப் பாதிக்கும் என்பது இதுவரை அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது உண்மையே என்றாலும், செல்போன் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது என்று உறுதிப்படச் சொல்வதற்கு யாராலும் முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
செல்போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது என்பது இனிமேல் இயலாத காரியம். ஆனால், அதன் பயன்பாட்டை தேவை இருந்தால் மட்டுமே பயன்படுத்துவது என்பது எல்லோராலும் இயலக்கூடியது.
அதிகநேரம் செல்போன் பயன்படுத்துவோரின் காதுகளுக்குக் கேட்புத்திறன் குறையத் தொடங்குகிறது என்று ஏற்கெனவே ஓர் ஆய்வறிக்கை வெளியானது. இப்போது அதைவிடவும் ஆபத்தானது என்று அறிக்கை சொல்கிறது. இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. குறிப்பாகக் குழந்தைகள் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் செய்யலாம்.
இப்போதெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு - ஏன், மழலையர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும்கூட-செல்போன் கொடுக்கிறார்கள். கேட்டால், ""பள்ளி முடிந்தவுடன் என் குழந்தை என்னிடம் பேசி, ஆட்டோ வந்தது ஏறிவிட்டேன் என்று சொன்னாலொழிய என்னால் நிம்மதியாக அலுவலகத்தில் இருக்க முடியாது'' என்று சொல்லும் பெற்றோரின் கவலை புரிகிறது. ஆனால், உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மட்டும் பேசினால் அது தகவல் தொழில்நுட்பத்தை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்று பொருள். உங்கள் குழந்தை மற்ற மாணவர்களுடன்- ஆட்டோவில் ஏறியது முதல் நீங்கள் வீடு திரும்பும்வரை- பேசிக்கொண்டே இருக்குமானால் அதை எப்படித் தடுக்க முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும்.
உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் ஆய்வறிக்கையை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அறிவுரையாக எடுத்துக்கொள்ளலாம். அந்த அறிவுரை இதுதான்: "பேச்சைக் குறை' .

No comments: