பாராட்டு எனும் ஆயுதம்! [1 Attachment]
[
"அவர் ரொம்ப சீரியஸான ஆள். ரொம்ப நல்லவர். வீக்னஸ் எதுவும் இல்லாதவர். அவர்கிட்ட எப்படி உங்க புரோஜக்ட் ரிப்போர்ட்ல் கையெழுத்து வாங்கினீங்க..?"
"அவரை பாராட்டினேன்."
"அவரை பாராட்டினாலே அவருக்கு பிடிக்காதே.. திட்டி அனுப்பிடுவாரே.."
"உங்களை யாராலயும் ஏமாத்த முடியாது. நீங்க பாராட்டுக்கு மயங்காத ஆளா இருக்கீங்க சார் அப்டீனு பாராட்டினேன். சிரிச்சுகிட்டே கையெழுத்து போட்டுட்டார்."
பல வருடங்களுக்கு முன் சொல்லப்பட்ட இந்த துணுக்கு, இன்றைக்கும் செல்லுபடியாகிறது என்றால், அதற்குக் காரணம் மக்களின் மாறாத மனநிலை. பாராட்டுக்கு மயங்காத ஆட்கள் மிக மிகக் குறைவு.
பாராட்டு என்பது சில சமயம் ஆயுதம்; சில சமயம் கேடயம்.
மேலதிகாரிகளைப் பாராட்டி காரியத்தை சாதித்துக் கொள்ளும் ஆட்களைப் போலவே, தன்னிடம் வேலை செய்யும் நபர்களை பாராட்டி நன்றாக வேலை வாங்கும் சாமர்த்தியம் மிக்க மேலதிகாரிகளும் உண்டு.
மேலதிகாரியிடம் நல்ல பேர் வாங்க, வீட்டை மறந்து வேலை செய்யும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். சக ஊழியன் செய்ய வேண்டிய வேலையைக் கூட அவருக்காக இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவர்கள் பலர் உண்டு.
உங்களிடம் / உங்களோடு வேலை செய்யும் ஒருவர் தனக்கு இடப்பட்ட வேலையை சரியாக செய்து முடித்தால், அவரைப் பாராட்டி நாலு வார்த்தை சொல்லுங்கள்.
"அவங்க செய்ய வேண்டிய வேலைய தானே செய்யறாங்க. அதுக்கு நான் ஏன் பாராட்டணும்?" என்ற நினைப்பை விட்டுத் தள்ளுங்கள்.
ஒருவர் ஒரு வேலையை செய்யாவிட்டால், அவரை திட்டும் அதிகாரம் நமக்கு இருக்கும் நமக்கு, வேலை சரியாக முடிக்கப்பட்டால் அவரை பாராட்டும் இயல்பும் இருக்க வேண்டும்.
"என்ன சார் இது.. சொன்ன நேரத்துல வேலைய முடிச்சு குடுக்க மாட்டேங்கறீங்க," என்று சிடுசிடுப்பதை விட, "இந்த முறை லேட்டாயிடுச்சு பரவால்ல.. அடுத்த முறை கரெக்டா பண்ணிடுவீங்க.. தெரியும்," என்று சொல்வது நம் டென்ஷனைக் குறைக்கும்; 'மிஸ்டர் லேட்'-ன் பொறுப்பைப் கூட்டும்.
எவ்வளவு அறிவுரை சொன்னாலும் பிடி கொடுக்காத ஆட்களைக் கூட, சிறு சிறு பாராட்டுகளால் வசப்படுத்தலாம்.
பாராட்டு வலிமை மிக்கது. அதை மிகச் சரியாக பயன்படுத்தி முன்னுக்கு வந்தவர்கள் பலர்.
அது சரி, பாராட்டில் அப்படி என்ன தான் இருக்கிறது..? ஏன் மற்றவர் பாராட்டை நாம் பெரிதாக எடுத்துக் கொள்கிறோம்?
சிறுவயது முதற்கொண்டே பாராட்டித் தான் சோறூட்டுகிறார்கள்; பள்ளிக்கூடத்துக்கு அனுப்புகிறார்கள். பாடங்களைப் படிக்க வைக்கிறார்கள். பால்யம் தொட்டே, பாராட்டுக்கு நம் மனது பழகி விடுகிறது. அதிக மார்க் வாங்க, கடைக்கு போய்வர, வீட்டுப் பாடங்களை எழுத, ஒட்டடை அடிக்க, திடீர் தூரலின் போது மழையில் ஓடி மொட்டை மாடியில் உலர்த்திய துணிகளை எடுத்து வர, தண்ணீர் கொண்டு வர, ரேஷனுக்கு போய்வர என எத்தனை முறை நாம் பாராட்டுக்கு தலையசைத்து சொன்ன வேலைகளை செய்து முடித்திருக்கிறோம்!
உங்கள் மேலதிகாரியோ, கீழ் அதிகாரியோ உங்களைப் பாராட்டிப் பேசும்போது, உங்களுக்கு உங்கள் மீதான மதிப்பு உயர்கிறது. அந்த மிதப்பில் இருக்கும்போதே அவர்கள் உங்களால் ஆக வேண்டிய வேலையை கச்சிதமாக முடித்துக் கொள்வார்கள். இது ஒன்றும் தவறில்லை. அவர்கள் பாராட்டை பயன்படுத்தக் கற்றுக் கொண்டுவிட்டார்கள். நீங்களும் அதை பழகிக் கொள்ளலாம்.
பாராட்டுவதை ஒரு யுக்தியாகக் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏமாற்று வேலையாக நினைத்து, உள்ளுக்குள் புழுங்க வேண்டாம். பாராட்டி சாமர்த்தியமாக காரியத்தை சாதித்துக் கொள்வோம் என்ற எண்ணம் வேண்டவே வேண்டாம். உளமார பாராட்டினால், வளமாகும் வாழ்க்கை, நமக்கும் மற்றவர்க்கும்.
பாராட்டும்போது மனதாரப் பாராட்டுங்கள். வார்த்தைகள் வாயில் இருந்தல்ல, மனதிலிருந்து வரட்டும். பொய்யாக பாராட்ட வேண்டும் என்று அவசியமில்லை. அவரிடம் உள்ள மற்ற நல்ல விஷயங்களைப் பற்றி பாராட்டிப் பேசலாம். உதாரணத்துக்கு, அவர் போட்டிருக்கும் உடை நன்றாக இருக்கலாம், அல்லது அன்று அவரது டேபிளில் எல்லாம் சரியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். அதைப் பாராட்டலாமே.
"அட, இந்த சட்டை உங்களுக்கு நல்லா இருக்கு சார்..!" என்று பாராட்டுவதால் நமக்கு ஒன்றும் நஷ்டம் இல்லையே. ஆனால், அந்த வாக்கியத்தின் தாக்கம் அடுத்த அரை மணி நேரத்துக்கு அவரை உற்சாகமாக்கும்.
நம்மை ஒருவர் பாராட்டினால், அதன் தாக்கம் நமக்கு எத்தனை நேரம் இருந்தது என்பதை நாம் அறிவோம். பாராட்டின் தாக்கத்தில் உற்சாகம் கொப்பளிக்க, வேலையை இன்னும் அழகாக, திறம்பட செய்து முடித்திருக்கிறோம். நம்மைப் போலத் தானே மற்றவரும்? பாராட்டு என்னும் சந்தோஷத்தை அவரும் அனுபவிக்கட்டுமே! பணத்தால் நிரப்ப முடியாத இடத்தை, மனத்தால் பாராட்டி நிரப்பலாமே!
பாராட்ட, அவர் அசகாசசூரத்தனமான விஷயங்கள் எதுவும் செய்திருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஒரு சாதாரண வேலையை கச்சிதமாக செய்ததற்கே கூட ஒருவரைப் பாராட்டலாம்.
சிலருக்கு கையெழுத்து அழகாய் இருக்கும், சிலர் சில வேலைகளை சீக்கிரமாக செய்து முடிப்பவர்களாக இருப்பார்கள், சிலர் பேசும் போது சிரிக்க சிரிக்க பேசுபவர்களாக இருப்பார்கள்.. ஒவ்வொருவரிடமும் நிச்சயம் நாம் கற்றுக் கொள்ளக்கூடிய, அல்லது ரசிக்கக் கூடிய விஷயம் நிச்சயம் இருக்கும். அதைப் பாராட்டி பேசுவதால் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று, அவரை நாம் கவனிக்கிறோம் என்பதை அவருக்கு உணர்த்துகிறோம். இரண்டு, அவரும் பிறரைப் பாராட்ட, அங்கீகரிக்க தூண்டுகிறோம். இதனால் சந்தோஷம் என்பது சங்கிலித் தொடராகிறது.
சம்பள உயர்வு, பதவி உயர்வு, பாராட்டு போன்ற விஷயங்களின் அடிநாதம் அவர்களுக்கு நாம் அளிக்கும் அங்கீகாரம் தான். உண்மையில் பலருக்கு பணத்தை விட பாராட்டு தான் அதிக வேலையை செய்யத் தூண்டுகிறது. அவர்களது அங்கீகார அலைச்சலுக்கு உங்கள் பாராட்டு தான் தீனி.
பாராட்டுக்கு செலவு கிடையாது. ஆனால் கண்டிப்பாக வரவு உண்டு.
பாராட்டுவோம். வேலை எளிதாகும். வெற்றி நமதாகும்.
__._,_.___
No comments:
Post a Comment