கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் சற்றும் தேவையற்றது.
தோழர்களே,
கூடங்குளம், கல்பாக்கம் அணுஉலைகளுக்கு எதிரான போராட்டம் இனி சற்றும் தேவையில்லை. எதிர்காலத்தில், சுனாமி, புகம்பம் வந்தோ, அல்லது அணு உலை வெடித்தோ பேரழிவு ஏற்படலாம் என்பது தான் அணுஉலை எதிர்ப்பாளர்களின் அச்சம். அதற்கு இப்பொழுது தேவையே இல்லை.
அதற்கு முன்பே, தமிழகம் சுடுகாடு ஆவதற்கு, புரட்சித் தலைவி, ஒரு புரட்டலான திட்டம் தீட்டிவிட்டார். வாக்கு வங்கி அரசியலுக்காக, ஏட்டிக்கிப் போட்டி என இலவசத்தை அள்ளி வீசி, வெற்றி பெற்று, இன்றைக்கு தமிழகத்தை நாசமடையச் செய்ய, நலிவுப் பாதைக்கு எடுத்துச்செல்ல துணிந்து விட்டார்.
உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதால், அரசுக்கு வரி வருவாய் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆறாவது சம்பளக்கமிஷன் உபயத்தில், அரசின் வருவாயில் அரசு ஊழியர்களின் சம்பள பட்ஜெட் எகிறி விட்டது. அரசு நிர்வாகச் செலவுகளும் கட்டுக்குள் இல்லை. தமிழக அரசு வாங்கியுள்ள கடன்களுக்கான வட்டியும் வானத்தைத் தொடுகிறது. அரசின் வருவாயைக் கொண்டு, சம்பளம், நிர்வாகச் செலவு, வட்டி ஆகிய முன்று உருப்படிகளுக்கு மட்டுமே செலவு செய்யமுடிகிறது. மற்ற எல்லா திட்டங்களுக்கும் மத்திய அரசின் தொகுப்பிலிருந்து தான். இப்பொழுது, பேருந்து, ஆவின் பால் போன்றவற்றின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது அரசு. மின்சாரக் கட்டணமும் உயரும். ஆயின் இவை போதாது.
ஆக, இலவசங்களுக்கு, தமிழகத்தைச் சனியனாகப் பீடித்துள்ள டாஸ்மாக் சாரய வருவாயை அதிகரித்துத் தான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்திற்குள் சிக்கிக்கொண்டுள்ளது தமிழக அரசு. இலவசம் போக, உள்ளாட்சிகளில் பதவியைப் பெற்றுள்ள கட்சித் தலைவர்களுக்கு வருவாய் ஏற்படுத்துவதும் அவர்களுக்கு முக்கியம். அதனால், இருக்கின்ற, 6700 டாஸ்மாக் சாராயக் கடைகள் போதாதென்று, புதியதாக 800 கடைகளைத் திறக்க உள்ளது தமிழக அரசு. உழைக்கும் மக்களை மதுவுக்கு அடிமைகளாக்கி அவர்களின் குடும்பங்களை சக்கையைப் பிழிந்து, அழித்தொழித்து, வருமானத்தைப் பெருக்கி, அவர்களுக்கே இலவசங்களைக் கொடுக்கும் தார்மீகமற்ற, படு கேவலமான செயலைச் செய்யத் துடிக்கிறது அதிமுக அரசு.
உழைக்கும் மக்களை வாட்டுவது போதாதென்று, இப்பொழுது உயர்தர (???) எலீட் டாஸ்மாக் பார்களைத் திறக்கவும் முடிவெடுத்துள்ளது அரசு. அணுஉலைகள் ஏற்படுத்துவது மூலம் தான் அயல்நாட்டு பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை வளர்ச்சிக்கு உதவவேண்டும் என்று இல்லை. இந்த எலீட் பார்கள் மூலம் நஷ்டமடைந்து வரும் அயல்நாட்டு சாராய நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது தமிழக அரசு.
அமெரிக்காவில் தனி மனித மது நுகர்வு வேகமாக குறைந்து வருகிறது என்பதும், ஐரோப்பிய யூனியனில், மது விற்பனை தேக்கமடைந்து வருகிறது என்பதும் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால், இது தான் உண்மை. ஆக, தமிழக அரசின் படு கேவலமான முடிவின் மூலம், பன்னாட்டு சாராயக் கம்பெனிகளுக்கு புனர்வாழும், தமிழக இளைஞர்களுக்கு நோயும், சாவும், உடல் முடக்கமும் அளிக்க தமிழக அரசு துணிந்து விட்டது.
ஏ, தமிழகத்தின் படித்த நடுத்தர வர்க்கமே, எலீட் டாஸ்மாக் பார்கள் வந்து விட்டன, இனி, உன் பையனும், உன் எதிர் வீட்டு பெண்ணும் கூட இந்த சாராய சுனாமியில் இருந்து தப்ப முடியாது. புரட்சித் தலைவி விட மாட்டார். புரிந்து கொள்.
நடுத்தர வர்க்கத்தைத் தான், ஒரு சமுகத்தின் கலாச்சார காவலர்கள், சமுகத்தின் மனசாட்சி என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால், இன்றைய நுகர்வுச் சந்தையின் முதல்தர நுகர்வர்களாக இருப்பதில் மட்டும் திருப்தி கொள்ளும் சமுகமாக நடுத்தர வர்க்கம் மாறிவிட்டது. இனி எலீட் பார்கள் வந்து, விட்டால் கேட்கவே வேண்டாம், நடுத்தர வர்க்கம் எலிட் பார்களிலும், உழைக்கும் வர்க்கம் முச்சந்திகளில் உள்ள பார்கள் என்றும், சாராயக் கடைகளை நுகர்வதிலும் இந்த வர்க்க வேறுபாட்டை கெட்டிப்படுத்திய படியே, ஒட்டு மொத்த சமூகமும் தறிகெட்டுப் போகும் ஆபத்து உள்ளது.
பெருவாரியான ஓட்டுகளைப்பெற்று ஆட்சிக்கு வந்த அரசு, இந்த படுபாதகச் செயலில் இறங்கியுள்ளது குறித்து, தமிழர்களே உங்களுக்கு கவலையில்லையா? அதிமுகவிற்கு பதில், திமுக வந்திருந்தாலும், இதே படுபாதகத்தைத் தான் செய்திருக்கும் என்பது தான் சுட்டெரிக்கும் உண்மை.
தமிழகம் முழுவதும், டாஸ்மாக் சாராயத்தால், குடலும், கல்லீரலும் அழுகி சாகும் இளைஞர்களின் எண்ணிக்கை கணக்கில்லை. வாய், தொண்டை முதல், உணவுக்குழாய் புற்று நோய் என்று வகைவகையாய் அதிகரித்துவருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், சாலை விபத்துகளில் இறந்த தமிழர்கள் 65,000 க்கும் மேல். இவர்களில், மிக அதிகமானவர்கள், இளம் பருவத்தினர். ஐந்து வருடங்களில், மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட விபத்துக்கள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளன. கைகால்களை இழந்தவர்களைப் பற்றியோ, முதுகெலும்பு நொறுங்கியவர்களைப் பற்றியோ, யாரும் புள்ளிவிவரங்கள் சேகரிப்பதில்லை. சாலை விபத்துச் சாவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இவற்றில், 40 - 60% இறப்புகள், குடித்துவிட்டு ஒட்டுவதால் ஏற்படுகிறது. குடித்துவிட்டு ஓட்டுவதைத் தடுக்காத ஜெயலலிதா, காவல்துறையினரை ரோந்து சுற்றச் சொல்கிறார். அவர்களும், போதையில் தான் ரோந்து சுற்றுவார்கள் என்பது தான் நிதர்சனம்.
ஒவ்வொரு குடும்பத்தின் நான்கு சுவர்களுக்குள், இந்த சாராய சுனாமி, பெண்களை, குழந்தைகளை சுழற்றி சுழற்றி அடிக்கிறது.
இந்த ஆண்டுக்கான டாஸ்மாக் சாராய வருவாய், 18,000 கோடியைத் தாண்டி 19,000 த்தைத் தொட்டுவிடும் என்பது எனது கணிப்பு. இந்த ஆட்சியின் அடுத்த 5 ஆண்டுகளுக்குள், அதாவது 2015-16 ம் ஆண்டு, டாஸ்மாக் சாராய ஆண்டு வருவாய், கிட்டத்தட்ட 30,000 கோடி ஆகிவிடும் என்பதும் என் கணிப்பு. அதற்குள், ஆயிரக்கணக்கான இளைஞர்கள், சிறுவர்கள், குடும்பங்கள் டாஸ்மாக் அரக்கனால் அழிந்து விடுவார்கள். புரட்சித் தலைவி அமைதியாக ஒரு இன அழிப்பையே செய்து விடுவார்.
அணு உலை நீண்ட கால ஆபத்து. ஒத்துக்கொள்கிறேன். அனால், அணு ஆயுதத்தைவிட, இந்த டாஸ்மாக் ஆயுதம், இந்த அரசின் சாராய பயங்கரவாதம், மிக மிக, மிக ஆபத்தானது. அதுவும் உடனடியாக, தமிழகத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச்சென்று சுடுகாடாக்கி விடும் வீரியம் கொண்டது.
தெருவுக்கு வந்து, கூட்டாகப் போராடினால் தான் இதற்கு தீர்வு உண்டு. அதுவும் உடனடியாகக் கிடைக்காது. அரசின், காவல்துறையின் முர்க்கத்தனத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பல தியாயங்கள் செய்ய வேண்டி வரலாம்.
மக்கள், குறிப்பாக பெண்கள், அரசு மாதா மாதம் போடும் இலவச வாய்க்கரிசியைப் புறக்கணித்து குடும்பத்தை பட்டினி போட முடியுமா? இலவச மிக்சியையும், தொல்லைக்காட்சிப் பெட்டியையும், ஆடு மாடுகளையும் திரும்ப ஒப்படைக்க முடியுமா? பள்ளி கல்லூரி மாணவர்கள் , எங்களுக்கு இலவச லேப் டாப் கம்ப்யூட்டர் வேண்டாம் என்று உரத்த குரல் எழுப்ப முடியுமா? இவர்களால் முடியாது என்று அரசு நம்புகிறது. அந்த தைரியம் தான், இந்த மோசடித் திட்டங்களுக்கான உந்துதல்.
மக்கள் நலனுக்காகத் தான் நாங்கள் இருக்கிறோம், எங்களை ஆட்சியாளர்களே சாராய வியாபாரிகளாக்கி விட்டார்களே என்று யாராவது ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாவது, டாஸ்மாக் சாராயம் விற்க, மாத இலக்கு நிர்ணயிக்க மறுக்கிறார்களா? ஐ ஏ எஸ் களும், ஐ பி எஸ் களும் இந்தியன் அல்கஹால் சர்வீஸ் என்றாகி வெகுநாட்களாகி விட்டது.
இந்த அரசின் சாராய பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்த என்ன செய்ய முடியும்?
மக்களைத்திரட்ட முடியுமா? காவல்துறையின் வன்முறையை, அமைதியாக எதிர்கொண்டு தாக்குப் பிடிக்க முடியுமா? சமூக நலனில் அக்கறை கொண்ட எல்லா அமைப்புகளும், எல்லா ஆர்வலர்களும், யார் பெரியவர் போன்ற ஈகோவைத் தவிர்த்து ஓரணியில் திரள முடியுமா? எந்த வித தியாகமும் செய்யும் துணிவுண்டா? இவை எல்லாவற்றையும் தாண்டி, பூரண மதுவிலக்கு என்று ஒரே அடியாக வரட்டுத்தனமாக பேசாமல், அரசிடம் ஆக்கபுர்வமான யோசனைகளை, படிப்படியாக மது விற்பனையையும், நுகர்வையும் கட்டுப்படுத்தும் படி நிர்பந்தித்து, ஒரு அறிவியல் பார்வையுடன், நடைமுறை அறிந்து பேசி செயல்படமுடியுமா? சாராய சுனாமியைத் தடுக்க முடியவில்லை என்றாலும், அதன் தாக்கத்தை, வீரியத்தை, அதனால் ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்துவது தான் முதல் குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை எடுத்து, எல்லோரும் இணைந்து, ஓரணியாக செயல்பட முடியுமா? அடிவயிற்றில் வெறியுடன் இதனை முன்னெடுத்துச் செல்ல முடியுமா?
இவையெல்லாம் முடியும் என்றால் மட்டுமே, தமிழகம் சுடுகாடு ஆகாமல் காப்பாற்ற முடியும், இல்லை என்றால், இலவச மிக்சியும், கிரைண்டரும், மடி கணினியும், பசுமை வீடுகளும், ஆணு உலைகளும் இருந்து விட்டு போகட்டும். அதோடு சாராய சுனாமியும் வீரியத்துடன், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையில் அடிக்கட்டும். இவை எல்லாவற்றுடன் சேர்ந்து நாமும் மண்ணோடு மண்ணாக மடிந்து அழியலாம். அது வரை, நாம் முதுகைச் சொறிந்து கொண்டு வீட்டில் உட்கார்ந்து கொள்ளலாம். ரிமோட்டை வைத்துக்கொண்டு, டிவி சேனலை மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு இருக்கலாம். சாராய சுனாமி நம் தலைமுறையை அடித்துக்கொண்டு போய் மூழ்கடிக்கும் வரை.
அ.நாராயணன் (9840393581)
--
To read all the issues of paadam, Pl visit our web www.paadam.in &
blog www.paadam-pm.blogspot.com and leave your comments.
Regards
A.Narayanan (98403 93581)
Editor
Paadam, Monthly Magazine in Tamil for Development Politics
2/628, Rapid Nagar,
Gerugambakkam
Chennai - 602 101.
No comments:
Post a Comment