Thursday, November 3, 2011

அண்ணா நூலகம் இடமாற்றத்திற்கு ஜ.இ.ஹி கண்டனம்
November 3, 2011




சென்னை கோட்டூர்புரத்தில், 8 ஏக்கர் நிலப் பரப்பில் மக்கள் பணம் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்ட அண்ணா நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டிடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எனும் சிறப்புகொண்ட இந்த அண்ணா நூலகத்தை விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக (Super Specialty Paediatric Hospital) மாற்றி அமைக்கப்படும்” என இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 1.11.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தலைமைச் செயலகக் கட்டடத்தைத் தொடர்ந்து இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகமும் மாற்றப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மக்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டங்களை அரசியல் மாற்றத்திற்காக அத்திட்டங்களை நீக்குவது, இடமாற்றுவது போன்ற செயல்களை அனுமதிக்காத சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இது போன்ற செயல்கள் மிகுந்த கண்டனத்திற்குரியது.

குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது வரவேற்கத்தக்கதே. அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து புதிதாக ஒரு கட்டடத்தை அங்கு எழுப்ப முடியும். அதற்காக தேவையான உள்கட்டமைப்போடு உருவாக்கப்பட்ட ஒரு நூலகத்தை மாற்ற வேண்டியது இல்லை. மேலும், அண்ணா நூற்றாண்டு நூலகம் தற்போது அமைந்திருக்கும் இடம், அதனைப் பயன்படுத்துவோருக்கு எவ்வகையிலும் இடைஞ்சலாக இல்லை. இதிலேயே மேற்கொண்டு பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி வலுப்படுத்தவும் முடியும்.

ஆகவே, தமிழக அரசு தனது அமைச்சரவை முடிவைக் கைவிட்டு, நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத்தலைவர் ஜனாப் ஷப்பீர் அஹமத் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.



http://ping.fm/h0L7C

No comments: