வெளியீடு : அல்-ஹஸா இஸ்லாமிய மையம், சவூதி அரேபியா
1- தமத்துஃ: ஒருவர் ஹஜ்ஜின் மாதங்களான ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ்ஜின் பத்து தினங்களில் உம்ராவுக்காக மட்டும் இஹ்ராம் அணிந்து அதை நிறைவேற்றியதும் இஹ்ராமைக் களைந்துவிட்டு பிறகு துல்ஹஜ் 8-ஆம் நாள் ஹஜ்ஜிற்காக இஹ்ராம் அணிந்து அதனை நிறைவேற்ற வேண்டும்.
2- இஃப்ராத்: ஹஜ்ஜிற்காக மட்டும் இஹ்ராம் அணிதல். அதாவது லப்பைக்க ஹஜ்ஜன் என்று நிய்யத் செய்துவிட்டு மக்காவை அடைந்ததும் தவாஃபுல் குதூம் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து ஹஜ்ஜின் ஸயீயையும் செய்யலாம்.
3- கிரான்: ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து லப்பைக்க உம்ரதன் வ ஹஜ்ஜன் என்று நிய்யத் செய்து இஹ்ராம் அணிய வேண்டும். அல்லது முதலில் உம்ராவுக்காக நிய்யத் செய்து பிறகு தவாஃபை ஆரம்பிக்கும் முன்பு ஹஜ்ஜையும் அதில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
ஹஜ்ஜின் வகைகளுக்கிடையேயான வேறுபாடுகள்:
1- நிய்யத்: இஃப்ராத் செய்பவர், ஹஜ்ஜை மட்டும் நிய்யத் செய்ய வேண்டும். கிரான் செய்பவர் உம்ராவையும் ஹஜ்ஜையும் சேர்த்து நிய்யத் செய்ய வேண்டும். தமத்துஃ செய்பவர் முதலில் உம்ராவுக்காக நிய்யத் செய்துவிட்டு பிறகு ஹஜ்ஜிற்காக இஹ்ராம் அணியும் போது ஹஜ்ஜிற்காக நிய்யத் செய்ய வேண்டும்.
2- குர்பானி: கிரான் மற்றும் தமத்துஃ செய்பவர்கள், குர்பானி கொடுக்க வேண்டும். அல்லது அதற்குப் பகரமாக மூன்று நோன்புகள் ஹஜ்ஜின் தினங்களிலும் ஏழு நோன்புகள் வந்த பின்பும் ஆக மொத்தம் பத்து நோன்புகள் நோற்க வேண்டும். இஃப்ராத் செய்பவர் குர்பானியும் கொடுக்க வேண்டியதில்லை, நோன்பும் நோற்க வேண்டியதில்லை.
3- ஸயீ: கிரான் மற்றும் இஃப்ராத் செய்பவர்கள் தாவாஃபுல் குதூமுக்குப் பிறகு ஸயீ செய்திருந்தால் தவாபுல் இஃபாளாவுக்குப் பிறகு அவர்கள் ஸயீ செய்ய வேண்டியதில்லை. ஆனால் தமத்துஃ செய்பவர் உம்ரா செய்யும்போதும் ஸயீ செய்ய வேண்டும். அதுபோல தவாஃபுல் இஃபாளாவுக்குப் பிறகும் ஸயீ செய்ய வேண்டும்.
சிறந்த வகை ஹஜ் எது?
இவற்றில் சிறந்த வகை தமத்துஃ ஹஜ்ஜாகும். இதற்கான ஆதாரம் யாதெனில்: நபி (ஸல்) அவர்கள், தமது தோழர்கள் தவாஃபும் ஸயீயும் செய்த பின் அவர்களில் பலிப்பிராணியைக் கொண்டு வராதவர்களை இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் அதை உம்ராவாகக் கருதிக்கொள்ளுமாறும் கூறினார்கள். அந்த ஹஜ்ஜில் பலிப்பிராணிகளைக் கொண்டு வந்தவர்கள் குறைவுதான் (முஸ்லிம்). யார் பலிப்பிராணியைக் கொண்டு வரவில்லையோ அவர்கள் அதை உம்ராவாகக் கருதிக்கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கண்டிப்பாகக் கூறிவிட்டார்கள். அப்போது தோழர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஹஜ்ஜிற்காக நிய்யத் வைத்திருக்கும்போது எவ்வாறு அதை உம்ராவாக ஆக்க இயலும்?' என்று கேட்டதற்கு அன்னார், 'நான் உங்களுக்கு ஏவியதைச் செய்யுங்கள்!' என்றார்கள் (முஸ்லிம்). மேலும் இந்த முறையானது, அதிகமான அமல்களைக் கொண்டதும் ஆனால் செயல்படுத்துவதற்குச் சிரமமில்லாததுமாகும். சில அறிஞர்கள், தமத்துஃ ஹஜ்ஜைத் தேர்ந்தெடுப்பதை வாஜிபாகவே ஆக்கியுள்ளனர்.
குறிப்பு:- கிரான் அல்லது இஃப்ராத் செய்வதாக இஹ்ராம் அணிந்திருப்பவர் பிறகு அதைத் தமத்துஃவாக மாற்ற நாடினால் நிய்யத்தை மாற்றிக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment