Monday, August 22, 2011

காஞ்சீபுரம் மாவட்டத்தில்


மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் மேளா


கலெக்டர் சிவசண்முகராஜா தகவல்


காஞ்சீபுரம், ஆக.19&
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 22&ந் தேதி முதல் கல்விக்கடன் வழங்கும் மேளா நடைபெறுகிறது. இதை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.சிவசண்முகராஜா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:&

கல்விக் கடன் மேளா
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால் வறுமையின் காரணமாக ஏழைப் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் தொழிற்கல்விக்கான கல்லூரி கட்டணத்தை செலுத்த இயலாமல் அல்லல் படுகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் கடிதம் மூலமாகவும், நேரிலும் ஏராளமான மாணவர்கள் கல்விக் கடன் கோரி விண்ணப்பிக்கின்றனர் இக்கோரிக்கையை போக்கிடும் வகையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்கும் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

எந்தெந்த ஊர்களில்
அதன்படி வருகிற 22&ந் தேதி காஞ்சீபுரம், 23&ந் தேதி ஸ்ரீபெரும்புதூர், 24&ந்தேதி திருப்போரூர், 25&ந் தேதி மதுராந்தகம், 26&ந் தேதி காட்டாங்கொளத்தூர், 29&ந் தேதி சித்தாமூர், 30&ந் தேதி உத்திரமேரூர் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தின்(பி.டி.ஓ.) பயிற்சி அரங்கம் மற்றும் கூட்ட அரங்கங்களில் பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் வங்கி ஆகிய வங்கிகளின் மூலம் அந்தந்த பகுதி மாணவர்களையும் வரவழைத்து தற்காலிக கல்விக் கடன் அனுமதி (புரவிஷ்னல் சேங்ஷன்) வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்ட முன்னோடி வங்கி 2 மையங்களையும், மற்ற வங்கிகள் தலா ஒரு மையத்தையும், மேற்பார்வை செய்ய மாதிரி முகமையாக நியமிக்க உத்தரவிடப்படுகிறது. கல்விக் கடன் கேட்டு வரும் மாணவர்கள் வயது&சாதி&இருப்பிட&வருமான சான்றிதழ்கள், குடும்ப அட்டை, மேல்நிலை மதிப்பெண் பட்டியல், கல்வித்தகுதி, கட்டண விவரத்திற்கான சம்பந்தப்பட்ட கல்லூரியின் சான்றிதழ், பெற்றோர் அல்லது காப்பாளரின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, கல்லூரியில் சேருவதற்கான தகுதி சான்றிதழ், கலந்தாய்வு, நிர்வாக ஒதுக்கீடு மூலம் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதம், கல்லூரியின் மாணவர் அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

ரூ.4 லட்சம் வரை கடன்
மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் வரை பிணையப் பத்திரம் ஏதுமின்றி கல்விக் கடன் வழங்கப்படும். ரூ.4 லட்சத்திற்கு மேற்பட்ட கடன் பெறுவோருக்கு பிணையப் பத்திரம் தேவை. காஞ்சீபுரம் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மாணவர்களுக்கு மட்டும் இது பொருந்தும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது துணை கலெக்டர்(பயிற்சி) ஆர்.லலிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி அருள்ஜோதிஅரசன்ஆகியோர் உடனிருந்தனர்.



--

No comments: