Monday, August 8, 2011

108 ஆம்புலன்ஸ் – சேவையா? சுரண்டலா??

in அ.தி.மு.க, ஊழல் - முறைகேடுகள், தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம், தி.மு.க,தொழிலாளர்கள், மக்கள்நலம், மருத்துவம் by வினவு, July 29, 2011 -

உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் நடைபெரும் அக்கிரமத்தை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தும் கட்டுரை….

16
Share
10


பதிவு
மறுமொழிகள்


விபத்துக்களினாலோ, நோய்களினாலோ, மனிதர்கள் உயிருக்குப் போராடுகின்ற மிக ஆபத்தான சூழ்நிலைகளிலே அவர்களைக் காப்பாற்றுகிற மிகவும் பொறுப்பு வாய்ந்த பணியினை அர்ப்பணிப்போடு செய்யும் பணியாளர்கள் மூலமாக மிகக் குறுகிய காலத்தில் தமிழக மக்களின் மனதில் மிக ஆழமாகப் பதிந்துவிட்ட ஒரு எண் 108.
108-ன் மூலம் மக்களுக்குக் கிடைக்கிற சேவைகளை ஏற்கனவே நீங்கள் அறிவீர்கள். கடந்த தி.மு.க அரசு குறிப்பாக கருணாநிதி, ஏதோ தெருத்தெருவாக தானே சென்று செய்துகொண்டிருக்கிற மிகப்பெரும் சேவை என்பது போல 108 குறித்து விளம்பரம் செய்து கொண்டார். தற்போதைய ஜெயாவோ, இதை இன்னும் சிறப்பானதாக ஆக்கப் போவதாக, அதாவது தானே வீடுவீடாகச் சேவை செய்யப்போவது போலக் கூறியிருக்கிறார்.
ஆனால், இந்த மகத்தான சேவைகளை மக்களுக்குத் தரக்கூடிய 108-ன் ஊழியர்கள் நிர்வாகத்தால் கசக்கிப் பிழியப்படுகின்ற துயரமும், இந்தச் சேவையைப் பயன்படுத்தி ஜி.வி.கே.இ.எம்.ஆர்.ஐ (G.V.K.E.M.R.I) என்கிற தனியார் நிறுவனம் அடிக்கும் கொள்ளையும் யாரும் அறியாதது.
அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையம் (Emergency Management and Research Institute- EMRI) என்கிற நிறுவனத்தை அவசர உதவிக்காக அழைக்கும் தொலைபேசி எண்தான் 108. இந்த அவசர உதவி மையமானது, தமிழகம் முழுவதும் 411 வாகனங்களை ஊருக்கு ஊர் நிறுத்தி வைத்திருக்கிறது. நாளொன்றுக்கு சுமார் 3000 க்கும் மேற்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை அளித்து வருகிறது.
திடீரென நடைபெறுகின்ற சாலைவிபத்துக்கள், மாரடைப்பு, தீக்காயங்கள், நோய்களினால் உருவாகின்ற ஆபத்துக்களுக்கான அவசர உதவிகள் மற்றும் பிரசவகால அவசரங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளுக்கான அவசரஉதவிகளை 108-ன் ஊழியர்கள் செய்கிறார்கள்.
விலை உயர்ந்த நவீனக்கார்கள் எதிலும் இல்லாத; வேறு எந்த தனியார் மற்றும் அரசு மருத்துவமனை ஆம்புலன்சிலும் இல்லாத; அவ்வளவு ஏன், பெரும்பாலான தனியார் மருத்துவக் கிளினிக்குகளிலும் இல்லாத, அதி நவீன மருத்துவக்கருவிகள்; உயிர் காக்கும் மருந்துகள்; மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற அவசரகால மருத்துவ நிபுணர்களோடு ஒரு நவீன மருத்துவமனைக்கு இணையாக 108- வாகனங்கள் இயங்கி வருகின்றன.
ஒரு 108- வாகனத்தில் ஒரு ஓட்டுனர்(pilot), மற்றும் ஒரு அவசரகால மருத்துவப் பணியாளர் (Emergency Medical Technician) ஆக, இரண்டு ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு நாளைக்கு ஒரு ஷிப்ட் (shift) வேலை செய்கிறார்கள். ஒரு ஷிப்ட் என்பது காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலான பனிரெண்டு மணி நேரமாகும். ஷிப்ட் முடியப்போகும்போது ஏதேனும் ஒரு கேஸ் வந்தால் அதையும் முடித்துவிட்டுத்தான் இவர்கள் வீட்டிற்குச் செல்கிறார்கள். இதனால் ஏற்படும் கூடுதலான வேலைக்கான கூடுதல் சம்பளம் எதுவும் இவர்களுக்குக் கிடையாது. மேலும் இதற்கான நேரத்தை இவர்கள் அடுத்த ஷிப்ட் வரைக்குமான ஓய்வு நேரத்தில்தான் கழித்துக்கொள்கிறார்கள். அதாவது தொடர்ச்சியாக அடுத்த ஷிப்டிற்கு மீண்டும் மறுநாள் காலை எட்டு மணிக்கு வேலைக்கு வந்து விடுகிறார்கள்.
மிகச்சரியாகக் காலை எட்டு மணிக்குத் துவங்கும் முதல் ஷிப்டில் பணியாற்ற வீட்டிலிருந்து 108-வாகனம் இருக்கும் இடத்திற்கு வரும் இவர்களுக்கு பயணப்படியோ, பஸ்பாஸோ வழங்கப்படுவது கிடையாது. மேலும் இவர்களின் சொந்த ஊரிலோ, அல்லது அதன் அருகாமையிலுள்ள ஊர்களிலோ, இவர்களுக்கு பணி தருவதும் கிடையாது. தமிழகத்தில் எங்கு போய் வேலைசெய்யச் சொன்னாலும் அங்கே இவர்கள் போயாக வேண்டும்.
வேலைக்கு வந்ததும் இ.எம்.டி யாக வேலை பார்ப்பவர் முதல் வேலையாக மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மற்றும் பதிவேடுகளைச் சரிபார்த்து பெற்றுக் கொள்கிறார். அதுபோல ஓட்டுனரும் வழக்கமான சோதனைகளைச் செய்து வண்டியை பொறுப்பெடுத்துக் கொள்கிறார். எவ்வளவு போக்குவரத்து நெருக்கடியிலும், மோசமான சாலைகளிலும் சிரமங்கள், நெருக்கடிகளைச் சமாளித்து சாமர்த்தியமாகவும், துரிதமாகவும் வாகனங்களை ஓட்டக்கூடிய இளைஞர்கள்தான் இப்பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், முறையான பராமரிப்பு எதுவும் வாகனங்களுக்கு நடைபெறுவது இல்லை. டயர், பிரேக் உள்ளிட்ட முக்கியப் பாகங்கள் கூட பராமரிக்கப்படாமல் இருப்பதால் ஏராளமான வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றன.
108 வாகனமானது, ஒவ்வொரு ஊரிலும் உள்ள போலீஸ் ஸ்டேசன், அரசு மருத்துவமனை, ஊரின் மையமான பகுதி, ஒரு பொதுவான இடம் ஆகிய ஏதேனுமொரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். 108-ன் ஊழியர்கள் எப்போதும் வண்டியின் உள்ளேதான் இருக்க வேண்டும் என்பது நிர்வாகத்தின் விதி. இவர்களுக்கு வாகனத்திற்கு வெளியே ஓய்விடமோ, கழிப்பறை ஏற்பாடோ கிடையாது. இதனால்ஈ.எம்.டி-க்களாக வேலை செய்கின்ற பெண்கள் படும்பாடு தனித்துயரம்.
வேலை நேரத்தினிடையே, தேனீர் நேரமோ, உணவு இடைவேளையோ கிடையாது. வண்டியினுள்ளேயே அமர்ந்துகொண்டுதான் சாப்பிடுகிறார்கள். அப்படிச் சாப்பிடத்துவங்கும் போது, அழைப்பு வந்தால் ஒரு நிமிடத்திற்குள் புறப்பட்டு விடுகிறார்கள். அடுத்த முப்பது நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்குச் சென்று விடுகிறார்கள். பாதிக்கப்பட்டவரைப் பரிசோதனை செய்கிறார்கள். அவரைச் சுற்றி உணர்ச்சி வசப்பட்ட நிலையிலே கூடியிருக்கிற உறவினர்களைச் சமாளிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவரை வண்டியில் ஏற்றுகிறார்கள். ஒடிக்கொண்டிருக்கும் வண்டியிலேயே பாதிக்கப்பட்டவருக்கு அவசர சிகிச்சை அளிக்கிறார்கள். குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமனைக்கோ, அல்லது தகுந்த மருத்துவமனைக்கோ, அல்லது பாதிக்கப்பட்டவர் அல்லது அவருடைய உறவினர்களின் விருப்பப்படியான மருத்துவமனைக்கோ சென்று சேர்க்கிறார்கள். இதற்குள் பாதிக்கப்பட்டவர் குறித்த தகவல்களைப் பதிவேடுகளில் பதிவு செய்கிறார்கள். மொத்தம் 22 பதிவேடுகளில் பதிவு செய்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களால் வாகனத்தினில் ஏற்படுகின்ற ரத்தக்கறை, வாந்தி, மலம், மூத்திரம், மற்றும் பிரசவமேற்பட்டால் உண்டாகும் அதன் கழிவுகள் ஆகிய அனைத்தையும் இவர்களே சுத்தம் செய்கிறார்கள். நாளொன்றுக்கு சுமாராக ஐந்திலிருந்து பத்து வரையிலான நபர்களைக் கையாளுகிறார்கள். இவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்புக் கருவிகளோ, மருந்துகளோ வழங்கப்படுவதில்லை. ஒருமுறை கழட்டி மாட்டினால் கிழிந்துவிடுகிற அளவிற்கு மட்டரகமாகத் தயாரிக்கப்பட்ட கையுறையைத்தான் இவர்கள் பயன் படுத்துகிறார்கள்.
இப்படி கூடுதலான பணிச்சுமையிலும், பொறுப்பாகப் பணிசெய்யும் இவர்களுக்கு மிகவும் துயரத்தைக் கொடுப்பது இவர்களின் வேலைப்பளு அல்ல, மாறாக, இவர்களைக் கொடுமையாகச் சுரண்டுகிற நிர்வாகம்தான்.
108-எனும் இந்த அவசரகால மருத்துவச் சேவையைச் செய்வதற்காக தமிழக அரசு ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ எனும் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துள்ளது. அது சாதாரண ஒப்பந்தமல்ல, நாம் அடிக்கடி செய்தித்தாள்களிலே படிக்கிறோமே அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம். அது என்ன புரிந்துணர்வு ஒப்பந்தம்? இலாப, நட்டமில்லாமல் சேவை நோக்கோடு அரசும் தனியார் நிறுவனங்களும் செய்து கொள்கின்ற ஒப்பந்தத்தைத்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று கூறுகிறார்கள். ஒரு மக்கள் நல அரசு என்று சொல்லிக்கொள்கின்ற அரசு அப்படி ஒரு ஒப்பந்தம் போட்டு சேவை செய்வதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால், ஒரு முதலாளி எப்படி சேவை செய்கின்ற ஒரு ஒப்பந்தத்திற்கு முன் வருவான்? விற்க முடியுமென்றால், அதுவும் லாபத்தோடு விற்க முடியுமென்றால் தன் மனைவியையும், பிள்ளைகளையும் கூட விற்கத் துடிப்பதுதானே முதலாளித்துவத்தின் சிறப்பியல்பு. உண்மை இவ்வாறு இருக்க எதனால் அந்த முதலாளி சேவை செய்ய முன் வந்தார்? 108-ற்காக சேவை செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளவர் ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ (G.V.K.E.M.R.I) என்னும் நிறுவனத்தின் முதலாளியான ஜி.வி.கிருஷ்ணராம ரெட்டி என்பவர்.
இந்த சேவைக்காக, ஆண்டு தோறும் அரசிடமிருந்து ஜி.வி.கே.யின் முதலாளி பெறுகிற பராமரிப்புத் தொகை மட்டும் ரூபாய் நாலாயிரத்து இருநூறு கோடி. இது தவிர, பிரசவம் நடந்தால் இரண்டாயிரம் ரூபாயும், மற்ற பிரச்னைகளுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாயும் பெற்றுக் கொள்கிறார். சரி, மொத்தமாக ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ நிறுவனத்தின் வரவு, செலவு எவ்வளவு?
முதலில் செலவைப் பார்ப்போம்.

ஒரு மாதத்திற்கு ஒரு வாகனத்திற்கு ஆகும் செலவு:

எரிபொருள் ரூ. 20,000

பராமரிப்பு ரூ. 5,000

2 பைலட்டுகள் சம்பளம் ரூ. 11,400

2 இ.எம்.டி. களுக்கான சம்பளம் ரூ. 13,000

வார விடுமுறையில் மாற்றம் செய்யும்

பைலட் மற்றும் இ.எம்.டிக்கான சம்பளம ரூ. 5,000

மருந்து மற்றும் கருவிகளுக்கான செலவு ரூ. 2,000

இதர செலவுகள் ரூ. 3,600

ஆக, மொத்தம் ரூ. 60,000

400 வாகனங்களுக்கு, 400 X 60,000 = ரூ. 2,40,00,000.

ஒரு ஆண்டிற்கு, 12 X 2,40,00,000 = ரூ. 28,80,00,000.

இனி வரவாக அரசிடம் பெறும் கட்டணத்தைப் பார்க்கலாம்.

மொத்தமுள்ள 411 வாகனங்கள் மூலமாக, ஒரு நாளைக்கு வரும் மொத்த கேஸ்கள் சுமார் 3,000.

ஒரு கேஸுக்கு அரசிடம் பெறும் கட்டணம் ரூபாய் குறைந்தபட்சமாக ரூபாய் 1,500 என வைத்துக் கொண்டால்
ஒரு நாளைக்கு 3,000 X 1,500= 45,00,000 ரூபாய்
ஒரு மாதத்திற்கு 30 X 45,00,000= 13,50,00,000 ரூபாய்.
அப்படியானால் ஒரு ஆண்டிற்கு 12 X 13,50,00,000= 162 கோடி ரூபாய்

ஆக, ஒரு ஆண்டிற்கான மொத்த வரவு, செலவு விவரம்:
வரவு = 162.00 கோடி.
செலவு = 28.80 கோடி.

ஆக, ஆண்டொன்றிக்கு நிகர லாபம் 133 கோடியே 20 லட்ச ரூபாய்கள். இது குறைந்த பட்சத்தொகை என்பதை மறந்துவிடக்கூடாது.

இவ்வளவு லாபம் அடைகின்ற முதலாளி, ஈ.எம்.டி.க்குத் தரும் மாதச்சம்பளம் வெறும் 6,310 ரூபாய். பைலட்டுக்குத் தருகிற மாதச்சம்பளம் வெறும் 6,000 ரூபாய் மட்டும்தான். இதுதான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரவு செலவுப் பின்னணி. உள்ளூர் புரிந்துணர்வு ஒப்பந்தமே இந்த லட்சணமென்றால் மாதத்திற்கொன்றாக பன்னாட்டுக் கம்பனிகளிடம் போடப்படுகின்ற மத்திய, மாநில அரசுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தமெல்லாம் என்ன யோக்யதையில் இருக்குமென நாமே யூகித்துக்கொள்ளலாம்.

108 ஒரு அரசு நிறுவனமா?

108 வாகனத்தில் தமிழக அரசின் சின்னம் இருப்பதால் 108 ஒரு அரசு நிறுவனமென்றும், 108 வேலை ஒரு அரசு வேலை என்றும் மக்கள் நம்புகிறார்கள் அப்படி நம்பித்தான் அதில் வேலைக்கும் சேருகிறார்கள். ஆனால், 108 வேலை ஒரு தனியார் நிறுவன வேலைதான். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி அண்ணாத்துரை பிறந்த நாளில் 108 சேவை தொடங்கப்பட்டபோது, மிகப்பிரபலமான சத்யம் கம்ப்யூட்டர்ஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தது. பின்னர் சத்யம் போண்டியாகிப்போய் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்ததால் சத்யம் முதலாளியின் மச்சானான ஜி.வி. கிருஷ்ணராம ரெட்டிக்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றப்பட்டிருக்கிறது. தமிழகம் உள்பட மொத்தம் 18 மாநிலங்களிலே ஜி.வி.கே இது போன்ற சேவைகளை நடத்திவருகிறான்

No comments: