Tuesday, August 9, 2011

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

{9} إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ {10}

நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். திருக்குர்ஆன் 49:10.

தீண்டாமை விலங்கை உடைத்தெறிந்த திருமறைக்குர்ஆன்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

பரந்து விரிந்த இந்தியப் பெருநாட்டிற்குள் ஆடு மாடுகளை, மேய்த்துக் கொண்டு நாடோடிகளாக நுழைந்த வந்தேறிகளின் கூட்டம் மண்ணின் மைந்தர்களாகிய ஆதி திராவிடர்களுடைய அறியாமையை பயன் படுத்தி அவர்களிடத்தில் சிலை வணக்கத்தை புகுத்தி முச்சந்திக்கு முச்சந்தி கோயிலைக் கட்டி வைத்துக்கொண்டு நாங்கள் தேவனின் தலையில் பிறந்ததால் நாங்களே வேதத்தை ஓதுவதற்கும், கோயிலில் பூஜை புணஷ்காரம் செய்வதற்கும் தகுதியானவர்கள் என்றுக்கூறி ஒட்டு மொத்த கோயில் நிர்வாகத்தையும் தங்களுக்கே நிரந்தரமாக்கிக் கொண்டனர்.

இன்று இந்திய அரசியலில் கால் பதித்து அரசு அதிகாரத்தை கைப்பற்றி கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகள் முழுவதையும் தங்களுக்கு ஒதுக்கிக் கொள்வதற்கு முன்பு வரை ஒட்டு மொத்த ஆரியர்களின் வயிற்றுப்பிழைப்பு கோயிலுக்கு வழங்கும் பிரசாதமும், உண்டியலில் இடும் காணிக்கையைத் தவிர வேறில்லை அதனால் இவர்களின் பிழைப்பில் அவர்கள் குறுக்கிட்டு விடக்கூடாது என்பதற்காக நீங்கள் தேவனின் காலில் பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்பதால் கோயில் நிர்வாகத்தில் மட்டுமல்லாமல் நகருக்குள்ளும் குடி இருக்கக் கூடாது என்றுக்கூறி அவர்களின் குடியிருப்பை ஊர் கோடியில் ஒதுக்கி வைத்து அதற்கு சேரிகள் என்று பெயர் சூட்டி தங்களுடைய குடியிருப்பை கோயிலைச் சுற்றியும், நகருக்கு மத்தியிலும் அமைத்துக் கொண்டு அதற்கு அக்ரஹாரம் என்று பெயர் சூட்டி வாழ்க்கையைத் தொடங்கினர்.

சிறகொடிந்தப் பறவைகளாய்


அந்த அப்பாவிகள் வந்தேறி ஆரியர்களால் அடிமைப் படுத்தப் படுவதற்கு முன் இயற்கை எழில் கொஞ்சும் இந்திய மண்ணில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தனர் இவர்களது வருகைக்குப்பின் சூத்திர முத்திரை குததப்பட்டப் பின் அவர்களது குடியிருப்புக்களாகிய சேரிகளை தவிர்த்து பொது இடங்களில் நடக்கக் கூட முடியாத அவலநிலையை அடைந்து கொண்டதுடன் ஆரியர்கள் அல்லாது வேறு சமுதாயத்து மக்களுடனும் கூட கலந்திட முடியாமல் சமத்துவமும், சகோதரத்துவமும் பறிக்கப்பட்டு சிறகொடிந்தப் பறவைகளாயினர்.

ஒடுக்கப்பட்ட இந்த மக்களுடைய அவல நிலையை மாற்றி அவர்களது துயர் துடைக்க எத்தனையோ இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு குரல் கொடுத்தன அவைகளாலும் ஒன்றும் செய்ய இயலாமல் அவைகளும் ஒரு காலகட்டத்தில் அரசியல் அமைப்புகளாக பரினாமம் பெற்று யாரை எதிர்த்து யாருக்காக ஆதரவு குரல் கொடுக்க வேண்டும் எனும் நோக்கில் அமைப்பு துவக்கப்பட்டதோ எஅவைகளும் திர்க்க வேண்டியவர்களிடமே சட்டமன்ற, பாராளுமன்ற சீட்டுகளுக்காக சரணடைந்து கொண்டன.

மனுதர்மத்தை உடைத்தெறிந்து மனித தர்மத்தை நிலைநாட்டியது மாமறைக் குர்ஆன்

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிரிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். திருக்குர்ஆன் 49:13. என்றுக் கூறி மனிதன் கடவுளுடைய தலையிலும் பிறக்கவில்லை, காலிலும் பிறக்கவில்லை ஒரே ஒரு மனிதனே முதலில் படைக்கப்பட்டு அவரிலிருந்து அவருக்கு பெண் துணை படைக்கப்பட்டு உலகம் முடியும் காலம் வரை பிறக்கும் அனைத்து மனிதர்களும் ஒரே அச்சிலிருந்தே ( அந்த இருவரிலிருந்தே ) படைக்கப் படுகின்றனர் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்து வந்தேறி ஆரியர்களுடைய செட்டப் நாடகத்தை ( மனுதர்மத்தை ) உடைத்தெறிந்து மனித தர்மத்தை (சமத்துவத்தை) முழங்கியது மாமறைக்குர்ஆன்.

மேற்காணும் திருமறைக்குர்ஆனின் வசனம் சமத்துவத்தைக் கூறினாலும் சகோதரத்துவத்தைக் கூறவில்லை என்று சொல்லி அடிமைத் தளையிலிருந்து விடுதலைப் பெற விட மாட்டார்கள் என்பதால் அவர்களின் உள்ளங்களையும் சூழ்ச்சிகளையும் அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். திருக்குர்ஆன் 49:10. என்றுக் கூறி சகோதரத்துவத்திற்கு அழுத்தமான அஸ்த்திவாரத்தை இட்டு தீண்டாமையை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்து வீழ்த்தியது சத்திய வேதம் திருமறைக்குர்ஆன்.

மனிதர்கள் தீட்டும் மலைப் போன்ற சூழ்ச்சி அல்லாஹ்வின் சூழ்ச்சிக்கு முன் தூள் தூளாக சிதறிப் பறந்து விடும் என்பதற்கு ஆரியர்கள் தீட்டிய தீண்டாமை சூழ்ச்சி அல்லாஹ்வின் சகோதரத்துவ திட்டத்தின் கீழ் சிதறி தவிடுப் பொடியாகியது மிகப் பெரிய உதாரணமாகும்.


சகோதரர்களுக்கு மத்தியில் ஆண்டான் அடிமை எனும் சிந்தனை வருமா ?

சகோதரர்களுக்கு மத்தியில் தலையில் பிறந்தோன், காலில் பிறந்தோன் எனும் ஏற்றத் தாழ்வு சிந்தனை வருமா ?

சகோதரர்களுக்கு மத்தியில் கருப்பன் சிவப்பன் என்ற நிறவெறி சிந்தனை ஏற்படுமா ?

ஏற்படாது !


அதனால் ஆரியர்களால் சூத்திரர்கள் எனும் அடிமை விலங்கிடப்பட்டிருந்த அப்பாவி ஆதி திராவிடர்கள் அந்த அடிமை விலங்கை உடைத்தெறிவதற்கு சகோதரத்துவம் கூறிய இஸ்லாத்தை நோக்கி ஓடி வந்தனர்.

அவ்வாறு அடிமை விலங்கை உடைத்தெறிந்து கொண்டு இஸ்லாத்தை நோக்கி வந்து சமத்துவ அந்தஸ்தை அடைந்து கொண்டவர்களே நம்முடைய முன்னோர்கள் ஆவர் அவர்களுடைய வாரிசுகளே இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நானும், படித்துக் கொண்டிருக்கின்ற உங்களிலும் அதிகமானோர் ஆவோம்.

இன்று சமுதாயத்தில் சமத்துவத்துடனும், சகோதர வாஞ்சையுடனும் வாழ்ந்து வருகிறோம் என்றால் திருக்குர்ஆன் முழங்கிய விடுதலை முரசு என்பதை மறந்திடக் கூடாது. அதனால் திருக்குர்ஆனை உலகில் வாழக்கூடிய மற்ற எல்லா மக்களை விடவும் நாம் சங்கை செய்ய கடமைப் பட்டுள்ளோம்.

மனு தர்மத்தை உடைத்து மனித தர்மத்தை நிலை நாட்டிய மா மறையை மறந்தவர்களை நோக்கி

குர்ஆனை மறந்தவர்களை நோக்கி குர்ஆன் கூறுகிறது அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிரிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். 3:103

சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் நாடி இஸ்லாத்தை நோக்கி வந்தவர்களின் வாரிசுகளாகிய நாம் சமத்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்த திருமறைக்குர்ஆனை அழகுற ஓதி அது ஏவுகின்ற ஏவல்களை நமது வாழ்க்கையில் கடைபிடித்து ஒழுகி நடப்பதுடன் அது விலக்கும் விலக்கல்களிலிருந்து இயன்ற வரை விலகிக் கொண்டு வாழ்வதே தீண்டாமை விலங்கை உடைத்தெறிந்த திருக்குர்ஆனை சங்கை படுத்தியதாக அவ்லாஹ்விடம் கருதப்படும்.

எத்தி வைத்தால்

திருக்குர்ஆன் கூறும் சமத்துவமும், சகோதரத்தவமும் இன்றும் இந்தியாவின் அடிமைப் படுத்தப்பட்டிருக்கும் மக்களுக்கு எட்டாமல் இருந்து வருகிறது எட்ட விடாமல் அடிமை விலங்கு பூட்டிய ஆதிக்க வர்க்கம் தடுத்துக் கொண்டிருக்கின்றன. அவர்களது செவிப் புலன்களை '' இன்னமா அல் மூஃமினூன இஹ்வா '' இறைநம்பிக்கையாளர்கள் சகோதரர்களே ! எனும் திருமறை வசனம் அவர்களது செவிப்பறையை தட்டினால் அடுத்த கனமே அவர்கள் தங்களது அடிமை விலங்குகளை உடைத்தெறிவதற்கு இஸ்லாத்தை நோக்கி விரைந்தோட தயங்க மாட்டார்கள்.

அல்லாஹ்வின் நோன்பாளிகளே ! திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் திருக்குர்ஆனை அதிகம் ஓதி வருவதுடன் அது கூறும் ஏவல் - விலக்கல்களை நடைமுறைப் படுத்துவதுடன் அவரவர் சகதிக்குட்பட்ட அளவு சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் கூறும் சத்திய இஸ்லாம் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றடைய உடலாலும், பொருளாலும் உதவ முன் வர வேண்டும்.

எழுதியபடி எம்மையும், வாசித்தப்படி உங்களையும் அமல் செய்யும் நன் மக்களாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக !

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

No comments: