உலகில் ஆதிக்க வர்கத்தால் உருவாக்கப்படும் அனைத்து விதமான அடிமைத்தனத்திலிருக்கும் மக்களை விடுதலை செய்யும் ஆற்றலும் வல்லமையும் இணையற்ற வாழ்வியல் நெறியான இஸ்லாம் ஒன்றுக்கு மட்டுமே உள்ளது.
இஸ்லாத்தின் வீரியமிக்க அனைத்து கருவிகளும் எல்லா காலத்திலும் உயிர்ப்புடன் இயங்க வைக்கப்பட்டால் உலகில் எந்த ஒரு மனிதனையும் யாராலும் அடிமைப்படுத்திட இயலாது.
ஆனால் இஸ்லாத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கக் கடமையுடைய முஸ்லிம்கள் அதன் வீரியம் அறியாமல் வீணாக்கி வரும் அவலத்தை உலகம் முழுவதும் கண்டு வருகிறோம்.
இஸ்லாமானது வணக்க வழிபாடுகளுக்கும் சடங்கு சம்பிரதாயங்களுக்கும் மட்டுமே பொருந்தும். வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வல்லமை இஸ்லாத்திற்கு இல்லை என்ற மடமைத்தனம் முஸ்லிம்களிடம் மண்டிக் கிடக்கிறது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு வழிகாட்ட வேண்டியவர்களிடம் தான் இந்த எண்ணம் அதிகமாக உள்ளது.
இதனால் முஸ்லிம் சமுதாயம் பல நிலைகளிலும் சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்து வருகின்றனர். வழிகாட்டுவோர், மீட்டெடுப்போர் தன்னிலை மறந்து அலட்சியமாக கிடக்கின்றனர்.
இன்றைய முஸ்லிம்கள் சந்தித்து வரும் சோதனைகளில் மிக அடிப்படையானது தான் உடல்நலம்.
கடந்த 20 ஆண்டுகளில் விவசாயம், உணவு, சுகாதாரம் மற்றும் மருத்துவம் போன்ற மனிதனின் அன்றாட வாழ்வோடு தொடர்புடைய துறைகளில் அரசு அறிமுகப்படுத்திய தாராளமயம், உலகமயம் என்ற முதலாளித்துவத்தின் சுரண்டல் நிறைந்த வழிமுறைகளால் இந்தியச் சமூகமே சிக்கிச் சீரழிந்து வருகிறது. அதில் முஸ்லிம் சமுதாயமும் தனது வழிமுறை மறந்த காரணத்தால் சிக்குண்டு சீரழிந்து கிடக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக விவசாயத்தில் நமது பாரம்பர்ய வழிமுறைகள் பின்பற்றப் படாமல் மேற்கத்தியவாதிகளின் இரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் நமது நிலங்களில் அதிகம் கொட்டி அதில் உற்பத்தி செய்யப்படுகின்ற உணவுப் பொருட்களை உண்டதினால் மக்கள் அனைவரும் பெரும் வியாதியுடையவர்களாக மாறிவிட்டனர். இந்த நஞ்சு மிகுந்த உணவை உட்கொள்வதால் மக்களின் சேமிப்பும் பரம்பரை சொத்துக்களும் மருத்துவதிற்காக கரைந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக முஸ்லிம் சமுதாயம் சிறுகச் சிறுக சேமித்த சொத்துக்கள், குழந்தை குட்டிகளை பிரிந்து வாழ்நாளெல்லாம் அரபு மண்ணில் இரத்தம் சிந்தி உருவாக்கிய செல்வம் எல்லாம் மருத்துவத்திற்காக கரைந்து கொண்டிருக்கிறது.
விவசாயத்தில் விஷத்தைக் கொட்டி உணவை நஞ்சாக்கி மக்களை நோயாளிகளாக்கி அந்த நோய்க்கு மருந்தையும் புதிது புதிதாக அவர்களே உருவாக்கி அதைக் கொண்டு வந்து நமது தலையிலேயே கொட்டுகின்றனர். டன் கணக்கில் கொட்டப்படும் இராசாயனங்கள் மற்றும் பூச்சி மருந்துகளால் மக்களுக்கு புதுப்புது வியாதிகள் முளைக்கின்றன.
இவற்றிற்கு வைத்தியம் பார்ப்பதற்கு என்று புதிய புதிய பகாசுர மருத்துவமனைகள் முளைத்து மக்களை ஓட்டாண்டிகளாக்கி வருகின்றனர் இந்த படுபாவிகள் அடிக்கும் பகல் கொள்ளையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் என்று அனைவருக்கும் பங்கு.
போதாக் குறைக்கு அந்த நவீன மருந்துகளிலும் போலி மருந்துகள் வேறு மக்களிடத்தில் புழக்கத்தில் விடப்பட்டு அதிலும் கொள்ளை.
முஸ்லிம்களைப் பொறுத்த வரை விவசாயத்தில் குறைவானவர்களே ஈடுபடுகின்றனர். பிற மக்களைப் பார்த்து முஸ்லிம்களும் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ள இரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் பயன்படுத்துகின்றனர்.
பெரும்பான்மையான முஸ்லிம்கள் விவசாயம் என்றால் என்னவென்று கூட அறியாத மக்களாக வியாபாரிகளாகத் தான் இருக்கின்றோம். இதன் காரணமாக விவசாயத்தில் செய்யப்படுகின்ற இந்த படுபாதகச் செயலை நம்மால் புரிந்து கொள்ள இயலவில்லை.
உணவில் நஞ்சு. தாய்ப்பாலில் கூட நஞ்சு. நிலத்தடிநீர் மறைந்து வருகிறது. குளம், குட்டைகள் மாசடைந்து போய் மறைந்தும்விட்டன. கடலில் கொட்டப்படும் இரசாயனக் கழிவுகளால் கடலோர கிராம மக்களும் கடல் வாழ் உயிரினங்களும் அழிந்து வருகின்றன.
தமிழக கடலோர கிராமங்களில் குடிநீரில் ஏற்பட்ட அமிலத் தன்மையின் காரணமாக பெருவாரியான மக்களின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். இத்தனைக்குப் பிறகும் இவை ஏன் நடக்கிறது. யார் காரணம். இதற்கு என்ன செய்வது என்ற அடிப்படை சிந்தனை கூட இல்லாமல் மக்கள் தொலைக்காட்சி தொடர்களிலும் டாஸ்மாக் உற்சாகத்திலும் மூழ்கி கிடக்கின்றனர்.
மக்களின் உடல்நலம், சுகாதாரம், மருத்துவம் போன்ற அடிப்படை வாழ்வியல் வழிமுறைகளில் கடைபிடிக்க வேண்டிய இஸ்லாமிய நடைமுறைகள் குறித்து முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வழிகாட்ட வேண்டிய ஆலிம்கள், ஜமாஅத் நிர்வாகம், சமூக அமைப்புகள் இந்த சீரழிவுகள் குறித்து எந்த அக்கறையும் இன்றி அறியாமையில் இருக்கின்றனர்.
இனியும் இந்த அக்கிரமங்கள் குறித்து மக்களிடம் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையென்றால் பிறகு ஜமாஅத் நிர்வாகத்தின் பெயர் மட்டும் தான் பலகையில் இருக்கும். ஜமாஅத்தார்களான மக்கள் அனைவரும் நோயாளிகளாக மாறிவிடும் சூழல் ஏற்படும்.
அதேபோல அமைப்புகள் இருக்கும். ஆனால் கொடிபிடிக்கவோ கோஷம் போடவோ நிதிதிரட்டவோ தொண்டர்களிடம் வலிமை இல்லாமல் நோயாளிகளாக மாறிவிடுவார்கள்.
என்ன செய்வது?
முஸ்லிம்களுக்கு பொறுப்பேற்றுள்ள அனைவரும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு களம் இறங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மதரஸாக்களிலிருந்து பணியை தொடங்க வேண்டும். மதராஸாக்கள் விழித்துக் கொண்டு மக்களை சுற்றி வளைக்கும் இந்த விபரீதத்திலிருந்து அவர்களை பாதுகாத்திட முயற்சி எடுக்க வேண்டும்.
மதரஸாக்களில் பயிலும் மாணவர்களுக்கு இன்றைய விவசாய முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சொல்லி விவசாயம், உணவு உற்பத்தி, சுகாதாரம், சுற்றுச்சூழல் தொடர்புடைய விவகாரங்களில் இஸ்லாத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் அரசின் செயல்திட்டங்கள் குறித்து மிக நுட்பமாக போதிக்கப்பட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட பயிற்றுவிக்க வேண்டும்.
ஜும்ஆ மேடைகள்
இன்றைய நவீன உலகில் மக்களின் வாழ்க்கை முறையை பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையோடு ஒப்பீடு செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
வெறுமனே வானத்திற்கு மேல் உள்ளதையும் பூமிக்கு கீழ் உள்ளதையும் மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருந்தால் முஸ்லிம்கள் அனைவரையும் நோயாளிகளாக மாற்றிய பெருமை தான் ஆலிம்களுக்கு கிடைக்கும்.
கோபப்படாதீர்கள்! நிலைமை அவ்வளவு மோசமாகிக் கொண்டிருக்கிறது.
ஜமாஅத்
ஒவ்வொரு முஸ்லிம் கிராமங்களிலும் சுற்றுச்சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது. 30, 40 இலட்சம் செலவு செய்து பெருமைக்கு வீட்டை கட்டி கழிவுநீர் வாய்க்காலை வீட்டின் முன்பக்கம் ஓடவிடும் “சிறந்த” பழக்கம் முஸ்லிம்களிடம் நிலவுகிறது.
கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி கேந்திரமாக காட்சியளிக்கிறது. அரசை எதிர்பாராமல் ஜமாஅத் நிர்வாகம் தலையிட்டு மக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு ஊரின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய கடமையும் ஜமாஅத்திற்கு இருக்கிறது.
இது மார்க்கச் சட்டமாகவும் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.
“அசுத்தங்களை வெறுத்துவிடுங்கள் அல்லாஹ் தூய்மையாக இருப்போரை நேசிக்கின்றான்” -அல்குர் ஆன் – 2:222.
மருத்துவம்
நோய்களினால் தங்களது சொத்துக்களை இழந்து வரும் மக்களை மீட்டிட தயவு கூர்ந்து ஜமாஅத் நிர்வாகமும் ஆலிம்களும் சேர்ந்து பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உணவு, மருத்துவம் ஆகியவற்றை மக்களிடம் விரிவாக பிரச்சாரம் செய்ய வேண்டும்.
பெண்கள்
மாறிப்போன இந்த உணவு மற்றும் வாழ்க்கை முறையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பெண்கள் தான். இன்றைய தலைமுறை பெண்கள் ஏறக்குறைய 80 விழுக்காட்டினருக்கு இரத்த சோகை நோய் பிடித்துள்ளது.
17, 18 வயது நிரம்பிய பெண்களை மருத்துவத்திற்கு அழைத்துச் சென்றால் உடலில் இரத்தம் இல்லை என்று தான் மருத்துவர் கூறுகிறார். முதல் பிரசவத்திற்கே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. தாய்ப்பாலும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் குழந்தை இல்லை என்ற நிலை ஏற்படுகிறது. இது மிகமிக ஆபத்தானது. நாளடைவில் முஸ்லிம் மக்கள் தொகை குறைவதற்கு இதுவே முக்கிய காரணமாக அமையும்.
இதுகுறித்து அந்த அந்த ஜமாஅத் நிர்வாகமும் ஆலிம்களும் கடுமையாக விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்த வேண்டும்.
பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருத்துவ முறைகளோடு ஒன்றிப் போகக்கூடிய சித்தா, ஆயுர்வேதம், யூனானி போன்ற மருத்துவமுறை பயின்ற மருத்துவரை பள்ளிவாசல் வளாகத்தில் வைத்தே இலவசமாக மக்களுக்கு சிகிச்சை அளிக்க முன்வரவேண்டும். இதற்கு பெரிதாக ஒன்றும் செலவிட வேண்டிய அவசியம் இருக்காது.
இதுபோன்ற சேவைகளைச் செய்யும் போது முஸ்லிம் அல்லாத மக்களிடம் இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் நல்ல புரிதல் எற்படும் என்பதில் ஐயமில்லை.
100-150 ஆண்டுகளுக்கு முன்பாக மதரஸாக்களில் படித்து பட்டம் பெறும் அனைவரும் மார்க்கத்தோடு மாநபியின் மருத்துவத்தையும் கற்று மக்களுக்குச் சேவை செய்துள்ளனர் என்பதை மறந்துவிடக் கூடாது. அது தான் இஸ்லாமிய கலாச்சாரம்.
ஆங்கில வழி மருந்துகள் இந்த மண்ணில் அறிமுகப்படுத்தப்பட்ட 50-60 ஆண்டுகளிலேயே மக்கள் அனைவரும் தலைமுறை நோயாளிகளாக மாறிவரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
எல்லாவற்றிக்கும் சரியான, முறையான, நேர்த்தியான தீர்வை தந்துள்ள இறைவனையும் இறைத்தூதரையும் பின்பற்றாமல், நடைமுறைப் படுத்தாமல் இருந்தது நமது குற்றம்.
காலம் கடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து நாம் பணியாற்ற வேண்டும்.
சுற்றுச் சூழல்
மனிதன் தனது சுயநலத்தின் காரணமாக மனித இனத்திற்கும் இந்த பூமிக்கும் நன்மை பயக்கும் மரங்களை வரைமுறையற்று வெட்டிச் சாய்க்கின்றான். இறைவனுடைய அருள் என்ற மழையை பெய்வித்து பூமியை குளிரச் செய்யும் மரங்களை அவசியமில்லாமல் வெட்டுவதை இஸ்லாம் தடுக்கிறது என்பதை முஸ்லிம்களுக்கு உணர்த்த வேண்டும்.
அதைத் தான் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “நாளையே உலகம் அழியப் போகிறது” என்று தெரிந்தாலும் இன்று மரம் நடுவதை ஒரு மனிதர் நிறுத்திவிடக்கூடாது என்று கூறியுள்ளார்கள்.
ஊர் முழுவதும் கிடைக்கின்ற இடத்தில் எல்லாம் மரங்களை நட்டு வளர்ப்பதில் ஜமாஅத் நிர்வாகமும் ஆலிம்களும் ஆர்வம் காட்ட வேண்டும். குறிப்பாக மருத்துவ குணம் நிறைந்த வேப்பம், வேம்பு, இலுப்பை மரங்களோடு விலைமதிப்புள்ள தேக்கு செம்மரம் போன்றவைகளை வளர்த்திடும் போது வாழ்க்கை ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பயனுள்ளதாக அமையும்.
அதேபோல பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தை நிறுத்திட ஜும்மா மேடைகளை ஆலிம்கள் அதிகமதிகம் பயன்படுத்திட வேண்டும். விழிப்புணர்வு இல்லாத சமுதாயத்தில் எவ்வித வழிகாட்டுதலும் வெற்றி அடையாது. முஸ்லிம்களின் வாழ்வாதாரத்திற்கான முழு பொறுப்பும் கடமையும் ஜமாஅத் நிர்வாகத்திற்குத்தான் உள்ளது.
ஜமாஅத் நிர்வாகத்திடம் மாற்றம் ஏற்படாமல் முஸ்லிம் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது.
- சமூக நீதி முரசு
- http://ping.fm/OGBiD
----------------
No comments:
Post a Comment