"ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியல்ல; வெறும் 22 ஆயிரம் கோடி ரூபாய்தான் " அருண் ஷோரி
நீதியரசர் சிவராஜ் பாட்டீல்
2ஜி அலைக்கற்றை முறைகேடு குறித்து 2003ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்திட நீதியரசர் சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்ட அறிவிப்பு வந்தாலும் வந்தது பா.ஜ.க., வட்டாரத்தின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்துவிட்டது.
அவருடைய அறிக்கை வெளியாயிற்று. இந்தக் கால கட்டத்தில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக அருண்ஷோரி இருந்திருக்கிறார். 2003ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாகப் பதவியில் இருந்தவர்கள் தவறான முடிவு எடுத்துச் செயல்பட்டுள்ளனர் என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார்.
தன்னுடைய வேடம் அம்பலமாகி விட்டதே என்ற ஆத்திரத்தில் திரு அருண்ஷோரி படபடக்கிறார்; பதை பதைக்கிறார்.
நீதிபதி சிவராஜ் பாட்டீலின் அறிக்கையே தவறானது - உண்மையைத் திரித்துக் கூறுகிறது - மத்திய அரசைக் காப்பாற்றும் தன்மையில் அமைந்துள்ளது என்று குற்றப் பத்திரிகைப் படிக்கிறார்.
அருண்ஷோரி
அது என்ன தணிக்கைத் துறை அறிக்கை என்றால் அசல் நெய்யில் பொரித்தது; சிவராஜ்பாட்டீல் ஆணையத்தின் கருத்து என்றால் கலப்பட எண்ணெய்யில் பொரித்ததா?
தங்களுக்கு சாதகமாக இருந்தால், அரசியலில் துருப்புச் சீட்டாகப் பயன்பட்டால் அது சரியானது; தங்களுக்குப் பாதகமாக இருந்தால் அது தவறுடையது என்று கூறும் ஒரு மட்டக் கோலைத் தயாராக வைத்துக் கொண்டு இருக்கிறார்களோ!
பா.ஜ.க., ஆட்சிக் காலத்தில் 2ஜி அலைக்கற்றை விநியோகத்தில் என்னென்ன தவறுகள் நடந்தன?
யூகத்தின் - அனுமானத்தின் அடிப்படையில் அல்லாமல், இழப்பு என்ற கண்ணோட்டத்தையும் கடந்து உண்மையிலே ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்றெல்லாம் ஆதாரப் பூர்வமாகத் தகவல்கள் வெளி வந்திருக்கின்றன.
1999ஆம் ஆண்டு வாஜ்பேயி தலைமையில் அமைந்த அரசில்தான் இந்தப் பிரச்சினைக்காக கால்கோள் விழா நடத்தப்பட்டது. புதிய தேசியக் கொள்கையை இந்தத் துறையில் வகுத்தது வாஜ்பேயி தலைமையிலான பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தானே - இல்லை என்று மறுக்க முடியுமா?
பல தனியார் நிறுவனங்கள் வாஜ்பேயி காலத்தில் பெரும்பலன் பெற்றனர். அந்த நிறுவனங்கள் சிலரோடு பிரதமர் வாஜ்பேயின் வளர்ப்பு மகளின் கணவனுக்குத் தொடர்பு இருந்தது என்ற உண்மை அப்பொழுது வெளிப்படவில்லையா!
நிராராடியா
நிராராடியாவின் டேப் விவகாரத்தில் அந்தப் பெயர் இடம் பெற்றுள்ளதே - அதைப்பற்றி ஏன் வாயைத் திறப்ப தில்லை? உப்புக் கண்டம் பறி கொடுத்த பழைய பார்ப் பனத்தி கதையாக பா.ஜ.க. வட்டாரம் விழி பிதுங்குகிறதே!
தனியார் நிறுவனங்கள் நட்டப்பட்டன என்று கூறி அரசுக்குச் செலுத்தப்பட வேண்டிய 50 ஆயிரம் கோடி ரூபாய் முதல் கட்டமாகத் தள்ளுபடி செய்யப்பட்டதா - இல்லையா?
ஆ. இராசா அவர்கள்மீது இவர்கள் கூறும் குற்றச் சாற்று என்பது அனுமானத்தின் அடிப்படையிலானது. ஆனால் வாஜ்பேயி காலத்தில் நடைபெற்றதோ - அரசுக்கு வர வேண்டிய 50 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டதாகும்.
பா.ஜ.க., ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் திரு. சோலை அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று நக்கீரன் இதழில் (2011 சனவரி (1-4) விரிவாக வெளிவந்ததே!
அன்றைய தொலைத் தொடர்பு அமைச்சர் ஜக்மோகன் கண்டிப்பானவர். தனியார்துறை முதலாளிகளுக்கு ஆதரவாக லைசென்சு வழங்கும் முறையில் திருத்தங்கள் செய்யப்பட்டதை அவர் எதிர்த்தார். தொலைத் தொடர்புத் துறை லாபத்தில் இயங்க என்ன செய்யவேண்டும் என்று அவர் வாஜ்பேய்க்கு ஒரு பட்டியலையே அளித்தார். தனியார்த்துறை தொழில் அதிபர்களுக்குக் கடிவாளம் போடவில்லையென்றால், அவர்கள் செல்வம் கொழிக்கும் இந்தத் துறையையே சீரழித்து விடுவார்கள் என்றார்.
சுனில்மிட்டல்
ஆனால் ஏர்செல் கம்பெனி நிறுவனர் சுனில்மிட்டல் என்ன சொன்னார் தெரியுமா? இன்னும் சில மணி நேரங்களில் ஜக்மோகன் தூக்கி அடிக்கப்படுவார் என்றார். வருவாயைப் பெருக்க ஜக்மோகன் தந்த குறிப்பு கள் குப்பைக் கூடைக்குப் போயின. சுனில்மிட்டல் சொன்ன படி ஜக்மோகன் வேறு இலாகாவிற்கு மாற்றப்பட்டார்.
அப்போதுதான் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றது. ஊழல் என்றால் வருமானத்தில் இழப்பு அல்ல. உண்மையிலேயே தனியார் துறைக்கு அளிக்கப்பட்ட சலுகைகளின் போது ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றது.
ஊழல் என்றால் வருமானத்தில் இழப்பு அல்ல. உண்மையிலேயே தனியார் துறைக்கு அளிக்கப்பட்ட சலுகைகளின்போது ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. அந்த ஊழலைத்தான் மத்திய அமைச்சர் கபில்சிபல் அம்பலப்படுத்தினார் என்று மூத்த பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவலுக்கு அவர்கள் தரப்பிலிருந்து மறுப்பு வரவில்லையே - ஏன்?
நீதியரசர் சிவராஜ்பாட்டீல் அறிக்கை வெளிவந்ததும் வராததுமாகத் தாண்டிக் குதிக்கும் திருவாளர் அருண்ஷோரி சென்னைக்கு வந்தபோது என்ன கூறினார்? ஆ. இராசாவால் ஏற்பட்ட இழப்பு என்பது ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியல்ல; வெறும் 22 ஆயிரம் கோடி ரூபாய்தான் - தவறாகச் சொல்லாதீர்கள் என்று சொன்னாரா - இல்லையா?
வாஜ்பேயி காலத்தில் மிகவும் வெளிப்படையாக தனியார் துறைகளிலிருந்து அரசுக் கருவூலத்துக்கு வரவேண்டிய ரூபாய் 50 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டதைக் கணக்கில் கொண்டால், ஆ. இராசா காலத்தில் ஏற்பட்ட இழப்பு மிக மிகச் சாதாரணமானதாகும்.
அதே நேரத்தில் இந்த இழப்பு என்பதுகூட பொது மக்களுக்குக் குறைந்த செலவில் தொலைப்பேசி வசதி கிடைத்த இலாபத்தோடு இணைத்துப் பார்த்தால் அவ்வாறு கூறுவதுகூடத் தவறானதாகும்.
இவர்கள் துடியாய்த் துடிப்பதிலிருந்தே நீதியரசர் சிவராஜ் பாட்டில் ஆணையத்தின் அறிக்கை பல உண்மைகளை வெளியில் கொண்டு வந்திருக்கிறது. அது பா.ஜ.க.வின் முகத்திரையைக் கிழிக்கும் என்று தெரிகிறது.
விடுதலை தலையங்கம்
No comments:
Post a Comment