Thursday, February 26, 2009

எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான்!!

அல்லாஹ் படைத்த எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான், சில நாட்கள்
நல்லதென்றும் சில நாட்கள் கெட்டதென்றும் கருதுவது கூடாது. இது
இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் மிக பெரும் குற்றமும் மூட நம்பிக்கையுமாகும்.
ஒவ்வொரு நாளும் அது சிலருக்கு சந்தோஷமான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும்
சிலருக்கு கவலையான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும் இருக்கும். அல்லது
ஒருவருக்கு இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் நடக்கவும் செய்யும். இதை
வைத்து அந்த நாளை நல்ல நாள் என்றோ கெட்ட நாள் என்றோ கூறிவிட முடியாது.
இவ்வுலகம் சோதனைக் கூடமாகும். மரணிக்கும் வரை ஒவ்வொரு மனிதனும் பல விதமான
சோதனைகளைக் கொண்டு சோதிக்கப்பட்டுக் கொண்டே இருப்பான். சோதனைகள்
வரும்போது அதை ஒரு முஸ்லிம் பொறுத்துக் கொள்ளவும் பொருந்திக் கொள்ளவும்
வேண்டும். அது அவனுடைய பாவங்களுக்கு பரிகாரமாக அமைகின்றது.

இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும். இப்படி ஈமான் கொள்வது ஈமானின்
அடிப்படைகளில் ஒன்றாகும்.
அல்லாஹ்வையும் வானவர்களையும் நபிமார்களையும் கியாமத் நாளையும் நல்லதும்
கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது என்று ஈமான்
கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம்
ஆகவே நமக்கு நடக்கக்கூடிய நல்ல கெட்ட காரியங்கள் அனைத்தும் அல்லாஹ்
நம்மீது விதித்த விதியின்படியே நடக்கின்றதென்று நம்ப வேண்டுமே தவிர,
இன்று கெட்ட நாள், இதனால்தான் எனக்கு இந்த ஆபத்து நடந்ததென்று கூறுவது
மூட நம்பிக்கையும் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக்கூடிய ஒன்றாகும்.

சோதனையின்றி வாழ்வில்லை
அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள்,
உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால்
பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன்
2:155)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஃமினான ஆண்களும் பெண்களும் தூய்மையானவர்களாக (பாவமற்ற நிலையில்)
அல்லாஹ்வை சந்திக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் விஷயத்திலும் அவர்களின்
பிள்ளைகள் விஷயத்திலும் அவர்களின் பொருள் விஷயத்திலும் அவர்கள்
மரணிக்கும் வரை அவர்களுக்கு சோதனை வந்து கொண்டே இருக்கும். ஆதாரம்:
திர்மிதி

ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றது
ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை இது அல்லாஹ்வின்
ஏற்பாட்டினால் தான் (களா கத்ரினால்தான்) ஏற்பட்டதென்றும், நான்
பிறப்பதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இது எழுதப்பட்டு
முடிந்து விட்டதென்றும் இது நடக்காமல் இருப்பதற்கு வாய்ப்பே
இல்லையென்றும் நம்பாத வரை அவர்கள் உண்மையான முஃமினாக முடியாது.
இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், இப்னு உமரின் ஆத்மா யார்
கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! களாகத்ரை (விதியை) ஈமான்
கொள்ளாதவர், உஹது மலை அளவு தங்கத்தை அல்லாஹ்வின் வழியில் செலவு
செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்கமாட்டான் எனக்கூறி, இதற்கு ஆதாரமாக பின்வரும்
ஹதீஸை கூறினார்கள். அல்லாஹ்வையும் வானவர்களையும் ரஸுல்மார்களையும்
கியாமத் நாளையும் நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி
நடக்கின்றது என்று ஈமான் கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும் என நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

உபாதா பின் சாமித்(ரலி) அவர்கள் தன் மகனைப்பார்த்து, மகனே! உனக்கு
ஏற்படுகிற துன்பங்கள் அல்லாஹ்வின் விதியேயாகும். அது உனக்கு வராமல்
போய்விடாது என்ற உண்மையையும், உனக்கு ஏற்படாது சென்றுவிட்ட துன்பங்கள்
உனக்கு வரவேண்டியதல்ல என்ற உண்மையையும் நீ அறிந்து கொள்ளாதவரை நிச்சயமாக
நீ உண்மையான ஈமானின் சுவையைப் பெற்றுக் கொள்ளமாட்டாய் எனக்கூறி,
பின்வரும் ஹதீஸையும் எடுத்துக் கூறினார்கள்.

அல்லாஹ் எழுது கோலை முதலில் படைத்து நீ எழுது எனக் கட்டளையிட, எதை எழுத
வேண்டும் என அது கேட்க, இறுதிநாள் வரைக்கும் எல்லாவற்றிற்கும் உண்டான
விதிகளை எழுது என அல்லாஹ் கட்டளையிட்டான், என நபி(ஸல்) அவர்கள் கூற நான்
கேட்டுள்ளேன் எனக் கூறி, மகனே! இவ்வாறு விதியை நம்பாது ஒருவர் மரணித்து
விடுவாராயின் அவர் என்னை சார்ந்தவரல்ல என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள் எனவும் எடுத்துரைத்தார்கள். ஆதாரம்: அஹ்மத்

இப்னு அபூதைலமீ அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் உபை பின் கஃபை அணுகி, என்
உள்ளத்தில் விதியைப்பற்றி சிறிது சந்தேகம் உள்ளது. அதை நீக்குவதற்கு
ஏதாவது சொல்லித்தாருங்கள். அல்லாஹ் அந்த சந்தேகத்தை போக்கிவிடுவான் என்று
கூறினேன். அதற்கு உபை பின் கஃபு(ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
(இப்னு அபூ தைலமியே!) நிச்சயமாக உமக்கு ஏற்படும் துன்பங்கள் அல்லாஹ்வின்
விதியேயாகும். அது உமக்கு வராமல் போகாது எண்ற உண்மையையும், உமக்கு
எற்படாது சென்றுவிட்ட துன்பங்கள் உமக்கு வரவேண்டியதல்ல என்ற உண்மையையம்
அறிந்து, களா கத்ரைக் கொண்டு நீர் ஈமான் கொள்ளாதவரை உஹது மலை அளவு
தங்கத்தை செலவு செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். இவ்வாறு
நீர் களாகத்ரைக் கொண்டு ஈமான் கொள்ளாது மரணித்துவிட்டால் நீர்
நரகவாசிகளில் ஒருவரே என்றார்கள். பின்பு நான் அப்துல்லாஹ் பின்
மஸ்ஊத்(ரலி) அவர்களிடமும் ஹுஸைஃபா பின் அல்யமான்(ரலி) அவர்களிடமும்
வந்தேன். இவர்கள் எல்லோரும் இது போலவே நபி(ஸல்) அவர்கள் கூறியதாக
கூறினார்கள். ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்

சோதனை வருவது அல்லாஹ் நம்மீது வைத்திருக்கும் நேசத்தையே வெளிக்காட்டுகின்றது.
அல்லாஹ் தன் அடியாருக்கு நலவை நாடினால் இவ்வுலகிலேயே தண்டனை (சோதனை)யை
வழங்குகின்றான். அல்லாஹ் தன் அடியாருக்கு கெடுதியை நாடினால் மறுமையில்
தண்டனையை முழுமையாக வழங்குவதற்காக இவ்வுலகில் எவ்வித தண்டனையும்
(சோதனையும்) வழங்குவதில்லை, அதிக சோதனையுடன்தான் அதிக கூலியும்
கிடைக்கும், அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான். அதை
யார் பொருந்திக் கொள்கின்றார்களோ அவருக்கு அல்லாஹ்வின் பொருத்தம்
கிடைக்கின்றது, யார் அதை கோபிக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ்வின் கோபம்
கிடைக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி

ஸஃபர் மாதமும் மற்ற மாதங்களைப் போன்று நல்ல மாதம்தான்
சோதனைகள் அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றது என நம்ப வேண்டிய
ஒரு முஸ்லிம், ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்றும், அதில் நல்ல
காரியங்கள் செய்யக்கூடாது என்றும், பீடையயை களிப்பதற்காக ஸஃபர் மாதத்தின்
மூன்றாம் புதன் கிழமை ஆற்றில் குடும்பத்துடன் குளித்து இன்னும் இது போன்ற
பல சடங்குகளையும் செய்து அந்தப்பீடையை போக்கவேண்டும் என்று எண்ணி பல
சடங்கு சம்ரிரதாயங்களை ஸஃபர் மாதத்தில் நமது இஸ்லாமிய பல சகோதர சகோதரிகள்
செய்கின்றார்கள். இது இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான செயலும் மூட
நம்பிக்கையுமாகும். இப்படிப்பட்ட இஸ்லாத்திற்கு மாற்றமான நம்பிக்கைகளை
விட்டுவிட்டு அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது என்று நம்ப
வேண்டும். ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்றிருந்தால் அதை நபி(ஸல்)
அவர்கள் நமக்கு அறிவித்திருப்பார்கள். அப்படிப்பட்ட எந்த இறை வசனமோ நபி
மொழியோ கிடையாது. மாறாக ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்று நம்புவதை
தடுக்கும் நபிமொழியைத்தான் பார்க்க முடியும்.

இஸ்லாத்தில் தொற்றுநோய் என்பதில்லை, துர்ச்சகுணம் பார்ப்பது கூடாது,
ஆந்தை சாஸ்திரம் பார்ப்பதும் கூடாது, சஃபர் (மாத பீடையும்) கிடையாது,
நட்சத்திர சகுணம் பார்ப்பதும் கிடையாது, கொள்ளி வாய்ப் பிசாசுமில்லை என
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:
முஸ்லிம்

ஸஃபர் மாதத்தை பீடையுள்ள மாதம் என்பதற்கு, இந்த மூட நம்பிக்கையுள்ளவர்கள்
கூறும் காரணம், நபி(ஸல்) அவர்கள் ஸஃபர் மாத முற்பகுதியில் நோயுற்றிருந்து
அம்மாதத்தின் மூன்றாம் வாரத்தின் புதன் கிழமை நோயிலிருந்து
குணமடைந்தார்கள். ஆகவே அம்மாதம் பீடையுள்ள மாதமாகும், மூன்றாம் வாரத்தில்
நபி(ஸல்) அவர்கள் நோயிலிருந்து குணமடைந்தது போல், நாமும் பீடையை மூன்றாம்
வாரத்தில் நீக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால் இது முற்றிலும்
தவறான வாதமாகும். நோயுறுவது பீடையா? முன்பு கூறியது போன்று இது
அல்லாஹ்வின் விதிப்படி நடந்ததென்று ஒரு முஸ்லிம் நம்ம வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள், ஸஃபர் மாதத்தில் மட்டுமா நோயுற்றிருந்தார்கள், ரபீஉல்
அவ்வல் மாதத்திலும்தான் நோயுற்றிருந்தார்கள், இதை யாரும் மறுக்க
முடியாது. நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் கிட்டத்தட்ட 17 நாட்கள்
நோயுற்றிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12ல்
மரணித்தார்கள், அந்த நாளை யாராவது பீடையுள்ள மாதம் என்று
கூறுகின்றார்களா? அதை கொண்டாடும் நாளாக அல்லவா? எடுக்கின்றார்கள்.
நமக்குள் நாமே முரண்படுகின்றோம்.

ஆகவே ஸஃபர் மாதத்தையும் மற்ற மாதங்களைப் போன்று நல்ல மாதமாக நினைத்து
நமது அன்றாட காரியங்களை செய்ய வேண்டும். ஸஃபர் மாதத்தில் ஏதும் சோதனைகள்
வந்தால்கூட அது ஸஃபர் மாத்தினால் ஏற்படவில்லை, அல்லாஹ்வின்
ஏற்பாட்டினால்தான் வந்தது என்று நம்ப வேண்டும். இப்படிபட்ட உறுதியான
ஈமானை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!
நன்றி: அதிரை தமீம்
--
அன்புடன்,
தாருல்ஸஃபாவிலிருந்து சாதிக்.
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum

No comments: