Thursday, February 26, 2009

அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிக

அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள
வேண்டிய சில அடிப்படை விதிகள்:
முதல் அடிப்படை:
அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி வந்துள்ள அல்குர்அன்
வசனங்களையும் நபிமொழிகளையும் அணுகும் முறை.

அல்குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் பொறுத்தவரை அவை தருகின்ற
வெளிப்படையான கருத்திலேயே அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதில் எந்த
மாற்றமும் செய்யக் கூடாது. ஏனெனில் அல்குர்ஆன் அரபி மொழியிலேயே
அருளப்பட்டுள்ளது. அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் அரபு மொழியையே
பேசினார்கள்.

அல்குர்ஆனும் நபிமொழிகளும் தருகின்ற வெளிப்படையான கருத்துக்களை
விட்டுவிட்டு அவற்றுக்கு வேறு அர்த்தங்கள் கற்பிப்பது அல்லாஹ்வின் மீது
இட்டுக் கட்டுவதாக அமையும். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

'வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும் இரகசியமானதையும் எது
பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு
இணையாகக் கருதுவதையும் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக்
கூறுவதையுமே இறைவன் தடுத்துள்ளான் என (நபியே!) கூறுவீராக!' (அல்-அஃராப்
7:33) என்று அல்லாஹ் கூறுகிறான்.

மேற்கூறப்பட்ட அடிப்படையைப் பின்வரும் உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ يُنفِقُ كَيْفَ يَشَاء

'மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு
வழங்குவான்' (அல்-மாயிதா 5:64)

இந்த வசனத்தில் ' யதானி ' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரபு
மொழியில் யதானி என்பதன் பொருள் ' இரு கைகள் ' என்பதாகும்.

எனவே இவ்வசனத்திலிருந்து அல்லாஹ்வுக்கு இருகைகள் இருப்பதாகவே
விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு மாற்றமாக ' கை ' என்பதற்கு ' சக்தி '
என்று விளக்கம் கொடுப்பது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதாகவே அமையும்.

இரண்டாவது அடிப்படை:

அல்லாஹ்வுடைய பெயர்கள் தொடர்பானது.

1. அல்லாஹ்வுடைய திருநாமங்கள் அமைத்தும் அழகியவை, அழகின் சிகரத்தில்
உள்ளவை, அதில் எந்தக் குறையும் கிடையாது. அவை கூடவே பண்புகளையும்
கொண்டிருக்கின்றன.

'அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன'. (அல்-அஃராப் 7:180)

உதாரணமாக ' அர்ரஹ்மான் ' (அளவற்ற அருளாளன்) என்ற திருநாமத்தைக்
குறிப்பிடலாம். இந்தப் பெயர் கூடவே ' அருள் ' என்ற பண்பையும்
கொண்டிருக்கிறது.

அதேவேளை 'காலத்தைத் திட்டாதீர்கள். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ்
காலமாவான்' (முஸ்லிம் - 2246) என்ற ஹதீஸை வைத்து ' அத்தஹ்ரு ' (காலம்)
என்பது அல்லாஹ்வுடைய திருநாமங்களில் ஒன்று என்று கூற முடியாது. ஏனெனில்
இந்தச் சொல் அழகின் உச்சத்தையுடைய ஒரு பொருளை தருவதாக இல்லை. எனவே இந்த
ஹதீஸின் கருத்து, 'காலத்தை இயக்குகிறவன் அல்லாஹ்' என்றே புரிந்து கொள்ள
வேண்டும்.

ஹதீஸில் குத்ஸியில் அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்..

'எனது கையிலேயே அதிகாரம் இருக்கிறது. நானே இரவையும் பகலையும்
மாறிமாறி வரச் செய்கிறேன்'. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்:
புகாரி (7491), முஸ்லிம் (2246)

2. அல்லாஹ்வின் திருநாமங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையைக் கொண்டவையல்ல.

'யா அல்லாஹ்! உனக்குச் சொந்தமான ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான்
உன்னிடம் யாசிக்கிறேன். அந்தப் பெயரை நீயே உனக்குச் சூட்டியிருப்பாய்,
அல்லது உனது வேதத்தில் அதை நீ அருளியிருப்பாய், அல்லது உனது படைப்புகளில்
எவருக்கேனும் அதைக் கற்றுக் கொடுத்திருப்பாய், அல்லது மறைவானவை பற்றிய
ஞானத்தில் உன்னிடத்தில் அதை வைத்திருப்பாய்' என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.

(அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரழி), நூல்கள்: அஹ்மத், இப்னு ஹிப்பான்,
ஹாக்கிம், - சில்ஸிலா ஸஹீஹாவில் ஷேய்க் அல்பானீ (ரஹ்) அவர்கள் இதனை ஸஹீஹ்
என்று குறிப்பிடுகிறார்கள். ஹதீஸ் எண் - 199)

அல்லாஹ் தனது மறைவானவை பற்றிய ஞானத்தில் வைத்திருக்கும் அவனது
பெயர்களின் எண்ணிக்கையை அவனைத் தவிர வேறு எவராலும் அறிந்து கொள்ள
முடியாது.

'நிச்சயமாக அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றை யார்
சரிவர அறிந்து கொள்கின்றாரோ அவர் சுவனம் நுழைவார்' என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (நூல்கள்: புகாரி (6410), முஸ்லிம் (2677))

இந்த ஹதீஸ் மேற்படி ஹதீஸுடன் எந்த வகையிலும் முரண்பட மாட்டாது.
ஏனெனில் இந்த ஹதீஸ் அல்லாஹ்வின் திருப்பெயர்கள் 99 தான் என்று வரையறை
செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

3. அல்லாஹ்வின் திருநாமங்கள் அறிவினடிப்படையில் அமைந்தவையல்ல. மாறாக
அவை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களைக் கொண்டு தான் அமையும். எனவே அவற்றில்
கூட்டல், குறைத்தல் கூடாது. அல்லாஹ் தனக்குத் தாமாக சூட்டிக்கொண்ட,
அல்லது நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு இருப்பதாகச் சொன்ன) பெயர்களே தவிர
புதிதாக அவனுக்குப் பெயர்களை உருவாக்குவதோ, அல்லது அவன் தனக்கு சூட்டிக்
கொண்ட பெயர்களை மறுப்பதோ பெரும் குற்றமாகும்.

4. அல்லாஹ்வுடைய திருநாமங்கள் ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் தாத்தைச்
சுட்டிக்காட்டுகின்றன. அத்துடன் அது கொண்டிருக்கும் பண்பையும்
அறிவிக்கிறது.

மூன்றாவது அடிப்படை:

அல்லாஹ்வுடைய பண்புகள் (ஸிபத்துக்கள்) பற்றியது.

1. அல்லாஹ்வுடைய பண்புகள் அனைத்தும் உயர்ந்தவை, பூரணமானவை,
புகழுக்குரியவை. அவை எந்தக் குறைபாடும் கிடையாது.

வாழ்வு, அறிவு, ஆற்றல், கேள்வி, பார்வை, ஞானம், அருள், உயர்வு போன்ற
பண்புகளை உதாரணமாகக் கூறலாம்.

'அல்லாஹ்வுக்கோ உயர்ந்த பண்பு உள்ளது' என்று அல்லாஹ் கூறுகின்றான்.
(அந்நஹ்ல்16:60)

அல்லாஹ் பூரணமானவன் எனவே அவனது பண்புகளும் பூரணமாக இருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு பண்பு (ஸிஃபத்) பூரணத்துவம் இல்லாமல் குறைபாடுடையதாக
இருந்தால் அது அல்லாஹ்வுக்கு இருக்கக் கூடாத ஸிஃபத்தாகும். மரணம்,
அறியாமை, இயலாமை, செவிடு, ஊமை போன்ற பண்புகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அல்லாஹ் தன்னைக் குறைபாடுடைய ஸிபத்துக்களால் வர்ணிப்பவர்களைக்
கண்டிக்கிறான். அத்துடன் குறைகளிலிருந்து தன்னைப்
பரிசுத்தப்படுத்துகிறான்.
'ரப்பு' என்ற நிலையில் இருக்கும் அல்லாஹ் குறைபாடுடையவனாக இருப்பது அவனது
ருபூபிய்யத்தைக் களங்கப்படுத்தி விடும்.

ஏதாவது ஒரு ஸிஃபத் ஒரு பக்கம் பூரணமானதாகவும் இன்னொரு பக்கம்
குறைபாடு உள்ளதாகவும் இருந்தால் அந்தப் பண்பு அல்லாஹ்வுக்கு இருக்கிறது
என்றோ அல்லது இருக்கக் கூடாது என்றோ ஒட்டு மொத்தமாகக் கூறக்கூடாது. மாறாக
அதனைத் தெளிவு படுத்த வேண்டும். அதாவது அந்தப் பண்பு பூரணமாக இருக்கும்
நிலையில் அது அல்லாஹ்வுக்குரிய பண்பு என்றும் குறைபாடுடையதாக இருக்கும்
போது அல்லாஹ்வுக்கு இருக்கக் கூடாத பண்பு என்றும் கூற வேண்டும்.

உதாரணமாக, (المكر) மக்ர் (சூழ்ச்சி செய்தல்) (الخدع) கதஃ
(ஏமாற்றுதல்) போன்ற பண்புகளைக் குறிப்பிடலாம்.

'யாராவது சூழ்ச்சி செய்தால் பதிலுக்கு சூழ்ச்சி செய்தல்' என்ற
நிலையில் வரும்போது அது பூரணத்துவத்தை அடைகிறது. ஏனெனில் சூழ்ச்சி
செய்தவனை எதிர் கொள்ள முடியாத அளவு பலவீனன் அல்ல என்ற கருத்திலேயே இதனைப்
புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறல்லாமல் சூழ்ச்சி செய்தல் என்பது
குறைபாடான ஒரு பண்பாகும்.

முதல் நிலையில் இப்படிப்பட்ட பண்புகள் அல்லாஹ்வுக்கு இருக்க வேண்டிய
பண்புகளாகவும் இரண்டாவது நிலையில் இருக்கக் கூடாத பண்புகளாகவும்
காணப்படுகின்றன.

இந்தக் கருத்திலே தான் பினவரும் வசனங்கள் அமைந்திருக்கின்றன.

'அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர், அல்லாஹ்வும் சூழ்ச்சி
செய்கின்றான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்' (அல்-அன்ஃபால்:30)

'அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். நானும் கடும் சூழ்ச்சி
செய்கிறேன்' (அத்தாரிக்86:16,17)

'நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை
ஏமாற்றக் கூடியவன்' (அந்நிஸா4:142)

அல்லாஹ் சதி செய்யக்கூடியவனா என்று நம்மிடம் வினவப்பட்டால், ஆம்
என்றோ அல்லது இல்லையென்றோ பொதுப்படையாகக் கூறக்கூடாது. மாறாக யார்
சதிசெய்யப்படத் தகுதியானவர்களோ அவர்களுக்கு சதி செய்யக் கூடியவன்' என்றே
கூற வேண்டும். அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

2. அல்லாஹ்வுடைய பண்புகள் இரண்டு வகைப்படும்.

அ) (الثبوتية) அத்துபூதிய்யா: அதாவது அல்லாஹ் தனக்கு இருப்பதாகக்
கூறிய பண்புகள் (உதாரணம்: வாழ்வு, அறிவு, சக்தி) அவை அல்லாஹ்வுக்கு
இருக்கின்ற பண்புகள் என்று நம்ப வேண்டும்.

ஆ) (السلبية) அஸ்ஸலபிய்யா: அல்லாஹ் தனக்கு என்று மறுத்த பண்புகள்
(உதாரணம்: அநீதி இழைத்தல்)
இப்படிப்பட்ட அவனுக்கு இருக்கக் கூடாத பண்புகளை மறுக்க வேண்டும். அதே
நேரம் அதற்கு எதிரான பண்பு பூரணமான முறையில் அவனுக்கு இருக்கிறது என்று
நம்ப வேண்டும்.

உதாரணமாக,

'உமது இரட்சகன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்' (அல்கஹ்ஃபு18:49)
என்ற வசனத்தைக் குறிப்பிடலாம்.

இங்கு அநீதி இழைத்தல் என்ற ஸிஃபத்தை மறுக்கின்ற அதே நேரம் அவனுக்கு
பூரணமாக நீதி வழங்குதல் என்ற பண்பு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

3. அல்லாஹ்வுக்கு இருக்கக்கூடிய பண்புகள் (الصفات التبوثية) இரண்டு வகைப்படும்.

அ) அவனுடன் எப்போதும் இருந்து கொண்டிருக்கக்கூடிய பண்புகள் (உதாரணம்:
கேள்வி, பார்வை) இதற்கு அரபியில் (الذاتية) தாதிய்யா என்று சொல்லப்படும்.

ஆ) அவன் நாடினால் செய்யவும், நாடினால் செய்யாமல் இருக்கவும்
முடியுமான அவனுடைய செயல்களோடு தொடர்பான பண்புகள் (உதாரணம்: அல்லாஹ்
வருவான், இறங்குகிறான்) இதற்கு அரபியில் (الفعلية) ஃபிஃலிய்யா என்று
சொல்லப்படும்.

சிலவேளைகளில் ஒரே ஸிஃபத் பிஃலிய்யாவாகவும் தாதிய்யாவாகவும்
இருக்கும். உதாரணம்: (கலாம்) பேசுதல்.

4. ஒவ்வொரு ஸிபத் பற்றியும் பின்வரும் மூன்று கேள்விகள் எழுகின்றன.

1. அல்லாஹ்வுடைய ஸிஃபத்து யதார்த்தமானதா? அது ஏன்?

2. அல்லாஹ்வுடைய ஸிஃபத்தை விவரிக்க முடியுமா? ஏன்?

3. அதற்கு படைப்பினங்களின் ஸிஃபத்துக்களைக் கொண்டு உதாரணம் கூற முடியுமா? ஏன்?

முதலாவது கேள்விக்கான பதில்:

ஆம்! அல்லாஹ்வின் ஸிஃபத்துக்கள் யதார்த்தமானவை. அரபு மொழியில் ஒரு
சொல் பயன்படுத்தப்பட்டால் அதனுடைய யதார்த்தமான கருத்தில் அதனைப்
பயன்படுத்த வேண்டும் என்பதே அடிப்படை விதி. அது அல்லாத வேறு அர்த்தத்தில்
பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு சரியான ஆதாரம் வேண்டும்.

இரண்டாவது கேள்விக்கான பதில்:

அல்லாஹ்வுடைய பண்புகளை விவரிக்க முடியாது. 'அவனை அவர்கள் முழுமையாக
அறிந்து கொள்ள மாட்டார்கள்' (தாஹா20:110) என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவனுடைய ஸிஃபத்துக்கள் பற்றி அறிவால் அறிந்து கொள்ள முடியாது.

மூன்றாவது கேள்விக்கான பதில்:

அவனது பண்புகள் படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாக மாட்டாது.

'அவனைப் போல் எதுவும் இல்லை' (அஷ்ஷுரா26:11) என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் மிக உயர்ந்த பண்புகளுக்கு சொந்தக்காரன் என்ற வகையில் அவனைப்
படைப்பினங்களுக்கு ஒப்பிட முடியாது.

உதாரணம், விவரனம் இரண்டுக்குமிடையில் உள்ள வித்தியாசம்:

அல்லாஹ்வுடைய கை மனிதனுடைய கையைப் போன்றது என்று கூறுவது உதாரணம் கூறுவதாகும்.
அல்லாஹ்வுடைய கை இப்படிப்பட்டது என்று குறிப்பிட்ட ஒரு அமைப்பை அதற்கு
உருவாக்குவது விவரிப்பதாகும்.
இவை இரண்டுமே கிடையாது.

நாலாவது அடிப்படை:

அல்லாஹ்வுடைய பண்புகளை மறுப்போருக்கு மறுப்புச் சொல்லுதல்:

அல்லாஹ்டைய பண்புகளில் அல்லது திருநாமங்களில் எதையாவது மறுப்போர்
அல்லது குர்ஆன் ஹதீஸில் வந்துள்ளவற்றைத் திரிவுபடுத்துவோர் (المعطلة)
முஅத்திலா என்றும் (المؤولة) முஅவ்விலா என்றும் அழைக்கப்படுவர்.

இவர்களுக்குப் பொதுவாக நாம் சொல்லும் மறுப்பு:

நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அல்குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமானதாகும்.
ஸலஃபுகள் சென்ற வழிக்கு முரணானதாகும். மேலும் உங்களுடைய கூற்றுக்கு எந்த
பலமான ஆதாரமும் இல்லை என்பதாகும்
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum

No comments: