Thursday, February 26, 2009

வன்னி முகாங்களில் துன்புறுத்தப்படும் தமிழ்ப் பெண்கள்

வன்னி முகாங்களில் துன்புறுத்தப்படும் தமிழ்ப் பெண்கள்
செம்மதி


இங்கு வன்னியில் நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன. மக்கள் தினமும்
செத்துக்கொண்டு இருக்கிறார்கள். இலங்கையின் வரலாற்றில் இப்போதுதான்
மிகப்பெரிய மனிதப் படுகொலை நடைபெற்று வருகின்றது. ஊடக அடக்குமுறை காரணமாக
இவை வெளிவருவதில்லை. பாதுகாப்பு வலயம் என்று முல்லைத்தீவில் இலங்கை அரச
இராணுவத்தினால் அறிவிக்கப்பட்ட யுத்தசூனியப் பகுதிக்குள் மக்களை உள்வர
வைத்து அதற்குள் பலத்த எறிகணைத் தாக்குதலை நடத்தி பாரிய இனப் படுகொலையை
இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. புதுக்குடியிருப்பு வைத்தியசாலை
மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளுள் எறிகணைத் தாக்குதலில் மக்கள்
கொல்லப்பட்டபோது, 'பாதுகாப்பு வலயப்பகுதி இருக்கும்போது ஏன் இந்தமக்கள்
புதுக்குடியிருப்பில் நின்றார்கள்' எனக் கேள்வி கேட்ட இலங்கைப்
பாதுகாப்புப் பேச்சாளர், பின்னர் உடையார்கட்டு பாதுகாப்பு வலயத்தினுள்
அமைந்திருந்த வைத்தியசாலை மீது தாக்குதல் நடாத்தப்பட்டபோது 'பிரதான அரச
வைத்தியசாலை புதுக்குடியிருப்பில் இருக்கும்போது ஏன் மக்கள்
உடையார்கட்டில் நின்றார்கள்' என்று கேள்வி கேட்கின்றார். இது B.B.C
செய்தியைக் கேட்டவர்களுக்கு நன்கு புரிந்திருக்கும். இது மற்றவர்களை
முட்டாள்களாக்கும் விடயமாகக் காணப்படுகின்றது.

இன்னுமோர் சந்தர்ப்பத்தில் பேட்டி அளித்த பாதுகாப்புப் பேச்சாளர்
'மக்களின் பாதுகாப்பு வலயம் மீது தாம் தாக்குதல் நடாத்தவில்லை' என்று
கூறிவிட்டு பின் ஒரு சந்தர்ப்பத்தில் 'அங்கு இறந்தவர்கள் அனைவரும்
புலிகள்' என்கிறார். மக்களுக்கான பாதுகாப்பு வலயத்தினுள் ஏவப்பட்ட
எறிகனைகள் புலிகளை மாத்திரம் தேடித் தாக்கியிருக்கின்றன என்பது
மற்றவர்களை முட்டாள்கள் ஆக்கும் பேச்சாக உள்ளது. உண்மை அங்கு இறந்த
700க்கும் மேற்பட்டவர்களும் காயமடைந்த அனைவரும் அப்பாவித்தமிழ் மக்கள்
என்பதேயாகும்.

குண்டு வீச்சிற்குத் தாக்குப் பிடிக்க முடியாது அரச கட்டுப்பாட்டுப்
பகுதிகளுக்குள் வரும் மக்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய்
உள்ளனர். குறிப்பாக இளம்வயதினர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 148 பேர்
எந்தவித மரணவிசாரணையும் இன்றி வவுனியா பூந்தோட்டம் மயானத்தில்
புதைக்கப்பட்டுள்ளனர். 27-01-2009 செவ்வாய்க் கிழமை 5 இளம் பெண்களின்
உடல்கள் படையினரால் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இவை பாலியல் வல்லுறவிற்கு
உட்படுத்தப்பட்டு வாய்க்குள் துப்பாக்கியால் சுடப்பட்டுக் காணப்பட்டன.
இவர்களின் உடல்களில் கடிகாயங்கள் பரவலாகக் காணப்பட்டதாக நேரில்
பார்த்தவர்கள் கூறினர். வன்னியில் இருந்து வந்தவர்களைத் தடுத்து
வைத்துள்ள நலன்புர் நிலையங்களில் இளம் வயதினர் காணாமல்
போய்க்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இராணுவத்தால் கடத்தப்பட்டுக் கொலை
செய்யப்படுகின்றார்கள். இராணுவம் இவர்கள் தப்பிச்சென்றுவிட்டார்கள் என்று
கூறித் தப்பிவிடுகின்றது.

பெற்றோரும் உறவினரும் பிள்ளைகளையும் உறவுகளையும் பறிகொடுத்துவிட்டுத்
தவிக்கின்றனர். முகாங்களில் இளையவர்கள் அடிமைகளாக இராணுவத்தால் வேலை
வாங்கப்படுகின்றனர். இவ்முகாங்களில் இருந்து வெளியில் சென்று வர
அனுமதிக்கப்படுவதில்லை. இது போன்ற பல்வேறுபட்ட துன்பங்களால் மக்கள்
கொல்லப்பட்டும் துன்புறுத்தப்பட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் வவுனியா, மன்னார்ப்பகுதி மக்களுக்கும்
இலங்கையில் உள்ள நேர்மையான ஊடகத்துறையினருக்கும் தெரிந்த விடயமாகும்.
இருப்பினும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக எவரும் வாய்திறப்பதில்லை. தமிழ்
ஊடகங்களில் கூட இச்செய்திகள் வெளிவருவதில்லை

வவுனியா தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களை இரவு
வேளைகளில் அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறுகூடுகளுக்குள் விசாரணை என்று கூறி
அழைத்துச் சென்று பலரை பாலியல் சேட்டைகளுக்கு உட்படுத்தியுள்ளனர். பலரை
பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளனர். இங்குள்ளவர்கள் வெளியில்
சென்றுவரவோ வெளியில் உள்ளவர்கள் உட்செல்லவோ அனுமதி இல்லை. இவ்விடயம்
சம்மந்தமாக இங்கு சென்று வரும் வைத்தியசாலைப் பணியாளர்களுக்கு ஒரு
முறைப்பாடு கிடைத்துள்ளது. ஏனையவர்கள் வெளியில் செல்லப்
பயப்படுகின்றார்கள். இதைத் தடுப்பதற்கு ஏதாவது சட்டநடவடிக்கை
எடுக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும். இது போன்ற இன்னும் பல
பிரச்சனைகள் உள்ளன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum

No comments: