Saturday, December 1, 2012

டெல்லி போலீஸ் நடத்தியது போலி என்கவுண்டர்! – உயர்நீதிமன்றம்!


டெல்லி:டெல்லி மாநகரத்தில் தாக்குதல் நடத்த வந்தவர்கள் என குற்றம் சாட்டி என்கவுண்டர் மூலம் 7 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்த சம்பவம் போலியானது என கூறி விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றமும் உறுதிச்செய்தது. இது டெல்லி போலீசுக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்துச் செய்யக் கோரி டெல்லி போலீஸ் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் டெல்லி உயர்நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது.

போலி என்கவுண்டரில் கைது செய்த நபர்களை விடுதலைச் செய்ய உத்தரவிட்ட விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துச் செய்யும் சூழல் இல்லை என்று நீதிபதிகளான எஸ்.ரவீந்திர பட், எஸ்.பி.கார்க் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

2005-ஆம் ஆண்டு டெல்லி-குர்கான் எல்லையில் அரங்கேறியதாக கூறப்படும் என்கவுண்டர் போலியானது என்றும், அச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்களை விடுதலைச் செய்ய வேண்டும் எனவும் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே வேளையில் போலி என்கவுண்டரை உருவாக்கிய போலீஸ் குழுவில் நான்கு பேர் மீது வழக்கு பதிவுச் செய்ய வேண்டும் என்ற விசாரணை நீதிமன்ற உத்தரவில் சில திருத்தங்களை டெல்லி உயர்நீதிமன்றம் மேற்கொண்டது. இவர்கள் மீது விசாரணை நடத்தி துறை சார்ந்த நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியது.

2005 ஜூலை 5-ஆம் தேதி டெல்லி-குர்கான் எல்லையில் காரில் சென்று கொண்டிருந்த தீவிரவாதிகளை என்கவுண்டர் மூலம் சரணடைய வைத்ததாக டெல்லி போலீஸின் சிறப்புக் குழு கூறியது.

ஸாகிப் ரஹ்மான், நஸீர் அஹ்மத் சூஃபி, குலாம் மொய்னுத்தீன் தர், பஷீர் அஹ்மத், ஷா ஆகியோர் காரில் இருந்து பிடிக்கப்பட்டதாக போலீஸ் கூறியது. ஏ.கே.47 துப்பாக்கி, காட்ரிட்ஜ், கிரேனேடுகளுடன் காரில் சென்று கொண்டிருந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டபொழுது போலீஸ் குழுவின் தலைவராக இருந்த ரவீந்தர் தியாகி திருப்பிச் சுட்டு அவர்களை கைது செய்ததாக போலீஸ் கூறியது. ஆனால் போலீஸின் கூற்றை முற்றிலும் நிராகரித்த விசாரணை நீதிமன்றம் அவ்வாறு ஒரு என்கவுண்டர் நடைபெறவில்லை என்றும், இது போலியாக இட்டுக் கட்டியது என்றும் கண்டறிந்தது.

சிறப்பு போலீஸ் குழுவின் எஸ்.ஐக்களான ரவீந்தர் தியாகி, நிராக்கர், மஹேந்தர் சிங் ஆகியோர் இணைந்து தயாரித்த திரைக்கதை தான் இந்த போலி என்கவுண்டர் நாடகத்தில் அரங்கேறியதாக நீதிமன்றம் குற்றம் சாட்டியது.

Source: http://ping.fm/LnUWr

No comments: