கவலையில்லாத கரும்புச் சாறு உற்பத்தி!
கரும்புகளை ஆலைக்கு அனுப்புவதோடு மட்டுமல்லாமல் சொந்தமாக கரும்புச் சாறு பிழியும் தொழிலையும் தொடங்கி சாறு விற்பனை மூலமாக வெற்றிகரமான வருமானத்தை ஈட்டி வருகிறார் முகுந்தன்.
“பெரிய அளவிலெல்லாம் கரும்பு விவசாயம் செய்யல. ரெண்டு ஏக்கர்ல இயற்கை முறையில கரும்பு விவசாயம் பண்ணிக்கிட்டிருக்கேன். ஏக்கருக்கு 40 டன் கரும்பு விளையுது. இயற்கை முறைங்கிறதால பெருசா செலவில்லாமலே நல்ல விளைச்சல் கிடைக்குது.
வருஷக்கணக்கா சர்க்கரை ஆலைக்குத்தான் கரும்பை வித்துக்கிட்டிருந்தேன். போன வருஷம் வரை, எல்லார் மாதிரியே கரும்பு விலைக்காக புலம்பிக்கிட்டுதான் இருந்தேன். இந்த சமயத்துல தான் எனக்கு திடீர்னு ஒரு யோசனை… ‘நம்மளே ஏன் சாறு பிழிஞ்சு விக்க கூடாதுன்னு’ நினைச்சேன்.
தெருக்கள்ல விக்கிற கரும்புச் சறை எல்லாரும் போய் குடிக்கறதில்ல. அதே சமயம், பாக்கெட்டுல அடைச்சு, குளுமையா சந்தைபடித்தினா… நிச்சயமா வரவேற்பு இருக்கும். அதுக்குப் பிறகு கரும்புச் சாறு மேல எல்லாருக்குமே ஒரு ஈடுபாடு வரும். அதோட தேவையும் அதிகரிக்கும்.
துணிஞ்சு களத்துல இறங்கினேன.. சோதனை முயற்சியா விற்பனை பண்ணி பார்த்தேன். பாட்டில் குளிர்பானங்களோட கெடுதலை உணர்ந்த மக்கள், நான் கொடுத்த கரும்புச் சாறுக்கு ஆதரவு கொடுத்தாங்க. நல்ல லாபமும் கிடைக்கவே… கரும்புச் சாறு விற்பனையை விரிவுபடுத்தப் போறேன்” என்று மகிழ்ச்சி பொங்க சொன்னார் முகுந்தன்.
சாறு பிழிய அவசியம் இயந்திரம் வேண்டும். கையால் இயக்கும் இயந்திரத்தைவிட, டீசல் மோட்டாரில் இயங்கும் இயந்திரம் வாங்கிக் கொள்வது நல்லது. வெவ்வேறு தொழில்நுட்பங்களுடன் பல விலைகளில் இது கிடைக்கிறது. தேவையை பொறுத்து இயந்திரத்தை தேர்வு செய்யலாம். சாறை நேரடியாக விறபனை செய்வதைவிட, பாக்கெட்டில் அடைத்து சந்தைப்படுத்துவதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். தவிர, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சாறை குளிர்நிலையில் ஒருவாரம் கூட கெடாமல் வைத்திருக்க முடியும். அதனால் பாக்கெட் போடும் இயந்திரம் ஒன்றையும் வாங்கிக் கொள்வது நல்லது.
ஆறு முதல் எட்டு மாதம் வரை நன்கு வளர்நத கரும்பிலிருந்துதான் சாறு பிழிய முடியும். அடிக்கரும்பில்தான் சாறு அதிகம் கிடைக்கும். கரும்பைப் பிழிவதற்கு முன்பு அதன் தோல் பகுதியை நன்றாக சீவி எடுத்துவிட வேண்டும். அப்படி செய்தால்தான் சாறு வெள்ளை நிறத்தில் இருக்கும்.
சாறோடு சொட்டுத் தண்ணீர் கூட கலக்கக் கூடாது. முக்கியமாக, அதைக் குளுமைப்படுத்த, ஐஸ் கட்டிகளைச் சேர்க்கக் கூடாது. அது சாறின் சுவையைக் குறைத்து விடும். பிழியும் போது, வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப எலுமிச்சம்பழம், இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம். சாறாகப் பிழிந்த உடனே அதை பாக்கெட்டில் அடைத்துவிட வேண்டும். பாக்கெட்டில் நிரப்பிய கரும்புச் சாறை சுமார் 4 டிகிரி சென்டிகிரேட் குளிர் நிலையிலேயே வைத்திருத்தல் அவசியம்.
சந்தைப்படுத்துவதும் ரொம்ப சுலபம்தான். பக்கத்தியுலுள்ள கடைகளில் கொடுத்து விற்கச் சொல்லலாம். மருத்தவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாதிரியான மக்கள் அதிகமாக கூடுகிற இடங்களில் ஆட்களை வைத்த விற்பனை செய்தாலே சுலபமாக விற்கலாம். கரும்புச் சாறு விறபனையை ஆண்ட முழுவதும் செய்ய முடியாது. பிப்ரவரி முதல் ஜீலை மாதம் வரைதான் செய்ய முடியும். இந்த மாதங்களிலேயே நல்ல லாபத்தை எடுத்துவிட முடியும்.
இன்னிய நிலைமைக்கு கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகள்ல ஒரு டன் கரும்புக்கு 1,437 ரூபாய் கொடுக்கறாங்க. தனியார் ஆலைகள்ல ஒரு டன் கரும்புக்கு1,740 ரூபாய் வரைக்கும் கொடுக்கறாங்க. தமிழ்நாட்டுல சராசரி கரும்பு விளைச்சல் ஏக்கருக்கு 38 டன்தான். சிலர் 60 டன் வரைக்கும் கூட அறுவடை பண்றாங்க. ஆலைக்கு அனுப்புற கரும்புல கொஞ்சத்தை மட்டும் நிறுத்தி, அதுல சாறு பிழிஞ்சாலே… நல்ல லாபம் எடுக்கலாம்.
ஆரம்பத்துல 100 கிலோ கரும்பைப் பிழிஞ்சதுல, 55 லிட்டர் சாறு கிடைச்சது. இதை 300 மில்லி பாக்கெட் 7 ரூபாய், ஒரு லிட்டர் பாக்கெட் 23 ரூபாய்னு விற்பனை செஞ்சேன். கணக்குப் பார்த்தா… வெறும் நூறு கிலோ கரும்புலயே 1,150 ரூபாய் கிடைச்சுடுச்சு. அப்போ ஒரு டன்னுக்கு கணக்கு பண்ணினா… 11,500 ரூபாய். ஆரம்பத்துல இயந்திரத்துக்கான முதலீடுதான் கொஞ்சம் அதிகமா இருக்கும். அதுக்குப் பிறகு… பாக்கெட், பாட்டில், போக்குவரத்து இதெல்லாம் கம்மியான செலவுதான். தொடர்ந்து செய்றப்ப ஈலையில் கிடைக்கிற வருமானமெல்லாம்… இதுக்கு பக்கத்துலகூட நிக்க முடியாது” என்று சவால்விட்டுச் சொன்னார்.
நன்றி
விவசாயி முகுந்தன்
செங்கல்பட்டு
No comments:
Post a Comment