காவல்துறை உருவாக்கும் ஐ.எஸ்.ஐ ஏஜண்ட்: ஏழை முஸ்லிம் (ஹனீஃப்)ன் சோகக்கதை!!!
புதுடெல்லி,ஜன.15:எவ்வித ஆதாரமும் இல்லை, நீதிமன்றத்திலும் நிரூபிக்கமுடியவில்லை ஆனால் அஸ்ஸாம் போலீசாரால் முஹம்மது ஹனீஃப் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் ஏஜண்டாகவே கருதப்படுகிறார்.
போலீசாரால் பொய்யான வழக்கு ஜோடிக்கப்பட்டு எளிதாக பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் ஹனீஃப். ஏழ்மையில் வாடும், எதுவும் செய்யவியலாத, பலகீனமான மனிதரான ஹனீஃப் எப்படி போலீசாரால் ஐ.எஸ்.ஐ ஏஜண்டாக மாற்றப்பட்டார்?
இது இந்திய காவல்துறை மற்றும் உளவுத்துறையை பொறுத்தவரை சிக்கலான கேள்வியே அல்ல.
ஹனீஃப் தனது உறவினர்களை காண்பதற்காக பாகிஸ்தானுக்கு ஒருமுறை சென்றுள்ளார். மேலும் அவர் ஒரு இந்திய முஸ்லிம். இதை விட என்ன ஆதாரம் வேண்டும் நமது உளவுத்துறைக்கு.
ஹனீஃபின் சோகக்கதை
ஹனீஃப் மீது தீவிரவாதி என முத்திரைக்குத்தி பொய்யான வழக்கில் சிக்கவைத்தனர். தொடர் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டார். ஆனால், அவரோ, தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கிற்கு வாதாட ஒரு வழக்கறிஞரை நியமிக்கக்கூட பணம் இல்லாத ஒரு ஏழை.
உத்தரபிரதேச மாநிலம நொய்டா மாவட்டத்தில் ஜேவார் என்ற ஊரைச் சார்ந்த பாபுகானின் மகன்தான் முஹம்மது ஹனீஃப். அவருக்கிருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியும் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13-ஆம் தேதி இரவோடு முடிவுக்கு வந்தது. அன்றிரவு உ.பி. மாநில போலீசாரால் திடீரென கைதுச் செய்யப்பட்ட முஹம்மது ஹனீஃப் ஒரு வாரம் முழுவதும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்.
ஹனீஃப் கைதுச் செய்யப்பட்டதற்கு கூறப்பட்ட காரணம் அவர் ஒரு ஐ.எஸ்.ஐ ஏஜண்ட். அஸ்ஸாம் மாநில டிஸ்பூரில் ராணுவ முகாமிலிருந்து ஹனீஃப் முக்கியமான ஆவணங்களை களவாடி டெல்லியில் செயல்படும் பாகிஸ்தானைச் சார்ந்த உளவுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தாராம்.
ஹனீஃப் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியையும், அக்கிரமத்தையும் twocircles.net என்ற இணையதள பத்திரிகை நிரூபரிடம் தெரிவித்துள்ளார்.
சட்டத்திற்கு புறம்பாக கைதுச் செய்யப்பட்ட ஹனீஃப் போலீசாரால் ஒரு வாரம் முழுவதும் கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மூன்றாம் தர சித்திரவதை(third degree torture) என அழைக்கப்படும் கர்ணக்கொடூரமான சித்திரவதைகளும் அதில் அடங்கும்.
"எனது கால்களில் இப்பொழுதும் அந்த வேதனையை அனுபவிக்கிறேன். அவர்கள் என்னை மிருகங்களைப்போல் சித்திரவதைச் செய்தார்கள்"-ஹனீஃப் கூறுகிறார்.
கடுமையான சித்திரவதைகளுக்கு பிறகு ஒரு தினம் மூத்த அதிகாரியொருவர் ஹனீஃபிடம் விசாரணை நடத்தியுள்ளார். பின்னர், தனது கீழ் அதிகாரிகளிடம் ஹனீஃபைக் குறித்து, "இவர் நாம் தேடும் நபரல்ல. இவரை விட்டுவிடுங்கள்" எனக் கூறிச் சென்றுள்ளார். ஆனால், போலீசார் ஹனீஃபை விடுவதாக இல்லை.
அவரிடம், "நீ சில பணக்கார முஸ்லிம்களின் பெயரைச் சொல். அவர்களிடம் உங்களை தீவிரவாதிகள் எனக்கூறி உள்ளேத் தள்ளிவிடுவோம் என மிரட்டி பணத்தை கறக்கலாம்" என கூறியுள்ளனர். ஆனால், ஏழையான ஹனீஃப், "எனக்கு எந்த பணக்கார முஸ்லிம்களின் பெயரும் தெரியாது. தெரிந்தாலும், அவர்கள் மீது பழிபோடுவது தவறு" எனக் கூறி மறுத்துள்ளார்.
ஹனீஃப் மறுத்ததால் அவர் மீது கோபங்கொண்ட அதிகாரிகள் இவரை வழக்கில் குற்றவாளியாக சேர்த்துள்ளனர். இவ்வழக்கு அஸ்ஸாம் மாநிலத்துடன் தொடர்புடையதாகும். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் அஸ்ஸாம் மாநிலம் திஸ்பூர் ராணுவ முகாமில் பணியாற்றியவராவார். அவருடைய பெயரும் ஹனீஃப்தான். பின்னர் ஆறு மாதங்களாக ஹனீஃப் அஸ்ஸாம் சிறையிலும், டெல்லியின் திகார் சிறையிலும் அலைக்கழிக்கப்பட்டார்.
ஆறுமாதம் கழித்து அதாவது 2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெருந்தொகையை ஜாமீன் தொகையாக கொடுத்து விடுதலையானார் அவர்.
வறுமையும் வேதனையும்
சிறையிலிருந்து வெளியான ஹனீஃப் ஒரு சோதனையிலிருந்து விடுபட்டு மற்றொரு சோதனைக்கு ஆட்படுத்தப்பட்டார். இதுநாள் வரை உடல்ரீதியான சித்திரவதைகளை சிறையில் அனுபவித்தவர், விடுதலையான பிறகு மனோரீதியான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்.
ஹனீஃபின் விடுதலைக்காக அவருடைய தந்தை வசித்த வீட்டை விற்றுத்தான் பணத்தை திரட்டியுள்ளார். இதனால் ஹனீஃபின் குடும்பம் வீதிக்கு வந்தது. வசிப்பதற்கு வீட்டை வாடகைக்கு அளிக்க எவரும் தயாரில்லை. காரணம், சமூகத்தில் ஹனீஃப் ஒரு தீவிரவாதியாகவே பார்க்கப்பட்டார்.
மற்றொரு புறம் வறுமையும் ஹனீஃபையும் அவருடைய குடும்பத்தினரையும் வாட்டியது.
twocircles இணையதள நிரூபர்கள் ஹனீஃபை காணச் சென்றபொழுது ஒரு சிறிய அறையில் வசித்துவந்தார் அவர். அதில்தான் அவரும் அவருடைய மனைவி ஃபரீதாவும், 3 மகள்களும் மிகுந்த சிரமத்திற்கிடையே வசித்து வருகின்றனர்.
தான் தீவிரவாத வழக்கில் கைதுச் செய்யப்பட்டவர் என தெரிந்தால் இந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக தன்னை வெளியேற்றி விடுவாரோ என்ற அச்சத்தில் ஹனீஃப் உள்ளார். காரணம் இதற்கு முன்னர் இவ்வாறு நான்கு வீடுகளிலிருந்து ஹனீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் உரிமையாளர்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சட்ட மற்றும் பொருளாதார உதவியை எதிர்பார்க்கும் ஹனீஃப்
தற்போதைய சூழலில் ஹனீஃப் வழக்கில் ஆஜராக அஸ்ஸாம் மாநிலத்திற்கு செல்வதற்கு பொருளாதார உதவியையும், சட்ட உதவியையும் எதிர்பார்த்து உள்ளார். அவருக்காக வாதாடிய வழக்கறிஞர், கட்டணமாக ஹனீஃபிடம் 500 ரூபாய்கூட இல்லை எனத் தெரிந்த பிறகு வழக்கில் வாதாடுவதிலிருந்து வாபஸ் பெற்றுவிட்டார்.
மனித நேயங்கொண்ட வழக்கறிஞரான கோடோகி, ஹனீஃபின் வழக்கு விபரங்களை பார்த்துவிட்டு, ’ஹனீஃபின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு மிகவும் பலவீனமானது. இதில் அவருக்கெதிராக எவ்வித ஆதாரமும் இல்லை. ஹனீஃப் அஸ்ஸாம் மாநில உயர்நீதிமன்ற வழக்கறிஞருக்கு வழக்கை வேகமாக முடிக்க கடிதம் எழுதவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக நீளும் இவ்வழக்கில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள ஹனீஃப் மாதந்தோறும் வழக்கிற்காக அஸ்ஸாம் செல்வதற்கே ரூ.2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் வரை குறைந்தபட்சம் செலவாகிறது என பரிதாபத்துடன் தெரிவிக்கிறார்.
இது வரை நீதிக்கிடைக்காத ஹனீஃப் வாய்தாவுக்கு மேல் வாய்தா என இழுத்தடிக்கப்பட்டு சில மாதங்களில் 2 முறை அஸ்ஸாமுக்கு செல்ல நேர்ந்துள்ளதாக கூறுகிறார். இதில் சுவராஸ்யமான சம்பவம் என்னவெனில், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேர்களில் 4 பேர் கீழ் நீதிமன்றங்களில் லஞ்சத்தைக் கொடுத்து வழக்கிலிருந்து நிரபராதி என தீர்ப்பை பெற்றதாக கூறுகிறார் அப்பாவியான ஹனீஃப்.
தனது நிற்கதியான சூழலால் மன அழுத்தத்திற்கு ஆளான ஹனீஃப் முன்பு ஒருமுறை தற்கொலைக்கு முயன்றதாக அவருடைய மனைவி ஃபரீதா கூறுகிறார். இவ்வழக்கினால் தங்களது வாழ்க்கையே இன்னலுக்கு ஆளானதாக கூறும் ஃபரீதா, கட்டணம் கட்டுவதற்கு பணமில்லாததால் தங்களது 3 மகள்களையும் பள்ளிக்கூடத்திற்கு கூட அனுப்ப இயலவில்லை என வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.
"அம்மா நாங்க எப்பம்மா ஸ்கூலுக்கு போவோம்?" சிமிட்டும் விழிகளுடன் ஹனீஃபின் மகள் சிறுமியான ஃபாத்திமா கேட்கிறார். அவரை அவநம்பிக்கையுடன் கூடிய வெறித்த கண்களுடன் நோக்குகிறார் ஹனீஃப்.
இவ்வழக்குப் பற்றி உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன் கூறுகையில், "இது புதிதானது அல்ல. இதுபோல் ஏழையான, எதுவும் செய்யவியலாத, நிரபராதிகளான நூற்றுக்கணககான முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக விசாரணையே இல்லாமல் பொய்வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு சிறையில் வாடுகின்றனர். இதற்கு காரணம், இந்தியாவின் போலீஸ் துறையும், உளவுத்துறையும் வகுப்புவாத மயமாக்கப்பட்டதுதான். இதற்கு ஒரே வழி, உயர் மட்டக்கமிட்டி ஒன்று நியமிக்கப்பட்டு, இவ்வழக்குகளை பரிசீலித்து போலியாக சுமத்தப்பட்டுள்ள தீவிரவாத வழக்குகளை தள்ளுபடிச் செய்யவேண்டும். மேலும், தீவிரவாதிகள் எனக்கூறி கைதுச் செய்யப்படும் நபர்கள் நிரபராதிகள் என தெரிந்தால், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை சட்டரீதியாக தண்டிக்க வேண்டும்." எனத் தெரிவித்தார்.
Source:twocircles.net & paalaivanathoothu.
No comments:
Post a Comment