கிட்சன் வென்ச்சர்
“எப்பப்பாரு நெட்லயே உட்கார்ந்துட்டு இருக்கீங்க! வீட்டுல உங்களுக்கு ஒரு வேலை இல்லை” இப்படி அடிக்கடி சொல்வாள் என் 13 வயது மகள் லாஃபிரா. இத்துணைக்கும் வேலைக்கு ஆள் கூட தற்சமயம் இல்லை. நான் வெகு வேகமாக எல்லா வேலைகளையும் முடித்து விடுவதால், அவளுக்கு அப்படி தோன்றி இருக்கிறது.
9த் படிக்கும் அவளுக்கு 10த் ஆங்கில பாடத்தில் வரும், "Mrs.March Takes A Break" என்னும் பாடம் நடத்தினேன். அதில் Mrs.Marchக்கு ஒரு நாள் முழுக்க ஓய்வு கொடுத்து விட்டு, நான்கு மகள்களும் சமைக்க, உப்பு போடுவதற்கு பதில் சர்க்கரை போட்டு ஒரே காமடியாக இருக்கும்.
இது போல ஒரு நாளின் சமையல் பொறுப்பை அவள் ஏற்றுக் கொள்கிறேன் என்றாள். அதன்படி, முதல் நாள் இரவு நான் கிச்சனை படுசுத்தமாக ஒப்படைத்தேன். அடுத்த நாள் இரவு இதே போல என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒப்பந்தம். ஆக மொத்தம் நேற்று(ஞாயிறு) முழுக்க முழுக்க அவளுடைய தர்பார்.
சனிக்கிழமை, அவங்க பாட்டிக்கு போன் செய்து, மெனு தயார் செய்து, செய்முறை விளக்கம் கேட்டுக் கொண்டாள். இரவு ஒன்பது மணியிலிருந்து அவங்கப்பாவை விரட்ட ஆரம்பித்தாள், அடுத்த நாளைக்கு தேவையான சாமான்கள் வாங்கி வரும்படி. அவரோ, அசைந்த பாடில்லை. காலையில் வாங்கித் தருகிறேன் என்றபடி சுவாரஸ்யமாக டி.வி.யில் மூழ்கி இருந்தார்.
“பார்த்தியாமா, வீட்டுக்கு சாமான் வாங்குவது எவ்வளவு கஷ்டமென்று” அமைதியாகச் சொன்னேன்.
விடுவாளா? ஒரு வழியாக அப்பாவைக் கிளப்பி, இரவு 10 மணிக்கு பக்கத்து கடைக்குப் போய் சாமான் வாங்கி வந்தார்.
அதன் பிறகு, ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு என்னை துளைத்தெடுத்தாள். “உருளைக்கிழங்கு வேகவைக்க எத்துணை லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும்?” முருங்கைக்காயை எத்துணை செண்டிமீட்டர் நறுக்க வேண்டும்?” போன்ற சில்லி கொஸ்டியன்ஸ். அவ கேள்வி தாங்காம, கிட்சன் வென்ச்சரை வாபஸ் வாங்கிடலாமா என்று கூட தோன்றியது.
காலையில் நான் நன்றாக தூங்கி விட்டேன். சரியா 9 மணிக்கு வந்து எழுப்பினாள். டைனிங் டேபிளுக்குப் போனால், சுடச்சுட பூரி ரெடியாக இருந்தது. எனக்கு ஒரே ஆச்சரியம். நல்ல பசி வேறு. ஒரு பிடி பிடித்துவிட்டேன்.
காலையில் தனக்கும் தம்பிக்கு பால் கலந்து குடித்துவிட்டு, அப்பாவுக்கும், தாத்தாவுக்கு காப்பி போட்டு தந்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்டேன்(நான் எதுவும் குடிக்க மாட்டேன்). அதோடு, அண்டாவுக்கும் ட்யூப் மூலம் தண்ணீர் பிடித்து வைத்திருந்தாள்.
மசால் அருமை, ஆனா கொஞ்சம் உப்பு மட்டும் போதவில்லை. பூரியை ரொம்ப வேகவைத்து, மொடுக் மொடுக் என்று இருந்தது.
காலை பஜ்ரு தொழுததிலிருந்து தூங்காமல், செய்திருக்கிறாள் என்று புரிந்தது. அதோடு, பாவம் பேத்தி என்று என் மாமனாரும் உடன் வந்து, மாவுக்கு உருண்டை போடுவது போன்ற வேலைகள் செய்து தந்திருக்கிறார்.
மதியம் வரை மீண்டும் நான் கிச்சனுக்குப் போகவேயில்லை. ரைஸ் குக்கரில் சாதம் வைத்துவிட்டு, பருப்பு சாம்பார் காய்ச்சி, அப்பாவிடம் சொல்லி சிக்கன் லெக் பீஸாக வாங்கி, மேனகாவின் லாலி பாப் சிக்கன் மெனுவை நெட்டில் பார்த்து அதே போல செய்து விட்டாள்.
சரியாக மதியம் ஒன்னரை மணிக்கு சாப்பிட போனேன். நாவூற வைக்கும் அழகான டிஸ்ப்ளே. கேமராவில் க்ளிக்கிக் கொண்டேன். (காலை பூரி, பசியின் காரணத்தால், போட்டோ எடுக்கக் கூட மறந்து விட்டேன்)
எல்லாம் ஓக்கே! சாம்பாரில் உப்பும் உறைப்பும் கொஞ்சம் குறைவு. பச்சைத் தண்ணி மாதிரி இருந்தது. அவங்க பாட்டி, கால் கிலோ பருப்புக்கு 3 கோப்பை(1.5லிட்டர்) தண்ணீர் ஊற்ற சொல்லி இருக்கிறார். நான், 150 பருப்பு போதும் என்று சொல்லி விட்டேன். ஆனா, மறதியா அதே 3 கோப்பை இதுக்கும் ஊற்றியதால் இப்போ, தண்ணீர் சாம்பார்.
அது மட்டுமல்ல, சாம்பார் வைத்துக் கொண்டிருக்கும் போது,
“மம்மி, புளி ஊறவைத்திருக்கும் தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு, புளியைத் தூக்கி சாம்பாரில் போட்டு விடணுமா?” என்று கேட்டு என்னை அதிர வைத்தாள்.
சிக்கன் மிக அருமையாக, சுவையாக இருந்தது. ஃபர்ஸ்ட் க்ளாஸ் டேஸ்ட். பெரிய மனுஷி போல சிக்கனை பொறித்தபடி நின்றிருந்ததைப் பார்க்க பெருமையாக இருந்தது.
அவ்வப்போது, அவங்க பாட்டிக்கு(எங்கம்மா) போன் செய்து ரன்னிங் கமெண்ட்ரி வேற.
மாலை வழக்கம் போல, பால் காப்பி எல்லாம் அவளே கவனித்துக் கொண்டாள். இடையிடையே சாமான்களையும் கழுவி அடுக்கிவிட்டாள்.
இரவு, சரியா ஒன்பது மணிக்கு டிபன் ரெடியாகிவிட்டது என்றாள். முட்டை ரொட்டி செய்திருக்கிறாள். மைதா ரொட்டியை லேசாக தேய்த்து, அதை மடக்கிப் போட்டு, அதில் முட்டை ஊற்றி சுட்டு எடுப்பது. அதற்கு சைட் டிஷ்ஷாக காலையில் வைத்த உருளைக்கிழங்கு மசால்.
அதையும் க்ளிக்கிக் கொண்டேன்.
ஹோட்டலில் சாப்பிடுவது மாதிரி இருந்தது எனக்கு. என்ன, முட்டைக்கு தூவின உப்பு மட்டும் கொஞ்சம் தூக்கல். மற்றபடி எல்லாம் ஓக்கே.
“மம்மி அந்த வாசத்திலேயே இருந்ததனால, எனக்கு ருசியே தெரியல”
“ம்... இப்ப புரியுதா, என்னோட கஷ்டம்?”
கிச்சனுக்குள் போய் பார்த்தால், நாறிப் போய் கிடந்தது.
“இன்னும் அரை மணி நேரம் தான் பாக்கி! நான் கொடுத்தது போல, கிச்சனை சுத்தமா என்னிடம் ஒப்படைக்கணும்!”
அதே போல, சரியா பத்தரை மணிக்கு கிச்சன் படு சுத்தமாக இருந்தது. ஆச்சரியத்தோடு பெருமையுமாக நானும் அவரும் வேர்த்து பூத்துப் போயிருந்த மகளை அணைத்துக் கொண்டோம். அவர் மகளின் பிஞ்சு விரல்களை நீவிவிட்டு சுளுக்கெடுத்து விட்டார்.
சந்தோஷமாக நான் சொன்னேன், “கண்ணு, நீ செய்த இந்த அட்வென்ச்சரைப் பற்றி நான் ப்ளாகில் எழுதப் போறேன்!”
“வேண்டாம் மம்மி!”
“ஏம்மா?”
“இல்ல, இதப் படிக்கற எல்லாரும், அவங்கவங்க மகளை இதே மாதிரி எக்ஸ்பெரிமெண்ட் செய்ய சொல்வாங்க! நான் பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாது...”
“இப்ப புரியுதா? இவ்வளவு வேலையும் சீக்கிரமா செய்து முடிச்சிட்டு தான் நான் நெட்ல உட்கார்கிறேன்னு?”
“நல்லா புரியுது மம்மி!”
-சுமஜ்லா
.
No comments:
Post a Comment