Monday, May 25, 2009

நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்

மிழன் ஐ.ஏ.எஸ்... தமிழர்களுக்குக் கனவாக இருந்த ஐ.ஏ.எஸ். போட்டித் தேர்வுகள் இப்போது மெய்ப்பட ஆரம்பித்திருக்கின்றன. 2006-க்கான ஐ.ஏ.எஸ். தேர்வில் 44 மாணவர்கள் வெற்றிக் கோட்டைத் தொட... இந்த வருடம் வெளியாகியுள்ள 2008-க்கான ரிசல்ட்டில் அது இரட்டிப்பாகி 96 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்! 
மே மாதத்தின் முதல் வாரத்தில் சென்னை அண்ணாநகரின் ஒவ்வொரு அவென்யூவும் பிஸியாகிவிடும். 'மாப்ளே! ராய்பால் இந்தத் தடவை ரொம்ப லிபரல்... ஜோக்கெல்லாம் அடிச்சுக்கிட்டே கேள்வி கேட்டாரு...' என்று காபி சுவைத்தபடி தெருவோரக் கடைகளில் ஐ.ஏ.எஸ். இன்டர்வியூ பற்றிப் பேச்சு கேட்கும்.
''ஐ.ஏ.எஸ்னா ஐ.ஐ.டி. ரேஞ்ச் பசங்கதான் எழுத முடியும், டெல்லியில்தான் படிக்கணும், ஹிந்தி தெரியணும்னு எக்கச்சக்க பில்ட்-அப் இருந்தது. இப்போ அதெல்லாம் கிடையாது. அண்ணா நகர்ல சின்ஸியரா ஒரு வருஷம் படிச்சாப் போதும். ஏதாவது ஒரு சர்வீஸை நிச்சயம் வாங்கிடலாம். தன்னம்பிக்கையும் உழைப்பும் உங்களை அண்ணாநகர்ல இருந்து டெல்லிக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும்.'' - பெருமிதமான குரலில் பேசுகிறார் சசிகாந்த் செந்தில். இந்திய அளவில் 9-வது ரேங்க்கும் தமிழ்நாட்டில் முதல் ரேங்கும் எடுத்திருப்பவர்.

காலேஜ் பக்கம் போகாமலே சிவில் சர்வீஸ் தேர்வில் பாஸாகி ஆச்சர்யப்படுத்துகிறார் மைக்கேல் ஜெரால்டு. ''நான் ஒரு மெடிக்கல் ரெப். தினமும் ஒரே மாதிரியான வேலையில் சலிச்சுப்போய் சிவில் சர்வீஸ் எழுத வந்தேன். தபால் வழியில் பி.ஏ., இங்கிலீஷ் லிட்டரேச்சர் முடிச்சுட்டு, அண்ணாநகரில் வந்து சேர்ந்தேன். போன வருஷம் எழுதிய எக்ஸாமில் ஐ.ஆர்.எஸ். கிடைச்சிருக்கு. ஐ.ஆர்.எஸ். கிடைச்ச சந்தோஷத்துல அன்னிக்கு வேகமா பைக் ஓட்டினேன். ஆட்டோக்காரர் ஒருவர் 'மனசுக்குள்ள பெரிய கலெக்டர்னு நினைப்போ?'னு கேட்டார். 'ஆமாண்ணே... நான் வருங்கால கலெக்டர் தாண்ணே'ன்னு சொன்னதும் புரியாம பார்த்தார்!'' - அதிர்வேட்டாகச் சிரிக்கிறார் மைக்கேல் ஜெரால்டு. 

வீரபாண்டியனின் கதை தன்னம்பிக்கை டானிக்! 
பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்துக்கொண்டே ப்ளஸ் டூ தேர்வில் மாநில அளவில் சாதனை புரிந்தவர். ''ஐ.ஏ.எஸ். ஆகி மக்களுக்குச் சேவை செய்வேன்'' என்று அப்போது பேட்டி கொடுத்தவர், இப்போ வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ். ''என் அப்பா அலுமினியப் பாத்திரங்களை சைக்கிள்ள வெச்சுக்கிட்டு வீடு வீடாப் போய் வித்துட்டு வருவார். அம்மா கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டலில் துப்புரவுத் தொழிலாளியா இருக்காங்க. அப்பாவும் அம்மாவும் முடிஞ்ச வரைக்கும் அவங்க கஷ்டத்தோட நிழல் என் மேல் விழாத மாதிரி பாத்துக்கிட்டாங்க. 'நான் ஐ.ஏ.எஸ். ஆவேன்'னு இன்டர்வியூ கொடுத்ததும், எங்க அப்பாவை எல்லாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. 'கூமுட்டக் கோழி வீடு பூரா முட்டை போடஆசைப் பட்டுச்சாம்'னு ஆளாளுக்கு அடிச்ச கிண்டலில் அப்பாவும் அம்மாவும் மனசு உடைஞ்சு போயிட்டாங்க. அவங்க கண்களில் சந்தோஷத்தைப் பார்க்கணும்னு வெறித்தனமாப் படிக்க ஆரம்பிச்சேன். போன நாடாளுமன்றத் தேர்தலப்போ முதல்முறையா ஐ.ஏ.எஸ். தேர்வை எழுத ஆரம்பிச்சேன். தவறுகளைத் திருத்தக் கிடைச்ச வாய்ப்பா ஒவ்வொரு தோல்வியையும் எடுத்துக்கிட்டேன். போன வருஷம் இன்டர்வியூக்கு அழைப்பு வந்தப்ப, நல்ல டிரெஸ், ஷூ வாங்கப் பணம் இல்லை. கடன் வாங்கிட்டுப் போனேன். நல்லபடியா, இந்திய அளவில் 54-வது இடத்தைப் பிடிச்சு ஐ.ஏ.எஸ். ஆகிட்டேன். இப்போ அப்பாவைப் பார்க்கிறவங்க, 'வைராக்கியக்காரன்யா நீயி! உன் மகனை கடைசியில கலெக்டர் ஆக்கிட்டியே!'ன்னு சொல்றாங்க. அப்பா, அம்மா முகம் இப்போதான் தெளிவா இருக்கு. நானும் சந்தோஷமா இருக்கேன்!'' - சாதித்த சந்தோஷத்தில் பேசுகிறார் வீரபாண்டியன்.

பாலாஜி ஐ.பி.எஸ்ஸின் கதை வித்தியாசமானது. ''இன்ஜி னீயரிங் முடிச்சுட்டு நல்லா சம்பாதிக்கணும்னு நினைச்சு அண்ணா யுனிவர்சிட்டி வந்தேன். எல்லாரும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பத்திப் பேசவும் எனக்கு ஆர்வம் வந்தது. ச்சும்மா டிரை பண்ணினதுக்கு 238-வது ரேங்க் வாங்கிட்டேன். பொதுவா, 'ஐ.பி.எஸ். ஆகணும்னா உயரமா ஆஜானுபாகுவா இருக்கணும்'னு தப்பான எண்ணம் இருக்கு. போலீஸ் ஆகத் தேவைப்படுற உயரத்தைவிட குறைவா இருந்தாலும் ஐ.பி.எஸ். ஆக முடியும். நல்ல சமயோசித புத்தியும் ஆளுமைத் திறனும்தான் ஐ.பி.எஸ். ஆக முதல் தகுதி'' என்கிறார் பாலாஜி. 
இளமுருகுவின் வாழ்க்கை நெகிழ்ச்சியானது. எம்.ஏ., ஆங்கில இலக்கியம் படித்த இளமுருகு ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டே தொடர்ந்து 5 வருடங்கள் தேர்வு எழுதி, இப்போது வெற்றி பெற்றிருக்கிறார். ''அப்பா என்னை அரசாங்க அதிகாரியாப் பார்க்க ஆசைப்பட்டார். அவருக்காக சிவில் சர்வீஸ் எழுத ஆரம்பிச்சேன். நான் எக்ஸாம் எழுதறதுக்கு முன்னாடியே அப்பா இறந்துட்டார். ஒவ்வொரு முறையும் நெகட்டிவ் ரிசல்ட் வர்றப்ப அப்பாவை நினைச்சுப்பேன். ரிசல்ட் வந்த மறுநாளே படிக்க உட்கார்ந்திருவேன். இன்னிக்கு எங்க ஒட்டுமொத்தக் குடும்பமும் பூரிப்பா இருக்காங்க. எல்லாம் அப்பா ஆசீர்வாதம்!'' - பேசி முடிக்கும்போது இளமுருகுவின் குரலில் அத்தனை ஆனந்தம்.

''பொம்பளைப் புள்ளைக்கு எதுக்கு இவ்வளவு பிடிவாதம்... வேற ஏதாச்சும் படிச்சுச் சம்பாதிக்கச் சொல்லுங்க. இல்லைன்னா, காலாகாலத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்துருங்கன்னு என் அம்மா- அப்பாகிட்டே அட்வைஸ் பண்ணவங்களை இப்போ நினைச்சுப் பார்க்கிறேன். அவங்களுக்கான பதில்... நிர்மலா ஐ.பி.எஸ்!'' - மலர்ந்து சிரிக்கிறார் நிர்மலா. 
சைதை துரைசாமி நடத்தும் மனிதநேய அறக்கட்டளையில் படித்தவர்களில் இந்த முறை 25 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களில் பலர் வசதி குறைந்த, விவசாயக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் விசேஷம். 
இவர்களோடு சேர்த்து பி.காம்., படிப்பை 10 வருடங்கள் படித்த சான்பாஷா, 11 வருடங்களாக இடைவிடாமல் சர்வீஸைத் துரத்திய ஸ்ரீதர், இன்டர்வியூ வரை தமிழில் அணுகிய சக்தி போன்றோர் சொல்வதெல்லாம் ஒன்றுதான்... 
 
 
நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்!

--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum


No comments: