மே 13 முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்!
அபூ அப்தில்லாஹ்
2009 மே 13 புதன்கிழமையன்று தமிழகம்; 39 புதுவை 1 ஆக 40 தொகுதிகளுக்குரிய மக் கள் சபை உறுப்பினர்களை (M.P.) தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதில் இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் தவறாது கலந்து தங்களின் விலை மதிப்பற்ற வாக்குகளை முறையாகப் பதிவு செய்வதே கடமையாகும். இந்த மண்ணின் மைந்தர்கள்- வந்தேறிகள் அல்ல என்பதை நிலை நாட்டுவதாகும்.
சில முஸ்லிம்கள் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பதோ, வாக்களிப்பதோ ஹராம்-கூடாது, தாக்கூத்திற்கு(ஷைத்தானுக்கு) துணை புரிவதாகும் எனக் கூறி முஸ்லிம்களை தவறான வழியில் இட்டுச் செல்ல முயல்கிறார்கள். அவர்கள் தங்களின் இந்த வாதத்தில் உண்மையாளர்களானால், இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுபட்டு நடப்பது, பல வகையான வரிகள் கட்டுவது, அரசு உறுதி அளித்து வெளியிடும் ரூபாய் நோட்டுகளை ஏற்று அவற்றைக் கொண்டு தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது, பல வகையான அரசு உரிமங்களைப் பெறுவது, வெளிநாடு செல்ல கடவுச் சீட்டு (Passport) பெறுவது இவை அனைத்தும் ஹராம் - கூடாது, தாக்கூத்திற்குத் துணை போகும் செயல்கள் எனக் கூற வேண்டும். ஆம்! அவர்களது கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் இந்த நாட்டில் இருக்கக் கூடாது. அவர்கள் கூறும் இறையாட்சி நடக்கும் இடம் தேடிச் சென்றுவிட வேண்டும். இது அவர்களால் முடியுமா? இறை யாட்சி நடக்கும் ஒரு நாடு உண்டா? இல்லையே!
முஸ்லிம்கள் முதலில் தங்கள் அளவில் இறையாட்சியை நிலைநாட்டி, 3:103 இறைக் கட்டளைப்படி அல்குர்ஆனை ஒன்றிணைந்து வலுவாகப் பற்றிப் பிடித்து ஓரணியில் இல்லை. இறைவனின் நேரடியான கட்டளைகளைப் புறக் கணித்து, மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டு மக்களை வழி கெடுக்கும் புரோகித மவ்லவிகளைப் பற்றிப் பிடித்து, அவர்களின் சுயநலக் கற்பனைகளை இறைவாக்காக ஏற்று நடக்கும் பரிதாப நிலையில் இருக்கிறார்கள் முஸ்லிம்கள். அதன் காரணமாக எண்ணற்றப் பிரிவுகளில் சிக்கிச் சீரழிகிறார்கள்.
முஸ்லிம்களின் சுய வாழ்க்கையிலேயே இறையாட்சி இல்லாத நிலையில், நாட்டில் இறையாட்சியை எப்படி ஏற்படுத்த முடியும்? 24:55ல் அல்லாஹ் கட்டளையிடுவது போல் புரோகித மவ்லவிகளைப் புறந்தள்ளி அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து முஸ்லிம்கள் ஒன்றுபடட்டும். ஆட்சி அதிகாரத்தை அல்லாஹ் நிச்சயம் தருவதாக வாக்களிக்கிறான்.
அதுவரை, மேலே சுட்டிக் காட்டிய அனைத்திலும்; நிர்பந்த நிலையில் முஸ்லிம்கள் செயலாற் றுவது போல், தேர்தலிலும் வேட்பாளர்களாக நிற்பதும், வாக்களிப்பதும் நிர்பந்த நிலையில் அவசியமாகும். அது கொண்டே முஸ்லிம்கள் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள், நாட்டுபற்று மிக்கவர்கள் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். சில பொறுப்பற்ற முஸ்லிம்கள், வாக்களிப்பது, வேட்பாளர்களாக நிற்பது ஹராம்-கூடாது, தாக்கூத்திற்கு (ஷைத்தானுக்கு) துணை போவதாகும் என்று பிதற்றித் திரிவதால்தான், காவி வகையறாக்கள் முஸ்லிம்கள் தேசப்பற்று அற்றவர்கள், பாகிஸ்தான் போன்ற அயல் முஸ்லிம் நாடுகளை நேசிப்பவர்கள் என பொய் யான செய்திகளை நாடு முழுவதும் பரப்ப வழி ஏற்படுகிறது. எனவே இப்படிப்பட்டவர்கள் தங்களில் இறையாட்சி ஏற்பட்டு, அல்குர்ஆனை பற்றிப் பிடித்து முஸ்லிம்கள் ஒன்றுபடுவதற்குரிய முயற்சிகளில் தீவிரமாக இறங்கட்டும். இப்படிப் பட்ட அர்த்தமற்ற பிதற்றல்களை விட்டுத் தள்ளட்டும்.
ஆயினும் வாக்களிக்கும் அனைத்து முஸ்லிம் களும், வேட்பாளர்களாக நிற்கும் முஸ்லிம்களும் இஸ்லாமிய வரையறைக்குள் நின்று செயல்பட்டு 3:110-ல் அல்லாஹ் கூறுவதுபோல் மாற்றாருக்கு நேர்வழிகாட்ட வேண்டும். வாக்களிக்கும் முஸ்லிம் கள் தங்களின் பொன்னான விலை மதிப்பற்ற வாக்குகளை 1000ஃ-க்கும் 5000ஃ-க்கும் விற்க ஒரு போதும் துணியக் கூடாது. அப்படி மக்களுக்குப் பணம் கொடுத்து அதன் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறவர்கள், தாங்கள் செலவழித்ததைப் பன் மடங்காக பெருக்கி கோடி கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்கத் துணிவார்களே அல்லாமல், மக்களுக்குத் தொண்டு செய்யவோ, சேவை செய்யவோ, முன்வரமாட்டார்கள் என்பதை முஸ்லிம் ஆண்களும், பெண்களும் மனதில் இருத் திக் கொள்ள வேண்டும். எனவே தங்கள் வாக்கு களை ஒருபோதும் பணத்திற்கு விற்கக் கூடாது.
அடுத்து வெற்றி பெறுபவருக்கே நமது வாக்கையும் அளிக்க வேண்டும் என்ற மூட எண்ணமும் கூடாது. பணம் கொடுத்து வாக்குகளை வாங்காமல், தொண்டு செய்து மக்கள் மனதில் இடம் பிடிப்பவர்களுக்கே முஸ்லிம்கள் தங்கள் வாக்கை அளிக்க வேண்டும். நாம் வாக்களிக்கும் வேட்பாளர் தோற்றாலும் பரவாயில்லை ; அதனால் மக்களுக்குத் தொண்டு செய்வதை விட்டு விட மாட்டார் என்ற அடிப்படையில் நல்லவர்களுக்கே, தொண்டு செய்பவர்களுக்கே நமது வாக்குகளை அளிக்க வேண்டும். தோற்பவர்களுக்கு வாக்களிக்கலாம். ஆனால் தொண்டைத் தொழிலாக்கிக் கோடிகோடியாக சுருட்டுகிறவர்களுக்கு ஒரு போதும் வாக்களிக்க கூடாது.
நாம் வாக்களித்து அதன் மூலம் வெற்றி பெற்றுப் போகிறவர்கள் செய்யும் அநியாயங்கள், அட்டூழியங்கள் அனைத்திற்கும் நாமும் துணை போன குற்றத்திற்கு ஆளாக நேரிடும். அதனால் வாக்களிக்காமல் இருப்பதே சிறந்தது என சிலர் வாதிடலாம். இந்த எண்ணத்தில் நாம் வாக்களிக் கத் தவறினால், நமது வாக்கு கள்ள வாக்காக மாறி நிற்பவர்களில் ஆகக் கொடியவர்கள் தேர்வு பெறக்காரணமாகலாம். அதனால் வாக்களிக்காமல் இருந்து எந்தப் பாவத்தைத் தவிர்க்க எண்ணி னோமோ அதை விடப் பெரும் பாவத்தை இரட்டிப் பாக அடைய நேரிடும் என்பதை இப்படிப்பட்ட எண்ணமுடையவர்கள் உணர வேண்டும்.
எனவே நிற்பவர்களில் குறைந்த தவறுடைய வர்களைப் பார்த்து நமது வாக்கைப் பதிவு செய்யலாம். அப்படிப்பட்டவர்களும் வேட்பாளர் களில் தென்படாவிட்டால், தேர்தல் அதிகாரியிடம் கூறி அதற்குரிய படிவத்தைப் பெற்று, வேட்பாளர் களில் யாரும் தகுதியானவர்கள் இல்லை. எனவே எனது வாக்கை யாருக்கும் அளிக்கவில்லை என பூர்த்தி செய்து கொடுத்து, முஸ்லிம்களின் வாக்குகள் கள்ள வாக்குகளாக மாறுவதைத் தடுக்கலாம். ஆக முஸ்லிம்கள் 100% தவறாது ஒவ்வொரு தொகுதியிலும் வாக்களித்துள்ளார்கள் என்ற சாதனையின் மூலம் ஆட்சியாளர்களின், அதிகாரிகளின் கவனத்தை முஸ்லிம் சமுதாயத் தின் பக்கம் திருப்ப முடியும். இது முஸ்லிம் ஆண், பெண் வாக்காளர்களின் கடமையாகும்.
அடுத்து முஸ்லிம் வேட்பாளர்கள், ஜாதி, மதம், இனம் என வேறுபாடு பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் தொண்டு, சேவை செய்யும் எண்ணத்துடனும், முஸ்லிம்களின் உரிமைகளை கட்டிக்காக்கும் குறிக்கோளுடனும், வேட்பாளர்களாக நிற்க வேண்டும். இன்று அரசியலைவிட ஆதாயம் தரும் வியாபாரம் வேறு ஒன்றுமில்லை; முதல் இல்லாமலேயே கோடி கோடியாகப் பொருள் ஈட்ட முடியும் என்ற தீய நோக்குடன் வேட்பாளர்களாக ஒரு போதும் நிற்கக் கூடாது. அற்ப உலக ஆதாயம் கருதி தொண்டைத் தொழிலாக்கி மக்கள் பணத்தை லஞ்சம் போன்ற தவறான வழிகளில் சுருட்ட முற்படுகிறவர்கள், தூய மார்க்கத்தை மதமாக்கி தொண்டைத் தொழிலாகக் கொண்ட புரோகித மவ்லவிகள் தங்கள் வயிறுகளில் நரக நெருப்பை நிரப்பிக் கொள்வது போல், இவர்களும் நரக நெருப்பையே தங்கள் வயிறுகளில் நிரப்பிக் கொள்கிறார்கள் (பார்க்க 2:174).
அது வட்டி, பன்றிக் கறி சாப்பிடுவதை விட மிகக் கொடிய ஹராம் என்பதை நினைத்து சதா அஞ்சிக் கொள்வார்களாக. ஆயினும் அன்று ஆட்சி செய்த கலீஃபாக்கள், கவர்னர்கள் அரசிடமிருந்து ஊதியம் பெற்றது போல், இவர்கள் அரசு கொடுக்கும் ஊதியத்தை அடைவதில் தவறில்லை. சேவை செய்யும் தூய நோக்குடன் மட்டுமே வேட்பாளர்களாக நிற்க வேண்டும்.
மக்களுக்கு உண்மையிலேயே சேவை மனப்பான்மையுடன் தொண்டு செய்தவர்கள் பிரபல கட்சிகளை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிவாகை சூடிய வரலாறெல்லாம் தமிழகத்தில் உண்டு. இதை முஸ்லிம் வேட்பாளர்கள் முன்மாதியாகக் கொள்ள வேண்டும்.
மற்ற வேட்பாளர்கள் கடைபிடிக்கும் சிலை களுக்கெல்லாம் மாலையிடுதல், கோவில், சர்ச், தர்கா, பள்ளி என ஏறி இறங்குவது, கண்டவர் களுக்கெல்லாம் கூழைக் கும்பிடு போடுதல், வணக்கம் செலுத்துவது, ஆரத்தி எடுக்க அனுமதிப்பது, பொய்யான வாக்குறுதிகள் கொடுப்பது, இல்லாத சிறப்புகள் இருப்பதாக மற்றவர்கள் தங்களை புகழ்ந்து பேச வைப்பது, தேர்தல் வேலை செய்பவர்களுக்கு ஹராமான மது, சாராயம், கள்ளசாராயம் என வாங்கிக் கொடுத்து வேலை வாங்குவது, வாக்காளர் களுக்குப் பணம் கொடுப்பது இத்தியாதி, இத்தி யாதி செயல்களை ஒருபோதும் செய்ய முற்படக் கூடாது. மற்ற வேட்பாளர்களுக்கு 3:110 இறைக் கட்டளைப்படி ஓர் அழகிய முன்மாதிரியாகத் திகழ வேண்டும். மற்ற வேட்பாளர்கள் இவர்களைப் பார்த்து வெட்கித் தலை குனிய வேண்டும். இவர்களே உண்மையிலேயே தொண்டு செய்யும் உள்ளம் படைத்தவர்கள் என அவர்களின் உள் மனம் அவர்களை எச்சரிக்கும் நிலையில் முஸ்லிம் வேட்பாளர்கள் செயல்பட வேண்டும்.
தொண்டு செய்வது கொண்டு மட்டுமே, தொகுதி மக்களின் ஆகுமான தேவைகளை எவ்வித சுயலாபத்தையும் எதிர்பாராமல் செய்து கொடுப்பது கொண்டு மட்டுமே அந்த தொகுதி மக்களின் உள்ளங்களில் இடம் பிடிக்க வேண்டும். அந்த மக்கள் விரும்பியே இவரை முனைந்து வேட்பாளராக நிற்க வைக்கவும், வேலை செய்து வெற்றி பெறச் செய்யவும் கூடிய நிலையில் இவர்களின் சேவைகள் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் இஸ்லாமிய நெறி முறைகளை முறிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது. இப்படிப் பட்ட தூய எண்ணத்தோடு முஸ்லிம் வேட்பாளர் கள் செயல்பட்டால், முஸ்லிம்கள் மட்டுமல்ல, முஸ்லிம் அல்லாத தொகுதி மக்களும், தங்கள் இன வேட்பாளரை விட இவரை விரும்பி தேர்ந் தெடுக்கும் நிலை கண்டிப்பாக உண்டாகவே செய்யும்.
முஸ்லிம் வேட்பாளர்கள் மற்ற கட்சிகளில் இணைந்து அந்தக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படுவதின் மூலம் முஸ்லிம்களுக்கு சேவையாற்ற முடியும் என்பது அப்பட்டமான பொய்யே ஆகும். சுதந்திரம் கிடைத்த 1947-லிலிருந்து கடந்த 62 ஆண்டுகளாக முஸ்லிம்கள் பிற கட்சிகளால் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்பதும், முஸ்லிம்கள் ஏமாந்த சோனகிரிகளாக இருக்கிறார்கள் என்பதுமே உண்மையாகும். அதற்காக அக்கட்சிகளை குறை சொல்லவும் முடியாது. நமது நாட்டில் ஜனநாயக ஆட்சிமுறை இருப்பதால் சிறுபான்மையினருக்கு நல்லது செய்து, அதன் மூலம் பெரும்பான்மை மக்களின் வெறுப்புக்கும், கோபத்திற்கும் ஆளாகி, அதன் மூலம் அவர்களின் வாக்குகளை இழப்பதற்கு எந்தக் கட்சியும் முன் வருமா? ஒரு போதும் முன் வராது. வாய் இனிக்கப் பேசி முஸ்லிம்களை ஏமாற்றவும், அவர்களின் ஒற்றுமையை குலைக் கவும் சதி செய்வார்களே அல்லாமல், ஒரு போதும் முஸ்லிம்களுக்கு நல்லது செய்து, அதன் மூலம் பெரும்பான்மை மக்களின் ஆதரவை இழக்கத் துணிய மாட்டார்கள். அதுவும் முஸ்லிம்களைப் பற்றிய வெறுப்புணர்வு நாட்டு மக்களிடையே இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதி என தொடர்ந்து அவதூறுகள் பரப்பி வளர்க்கப்பட்டு வருவதால், எந்தக் கட்சியும் முஸ்லிம் களுக்கு நல்லது செய்ய ஒருபோதும் துணியாது. எனவே "தன் கையே தனக்குதவி" என்ற அடிப் படையில் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து தனித்து நின்று தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதுவே முஸ்லிம்களின் நலனுக்கு நல்லது.
யாரெல்லாமோ, எந்த உருப்படியான கொள்கையோ, இலட்சியமோ இல்லாமல், வெறும் சீட்டுகளுக்காக மட்டும் கூட்டணி அமைக்கும் போது, ஒரே இறைவனையும், ஒரே தூதரையும், ஒரே குர்ஆனையும், தௌ;ளத் தெளிவான ஓரிறைக் கொள்கையையும், தௌ;ளத் தெளிவான வழிகாட்டலையும் பெற்றுள்ள, முஸ்லிம்கள் ஓரணியில் ஒன்றுபடுவதில் தயக்கம் ஏன்? அற்ப உலக ஆதாயமும், சுயநலமும் மட்டுமே ஒன்று சேரத் தடையாக இருக்கிறது. தங்களுடைய அற்ப உலக ஆதாயங்களையும், சுய நலப்போக்கை யும் தலைவர்கள் தியாகம் செய்ய முன் வந்தால் முஸ்லிம் சமுதாய ஒற்றுமை எளிதாக ஏற்பட்டு விடும். மார்க்க விஷயத்தில், கொள்கைகளில் வேறுபட்டாலும் அவற்றின் உண்மை நிலையை நாளை மறுமையில் அவரவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அவற்றை காரணம் காட்டி சமுதாயத்தை இவ்வுலகில் பிளவு படுத்துவது கூடாது. அல்லாஹ்வே தனது தீர்ப்பளிக்கும் அதி காரத்தை மறுமைக்கென்று ஒத்தி வைத்திருக்கும் நிலையில், அதைத் தங்கள் கையில் இவ்வுலகி லேயே எடுத்துக் கொள்வதைவிட கொடிய ஷிர்க், இணை வைக்கும் பாவச் செயல் பிறிதொன்று இல்லை என்பதை முஸ்லிம்களும், முஸ்லிம் அறிஞர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். 21:92, 23:52 இறைக் கட்டளைகள்படி சமுதாய ஒற்றுமை காக்க முன் வந்தால் சமுதாய ஒற்றுமைக்கு வழி பிறக்கும்.
அந்த அடிப்படையில் பிரிந்து கிடக்கும் முஸ்லிம் கட்சிகள், கழகங்கள் அனைத்தும் தேர்தல் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்பட்டால், குறைந்தது 5 அல்லது 4 தொகுதிகளை பிற கட்சிகளிடம் பேரம் பேசி பெற முடியும் என சென்ற இதழில் எழுதி இருந்தோம். முஸ்லிம் கட்சிகள், கழகங்கள் அப்படி யொரு தேர்தல் கூட்டணி அமைக்க முன் வர வில்லை. அதனால் 4,5 சீட்டுகள் கிடைப்பதற்குப் பதிலாக ஒரேயொரு சீடடு அதுவும் அவர்களின் சின்னத்திலேயே அவர்களின் கட்சியில் ஒருவராக போட்டியிட மட்டுமே வாய்ப்புக் கிட்டியது.
வெற்றி பெற்றாலும் அவரால் முஸ்லிம் சமுதாயத்திற்கு குறிப்பிடும் அளவுக்கு பலன் கிடைக்கப் போவதில்லை. சமுதாயப் பிரச்சினை களை துணிந்து மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கும் வாய்ப்பு இல்லை. அடக்கி மட்டுமே வாசிக்க முடியும். பிற கட்சிகள் மூலம் போட்டி யிட்டு தேர்ந்தெடுக்கப்படும் எந்த முஸ்லிமின் நிலையும் இதுதான். எனவே அவர்களுக்காக பெரும் பாடுபட்டு முஸ்லிம்கள் அவர்களை வெற்றி பெறச் செய்தாலும், முஸ்லிம் சமுதாயம் அதனால் பெரும் பலன் அடையப் போவதில்லை.
அதனால், பிற கட்சிகள் பின்னால் செல்லும் அவல நிலை மாற வேண்டும். "தன் கையே தனக்குதவி" என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி பாடுபட்டு அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். முஸ்லிம்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அனைத்தும் அப்படிப்பட்ட வேட்பாளர் களுக்கு விழுமானால் சில தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற முடியும். எக்காரணத்தைக் கொண்டும் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறக் கூடாது. ஒட்டுமொத்தமாக அந்த வேட்பாளர்களுக்கே விழ வேண்டும்.
ஆயினும் பிற கட்சிகள் முஸ்லிம்களின் இந்த ஒற்றுமையைக் குலைத்து சிதறச் செய்யவே பெரும்பாடு படுவார்கள். இதற்காக அவர்களைக் குறை சொல்ல முடியாது. அவர்களின் சமூக, கட்சி ஆதாயத்திற்காக அப்படிச் செயல்படுகிறார்கள். ஆனால் அவர்கள் கூறும் ஆசை வார்த் தைகளில் மயங்கி, கொடுக்கும் அற்பப் பதவிகளுக்கு ஆசைப்பட்டு சமுதாயத்தைப் பிளவு படுத்த முற்படும் முஸ்லிம் பெயர் தாங்கிகளே குற்றவாளிகள். அவர்களுக்கு சமுதாய நலனை விட, அவர்களின் அற்ப உலக ஆதாயமே பெரிதாகத் தெரிகிறது. அப்படிப்பட்டவர்களாலேயே முஸ்லிம் சமுதாயம் அன்றிலிருந்து இன்று வரை சீரழிந்து வருகிறது. அவர்கள் சமுதாய தலை வர்களாக இருப்பதற்கே தகுதியற்றவர்கள். அப் படிப்பட்ட சுயநலப் பேர்வழிகளை தலைவர்களாக ஏற்று அவர்களுக்கு வெண் சாமரம் வீசும் போக்கை முஸ்லிம்கள் கைவிட வேண்டும். அவர்கள் பின்னால் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சுயநலத்திற்கும், அற்ப உலக ஆதாயத்திற்கும் முதலிடம் கொடுக்காமல், சமுதாய ஒற்றுமையையும், சமுதாய நலனையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்களை மட்டுமே வழிகாட்டிகளாக முஸ்லிம் சமுதாயம் ஏற்க வேண்டும்.
அப்போதே சமுதாயம் உருப்படும், மேம்படும். இவ்வுலக இன்னல்கள் மட்டுமாவது நீங்கும். எனவே முஸ்லிம்கள் அனைவரும் பிளவு படாமல் ஒன்றுபட்டு, பிற கட்சிகளில் நிற்பவர்களை ஓரங் கட்டி, முஸ்லிம் சமுதாயத்திற்கென்றே நிற்கும் முஸ்லிம்களுக்கே வாக்களிக்க வேண்டும். அவர்கள் சில சமயம் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், முஸ்லிம்கள் அனைவருடைய வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல் 100% விழுவதால், தேர்தல் கமிஷனிடம் கட்சி அங்கீகாரமும், குறிப்பிட்ட சின்னமும் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். எனவே முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்வரும் தேர்தலில் தவறாது தங்கள் வாக்குகளைச் செலுத்துவதோடு, நடக்க முடியாதவர்களையும் தூக்கிச் சென்று வாக்களிக்க உதவுமாறு கோரிக்கை வைக்கிறோம். முஸ்லிம்களின் 100% வாக்கும் பதிவாக வேண்டும். அதற்குரிய தீவிர முயற்சிகளில் முஸ்லிம்கள் முனைந்து ஈடுபட வேண்டும்.
62 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத் தில் முதல் முதலாக முஸ்லிம் சமுதாயத் திற்கென்றே வேட்பாளர்களாக நிற்கும் முஸ்லிம் களை முழுமையாக ஆதரித்து தங்களின் பொன்னான வாக்குகளைச் செலுத்துவதோடு, முஸ்லிம்கள் அனைவரும் ஒருவர் கூட விடுபடாமல் ஒட்டுமொத்தமாக முஸ்லிம் வேட்பாளர் களுக்கே வாக்களிக்க முழு மூச்சாகப் பாடுபடுவதே அவர்களுக்கு அல்லாஹ் வின் பொருத்தத்தைப் பெற்றுத் தரும். முஸ்லிம் சமுதாயத்திற்கு நலன் ஏற்பட்டு இழந்த உரிமை களை மீட்கவும், இருக்கும் உரிமைகளை காக்கவும் வழி ஏற்படும் என்பதை உணர்வில் கொள்வார்களாக.
எனவே முஸ்லிம் சமுதாய மக்களே உங்களது மார்க்கக் கொள்கை கோட்பாடுகளை அல்லாஹ்வின் மறுமைத் தீர்;ப்புக்கென்று ஒத்தி வைத்துவிட்டு, இவ்வுலகில் மட்டிலுமாவது ஏற்றம் பெற, முஸ்லிம்களின் உரிமைகள் காக்கப்பட சிந்தாமல் சிதறாமல் முஸ்லிம் வாக்குகள் அனைத்தும் முஸ்லிம் சமுதாயத்திற் கென்றே நிற்கும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே கிடைக்க முழு மூச்சாகப் பாடுபடுங்கள். முஸ்லிம்கள் ஒன்று பட்டால் அல்லாஹ் வெற்றியைத் தருவான்.
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum
No comments:
Post a Comment