என்ன செய்யப் போகிறது காவல்துறை? -
இரு நாட்களுக்கு முன்னர் கடந்த வெள்ளி(08/01/2010) அன்று ஆள்வார்குறிச்சி காவல்துறை ஆய்வாளர் வெற்றிவேல் நடுரோட்டில் வைத்து சில குண்டர்களால் அநியாயமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவ்வழியாக வர இருந்த அமைச்சர்களின் பாதுகாப்புக்காக சாலை போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருந்த வேளையில், திடீரென வந்த மர்ம நபர்கள் அவர் மீது குண்டு வீசி நிலைகுலைய செய்து விட்டு, சரமாரியாக வெட்டினர்.
இந்நேரத்தில் அவ்வழியாக வர இருந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மைதீன் கான் ஆகிய இருவரும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஜெயராமனுடன் அவ்விடம் வந்து சேர்ந்தனர். அமைச்சர்களின் வாகனத்தைக் கண்டவுடன், வெற்றிவேலை அப்படியே போட்டு விட்டு அந்த மர்ம கும்பல் ஓட்டம் பிடித்தது.
இச்செய்தியை முதன் முதலாக படித்த எவரும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவம் நடந்த நேரத்திலேயே சம்பவ இடத்தில் வந்து விட்டதால் நிச்சயமாக அந்தப் பரிதாபத்துக்குரிய காவலர் உயிர் பிழைத்திருப்பார் என்றே நினைப்பர்.
ஆனால் நடந்ததோ வேறு! இரு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியாளர், காவல்துறையினர், பொது மக்கள் இவர்களுடன் பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் அவ்விடத்தில் சுற்றி குழுமியிருந்த நிலையிலும் எவருமே அவரைக் காப்பாற்றுவதற்குத் துணியவில்லை. தன்னைக் காப்பாற்றும் படியும் தண்ணீருக்காகவும் அவர் கெஞ்சிய பரிதாப காட்சிகள் இப்போது அனைத்து தொலைகாட்சி அலைவரிசைகளிலும் ஹாட் நியூஸ்களாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
அத்தோடு மனிதாபிமானத்தையும் தங்களின் கடமையையும் மறந்த இரு அமைச்சர்களைக் குறி வைத்து, அதே மனிதாபிமானத்தை இழந்த ஊடக விபச்சாரிகள் கூக்குரம் இட ஆரம்பித்துள்ளனர். தமிழக அரசு அந்த இரு அமைச்சர்களையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டுமாம்!
நியாயமான கோரிக்கை தான்! ஆனால், அந்த அமைச்சர்களையும் அதிகாரிகளையும் மனிதாபிமானமற்றவர்கள் என விமர்சிக்க இந்தப் பத்திரிக்கை உலகத்தினருக்கு என்ன அருகதை இருக்கிறது?
உயிருக்குப் போராடும் அந்தப் பரிதாபத்துக்குரிய உயிரின் அவஸ்தையையும் சுற்றி நிற்கும் அமைச்சர், அதிகாரிகள் ஆகியோரின் முகத்தையும் சுற்றிச் சுற்றிப் படம் பிடித்த இந்தப் பத்திரிக்கை துறையினர் அவர்களை விடக் கேவலமானவர்கள் இல்லையா?
இவர்களில் ஒருவராவது அந்த உயிரைக்காப்பதற்கு ஏதாவது செய்ய முயற்சித்திருந்தாலாவது இவர்களுக்கு அதனைக் குறித்துப் பேச அருகதை இருக்கிறது என்று கூறலாம். ஆனால், பத்திரிக்கை விபச்சாரத்திற்காக சுற்றிச் சுற்றி வந்து ஒரு உயிர் துடிக்கும் காட்சியை, எவ்வித உதவியும் செய்யாமல் படம் பிடிக்க முடிகிறது எனில், அங்கு இருந்தவர்களிலேயே மிகக் கேவலமானவர்கள் இவர்கள் என்று அல்லவா சொல்ல வேண்டும்? மனிதாபிமானத்தைக் குறித்துப் பேசும் இவர்கள், அது தன்னிடம் உள்ளதா என்றல்லவா முதலில் கேட்டிருக்க வேண்டும்?
பொது இடத்தில் உதவி தேடும் ஒருவருக்கு அமைச்சரும் அதிகாரிகளும் மட்டும் தான் உதவ வேண்டும் என்றும் அவர்களுக்கு மட்டும் தான் மனிதாபிமானம் இருக்க வேண்டும் என்று சட்டமா என்ன? பொதுநல எண்ணம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். என்றாலே நாடு உருப்படும். இக்காலத்தில் அதுவும், ஜனநாயகத்தின் ஒரு தூணாகவே வர்ணிக்கப்படும் ஊடகத்துறையினருக்குத் தான் அது முதலில் வேண்டும்.
இறுதியில் சுமார் 15 நிமிடத்திற்குப் பின், அந்த அமைச்சர்கள் இருவரில் ஒருவர் தான் முன் வந்து வெற்றிவேலை, தன்னுடைய வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ள நிலையில், அவர்களைக் குறித்தும் அந்தச் சம்பவத்தைக் குறித்தும் பேசுவதற்கு இந்தப் பத்திரிக்கை விபச்சாரிகளுக்கு எவ்வித அருகதையும் இல்லை!
நிற்க,
இச்சம்பவத்தின் ஊடாக பல்வேறு கேள்விகள் மனதில் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை!
இதற்கு இணையான மற்றொரு சம்பவம் இதே தமிழகத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. அதிலும் இதே போன்று ஒரு காவலர் தான் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டார்.
நினைவுறுத்த வேண்டிய தேவையே இல்லாத அளவுக்குப் பிரபலமான விஷயம் தான்.
ஆம், 1998 கோவையில் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் அல் உம்மாவைச் சேர்ந்த இருவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்த உடனேயே, அநியாயத்துக்குக் கூட்டு நிற்காத முஸ்லிம் சமுதாயம் அந்தக் காலித்தனத்தைச் செய்த இருவரையும் பிடித்து உடனடியாக காவல்நிலையத்தில் ஒப்படைத்தது.
ஆனால், அதன் பின்னர் நடந்ததோ விபரீதம்! இல்லையில்லை, திட்டமிட்ட கொடூரம்! ஹிந்துத்துவமும் காவல்துறையில் இருக்கும் ஹிந்துத்துவ தீவிரவாதிகளும் இணைந்து ஒரு சமுதாயத்தையே காவு கொண்ட கொடூரம்! சுமார் 19 மனித உயிர்கள், காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்டதற்காக உயிரோடு எரித்தும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்கள்.
அப்போதும் தமிழகத்தில் இதே கருணாநிதியின் ஆட்சி தான் நடந்து கொண்டிருந்தது. காவலர் செல்வராஜைப் படுகொலை செய்தவர்களைக் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னரும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த ஹிந்துத்துவம் கோவையில் தன் கொடூரத்தைக் கட்டவிழ்த்து விட்டதை வெறுமனே இதே கருணாநிதி பார்த்துக் கொண்டிருந்தார். படுபயங்கர அநியாயம் இழைக்கப்பட்ட இந்தச் சமுதாயத்துக்கு நடுநிலையாக செயல்பட வேண்டிய அரசிடமிருந்து கூட எவ்வித நியாயமும் கிடைக்காத நிலையில், அவசரப்பட்ட சிலர் ஹிந்துத்துவ வெறியை மீண்டும் கோவை மக்களிடையே ஊட்ட வந்த அத்வானியின் மேடை உட்பட சில இடங்களில் குண்டு வைத்து அப்பாவிகளைப் பலி வாங்கினர்.
உடனடியாக விழித்துக் கொண்ட கருணாநிதியின் தமிழக அரசு, ச்167 பேரைக் கைது செய்து கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் அடைத்து ஆனந்தம் அடைந்தது. முன்னர் அநியாயமாக உயிரோடு எரித்தும் வெட்டியும் கொலைச் செய்யப்பட 19 உயிர்களின் விலைக்குப் பகரமாக அந்த அநியாயத்தைச் செய்த காவிக் கயவர்கள் மீது கருணாநிதி அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் ஒருவேளை அந்த ஒரு சிலர் அவசரப்பட்டிருக்க மாட்டார்கள்.
எது எப்படியோ, நினைத்ததை முடித்த காவிக்கயவர்களுக்கு இரட்டை வெற்றியை இச்சமுதாயத்தின் 167 குடும்பங்களைச் சீரழித்ததன் மூலம் கருணாநிதி பரிசளித்தார்.
இப்போது விஷயம் அதுவல்ல!
அன்று நடுரோட்டில் காவலர், அதுவும் சாதாரண போக்குவரத்து சீர்படுத்தும் கீழ்நிலை பணியாளராக பணிபுரிந்த செல்வராஜ் நடுரோட்டில் கொல்லப்பட்ட போது, "காவலர்களுக்குப் பாதுகாப்பு இல்லை; காவலர்களின் பாதுகாப்புக்குச் சங்கம் வேண்டும்" என்று கோரிக்கையை முன் வைத்து ஒரு நாள் முழுவதும் கோவையில் காவல்துறை வேலை நிறுத்தம் செய்தது.
ஆனால் இன்று மேல் நிலை பணியாளரான காவல்துறை ஆய்வாளர் ஒருவர் அதே போன்று நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இப்போது எந்தக் காவல்துறையும் காவலருக்குப் பாதுகாப்பு இல்லை என அதே போன்ற போராட்டம் நடத்த முன்வரவில்லையே ஏன்? வெட்டியவர்கள் முஸ்லிம்கள் இல்லாததாலா? இல்லை, அதன் சுற்றுப்புறங்களில் ஹிந்துத்துவத்துக்குக் காவு கொடுக்க எந்த முஸ்லிம் ஊர்களும் இல்லாததாலா?
அல்லது, பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ரவுடிகளையும் குண்டர்படைகளையும் ஊட்டி வளர்ப்பவர்கள் அரசியல்வாதிகளும் காவல் துறைகளும் தான் என்பதாலா?
இதன் மூலம், கோவையில் நடத்தியது போன்ற மற்றொரு இரத்தவெறியாட்டத்தைக் காவல்துறை ஹிந்துத்துவத்தோடு இணைந்து நடத்த வேண்டும் என்று இங்கு கூறவரவில்லை. மாறாக, அன்று கோவையிலும் இன்று ஆள்வார்குறிச்சியிலும் நடந்தது போன்ற காவலர்களைக் கொலை செய்யும் சம்பவங்கள் நாடு முழுவதும் அவ்வப்போது நடைபெறும் அசம்பாவிதங்கள் தான். அவற்றிற்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால், காவல்துறைக்கும் அரசுகளுக்கும் நாட்டில் அசம்பாவிதங்கள் நடத்தும் பொதுநல விரோதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதில் எந்த நாட்டமும் இருப்பது போல் தெரியவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போது, இந்நாட்டின் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஹிந்துத்துவத்தோடு இணைந்து சிறுபான்மையினர்களை எல்லா வகையிலும் நசுக்குவது மட்டுமே நாட்டமாக இருக்கிறதோ என்ற ஐயம் மேலோங்குகிறது என்பதை இத்தருணத்தில் நினைவுறுத்த வேண்டியது கட்டாயமாகிறது!
அத்தோடு, நடந்து முடிந்த அக்கிரமத்திற்கு, மனிதாபிமானமற்றவர்களின் பக்கம் மட்டுமே கவனத்தைத் திசை திருப்பி வைக்கும் மனிதாபிமானமில்லா ஊடக விபச்சாரிகளின் காசு பசிக்குக் காவல்துறையும் பலியாகி வெறுமனே இருந்து விடாமல், தமிழகத்தில் உள்ள அத்தனை ரவுடிகள், கொலை கும்பல்கள், குண்டர் படைகளை ஒடுக்குவதற்கான முயற்சிகளை எடுப்பதற்குத் தங்களின் அனைத்து சக்திகளையும் அரசியல்வாதிகளின் எவ்வித அதட்டல்களுக்கும் தலைசாய்க்காமல் முடுக்கி விட வேண்டும் என்பதையும் காவல்துறைக்கு நினைவுறுத்தி வைப்போம்!
- நூரானி(ஷமீமுல் இஸ்லாம், சூரங்குடி)
No comments:
Post a Comment