Wednesday, December 15, 2010

மு. கந்தசாமி நாகராஜன்December 16, 2010 at 6:32am
"தமிழகத்தில் கட்சிகள் எதுவும் இல்லாததால் தேர்தல் ஆணையம் கலைக்கப் பட்டது" காலை சன் தொலைக்காட்சி செய்தி கேட்டு வியந்தேன்..அட நம்ம தமிழ்நாட்டுல இப்படியெல்லாம் நடக்கிறதா? வியந்து கொண்டே காலை நடைப் பயிற்சிக்காக வெளியே வந்தேன். தெருவில் எந்தக் கட்சியின் விளம்பரப் பலகைகளும் இல்லை... என்னது இது இடம் மாறி வந்துட்டோமா என்று மனதில் நினைத்துக் கொண்டே தெருமுனையைத் தாண்டுகையில்தான் கவனித்தேன்.. அட இங்கே மூன்று கட்சிக் கொடிக்கம்பங்கள் இருந்தனவே. பக்கத்தில் நம்ம சாதி சங்கத்தோட கொடியும் இருந்ததுவே... என்னவாயிற்று.. ? இருந்த சுவடே இல்லையே... வியந்து கொண்டே அந்தக் கட்சிக் கொடிக்கம்பங்களுக்காக சண்டையிட்டு மடிந்த இருவரை மனத்தில் நினைத்துக் கொண்டேன்.. அவர்களுக்கு மாவீரன் என்று பட்டம் கொடுத்து இங்கே இரண்டு சிலை வைத்திருந்தார்களே... அதையும் காணவில்லையே... என்னதான் நடந்தது? நடைப் பயிற்சி முடிந்து வீட்டுக்குத் திரும்பி வரும்போது பாடசாலை செல்லும் குழந்தைகள் அமைதியாக, வரிசையாக சென்று கொண்டிருந்தனர். எனக்கோ வியப்பு.... இது எப்படி ஆ......"சீக்கிரம் எழும்புங்க. வாக்கிங் போக வேண்டாமா?" மனைவின் குரல் கேட்டு திடுக்கென்று எழுந்தேன்.. அட இது கனவா? முகம் கழுவி விட்டு வீட்டை விட்டு வெளியே வந்தால், நம் வீட்டு சுவரில் எழுத முற்பட்டுக் கொண்டிருந்தான் ஒருவன்..
"எலே...என்னலே செய்ற?"
"ஆங்.. பாத்தாத் தெரியலியாக்கும்? நம்ம தலைவருக்கு நாளைக்குப் பெறந்த நாளுல்லா. அதுக்குத்தான் வாழ்த்து எழுதிட்டிருக்கேன்."
"இங்கே எழுதக்கூடாதுன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன்"
" நீங்க சொன்னா ஆச்சா... நாளைக்குத் தெருவுல நீங்க நடமாடாண்டாமா?" குரல் உயர்ந்ததில் என் குரல் அமுங்கியது.. தெருமுனையில் நான்கு கொடிக்கம்பங்களும் அப்படியே நின்றிருந்தன... மாவீரர்கள் சிலைகளும் அருகே..

No comments: