புண்ணிய பூமியில் காசேதான் கடவுளடா!
ஞாயிறு, 25 ஏப்ரல் 2010 15:20 இந்நேரம்.காம் Articles
வாழ்நாள் முழுவதும் கஷ்டப் பட்டு அரசுப் பணியில் வேலை செய்தால் கூட சம்பாதிக்க முடியாத தொகையை ஒரே கையெழுத்தில் பெற்று வந்து இருக்கிறார் இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவர் கேதான் தேசாய். என்ன தலை சுற்றுகிறதா? ஆம். சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க ரூ. 30 கோடி வரை லஞ்சமாக பெற்றுக் கொண்டு அனுமதி தந்து இருக்கிறார் தேசாய்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள கியான் சாகர் மருத்துவ கல்லூரியில் 2010 - 2011 வருட மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்க பேரம் பேசி முதல் கட்ட தொகையாக ரூ 2 கோடி லஞ்சம் கேட்டதாக வந்த புகாரை அடுத்து மத்திய புலனாய்வு துறையினர் தேசாய் அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் கன்வல்ஜித் சிங் ரூ 2 கோடி பணத்தைக் கேதான் தேசாய்க்குக் கொடுக்கும் போது மத்திய புலனாய்வு அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
அதைத் தொடர்ந்து கேதான் தேசாய்,பாட்டியாலா மருத்துவ கல்லூரியின் துணைத் தலைவர் சுரிந்தர் சிங், புரோக்கர் ஜிதேந்தர் சிங் மற்றும் கன்வல்ஜித் சிங் ஆகியோர் கைது செய்யப் பட்டனர். அதன் பின் அவரது வீட்டில் நடைபெற்ற அதிரடி சோதனையில் தேசாய் லஞ்சமாக பெற்ற ரூ 212 கோடி கைப்பற்றப் பட்டுள்ளது. தொடர்ந்து டெல்லி, அரியானா, குஜராத் மாநிலங்களில் தேசாய்க்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்றச் சோதனையில் இதுவரை 1801 கோடி லஞ்சப்பணமும் 1500 கிலோ தங்கமும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைப்பற்றப் பட்டுள்ளது. லாரிகளில் மூட்டை மூட்டையாக லஞ்சப் பணத்தையும், தங்கத்தையும் அள்ளி சென்றதைப் பார்த்து பொதுமக்களுக்கே அதிர்ச்சி. அரசியல்வாதிகளின் ஊழலை மிஞ்சும் அளவுக்குக் கோடிகளில் நடைபெற்றுள்ளது இந்த மெகா ஊழல் திருட்டு.
மெகா லஞ்சப் பேர்வழியான தேசாய் 2001 ஆம் ஆண்டு மருத்துவ கவுன்சில் தலைவராக இருந்த போது எழுந்த ஊழல் குற்றச்சாட்டை அடுத்து நீதிமன்றம் இவரை பதவியை விட்டு விலகச் சொன்னது. அதன் பின்னர் கடந்த வருடம் மீண்டும் இந்தப் பதவிக்கு வந்துள்ளார் தேசாய்.
பொதுவாக எந்தக் கல்லூரியாக இருந்தாலும் புதிதாக தொடங்கப் பட்டால், அல்லது செயல்பட்டு வரும் கல்லூரிகளில் ஒரு சில பாடப் பிரிவுகளைப் புதிதாக தொடங்க சம்பந்தப் பட்ட உயர் அமைப்பிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அனுமதி பெற அதற்குத் தேவையான வகுப்பறை, ஆய்வகம், நூலகம், தகுதியான விரிவுரையாளர்களின் எண்ணிக்கை போன்றவற்றை ஒரு ஆய்வுக் குழு விண்ணப்பித்த கல்லூரிக்குச் சென்று ஆய்வு செய்யும். முறையாக எல்லாம் இருந்தால் மட்டுமே அந்தக் குழு அனுமதி வழங்க பரிந்துரை செய்யும். இதுவே நடைமுறை.
ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழ். பணம் மட்டும்தான் குறிக்கோள். பணம் இருந்தால் போதும் கட்டிடமே இல்லாமல் அனுமதி வாங்கிவிடக் கூடிய நிலையே இன்று நிலவுகிறது. அவ்வாறே அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யாமல் கடந்த பிப்ரவரி 5 ம் தேதியன்று ஆய்வுக் குழுவால் நிராகரிக்கப் பட்ட கியான் சாகர் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்க பேரம் பேசி முதல் கட்ட தவணையாக ரூ 2 கோடி வாங்கும்போது மாட்டிக் கொண்டார் தேசாய்.
மனுஷன் இதோடு நின்று விட வில்லை. அனுமதி கொடுத்த பிறகு மருத்துவ கல்லூரிகளில் வருடத்திற்கு 5 சீட் வீதம் கறந்து அதையும் விற்று காசாக்கி வந்துள்ளார். அந்த வகையிலும் நாடு முழுவதும் உள்ள 200 மருத்துவ கல்லூரிகளில் சுமார் 1000 சீட்களை பெற்று அதன் மூலம் கோடிக் கணக்கில் கொள்ளை அடித்து வந்துள்ளார். இவ்வாறு குறுக்கு வழியில் பணம் கொடுத்து சீட் வாங்கி படித்து மருத்துவராகும் ஒருவர் என்ன செய்வார். ஏழை மக்களின் உயிரை குடிப்பார். வேறு என்ன சேவையா செய்து விடப் போகிறார்
ஏதோ மருத்துவ படிப்புக்கு அனுமதி வழங்கும் மருத்துவ கவுன்சிலில் மட்டும் தான் இந்நிலையோ என்று தவறான முடிவுக்கு வந்து விட வேண்டாம். ஆசிரியர் பயிற்சி படிப்பு தொடங்கி பொறியியல் படிப்புகளுக்கு அனுமதி வழங்கும் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் வரை பணம் கொடுத்தால் மட்டுமே அனுமதி என்றொரு வரையறுக்கப்படா கொள்கை கடைபிடிக்கப் பட்டு வருகிறது.
ஒரு பக்கம் நாட்டில் வறுமை கோட்டுக்குக் கீழ் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மக்கள், தினசரி ஒருவேளை உணவுக்கே அல்லாடும் நிலையில், மறுபக்கம் ஒரு கூட்டம் சமூக விரோதிகளுக்கு கோடிகள் சர்வசாதாரணமான விஷயமாக ஆகி விட்டது. நாடாளுமன்ற அவையிலேயே எம்பிக்கள் கோடிகளைக் கொட்டிப் படம் காட்டி விட்ட நிலையில், இத்தகைய கோடி மேட்டர்கள் இன்று பேசி நாளை மறக்கப்படும். உண்ண ஒருவேளை உணவின்றி, அணிய மாற்று உடையின்றி, நிம்மதியாக தூங்க ஒரு இருப்பிடம் இன்றி, மழைக்கும் வெயிலுக்கும் ப்ளாட்ஃபாரத்திலேயே வாழ்க்கையை ஓட்டும் இந்நாட்டுக்குச் சொந்தக்கார பாமர ஜனங்கள் மட்டும் பஞ்சப்பரதேசிகளாக அன்றும் இன்றும் அதே நிலையில்!
ஒருவேளை உணவுக்காக பிக்பாக்கெட் அடிக்கும் பாமரனுக்கு ஒரு சட்டமும் சுக, போகத்தில் உருண்டு புரள கோடி, கோடியாக கொள்ளையடிக்கும் சமூக விரோதக்கூட்டங்களுக்கு ஒரு சட்டமும் இருக்கும் வரை இத்தகைய நிலை இந்தியாவில் தொடரவே செய்யும். ஊழல், லஞ்சம் போன்ற பொருளாதாரக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வகை செய்யும் சட்டம் இயற்றப் பட்டாலொழிய, இது போன்ற கே(ா)டிகள் பற்றிய செய்திகள் சர்வ சாதாரணமாக இன்னும் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கும். மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளிலும் கிரிமினல், ஊழல்பேர்வழிகளின் அட்டகாசங்கள் சர்வசாதாரணமாகி விட்ட இன்றைய நிலையில் அத்தகையதொரு சட்டத்தை இன்றைய அரசுகள் கொண்டு வருமா என்பது கேள்விக்குறி தான்!
"படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான்" என பாரதி போட்டச் சாபம், வெறுமனே பாடிக்கொண்டிருப்பதால் மட்டும் பலித்து விடப்போவதில்லை. மக்கள் பொறுத்தது போதும் என பொங்கி எழுந்தால் மட்டுமே, இத்தகைய சமூக விரோத ஊழல் கூட்டங்களுக்கு முடிவு கட்ட இயலும்
No comments:
Post a Comment