அபிரகாம் லிங்கன் (1809 - 1865)
அமெரிக்காவின் 16ஆவது குடியரசுத் தலைவராக விளங்கிய ஆபிரகாம் லிங்கன் அந்த நாட்டில் அல்லது வேறெந்த நாட்டிலும் - தோன்றிய மிக்க புகழ் வாய்ந்த - மிகப்பெரும் போற்றுதலைப் பெற்ற - அரசியல் தலைவர்களில் ஒருவர் ஆவார். அப்படியானால் எனது பட்டியலில் ஏன் சேர்க்கப்படவில்லை? கொடிய அடிமை முறையை ஒழித்து 35,00,000 அடிமைகளுக்கு விடுதலை அளித்தது ஒரு மாபெரும் சாதனை இல்லையா?
மாபெரும் சாதனைதான். ஆனால், பின்னுற நோக்கும் போது, உலகெங்கும் அடிமை முறையை ஒழிப்பதற்காகப் பாடுபட்டு வந்த சக்திகள், எதிர்த்து வெல்ல முடியாத அளவுக்கு பெருவலிமை வாய்ந்தனவாக இருந்தன என்பதைக் காண்கிறோம். லிங்கன் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்பதற்கு முன்பே பல நாடுகள் அடிமை முறையை ஒழித்துவிட்டன. லிங்கன் இறந்த பிறகு 65 ஆண்டுகளுக்குள்ளேயே பெரும்பாலான மற்ற நாடுகளும் அடிமை முறையை ஒழித்துவிட்டன. எனவே அதிகமாகப் போனால் ஒரு நாட்டில் அடிமை முறையை ஒழிப்பதை விரைவுபடுத்தினார் என்ற ஒரே பெருமையை மட்டுமே லிங்கனுக்கு அளிக்க முடியும்.
ஆயினும் தென் மாநிலங்கள் பிரிந்து செல்ல முயன்றதற்கு இடங்கொடாமல் அமெரிக்காவின் ஒற்றுமையைக் காப்பாற்றுவதில் வெற்றி பெற்றதை லிங்கனின் தலையாய சாதனையாகக் கூறலாம். அந்த ஒரு காரணத்திற்காகவே, இவர் இந்தப் பட்டியலில் இடம் பெறுவதற்குத் தகுதியுடையவர் எனலாம்.
ஆனால், அமெரிக்கக் குடியரசுத் தலைவராக லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான், தென் மாநிலங்கள் பிரிந்து சொல்ல விரும்பியதற்குக் காரணமாக அமைந்தது. அத்துடன், லிங்கன் இல்லாமல் வேறொருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், உள்நாட்டுப் போரில் வடக்கு மாநிலங்கள் தோல்வி கண்டிருக்கும் என்றும் உறுதியாக கூறுவதற்கில்லை. மேலும், வடக்கு மாநிலங்கள் மக்கள்தொகை அதிகமாக கொண்டிருந்தன. அதோடு, தென் மாநிலங்களைவிட வடக்கு மாநிலங்கள் தொழில் உற்பத்தி மிகப் பெருமளவுக்கு இருந்து வந்தது. இந்த இரு சாதகங்களையும் வைத்துக்கொண்டே வடக்கு மாநிலங்கள் உள்நாட்டுப் போரைத் தொடங்கின.
உள்நாட்டுப் போரை வடக்கு மாநிலங்கள் வெற்றிகரமாக நடத்தியிராவிட்டாலுங்கூட, வரலாற்றின் போக்கில் பெரும் மாற்றம் எதுவும் ஏற்பட்டிருக்காது. மொழி, சமயம், பண்பாடு, வாணிகம் ஆகிய தளைகளினால் வடக்கும் தெற்கும் மிக வலுவாகப் பிணைக்கப்பட்டிருந்தன. தெற்கு பிரிந்து சென்றிருந்தாலும் விரைவிலேயே வடக்கும் தெற்கும் மீண்டும் இணைந்திருக்கும். அவற்றுக்கிடையிலான பிரிவினை, இருபது ஆண்டுகளுக்கு ஏன், ஐம்பது ஆண்டுகளுக்குக்கூட நீடித்திருந்தாலும், அது உலக வரலாற்றில் ஓர் அற்ப நிகழ்ச்சியாகவே இருந்திருக்கும். ( தென் மாநிலங்கள் நிரந்தரமாகப் பிரிந்து சென்றிருந்தாலும்கூட, அமெரிக்கா இன்று உலகில் மிக அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நான்காவது நாடாகவும், முதன்மையான தொழில் வல்லரசாகவும் விளங்கியிருக்க முடியும் என்பதையும் இங்கு மறந்துவிடலாகாது)
அப்படியானால் லிங்கனை முக்கியத்துவமில்லாத ஒரு மனிதராகக் கருதுவதா? அவருடைய வாழ்க்கைப் பணி, ஒரு தலைமுறைக் காலம் பல கோடி மக்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய செல்வாக்கினைப் பெற்றிருந்தது. ஆயினும் அந்தச் செல்வாக்கு பல நூற்றாண்டுக் காலம் நீடித்த செல்வாக்கைக் கொண்டிருக்கிற மகாவீரரைப் போன்று அவரை அத்துணை முக்கியத்துவம் வாய்ந்தவராக ஆக்கிவிடவில்லை.
நன்றி : http://ping.fm/7t8ef
No comments:
Post a Comment